Photo: PINTEREST

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான கிபிர் ரக (Kfir) தாக்குதல் விமானங்களைப் புதுப்பிப்பதற்காக இஸ்ரேல் விமான நிறுவனமொன்றுடன் (Israel Aerospace Industries) பாதுகாப்பு அமைச்சு 50 மில்லியன் டொலர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக இம்மாதம் தொடக்கத்தில் செய்தி வெளியாகியிருந்தது.

இந்த ஒப்பந்தத்திற்கு அமைய, நான்காவது தலைமுறை கிபிர் விமானங்களில் உள்ள தொழிநுட்பத்தை இணைக்கவுள்ளதுடன், அதன்படி புதிய ரேடார், தொலைத்தொடர்பு வசதிகள், சென்சர்கள் மற்றும் புதிய தலைக்கவசங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.

நாடு பொருளாதார ரீதியாக நெருக்கடியான சூழ்நிலைக்கு முகம் கொடுத்திருக்கும் நிலையில் – பெருந்தொற்று காலப்பகுதியில் – போர் விமானங்களைப் புதுப்பிப்பதற்காக இவ்வளவு தொகை செலவிடுவது எந்த வகையில் சரியாக இருக்கும் என்று சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பப்பட்டது.

இவ்வாறான அழுத்தங்கள் ஒரு பக்கம் எழ, டொலர் பற்றாக்குறை காரணமாக இஸ்ரேல் நிறுவனத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ‘சிறிலங்கா மிரர்’ செய்தித் தளம் செய்தி வெளியிட்டிருக்கிறது. அரச அதிகாரிகளுக்குத் தெரியாமல் இந்த ஒப்பந்தம் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது என்பதை அறிய பாதுகாப்பு அமைச்சகம் விசாரணையொன்றை ஆரம்பித்திருப்பதாகவும் அந்தச் செய்தித் தளம் மேலும் தெரிவித்துள்ளது.

இருந்தபோதிலும், கிபிர் விமானங்களைப் புதுப்பிப்பதற்கான ஒப்பந்தப் பெறுமதியுடன், மக்களுக்கு அவசியமான அடிப்படை தேவைகளுக்கு எந்தளவு நிதி ஒதுக்கமுடியும், ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை கடந்த ஆண்டு நிதியமைச்சு வெளியிட்ட ஆண்டறிக்கையில் உள்ள விடயங்களுடன் மாற்றம் ஒப்பிட்டுப் பார்த்தது.