Painting, Susiman Nirmalavashan

‘ஈழத்தமிழ்த்தன்மையை (Eelam Tamilness)மையமாகக் கொண்டு அதனைப் பிரதிபலித்து பிரதிநிதித்துவப்படுத்தும் ஓவியப்படைப்புக்கள் தமிழ்த்தேசிய ஓவியப் படைப்புக்களாக வெளிவருகின்றது. தமிழ்த்தேசிய அகநிலைத் தன்மையின் கொதிநிலையும், அதன் பின்னரான எழுச்சியும் தேசிய ஒன்றுதிரட்டலுக்கு வழிவகுக்கின்றது. ‘ஈழத்தமிழ்த்தன்மை’ தான் தேசிய கூட்டு அடையாளத்தைக் கட்டமைக்கின்றது. இக்கூட்டு அடையாளத்தின் பொதுப்புள்ளி இன அடையாளமாகும். இனக்குழுமத்தை பின்வருமாறு வரையறுக்கலாம். “ஒரு பெயர் குறிப்பிடப்பட்ட இனக்குழுமம் தனக்குரிய பொதுப் பாரம்பரிய ஐதீகங்களோடும், வரலாற்று நினைவுத்திறத்தோடும், பகிரப்பட்ட கலாச்சாரத்துடனும், வரலாற்றுத் தொடர்புடைய நிலப்பரப்புடனும் கூட்டொருமையுடனும் இருத்தல்” (Anthony D.Smith 1995).

தேசியவாதத்தின் எழுச்சியுடன் குழுமங்கள் தங்களுடைய வரலாற்றியலை ‘இனம்’ சார்ந்து மீள்வாசிக்கின்ற உணர்வு நிலை மேலோங்கியது, இவர்கள் இவ்வுணர்வு நிலையை இன – கலாச்சார/ பண்பாட்டு குழுமமாகக் மீள் கட்டமைத்துக் கொண்டார்கள். தமிழ்த்தேசிய விழிப்புணர்வு நிலையும் மேற்கூறப்பட்ட மீள்வாசிப்பை அகவயப்படுத்திக் கொண்டது. ஓவியப் படைப்புக்களிலும் கூட இவ்வாறான வரலாற்று கூருணர்வுத்திறன் (historical Sensitivity), இன-வரலாற்று (ethno-history) ஓவியப் படைப்புக்களை உருவாக்கியது (Athena S.Leoussi 2004). இவ்வாறான இன – வரலாற்று மீள்வாசிப்பு கூட்டு அடையாள உணர்வு நிலையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது. குழுமங்கள் தங்களை தேசமாக பிரதிபலித்து இன – தேச (ethno – national) அனுபவங்களை வலுப்படுத்தி இன அடையாளத்தையும், இன அடையாள கூட்டொருமையையும், தன்னாட்சி உரிமையையும் நிலை நிறுத்திக் கொண்டன (A.D.Smith 1991). இன – வரலாற்று மீள்வாசிப்பு தேசம் பற்றிய கனவுகளை ஓவியப்படைப்புக்களில் உள்வாங்கி பிரதிபலித்தது. இதற்கு உதாரணமாக Alphone Mucha tpDila The Slav Epic (1900 – 1928) இருபது ஓவியப் படைப்புக்களை முக்கியமாகக் குறிப்பிட்டுக் கூறலாம் (Athena S.Leoussi 2004).

தமிழ்த்தேசிய கூட்டொருமை விழிப்புணர் நிலை தனக்கான அடக்குமுறை விடுதலை மனநிலையையும், வாக்களிக்கப்பட்ட தேசத்தையும் பற்றிய கனவையும் எப்போதும் கொண்டிருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை. இன உணர்வுநிலை விழிப்புணர்வில் உடல் அமைப்பு, நிறம், கலாச்சார விழுமியங்கள், வாழ்வியல் முறைமை, பாரம்பரிய கவின் கலைகள் போன்றவை தொடர்பிலான பெருமிதம் முன்வைக்கப்பட்டது. வரலாற்று புராணக்கதைகளுடன் தொடர்புபடுத்தப்பட்டு மனித குலத்தின் பல்வகைத்தன்மையைப் பேணுவதில் இன – வரலாற்று ஓவியப் படைப்புக்களுக்கு அதிக பங்கு இருக்கின்றது. மனித குலத்தை ஒரே விதமான கலாச்சாரத்திற்குள் உள்வாங்கமுடியாது. Autum Gustav Matos (1912) னுடைய கருத்துப்படி ‘ஓவியரும், ஓவியரின் படைப்புக்களும் அவருடைய இன அடையாளத்தின் சூழ்நிலையின், தருணங்களின் விளைவாகும். குறிப்பாக தேசிய சந்தர்ப்பங்களின் (national cirucumstances) விளைவாகும்’. ஓவியப்படைப்புக்களை சந்தர்ப்பங்களின் விளைவுகளாக மட்டும் பார்க்காமல் சந்தர்ப்பங்களின் விளைவுகளுக்கு எதிர்வினையாகவும் பார்க்க வேண்டும். அதுவே சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்குரிய காரணிகளாகவும் அமையலாம். ஓவியர் மீதான சமூகத்தின் சூழ்நிலைத் தாக்கமும், ஓவியர் சமூகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கமும் இரு வழிப்பயணம் போன்றது. அது போலவே தான் தேசிய ஓவியப் படைப்புக்களும் ஒரு சமூகம் அடக்குமுறைக்குட்பட்டிருக்கிறது. அவ் அடக்குமுறைச் சமூகத்தில் வாழ்கின்ற ஓவியப் படைப்பாளியாக, அச்சூழ்நிலையினால் பாதிக்கப்பட முடியாதவராக தேசிய ஓவியப்படைப்பாளி இருக்கமுடியாது. பாதிக்கப்பட்டதன் விளைவாக எழும் எதிர்வினையினால் சமூகத்தில் செல்வாக்கை, சமூக விடுதலை நோக்கி அவரது ஓவியப் படைப்புக்கள் அமையாவிடின் யதார்த்தத்திற்கும், யதார்த்தத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் இடையே தொடர்பற்ற நிலை காணப்படுகின்றது. தேசிய ஓவியர்களின் பங்களிப்பு இவ்விடைவெளியை நிரப்புவதாக அமைதல் வேண்டும்.

Antum Gustav Matos தொடர்ந்து குறிப்பிடுகையில், “ஒவ்வொரு தேசியவாதமுமே ஒரு போராட்டத்தின் வடிவம், அந்தப் போராட்டத்தில் தேசிய ஓவியம் பங்கேற்கின்றது. அந்த பங்கேற்பு நேரடியாகவும் இருக்கலாம். எதிர்மறையாகவும் இருக்கலாம்” (“Since every nationalism is a form of fight, art also participates in that fight either directly or indirectly”). ஷேக்ஸ்பியரினுடைய படைப்புக்கள் ஆங்கில தேசியவாதத்தை பரப்புவதற்குரிய கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றது. ஐக்கிய இராச்சிய அரசியல்வாதிகளை விடவும், படைக்கட்டுமானத்தை விடவும் ஷேக்ஸ்பியர் ஆங்கில தேசியவாதத்தை பரப்புவதற்கு அதிக பங்களிப்புச் செய்திருக்கின்றார் (Ibid). தேசபக்திக்கும் (Patriotisum) தேசியவாதத்திற்கும் (nationalism) இடையிலான வேற்றுமையின் தெளிவு அவசியம். தேசியவாதத்தின் இலக்கும், நோக்கும் பரந்துபட்டது. ஆனால், தேசபக்தியின் இலக்கும் நோக்கமும் குறுகியது. ஓவியத்தை ஓவியத்திற்காக மட்டும் படைப்பது தேசிய ஓவியப்படைப்புக்களின் நோக்கமன்று. தேசியவாதம் தன்னகத்தே அடிப்படைவாத உள் நோக்கத்தை கொண்டிருப்பதில்லை. ஆனால், எப்போது தேசியவாதம் அடிப்படைவாதமாக மாறுகின்றதென்றால் காலனித்துவ ஏகாதிபத்திய உள்நோக்கத்தை கொண்டிருக்கின்றபோது.

மேற்கத்தைய தேசியவாத அறிவியற்பரப்பில் தேசத்தை வரையறுக்கும் இருவிதமான கருத்தியல்கள் மேலோங்கிக் காணப்பட்டது. முதலாவது நகர – அரசுகளால் வடிவமைக்கப்பட்ட குடிமை, இரண்டாவது கிராமப்புற குழுமங்களால் வடிவமைக்கப்பட்ட பண்பாடு. மேற்குறிப்பிட்ட இரண்டு கருத்தியல்களும் சமூகங்களையும் அரசுகளையும் தேசிய மூலக்கோட்பாட்டின் அடிப்படையில் மீள்கட்டுமானம் செய்தன (Athena S. Leoussi 2016). இவ் மீள்கட்டுமானத்தில் ஓவியப்படைப்புக்களும் பங்களிப்புச் செய்திருந்தது. ‘இல்லாததை பிரதிநிதித்துவப்படுத்துவதினூடாக’ ஓவியப்படைப்புக்கள் புதிய சமூகம் பற்றிய புதிய நோக்கை முன்வைத்தது (Ibid). இப்புதிய நோக்கில் கூட்டுத் தன்னுணர்வுநிலை (collective conscciouness) எழுச்சி வீச்சுப் பெற ஆரம்பித்தது. எழுச்சி பெற்ற கூட்டு தன்னுணர்வு நிலையை இயக்கமாக்கி படிம வரையறைகளைக் கொண்டு கனவு தேசத்தை உருவாக்கும் பங்களிப்பை ஓவியர்கள் வழங்கினார்கள் ஓவியப் படைப்புக்களுக்கூடாக. அதுவே காட்சிப்புல தேசிய அடையாளத்தையும் கட்டமைத்தது (Ibid). இவற்றிற்கு உருவப்பட வரைபுகளின் (Portraiture)  உள்வாங்கலும் காரணமாய் அமைந்திருந்தது. தேசிய கட்டுமானத்திற்கு பங்களிப்புச் செய்தவர்களின் உருவப்பட படைப்புக்கள் மட்டுமல்லாது அவர்களது சிற்பங்களும் குறிப்பிடத்தக்கனவாகும்.

முன்னைய பகுதியில் குறிப்பிட்டது போல வாழ்வியலின் தினசரித்தன்மையை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஓவியப்படைப்புக்கள் தேசியவாத பிரதிபலிப்பில் மேலோங்கி காணப்பட்டன. அவற்றிலும் விளிம்பு நிலை வாழ்வியலையும், விளிம்புநிலை வாழ்வியல் அகவயப்படுத்திய இன – பண்பாட்டு விழுமியங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதும் ஒரு செல்நெறியாக உருவாக்கம் பெற்றது. மிக அண்மையில் ‘தட்டிவான்’ ஓவியம் வடக்கில் மிகப் பிரபல்யம் அடைந்ததிற்கு காரணம் அதனது வரலாற்றுத்தன்மை. குறிப்பாக போர்க்காலங்களில் கிராமப்புற வாழ்வியல் முறைமைகளும், விழுமியங்களும் தேசிய கருத்தியலையும் அதன் விழுமியத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவதான தோற்றம் உருவானது. பாரம்பரிய வாழ்வியல் முறைகளும், கலைகளும், தேசிய ஓவியப் பொதுவெளியை அலங்கரித்தன. இதை ‘மக்களை தேசியமயப்படுத்தல் (nationnalisalision of the masses – Mosse 1975) பொறிமுறையூடாக தேசிய தன்ணுணர்வு விழிப்பு நிலையை (national consciousness) கட்டமைப்பதற்கு ஓவியப்படைப்புக்கள் உதவி புரிந்தன. வடக்கில் ‘பனைமரத்தின்’ பிரதிபலிப்பும் கிழக்கில் ‘தென்னை மரமும்’ பொதுவாக எல்லாப் படைப்புக்களிலும் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது. இவ்விரண்டு மரங்களினதும் எதிர்விசைப்பின் (resilence) ஆற்றலும் குறிப்பாக பனையின் பிரதேசத்திற்குரிய தனித்த தன்மையும் சுட்டிக்காட்டப்பட்டது. பனையின் வெவ்வேறு பண்புகள் தேசியம் சார்ந்து தெளிவுரை பெற்றது. உதாரணமாக நீண்டகால நிலைக்கும் தன்மை, அதனுடைய வலிமை, வளைந்து கொடுக்காமை. தேசிய ஓவியப் படைப்புக்களில்  இயற்கைக்காட்சி ஓவியம் (landscape) தேசிய முக்கியத்துவம் பெற்றது. இவ்வாறான இயற்கைக் காட்சி தேசிய ஓவியப்பரப்பில், ‘இனத்துவவெளியை (landscape) பிரதிபலித்தல் அதிகமாகியது. இனம் சார்ந்த வெளி தனிமனித வெளியின் நீட்சியாக தேசிய வெளிக்குள் உள்வாங்கப்பட்டது (A.S.Leoussi 2016). சங்ககால நிலம் சார்ந்த வாழ்வியல் முறைமைகள் மீள் அறிமுகம் செய்யப்பட்டன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை. இவ்வாழ்க்கை முறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓவியப்படைப்புக்கள் இனத்துவ வெளியூடாக பிரதிபலித்தது. மேற்கூறப்பட்ட சங்ககால நிலவகையைச் சார்ந்த ஓவியப்படைப்புக்கள் தேசிய ஓவியப் பரப்பிற்குள் உள்வாங்கப்பட்டன. இவ்வாறான பிரதிநித்துவப்படுத்தல் கூட்டுத் தண்ணுர்வில் வரலாற்று வேர்களையும் பூர்வீகத்தையும் நோக்கிய தேடலாக அமைந்திருந்தது. நீண்ட வரலாற்றுப் பூர்வீகத்தின் தொடர்ச்சியில் இணைவதனூடாக கூட்டு தன்னுணர்வு உளவியலுக்கு பெருமிதத்தைச் சேர்கின்ற ஊக்கியாக இருந்தது எனலாம்.

கலாச்சார/ பண்பாட்டுத் தேசியவாதம் (Cultural nationalism)

கலாச்சார/ பண்பாட்டுத் தேசியவாதம் மொழியை மையமாகக் கொண்ட இயக்கமாகும். இதற்கு வித்திட்டவர் ஜேர்மனியைச் சேர்ந்த Herder என அறியப்படுகின்றது. Herder ஐப் பொறுத்தவரையில் மொழிதான் ஒரு தேசத்தின் உள்ளுணர் நிலையை வெளிப்படுத்த வல்லது எனக் கூறுகின்றார். ‘தேசத்தின் தனித்த பண்பாண்மை (ethos), தொடர்ச்சியான அடையாள வரலாறு, அற ஒற்றுமை (John Hutchinson 2016) தமிழ்த்தேசியத்தின் அடிநாதமும் கூட. தமிழ்மொழியும் அதனைச் சூழ கட்டமைக்கப்பட்ட அடையாளமும் உதாரணமாக, தமிழ்க் கலாச்சாரம், பண்பாடு, தமிழ் வாழ்வியல் முறை, தமிழ் வரலாற்றியல், தொல்லியல் இன்னும் பல. மொழி என்பது வெறுமனே மொழி மட்டுமல்ல, அது சார்ந்த மக்களின் கூட்டு அடையாள ‘ஈழத்தமிழ்த்தன்மை, அதனால் கட்டமைக்கப்படும் ஈழத்தமிழ் இருப்பு பற்றியது.

‘கலாச்சார/ பண்பாட்டு தேசியவாதத்தின் பிரதான இலக்காக இருப்பது, ஒரு இனக் குழுமத்தின் கூட்டு அடையாளக்கட்டமைப்பின் வேரான, பிரதான தனித்தன்மையும், அருந்தனிப் பண்பான மூலத்தையும்/ தோற்றுவாயையும், வரலாற்றையும், பண்பாட்டையும்/ கலாச்சாரத்தையும் தாய்நாட்டையும், சமூக – அரசியல் செயற்பாடுகளையும் அடையாளம் காண்பதாகும் (Ibid). கலாச்சார/ பண்பாட்டு தேசியவாதம் பற்றி பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக Gellner கூறும் போது, இத்தேசிய வாதம் அரசியல் தேசியவாதத்திலிருந்து பெரிதும் வேறுபட்டதாக இல்லை எனக் குறிப்பிடுகின்றார் (Ibid). ஏனென்றால், தேசியவாதத்தின் அடிப்படை இலக்கு அரசியல் சார்ந்தது. இறைமையுள்ள நாடு நோக்கிய கனவு.

ஏற்கனவே குறிப்பிட்டது போல கலாச்சார/ பண்பாட்டு தேசியவாதத்தின் இலக்கை தேசிய கலாச்சாரத்தை/ பண்பாட்டை கட்டமைத்தலாகும். இக் கலாச்சார/ பண்பாட்டு கட்டமைப்பு பல்வேறு பண்புகள் பற்றி கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது. தாய்நில கலாச்சாரப் பண்புகள், புராணக் கதைகள், மொழி, நாட்டார் இலக்கியம், கலைகள், மண் சார் வாழ்வியல் இன்னும் பிற. இவைகளை மீள் கட்டுமானம் செய்தல் எனக் கூறும் போது நவீனத்தை முற்றாக மறுத்தல் என்று அர்த்தம் பெறாது. இத்தேசியவாதத்தின் சிறப்பியல்பாக, மக்களுடைய வாழ்வியல் முறைமை மையத்திலிருந்து தேசியவாதம் கட்டமைக்கப்படுதல், விளிம்பு மைய அணுகுமுறை அல்லது கீழிலிருந்து மேல்நோக்கிய அணுகுமுறை. முற்றாக மக்கள் மயப்படுத்திய இயங்குதளத்திலிருந்து ஏகாதிபத்தியத்தை எதிர்த்தல் என்பது இலகுவான அணுகுமுறையாகும்.

கலாச்சார/ பண்பாட்டுத் தேசியவாதம் தேசிய கலாச்சாரத்தை பண்பாட்டை மீள் உயிர்ப்பிக்கின்றதற்கான காரணம் பற்றி அவதானித்தால், அடக்குகின்ற அரசு அல்லது ஏகாதிபத்தியம், அடக்குமுறைக்குட்பட்டவர்களின் கலாச்சாரத்தை (பண்பாட்டை கீழ்த் தரமானதாக அல்லது வேண்டாததாகக் கட்டமைக்கின்றது. இதன் மூலம் மக்களை அவர்களுடைய கலாச்சாரத்திலிருந்து பண்பாட்டிலிருந்து அந்நியப்படுத்துகின்றது) அந்நியப்படுத்தல் செயற்திட்டம் கூட்டு அடையாளம் கட்டமைக்கின்ற பண்புகளையும் சிக்கலுக்குட்படுத்துகின்றது. அந்நியப்படுத்தலும், சிக்கலுக்குட்படுத்துகின்ற செயற்திட்டங்களும் கூட்டு அடையாள கட்டவிழ்ப்புக்கு இட்டுச் செல்லுகின்றது என்பது வெள்ளிடைமலை. இப்பொறிமுறை ஒரு இனக்குழுமத்தை தேசிய நீக்கம் செய்கின்றது.

இதற்கு மாறாக கலாச்சார/ பண்பாட்டுத் தேசியவாதம் கூட்டு அடையாள பண்புகளை வலுவூட்டுகின்றது. தனிநபர் தான் சார்ந்து கூட்டு அடையாளத்திலிருந்து பகிருகின்ற அடையாளத்தைப் பற்றி பெருமை கொள்ளச் செய்கின்றது. அதையே இயக்கமாக்கி ஏகாதிபத்தியத்திற்கெதிரான அணிதிரட்டலாக மாற்றுகின்றது. கலாச்சார/ பண்பாட்டு மீள் எழுச்சி பரவலாக மைய அரசுகள் விளிம்பு நிலை மக்களின் உரிமைக் கோரிக்கைகளை நிராகரிக்கின்ற போதும், அவற்றை அடக்குமுறைக்குள்ளாக்கும் போது உருவாவதை பின்வரும் நாடுகளின் அனுபவங்களூடு விளங்கிக் கொள்ளலாம். உதாரணமாக அவுஸ்திரேலியப் பழங்குடி மக்கள், ஸ்பானியாவில் கட்டலான் எழுச்சி, இன்னும் பலவற்றைக் குறிப்பிடலாம். USSR லிருந்து பிரிந்து போன நாடுகளையும் இந்தப் பட்டியலில் உள்ளடக்கலாம்.

நாளாந்த தேசியவாதம் (Everyday Nationalism)

நாளாந்த தேசியவாதத்தின் நோக்கமாக எவ்வாறு மக்கள் தங்களுடைய நாளாந்த வாழ்க்கையில் நாளாந்த செயற்பாடுகளுடாக தேசியவாதத்தை அர்த்தம் பெற வைக்கின்றார்கள் என்பதாகும். தாங்கள் ஒரு தேசத்திற்கு உரித்துடையவர்கள் என்பதை மக்கள் எவ்வாறு தங்களுடைய நாளாந்த வாழ்க்கைச் செயற்பாடுகள் மூலம் பிரதிபலிக்கின்றார்கள் என்பதை ஆய்வதே தினசரி தேசியவாதத்தில் இலக்காகும் (Atsuko Ichijo 2016). ஏற்கனவே குறிப்பிட்டது போல நாளாந்த தேசியவாதம் கீழிலிருந்து மேல்நோக்கிய அணுகுமுறையைக் கொண்டது. தேசியத்தை நாளாந்த வாழ்வில் விளிம்புநிலை மக்கள் மிக அநாசயமாக மொழிபெயர்த்துக் கொண்டேயிருக்கின்றார்கள். அதற்காக இன்னொரு வலிந்த முயற்சி தேவையில்லை.

Jonatham Fox k; Cynthia Miller – Idriss (2008) நாளாந்த தேசியத்தை மக்கள் பின்வரும் நான்கு வழிமுறையினூடு பிரதிபலிப்பதாகக் குறிப்பிடுகின்றனர். ‘முதலாவது, தேசத்தை எப்போதுமே பேசு பொருளாக்குதல் (talking the nation), தேசத்தெரிவு (choosing the nation), இரண்டாவது தேசியம் மக்களுடைய தெரிவில் எவ்வாறு செல்வாக்குச் செலுத்துகின்றது, மூன்றாவது தேசத்தை வினையாற்றுகை செய்தல் (Performing the nation) குறியீடுகளூடு தேசத்தை பிரதிபலித்து பிரதிநிதித்துவப்படுத்தல், நான்காவது தேசத்தை நுகர்தல் (Consuming the nation)  நாளாந்த தேசியவாதத்திற்கும் கலாச்சார/ பண்பாட்டு தேசிய வாதத்திற்குமிடையே நெருங்கிய தொடர்பிருக்கின்றது.

Michael Billig (1195) ல் அறிமுகப்படுத்தப்பட்ட ‘Banal Nationalism’, தேசத்தின் இருப்பு எங்குமே கிடைக்கக்கூடியதாக இருக்கின்றது, அது மீளவும் நிறுவனப்பயப்படுத்தப்பட்ட வடிவங்களுக்கூடாக, கலாச்சார கலைப்பொருட்களுக்கூடாக இன்னும் பிறவற்றினூடு மீள் உருவாக்கப்படுகின்றது. உதாரணங்களூடு விளக்க முற்பட்டால், தேசியக்கொடியை தினசரி பயன்படுதுதல், நாணயப் பயன்பாடு, தேசபக்தி குழுக்கள், கழகங்கள், தேசிய ஊடகத்தினூடு ஊடகத்தின் மொழிப்பயன்பாடு (நாம், நாங்கள், எங்களுடைய போன்றன) பெரும்பாலுமே அரச நிறுவனங்கள், திணைக்களங்களூடு முன்னெடுக்கப்படுகின்றன. இது ஒரு மேலிருந்து கீழ் நோக்கிய அணுகு முறையைக் கொண்டது. அதிகமாக, அரசியல் புவியியலில் (Political geography)  பயன்படுத்தப்படுகின்றது. தினசரி தேசியவாதத்திற்கும் Banal nationalisim த்திற்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. அவற்றை ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமன்று.

நாளாந்த தேசியவாதம் மக்களுடைய சாதாரண வாழ்வில் சாதாரண சமூக செயற்பாடுகளுடாக பல்வேறு நபர்களினால், பல்வேறு சமூக தளங்களின் எவ்வாறு மீள் உருவாக்கம் செய்யப்படுகின்றது என்பதை அவதானிப்பதலாகும் Banal nationalisim.

நாளாந்த தேசியவாதத்தை ஓவியத்தில் பிரதிநிதித்துவப்படுத்தலில் தான் தேசியவாதத்தை மக்கள் மையப்படுத்தல் தங்கியுள்ளது.

எழில் ராஜன்