ஊடகவியலாளர் சகோதரர் மயில்வாகனம் நிமலராஜன் கொலைசெய்யப்பட்டு 21 வருடங்கள் அண்மிக்கும்போது அவரது கொலைக்கான நீதி கிடைத்திருக்கிறது.
அனைத்து சந்தேகநபர்களையும் விடுதலைசெய்து, மேலும் வழக்கை கொண்டுநடத்த முடியாது என்று சட்டமா அதிபரினால் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர் இவ்வளவு காலமாக நீதிமன்றில் தூசிபடிந்திருந்த வழக்கு குப்பை கூடையில் எறியப்பட்டுள்ளது. அதேவேளை நீதியும் நிலைநாட்டப்பட்டிருக்கிறது.
2000 ஒக்டோபர் 19ஆம் திகதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த இரவன்று, யாழ்ப்பாணம் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த நிமலராஜனின் வீட்டிற்கு அத்துமீறி நுழைந்த கொலையாளிகள், ஜன்னல் வழியாக துப்பாக்கிப் பிரயோகம் செய்ததுடன், கைக்குண்டும் வீசி அவரைப் படுகொலை செய்திருந்தனர். யாழ். மக்கள் போரின் காரணமாக எதிர்நோக்கும் இன்னல்கள் குறித்து ‘வீரகேசரி’ பத்திரிகைக்கு கட்டுரை ஒன்று எழுதிக்கொண்டிருக்கும்போதே நிமலராஜன் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக எந்தவித சந்தேகமுமின்றி EPDP எனப்படும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மீதே குற்றம்சாட்டப்பட்டது. இராணுவத்துடன் இணைந்து துணை இராணுவமாக செயற்பட்ட, அப்போது சந்திரிக்காவின் ஆட்சியில் பங்காளியாகவும் புனர்வாழ்வு அமைச்சராவும் இருந்த டக்ளஸ் தேவானந்தாவே EPDP இற்குத் தலைவராக இருந்தார்.
நிமலராஜன் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என கைதுசெய்யப்பட்ட 6 பேரும் EPDP கட்சியுடன் தொடர்புடையவர்கள் என்பதோடு அவர்கள் இடையிடையே விடுலை செய்யப்பட்டுமிருந்தனர். அவர்களை விசாரித்ததில், கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய, பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டிருக்கவில்லை. நிமலராஜன் கொலைசெய்யப்படும்போது சந்திரிக்கா அரசாங்கத்தில் இருந்த EPDP, இன்று வழக்கு கைவிடப்படும்போது கோட்டபாய அரசாங்கத்தில் இருக்கிறது.
போரின் காரணமாக யாழ். மக்கள் முகம்கொடுத்து வரும் இன்னல்களை அச்சமின்றி உலகத்துக்கு வெளிப்படுத்திவந்த நிமலராஜன், வடக்கைப் போன்றே தெற்கிலும் ஊடகவியலாளர் மத்தியில் பிரபலமான ஒருவராக திகழ்ந்தார். பெரும்பாலான ஊடக நிறுவனங்களுக்கு பெரும் தகவல் வழங்குனராகவும் செய்தி மூலமாகவும் இருந்தார். தன்னிடம் இருந்த தகவல்களை, செய்திகளை எந்தவிதமான கொடுப்பனவு எதிர்பார்ப்புமின்றி தெற்கில் உள்ள ஊடக நிறுவனங்களுக்கு வழங்கியிருந்தார்.
பிபிசி சிங்கள சேவையைப் போன்று பிபிசி தமிழிலும் ஊடகவியலாளராக செயற்பட்டுவந்த நிமலராஜன், தெற்கில் ராவய, வீரகேசரி போன்ற பத்திரிகைகளிலும் ஹிரு வானொலிக்கும் தனது பங்களிப்பை வழங்கிவந்தார்.
எனினும், இந்த மாபெரும் ஊடக நிறுவனங்கள் எவையும் நிமலராஜனுக்கு ஊடக அடையாள அட்டையொன்றைப் பெற்றுக்கொடுக்க முன்வரவில்லை.
நன்கு அறியப்பட்ட, பிரபலமான ஊடக நிறுவனமொன்றின் ஊடக அடையாள அட்டை இல்லாமல் யாழ்ப்பாணம் போன்ற பகுதியில் அப்போது பணியாற்றுவது அச்சுறுத்தலாக இருந்தபோதிலும், பிபிசி உட்பட நிமலராஜனிடமிருந்து வேலையைப் பெற்றுக்கொண்ட ஏனைய நிறுவனங்களும் அவருக்கு அடையாள அட்டை வழங்க மறுத்தன. ராவய பத்திரிகையிடம் விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டதுடன், அதன் ஆசிரியர் விக்டர் ஐவனும் நிராகரித்தவர்களுள் ஒருவராவார்.
போர் வலயத்தில் என்ன நடக்கிறது என்ற தகவல்களுக்காக நிமலராஜனை சுரண்டிய ‘பிரதான’ ஊடக நிறுவனங்கள் அவருக்காக ஊடக அடையாள அட்டை வழங்குவதில் இழுத்தடிப்புகளை மேற்கொண்டிருந்தவேளை, புதிய சமசமாஜ கட்சியுடன் தொடர்புடைய ‘ஹரய’ பத்திரிகை அவருக்கு ஊடக அடையாள அட்டை வழங்கியிருந்தது.
தன்னுடைய மக்கள் முகம்கொடுத்துவரும் இன்னல்களை உலகின் முன்னால் கொண்டுவருவதற்கு பெரும்பாடுபட்ட, வடக்கில் மட்டுமன்றி கொழும்பு ஊடக நிறுவனங்களுக்கும் சொத்தாக கருதப்பட்ட இந்த மனிதர் கொல்லப்பட்டு 21 வருடங்கள் அண்மிக்கின்ற நிலையில், சட்டத்தின்படி அவரது படுகொலைக்கான நீதி – பல வருடங்களாக விசாரிக்கப்படாமல் இருந்த வழக்கை குப்பை கூடையில் வீசியதன் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளது.
நிமலராஜனின் படுகொலை, கொலையாளி இல்லாத படுகொலையாகும்.
குறைந்தபட்சம் நிமலராஜன் படுகொலை வழக்கு பற்றிய செய்தி இலங்கையின் எத்தனை ஊடகங்களுக்குச் செய்தியானது என்பது கூட நான் அறியவில்லை.
நிமலராஜன், என்னுடைய சகோதரனே…
கடைசியாக நீயே உன்னை சுட்டுக் கொண்டாய்… குண்டும் எறிந்து கொண்டாய்…
சனத் பாலசூரிய