மட்டக்களப்பு, வாகரை என்ற பெயரினைக் கேட்டால் நம் நினைவில் சில விடயங்கள் உடனடியாக தோன்றும். அவற்றில் ஒன்று தான் வாகரை வேடுவர் சமூகத்தினர். கடந்த கால உள்நாட்டு யுத்தம் முதல் இன்று வரை ஒரு சில சமூகத்தினர் பாதிக்கப்படுகின்றார்கள் என்றால் அதில் வேடுவர் சமூகமும் அடங்கும். வனங்களிலும் குகைகளிலும் வாழ்ந்த இவர்கள் வேட்டையாடியும் மீன் பிடித்தும் தமது அன்றாட வாழ்வினை கொண்டு சென்றார்கள், தேன், காய்கறிகள் என்பவற்றினை விற்று தமது பிற தேவைகளையும் பூர்த்தி செய்து கொண்டார்கள். ஆயினும், யுத்தத்தின் போது எதிர்கொண்ட பாதுகாப்பு பிரச்சினை காரணமாக நகரப்புறங்களை நோக்கி நகர ஆரம்பித்தார்கள்.
வாகரையின் கதிரவெளி, மாங்கேணி, புச்சாக்கேணி போன்ற பல இடங்களில் இவர்கள் வாழ்கின்றனர். ஆயினும், இவர்கள் இடம்பெயர்ந்துள்ள பிரதேசங்களிலும், கல்வி மற்றும் வாழ்வாதாரத்திற்காக நகர்புறங்களுக்குச் செல்லும் போதும் பலவிதமான புறக்கணிப்புக்களை எதிர்கொள்கிறார்கள். பாலர் பாடசாலைகளில் ஏனைய குழந்தைகளுடன் தங்கள் குழந்தைகளை இணைத்துப் படிப்பிப்பது முதல் வயது வந்தவர்கள் நகர்புறங்களுக்கு வேலைக்குச் செல்வது வரை பல்வேறு அசௌகரியங்களை சந்திக்கின்றார்கள். அதிலும் பெண் பிள்ளைகளது நிலைமை இன்னும் பாரதூரமானதாக அமைந்துள்ளது.
ஆயினும், தாங்கள் நகர் புறங்களுக்குச் செல்வதற்கு பின்வரும் காரணங்களால் நிர்ப்பந்திக்கப்படுவதாகக் கூறுகிறார்கள்.
- தற்போது தங்களுக்கு முன்னர் போன்று காடுகளுக்கு சென்று வேட்டையாட அனுமதியில்லை. பாதுகாப்பினை முன்னிட்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காடுகளில் இடம்பெறுகின்ற மண்ணகழ்வுகள், அரிய இன உயிரினங்களின் கடத்தல்கள், தந்தங்கள், மிருகத்தோல் கடத்தல்கள் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெற்றாலும் வேட்டையாடுவதற்கு காடுகளுக்குச் சென்ற தங்ளுடைய சமூகத்தினரும் கைதுகளுக்குள்ளாகியுள்ளனர். ஆகவே, காடுகளுக்கு செல்வது ஆபத்தானது.
- வேறு வேலைகளுக்குச் செல்ல வேண்டுமாயின் தொழிற்பயிற்சிகளையும் பாடசாலைக் கல்வியையும் தமது குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய தேவையுள்ளது. இங்குள்ள சில பிள்ளைகளை கத்தோலிக்க மடங்களைத் சேர்ந்தோர் பராமரிக்கிறார்கள். அதற்காகவும் நகரங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது.
- தற்போது இளவயதில் உள்ளவர்கள் நகர்புற வேலைகளில் குறிப்பாக கொழும்பு போன்ற இடங்களில் கூலி அதிகமாக கிடைக்கும் என்பதால் வெளியிடங்களுக்கு வேலைக்காகச் செல்கிறார்கள்.
- அரச நிர்வாகிகளின் அசமந்த போக்குகள், புறக்கணிப்புக்களாலும் நகரங்களை நோக்கி பயணிக்கிறார்கள்.
ஒரு தாய், தனது பெண் பிள்ளை கொழும்பிற்கு வீட்டு வேலைக்கு சென்றார் என்றும், அந்த வீட்டினர் எப்போதும் இன ரீதியாக கிண்டலடிப்பதுடன் ஏதாவது கோபம் வருமிடத்து அப்பெண் பிள்ளைக்கு சூடு வைத்துள்ளதாகவும், சாப்பாடின்றி பல நாட்கள் வருத்தியதாகவும் தெரிவித்தார்.
இன்னுமொரு இளம் பெண் தான் நகரிலிருந்து வேலை விட்டு திரும்பும் போது தங்களது தொலைபேசி இலக்கங்களை பலவந்தப்படுத்திக் கேட்பதாகவும் தாங்கள் கொடுக்காதவிடத்து தரக்குறைவாக குரலை உயர்த்தி திட்டுவதாகவும் தெரிவித்தார். மேலும் இவ்வாறான அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க முடியாதவர்கள் படித்தும் வீடுகளில் முடங்கிக்கிடப்பதாக தெரிவித்தார். அத்துடன், வறுமையினால் பருவக்கால பழங்களை காடுகளிலிருந்து பறித்து வந்து வீதியோரங்களில் நின்றவாறு விற்பதாகவும், இதன் போதும் கூட பல்வேறுப்பட்ட வன்முறைகள் சிறுவர்கள், பெண்களுக்கு இடம்பெறுவதாகவும் தெரிவித்தார்.
வேடுவர் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அடங்கிய வீடியோ இணைப்பை கீழே பார்க்கலாம்.
கேஷாயினி எட்மண்ட்