46/1 ஜெனிவாத் தீர்மானத்தில் இந்தியாவின் வகிபங்கு தொடர்பில், அதனுடைய அரசியல் ஆட்டம், வகிபங்கு நடுநிலையானதா அல்லது பக்கச் சார்பற்றதா? என்ற விவாதம் பொதுப்பரப்பில் பேசு பொருளாக உள்ளது. அரசியலில் நடுநிலைக் கருநிலைக் கோட்பாடு என்று ஒன்று உள்ளதா? இல்லையா? அதற்குப் பின்னால் உள்ள அரசியல் தொடர்பில் ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

நடுநிலை வகித்தல் போரைத்தடுக்குமா? அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்ட சமூகத்திற்கு விடுதலையைப் பெற்றுக்கொடுக்குமா? என்ற வினாவிற்கான விடை பெரும்பாலும் ‘இல்லை’ என்றே தோன்றும். இந்திய சுதந்திரத்தின் பின்னர், ஐ.நா. சபையின் இரண்டாவது பொது அமர்வில், இந்தியா, தென்னாபிரிக்க கறுப்பின அடக்குமுறைக்கெதிராக தனது காட்டமான பதிவை மேற்கொண்டது. அதன் விளைவாக மேற்குலக நாடுகள் இந்தியாவின் மொழிநடையை கோரிக்கைகள் சார்ந்து முன்மொழியும் படி கேட்டிருந்தன. அந்த அழைப்பையும் இந்தியா ஐ.நா.பொதுச்சபையில் பதிவு செய்து கொண்டது. 1948இல் 3ஆவது கூட்டத்தொடரில், இந்தியா மனித கௌரவத்தைப் பாதிக்கும் எச் செயலையும் பொறுத்துக் கொள்ளாது, குறிப்பாக தென்னாபிரிக்க கறுப்பின அடக்குமுறை சார்ந்து, என ஆணித்தரமாக கூறியிருந்தது. அதேநேரத்தில் 1949 – 50 களில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நடந்தேறிய மனித உரிமை மீறல்களுக்கெதிராக விவாதத்தை ஆரம்பித்த போது, இந்தியா அவ்விவாதங்களிலிருந்து விலகிக் கொண்டது (A.H. Doctor 1964). அதற்கடுத்து வந்த கூட்டத்தொடரில், பல்கேரியா, ஹங்கேரி, ருமேனியா ஆகிய நாடுகளில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் (ICJ) ஆலோசனை பெறப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும், அதே நேரத்தில் அந்நாடுகள் மனித உரிமை மீறல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு மறுப்புத் தெரிவித்த நிலை, மேற்கூறப்பட்ட முடிவிற்கு வலுச் சேர்க்கின்றது என்ற தீர்மானத்திற்கு – முன்மொழிவிற்கு இந்தியா யூகோஸ்லாவியாவுடன் சேர்ந்து விலகியிருந்தது குறிப்பிடப்பட வேண்டியது. அதேபோல் ஒன்பதாவது பொது அமர்வில், கம்யூனிஸ நாடுகளில் கட்டாய வேலை தொடர்பான விவாதத்திலும், கட்டாய வேலைக்கெதிரான தீர்மான முன்மொழிவு தொடர்பில் இந்தியா விலகியிருந்தது மாத்திரமல்ல, அத்தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. ஆனாலும், கட்டாய வேலை என்ன வடிவில் இருந்தாலும் கண்டிக்கப்பட வேண்டும் என்ற கூற்றோடு இந்தியா தனது பொறுப்பிலிருந்து நழுவிக் கொண்டது (அதே கட்டுரை).

இந்தியாவின் இரட்டை நிலைத்தன்மைக்கு இன்றும் உதாரணங்கள் சேர்க்க வேண்டுமாயின், இந்தோனேசியா, நெதர்லாந்தின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா தமது நிலைப்பாட்டை தீவிரமாக எடுத்திருந்தது. அதேபோல் இஸ்ரேல் எகிப்தின் மீது (1956) படையெடுத்த போது, பிரித்தானிய, பிரெஞ்சு தலையீட்டை அப்போதிருந்த இந்திய பிரதிநிதி ஆர்தர் லால், ஐ.நாவின் சட்டகத்தின் மீதான கேலிக்கூத்து என விமர்சித்திருந்தார். அதே நேரத்தில், ‘வலிந்து முற்றுகையிடுதலை ஏகாதிபத்தியம்’ என வர்ணித்திருந்தார். அதே இந்தியா, கம்யூனிஸ நாடுகள் தொடர்பில் பிரேரணைகள் முன் மொழியப்படும் பொழுது விலகி இருந்தையும் அவதானிக்க வேண்டும். சோவியத் ரஷ்யாவின் ஹங்கேரி  மீதான படையெடுப்பிற்கு எதிராக மூன்று பிரேரணைகள் முன் வைக்கப்பட்ட போது அவை மூன்றிலுமே இந்தியா தன்னை தவிர்த்துக் கொண்டது. அப்போதைய இந்திய பிரதிநிதியாக இருந்த கிருஸ்ண மேனன், பின்வருமாறு காரணத்தைக் குறித்துக் காட்டினார்: ‘மனித சுதந்திரம் பாதிக்கப்படும் போது இந்தியா நடுநிலையாக இருக்கப் போவதில்லை. ஆனால், ஐ.நா.உறுப்பு நாடுகளின் இறைமையை எந்த சந்தர்ப்பத்திலும் புறக்கணிக்க முடியாது’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 1957இல் கியூபா, அயர்லாந்து, பெரு, பாகிஸ்தான், இத்தாலி ஆகிய நாடுகள், சோவியத் ரஷ்யா, ஹங்கேரியிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்ற பிரேரணையை முன்மொழிந்த போது இந்தியா அதனை எதிர்த்திருந்தது, இரு காரணங்களுக்காக இந்தியா இந்த நிலைப்பாட்டை எடுத்திருந்தது. ஒன்று ஹங்கேரியின் பிரச்சினையை சிவில் யுத்தம் என்று நிலைப்படுத்தியது. இரண்டாவது, ஹங்கேரி மக்களுக்கு சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுயாட்சி வழங்கப்படுமாயின் பாகிஸ்தான், காஷ்மீர் தொடர்பில் அதே தர்க்கத்தை பயன்படுத்த நேரிடும் என்பது (அதே கட்டுரை). இந்தியா எப்போதும் தனது அதிகார நலன் சார்ந்தே அரசியல் நகர்வுகளை மேற்கொண்டிருந்தது. இவ்வாறு தான் இந்தியாவின் வரலாறு ஐ.நா. சபையில் ஆரம்பமாகின்றது.

சர்வதேச தொடர்பாடலில் குறிப்பாக, சண்டையிடும் நாடுகளுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாத நாடுகளை நடுநிலை நாடுகள் என குறிப்பிடலாம் (Makowski 1948). அரசுகள், குறிப்பாக பக்கச்சார்பற்ற தன்மையை கொள்கையாக கொண்டிருப்பதை, அது குறுகிய கால, நீண்ட கால கொள்கையாக இருக்கலாம், நடுநிலை அரசுகள் எனக் கொள்ளலாம். பொதுச்சட்டத்திற்கூடாக நடுநிலைத் தன்மையை அணுகும் போது, போர் நடைபெறுகின்ற பின்புலத்தைக் கொண்டது. போர் நடைபெறுகின்ற சூழலில் நடுநிலைத் தன்மை வகிப்பது என்பது போரில் ஈடுபடுகின்ற அரசுகளுடன் எந்தவொரு அரசையும் ஆதரிக்காத, பக்கச்சார்பற்ற தன்மையைப் பேணுவதாகும். ஆனால், போர் இல்லாத சூழலில் நடுநிலைத்தன்மை என்பது சாத்தியமாகுமாக என்றால் அவ்வாறான அரசுகள் நிரந்தர நடுநிலைத்தன்மையை கொள்கையாகக் கொண்டவையாக இருக்கமுடியும். எந்தவொரு இராணுவக் கூட்டிணைவையும் அனுசரிக்காத அரசுகளின் நடுநிலைத்தன்மை ஒரு அரசின் தேசிய நலன்கருதி மாற்றப்படலாம். (Nahlik 1960) அவ்வாறெனில் நிரந்தர நடுநிலைத்தன்மை கொண்ட நாடுகள் என்று குறிப்பிடுவதும் சிக்கலுக்குட்பட்டதே. போரில் நடுநிலைத்தன்மையை தக்க வைத்துக் கொள்கின்ற அரசுகளுக்கு சர்வதேச சட்டத்திற்குட்பட்டு பொறுப்புக்களும், கடமைகளும் உண்டு. போர் தவிர்ந்த நிரந்தர நடுநிலைத் தன்மை கொண்ட அரசுகள் தங்களுடைய, சமாதான கால நடுநிலைத்தன்மையை அரசியல் பிரகடனம் ஊடாக அல்லது ஏனைய அரசுகளின் அடையாளப்படுத்தல் மூலம், அந்தத் தகுதி நிலையை அடைந்துகொள்கின்றன. அந்த அரசின் அரசியல் விருப்பு சார்ந்த நிலையில் (R.M. Czarny 2018).

சர்வதேச தொடர்பாடல் ‘நடுநிலைத்தன்மை’ என்பது வெளிநாட்டுக் கொள்கையின் ஒரு கருவியாக உள்ளது. அதனூடாக அரசு தனது தேசிய நலன்களை அடைவதற்கு முயற்சிக்கின்றது. வெளிநாட்டுக் கொள்கை என்பது, ஒரு தேச அரசினுடைய சுயலாபங்களுக்காக கொள்கைகளை ஏனைய அரசுகளுடனும், நிறுவனங்களுடனும் உருவாக்கி செயன்முறைப்படுத்துகின்ற ஒரு செயன்முறை’ (Ziomer + Zyblikiewicz 2001) ‘சர்வதேச தொடர்பாடலில் நடுநிலைத்தன்மை என்பது முடிந்த முடிவல்ல’, மாறாக அரசுகள் தங்கள் நலன்கருதி எடுத்துக் கொள்கின்ற சாதகமான நிலை, சர்வதேச கட்டமைப்பு சார்ந்து (Poplawski 1917).

நடுநிலைத்தன்மை, பாரம்பரிய போர் பின்புல கருத்தியலின் அடிப்படையில், போர் நடைபெறுவதை நிறுத்தப் போவதில்லை. ஏற்கனவே கூறியதைப் போன்று நடுநிலைத்தன்மை குறிப்பிட்ட அரசை போர்ச் சூழலிலிருந்து அந்நியப்படுத்தி வைத்துக் கொள்ளலாம். ((E.D.Thomas 1936) இந்த நிலையில் தான் இந்திய நடுநிலைத்தன்மையையும் நோக்க வேண்டியிருக்கும். பண்டைய இந்தியா ‘மிகு பெரும்பான்மை’ (Prepnderence)என்ற அரசியல் கருத்தியலை அறிமுகம் செய்திருந்தது. மிகப் பெரும்பான்மையான பலத்தை (கூட்டாக) தனது எதிரிக்கு எதிராகப் பயன்படுத்தவது, அல்லது பிழை விடும் குழுவிற்கெதிராக பயன்படுத்துவது (அதே கட்டுரை). இதனடிப்படையில் அக்கட்டுரையாளர் உலக நாடுகள் சங்கம்  (League of nations theory) என்கின்ற கூட்டணி உருவானதாக குறிப்பிடுகின்றார். உலக நாடுகள் சங்கம் அல்லது கூட்டணிக் கருத்தியலில் நடுநிலைத்தன்மைக்கு இடம் இருக்கவில்லை. இந்தியா ஒரு போதுமே ஒன்றாக இருந்ததில்லை. அதனால் நடுநிலைத்தன்மைக்குரிய தேவை உணரப்பட்டதால், நடுநிலைத்தன்மை கருத்தியல் தோன்றியதாக அவ் ஆய்வாளர் குறிப்பிடுகின்றார். ஆரம்ப கால நடுநிலை விளக்கத்தின் அடிப்படையில், இரண்டு அரசர்களுக்கிடையே போர் நடைபெறும் போது, மூன்றாமவர் சமாதானமாக இருந்து வணிகத்தை தொடர வேண்டும் என்பதாக இருந்தது. ஆனால், உரோமைய சாம்ராஜ்ஜயத்தில் நடுநிலைத்தன்மைக்குரிய வெளி இருக்கவில்லை, உரோமையர்களைப் பொறுத்தவரையில், உரோமையர்களுக்கு சார்பானவர்கள் அல்லது எதிரானவர்கள் என்ற இரு மக்கள் கூட்டம் மட்டுமே இருந்ததாக விவிலியம் குறிப்பிடுகின்றது.

உண்மையில் நடுநிலைத்தன்மை என்பது அசாதாரணமானது. நடுநிலைத்தன்மைக் கருத்தியல், பக்கச்சார்பற்ற தன்மையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்குமாயின் அது ஒரு தவறான வாத வழுவாகும். நெருக்கீட்டுச் சூழலில் பக்கச்சார்பற்றதன்மை, வலிமையான அல்லது அதிகாரம் கூடிய குழுக்களை ஆதரிப்பதற்கான சாதகத்தன்மையை உடையதாகவே நோக்க முடியும் (அதே ஆசிரியர்). இதே வாதத்தை எவ்வாறு இந்தியா ஈழத்தமிழர்களையும், சிங்கள அரசையும் கையாளுகின்றது என்ற பட்டறிவின் அடிப்படையில் நோக்குதல் சிறந்தது. இவ்வாறான இந்திய நடுநிலைத் தன்மையின் கருத்தியல், கருத்தியலின் உள்ளடக்கம் சார்ந்து எவ்வித விளைவையும் கொண்டிராவிட்டாலும், அதனுடைய விளைவு சார்ந்து, ஈழத் தமிழர் சார்ந்து சிந்திக்கின்ற போது, தண்டிக்கும் விளைவைக் கொண்டிருக்கின்றது. அறம் சார்ந்து ஆராய்கின்ற போது நடுநிலைத் தன்மைக்கருத்தியல் சிக்கலுக்குட்பட்டதாகவே தோன்றுகின்றது.

தெற்காசியப் பிராந்தியத்தில் மூத்த சகோதரன் (Big brother)பாத்திரத்தை வகிக்க முற்படுகின்ற இந்தியா, தெற்காசியாவில் இந்திய ஏகாதிபத்தியத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் குறியாயிருக்கின்றது. அந்த ஏகாதிபத்தியத்தை தக்க வைப்பதில் அறவழி சார்ந்த அணுகுமுறைகளைக் கையாள வேண்டிய அவசியம் இல்லாத சூழலில் தனது அரசியல் திட்டத்தை முன்னெடுப்பதாகத் தெரிகின்றது. நிதின் கொக்ஹாலே (Nitin Gokhale 2001) தன்னுடைய ஆய்வில், இந்திய விமானப்படை, கடற்படை 2009ஆம் ஆண்டு இறுதி  யுத்தத்திலே ஈழத்தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டதை ஏற்றுக்கொள்வதோடு, அது தவிர இராணுவ தந்திரோபாய நகர்வுகள் குறித்த ஆதரவையும் இந்தியா வழங்கியதெனக் குறிப்பிடுகின்றார். வெள்ளைக் கொடி விவகாரத்தில் விஜய் நம்பியாரின் வகிபங்கு பற்றி ஏற்கனவே பல ஆய்வுகள் வெளிவந்துள்ளன.

பிராந்திய வல்லரசுகளின் தோற்றம் என்பது புவிசார் அரசியலில் தவிர்க்கமுடியாதாதாகின்றது. இலத்தீன் அமெரிக்க நாடுகளில் பிரேசில், ஆபிரிக்காவில் தென்னாபிரிக்கா, தென்கிழக்காசியாவில் சீனா, தெற்காசியாவில் இந்தியா போன்றவற்றை குறிப்பிட முடியும். தெற்காசியாவைப் பொறுத்தவரையில் இந்தியாவின் வெளியுறவுக்  கொள்கை மூன்று வகையினுள் அடங்கும் (S.Destradi 2012). ஒன்று (இந்தியப்) பேரரசு (empire), இரண்டாவது மேலாதிக்கம் (hegemony), மூன்றாவது தலைமைத்துவம் (leadership). இந்தியப் பேரரசு எனக் குறிப்பிடப்படுவது de jure அடிப்படையில் அது சட்ட ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டதோ அல்லது அங்கீகரிக்கப்பட்டதாகவோ இல்லாவிடினும் யதார்த்தத்தில் இயங்கிக் கொண்டிருப்பது. இவ்வாறான யதார்த்த அதிகார சமச்சீரற்ற தன்மை குருமரபு அதிகாரப் பரவலாக்கத்தை மையமாகக் கொண்ட அதிகார உறவுமுறையை தத்தெடுக்கின்றது. பேரரசு(கள்) ஏகாதிபத்திய அதிகாரத்தை வலுக்குறைந்த அரசுகளின் இறைமையின் மீது திணிக்கின்றது. தேவையேற்படும் போது தலையீட்டுக் கொள்கின்றது. மேலாண்மை, சுய – நலன்களை அடைவதிலே தங்கியிருக்கின்றது. சுய – நலன்கள் (அரசின்) கூட்டான இலக்காக பிரதிபலிக்கப்பட்டு அதிகார பலத்தினூடும் வளங்களினூடும் அடையப்படுகின்றது. தலைமைத்துவ பாத்திரத்தினை வகிப்பதனால், தலைவர்கள், தங்களைப் பின்பற்றுபவர்களை, இலக்குகளை அடைவதற்காக செயல்படும் படி தூண்டுகின்றார்கள். இந்த இலக்குகள், தலைவர்களுடையது மட்டுமல்லாது அவர்களைப் பின்பற்றும் கூட்டத்தினருடையதாகவும் மாற்றப்பட்டு அறிமுகப்படுத்தப்படுகிறது (அதே நூல்).

இந்தியா சிறிலங்கா தொடர்பில் பல்வேறு அணுகுமுறைகளைக் கையாண்டிருந்தது. அது மென் மேலாண்மையிலிருந்து, வன் மேலாண்மை, இடைத்தரகர், தலையீடு, ஏகமனதான புறக்கணிப்பு, இறுதியாக கலப்பு அணுகுமுறை கையாளப்பட்டது, ஊக்கிகளை வழங்கி இணங்கவைப்பது போன்றன.

இந்தியா, தெற்காசியா பிராந்தியத்தின் வல்லரசாக இருக்கின்ற போதும் நெருக்கீட்டு முகாமைத்துவத்தில் தோல்வியைச் சந்தித்த சக்தியாக இருக்கின்றது. குறிப்பாக ஈழத்தமிழர் உரிமை சார்ந்து, ஈழத்தமிழர்களுக்கு விடுதலையைப் பெற்றுக் கொடுக்காத இந்தியா, இறுதிப்போரில் நெருக்கீட்டு முகாமைத்துவத்தில் கூட திராணியற்றுப் போனது. 1991 லிருந்து 2006 வரைக்கும் இந்தியா, சிறிலங்கா தொடர்பான வெளியுறவுக் கொள்கையில் ‘தலையிடுவதைத் (hands off) என்ற போக்கைக் கையாண்டது. இவ்வாறான அணுகுமுறையை பிராந்திய வல்லரசுகள் பயன்படுத்துவதில்லை (S.Destradi 2012b), காரணம் பிராந்திய வல்லரசுகள் சாதாரணமாக தங்களது அதிகார வலுவை தக்கவைப்பதற்காக தன்னுடைய பிராந்தியத்தில் நெருக்கீட்டு முகாமையாளராக செயற்பட விரும்பும். 2007இல் இந்தியாவினுடைய வெளியுறவுக் கொள்கையில், சிறிலங்கா தொடர்பில், மாற்றத்தை அவதானிக்க முடிகின்றது. மறைமுகமான ஆனால் குறிப்பிடத்தக்களவு விளைவை கொண்டு வரக்கூடிய பாத்திரத்தை இந்தியா எடுத்துக் கொண்டது. புலிகளை தோற்கடிப்பதாயும். ஆனால், தமிழ் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற கோஷத்துடன், இரட்டை வேட அரசியல் நாடகத்தை 2009ல் அரங்கேற்றியது இரகசியமல்ல. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தெற்காசிய பிராந்தியத்தில் ஒரு துருவ (unipolar)சாம்ராஜ்ஜயத்தை தக்க வைத்துக் கொள்வதை மையமாகக் கொண்டது. அதனால் வெளித் தலையீடுகளை இயலுமானவரைக்கும் தவிர்ப்பதை இறுதியாக விரும்புகின்றது. அதே போல் தெற்காசியாவில் சகல நாடுகளிலும், இந்தியா தவிர்ந்த, வெளித் தலையீடுகளை தவிர்த்துக் கொள்ளவே இந்தியா விரும்புகின்றது.

ஆக ஒட்டுமொத்தத்தில் இந்தியாவின் இரட்டை வேடம் என்பது இன்று மட்டும் நடந்ததல்ல, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைப் பண்புகள், சிறிலங்கா தொடர்பில், ‘ஒற்றுமை, இறைமை, ஒருமைப்பாடு’ இருக்குமட்டும் இருக்கப்போவது. இந்தியா முன்வைக்கும், 13ம் திருத்தத்தினூடாக  தமிழர்களுக்கு ஒரு போதும் விடுதலையைத் தரப்போவதில்லை. 13 ஐ விட இந்தியா மேலதிகமாக எதையும் முன்வைக்கப் போவதுமில்லை, தமிழர் இனப் பிரச்சினைக்கான தீர்வாக.

எழில் ராஜன்


Photo: The Economic Times