“திட்டோ பாராட்டோ நான் கவனிக்கப்படுகின்றேன்” – டொமினிக் ஜீவா
ஒவ்வொரு மல்லிகை இதழும் எந்தவித இன, மொழி பேதமில்லாது ஈழத்தின் கலை இலக்கிய ஆளுமைகளின் முகங்களோடு வெளியாகும். அந்த முகப்பு அட்டைக்கான ஆளுமை குறித்த செறிவானதொரு கட்டுரை மல்லிகையின் உள்ளடக்கத்தில் இருக்கும். அதன் வழியாக அறிந்து கொண்டவர்கள் எத்தனை எத்தனை பேர்.
“டொமினிக் ஜீவா” என்ற இதழாளரால் நாம் நல்ல சிறுகதை ஆசிரியரைத் தொலைத்து விட்டோம் என்கிறார் எழுத்தாளர் மேமன் கவி அவர்கள்.
ஜீவாவின் “தண்ணீரும் கண்ணீரும்” என்ற அவரது சிறுகதைத் தொகுதி ஒன்றே போதும், அது பலரது வாசிப்பனுபவத்தில் கிட்டியிரார இருண்மை உலகைக் காட்டும்.
அதையே டொமினிக் ஜீவா இப்படிக் கேள்வியெழுப்புகிறார்,
“சமூகத்தின் நன்மைக்காக, ஆரோக்கியத்துக்காக, அதன் முன்னேற்றத்துக்காகத் தங்களை அர்ப்பணித்து உழைத்துப் பிழைத்து வரும் பாமர மக்களின் ஆசா பாசங்கள், விருப்பு வெறுப்புகள், வாழ்க்கை முறைகள், அனுபவங்கள் எல்லாம் சரித்திர, வரலாறு அடைப்புக் குறிகளுக்குள் அடங்க முடியாதவைகளா? – ஏன்? என்ன காரணம்?
1966 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் திகதி ஈழத்து இலக்கிய வரலாற்றின் மறக்க முடியாத நாள். இந்த நாளில் தான் ‘மல்லிகை’ என்ற சஞ்சிகையை டொமினிக் ஜீவா பிரசவித்தார். இந்த சஞ்சிகை ஈழத்து சஞ்சிகை வரலாற்றில் நீண்ட நெடிய வாழ்வைக் கொண்டது.
இந்த ஆண்டையும் தொட்டிருந்தால் அது பொன் விழாக் கண்டிருக்கும். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்னர் “மல்லிகை” தனது ஓட்டத்தை நிறுத்திக் கொண்டது இன்றும் ஈழத்து இலக்கியத்தை நேசிப்போரின் மனதில் ஒரு மனச் சுமையாக இது இருக்கிறது.
தன்னுடைய மல்லிகை இதழின் பிரதிகளை ஆரம்ப நாட்களில் ஒரு நாள் சுமந்து கொண்டு போகையில் சாதித் தடிப்புக் கொண்ட இளைஞன் அதை வாங்கி நின்ற இடத்திலேயே கிழிதெறிந்த நிகழ்வு கூட ஜீவாவின் இத்தனை ஆண்டுகால, 400 இதழ்களைக் கொண்டு வர அவரின் மனதில் கிளர்ந்த ஓர்மத்தின் வெளிப்பாடோ என்று நினைக்கத் தோன்றும்.
ஆனால், ஒவ்வொரு மல்லிகை சஞ்சிகை வெளிவரும் போதும் டொமினிக் ஜீவா என்ற அந்தத் தனிமனிதன் சந்திக்கும் சவால்கள் எத்தகையது என்பதை அனுபவ ரீதியாக நம்மில் பலர் கண்டிருக்கக் கூடும். ஒரு சிறு மூத்திரச் சந்துக்குள் தனது மல்லிகை காரியாலயத்தை வைத்து பல்கலைக் கழக சமூகம் வரை தன் முற்றம் வர வைத்தது அவரது படைப்புலகம்.
நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வை, பளீர் வெள்ளை நேஷனல் சேர்ட்டும், வேட்டியுமாகத் தான் அவர் இருப்பார். பல்கலைக் கழக மாணவர் சிலர் அவரின் மல்லிகை இதழ்களைத் தேடித் தேடிக் குறிப்பெடுத்துக் கொண்டிருப்பர்.
போர் உச்சம் கொண்ட காலத்திலும் இரட்டை றூல் கொப்பித் தாளிலும் மல்லிகை வந்ததது. பின்னர் கொழும்பு, ஶ்ரீ கதிரேசன் வீதிக்கு இடம்பெயர்ந்தது மல்லிகை காரியாலயம்.
யாழ்ப்பாணத்தில் சலூன் முகப்போடு இருந்த அதே அடையாளச் சூழலில் இயங்கிக் கொண்டிருந்தது. மல்லிகையின் அடுத்த பரிமாணமாக மல்லிகைப் பந்தல் வெளியீடுகள் அமைந்தன.
அவரின் “எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்” என்ற சுய வரலாற்று நூல் ஒன்றே போதும் ஈழத்தின் சாதியத்தின் குரூரத்தையும், அந்தக் கால இலக்கிய இயக்கத்தின் வரலாற்றையும் காலக் கண்ணாடியாகக் காட்டும்.
டொமினிக் ஜீவா ஒரு தனிமனிதனல்ல, சாதிய அடக்குமுறைகளுக்கு எதிராக வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கும் ஒரு இயக்கம்.
“எனது சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற சிறுகதைத் தொகுதியான ‘தண்ணீரும் கண்ணீரும்’ தொகுப்பு பல ஆண்டுகளுக்கு முன்னரே மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏக்கு உப பாட நூலாக வைக்கப்பட்டது.
இன்று வரை எனக்கொரு ஆதங்கம் கலந்த ஆச்சரியம் இந்த மண்ணில் உள்ள எந்தப் பல்கலைக்கழகமுமே என்னை அழைத்து, எனது இலக்கிய அனுபவங்களைப் பற்றியோ தமது மாணவர்களுடன் கருத்துப் பரிமாறல் செய்ய இதுவரை அழைப்பு விடுத்ததில்லை. அது சம்பந்தமான ஆரம்ப முயற்சிகளைக் கூடச் செய்ததுமில்லை, தொடர்பு கொண்டதுமில்லை” இப்படியாகத் தொடர்கிறார்.
யாழ்ப்பாணத்துக் கல்விச் சமூகம் சாதியம் என்ற கறையானால் காலத்துக் காலம் பீடிக்கப்பட்டிருக்கிறது. அதுவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் டொமினிக் ஜீவாவுக்கு முதுமாமணி என்ற பட்டத்தைக் கொடுத்துத் தன் விநோதப் போக்கை நிரூபித்துக் கொண்டது. கலை இலக்கியத்தில் சாதனை படைத்தோருக்குக் கெளரவ கலாநிதிப் பட்டம் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையிலிருந்து பிழன்றது. டொமினிக் ஜீவாவுக்கு மட்டுமல்ல பல்கலைக்கழகப் பின்னணி கொண்ட பேராசான் சிவத்தம்பியைக் கூட அது மேலெழாதவாறு பார்த்துக் கொண்டது.
டொமினிக் ஜீவா தன் பிறப்பில் இருந்து ஒரு இலக்கியக் காரனாக, ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கலகக் குரலாகத் தன்னை ஆக்கிக் கொண்ட வாழ்வியல் அனுபவங்களே “எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்.” இந்த நூலில் இருக்கும் ஒவ்வொரு அத்தியாயங்களுமே கனதியான சிறுகதைகள் போன்று அமைந்திருக்கின்றன. இந்தச் சம்பவ அடுக்குகளின் பின்னால் பொதுவாக அமைந்திருப்பது ஒன்றே தான் அது, சமூக அடக்குமுறைகளுக்கு எதிராக எப்படித் தான் போராட வேண்டும் என்று புகட்டி பாடம்.
மல்லிகை சஞ்சிகை தமிழ், முஸ்லிம், சிங்களப் படைப்பாளிகள் பலருக்கான முகாமாக இருந்தது. அது ஒரு பொற்காலம் என்ற பெருமூச்சு வெளிப்படுகிறது, டொமினிக் ஜீவா என்ற சமதர்மப் போராளியை இப்போது விடையனுப்பி வைக்கும் போது.
படம்: Kannan Arunasalam Photo, iam.lk
கானா பிரபா