பட மூலம், AP Photo/Eranga Jayawardena, HRW

அரசியல் யாப்பின் மீதான 20ஆவது திருத்தத்தை அமுலாக்கியமை, இராணுவமயமாக்கல், சிவில் உரிமைகளை முடக்கும் முயற்சிகள் போன்றவை, இலங்கையில் ஜனநாயகத்தின் நிலை பற்றிய கருத்தாடலை ஆரம்பித்துள்ளன. இந்தக் கருத்தாடல்கள், வெளித் தெரிபவையும், தெரியாதவையுமான சமகால நடைமுறைகளின் மீது கவனத்தை ஈர்ப்பது அவசியம். இந்த நடைமுறைகள் சமூகப் பெறுமானங்களையும், பொது மக்களின் கண்ணோட்டத்தையும் மாற்றுகின்றன. இந்த மாற்றத்தின் வழிமுறைகள் ஜனநாயகத்தை சீர்குலைத்து, சட்டவாட்சி மீதான நன்மதிப்பையும் பாதிக்கின்றன. இவற்றில் எவையும் புதிதானவை அல்ல. மாறாக, பல தசாப்தகாலங்கள் தொடர்ச்சியாக காலத்திற்கு காலம் மெதுவாக மாறி வருபவை. இந்த நடைமுறைகளை ராஜபக்‌ஷ அரசுகள் வெற்றிகரமாக பிரயோகித்து வந்தன.

ரஷ்ய அரசியல் ஆய்வாளர் அலெனா லெடினேவா (Alena Ledeneva), துருக்கிய இதழியலாளர் ஏஸ் டெமெல்குரான் (Ece Temelkuran) ஆகிய இரு பெண்களின் ஆய்வுகள், இலங்கையில் ஜனநாயகம் சிதைவுறும் விதத்தை அறிந்து கொள்ள உதவுகின்றன.

மதவெறியை சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ளச் செய்தல்

எதேச்சாதிகார ஆட்சியை ஏற்படுத்த முனைவோர் பயன்படுத்தும் முக்கியமான மூலோபாயங்களில் ஒன்று குடிப்பொதுமை (Populist). அதாவது மேல்நிலை வர்க்கத்தால் தமது கவலைகள் புறக்கணிக்கப்படுவதாக உணர்கின்ற சாதாரண மக்களின் குறைகளைத் தீர்ப்பதாக கூற முனைவதையே ஜனரஞ்சக இயக்கம் என்று டெமெல்குரான் அடையாளப்படுத்துகிறார். இதனை ராஜபக்‌ஷ ஆட்சியாளர்கள் சமூகத்தின் அடித்தள மட்டத்தில் இருந்து ஆதரவு திரட்டி, தனியாள் வழிபாட்டு மரபின் ஊடாக வெற்றிகரமாக செய்து வருகின்றனர். குடிப்பொதுமை இயக்கத்தின் முக்கியமான செயற்பாடுகளில் ஒன்றாக இருப்பது குறைந்தபட்சம் பகிரங்கமாகவேனும் சமூக ரீதியாக ஏற்றுக் கொள்ளப்படாத, பாரபட்ச செயற்பாடுகளையும், மதவெறியையும் வெளிப்படையாகக் கூறுதல் தேசப்பற்றாகும் என்ற நம்பிக்கையை உருவாக்குதலாகும். இதற்கு முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை உதாரணம் காட்டலாம். பாரபட்சத்தையும், மதவெறியையும் வெளிப்படையாகக் கூறுமளவுக்கு தைரியம் மக்களுக்கு ஏற்படும்போது, அது சகாக்கள், அயலவர்கள் மாத்திரமன்றி, நண்பர்களுடன் தொடர்பாடும் விதத்தல் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

கொவிட்-19 தொற்றி உயிரிழப்பவர்களைப் புதைப்பதற்காக மேற்கொள்ளும் போராட்டத்தில், தாம் நண்பர்கள் என்று நம்பியவர்கள் கூட ஆதரவாக குரல் கொடுப்பதில்லை என்பதை உணர்ந்து கொண்ட பல முஸ்லிம்கள் அதிர்ச்சியையும், வேதனையையும் வெளிப்படுத்துகிறார்கள். இவர்கள் சொன்னதைக் கேட்டபோது, எனக்கு 2019 உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்குப் பின்னர் அபாயா அணிந்தமைக்காக பல முஸ்லிம் பெண்கள் தமது சகாக்களாலும், அயலவர்களாலும் இம்சைக்கு உள்ளாக்கப்பட்டதால் அடைந்த ஆதங்கம் நினைவிற்கு வந்தது. அதற்கு முன்னதாக, முதலாவது ராஜபக்‌ஷ ஆட்சி காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்ந்த பசப்புரைகள், நடவடிக்கைகள் காரணமாக முஸ்லிம்கள் கொண்டிருந்த அச்சமும் எனக்கு ஞாபகம் வந்தது. இது புதிய விடயமல்ல. மாறாக, காலம் காலமாக இடம்பெற்று வந்த மீறல்களின் தொடர்ச்சியாகும்.  இத்தகைய சூழமைவில், பாரபட்சத்தின் அடிப்படையில் கருத்து வெளியிட்டும் செயற்பட்டும் வருபவர்கள் தமது நாட்டை நேசிக்கும் உண்மையான மனிதர்களாக கொண்டாடப்படுகின்றனர். மறுபுறத்தில், மதவெறிக்கும், இன-மையவாத  சிந்தனைக்கும்; (நுவாழெஉநவெசளைஅ) சவால் விடுப்பவர்கள் தேசப்பற்று இல்லாதவர்களாகவும், தேசத்துரோகிகளாகவும், நாட்டுக்கு ஆபத்தானவர்களாகவும் சித்தரிக்கப்படுவார்கள்.

கீழ்நிலையான அரசியல் உலகில் இருந்து தாம் மாறுபட்டவராகவும், அதனுடன் தொடர்பு இல்லாதவராகவும், தம்மை ‘அரசியல்வாதிக்கு எதிரானவராகவும்’ சித்தரித்து, தலைவர் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுக் கொள்வார். கோட்டபாய ராஜபக்‌ஷ ‘மக்களுக்கு பாரம்பரிய அரசியல்வாதிகள் அல்லாதவர்களே தேவை, அத்தகைய அரசியல்வாதிகளையே மக்கள் தெரிவு செய்வார்கள்’ என்று கூறினார். அவர் ‘நான் அரசியல்வாதி அல்ல. நான் அரசியல்வாதியாக இருக்கவும் இல்லை’ என்றார். அதன்மூலம், அரசியல்வாதி என்ற கோட்பாட்டுக்கு தாம் முற்றிலும் முரணானவர் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தினார். பல தசாப்தகாலம் ஏற்றத்தாழ்வுகள், பாரபட்சம், வறுமை போன்றவற்றால் துயரப்பட்டு, ஓரங்கட்டப்பட்ட இலங்கை குடிமக்கள் இத்தகைய ‘அரசியல்வாதிக்கு எதிரானவர்’ மீது ஈர்க்கப்படுவதொன்றும் அதிசயம் அல்ல. வசதி படைத்தவர்களாகவும் ‘உண்மையான மக்களை’ பாதிக்கும் விவகாரங்கள் மீது கூருணர்வு இல்லாதவர்களாகவும் சித்திரிக்கப்படும் அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூகங்களை இம்மக்கள் நிராகரிப்பதும் ஆச்சர்யமானது அல்ல. தாம் எல்ரீரீஈ இயக்கத்திடம் இருந்து நாட்டைக் காப்பற்றியதாக சூழ்ச்சித்திறனுடன் மக்களுக்கு ஞாபகமூட்டும் ஜனாதிபதி, தாம் அதேவழியில் வறுமை, ஊழல், பாதாளக் கும்பல் போன்றவற்றில் இருந்தும், போதைப் பொருள் கடத்தல்காரர்கள், கடும்போக்குவாதிகள் ஆகியோரிடம் இருந்தும் நாட்டைக் காப்பாற்றப் போவதாக கூறுகிறார். கூழைக் கும்பிடுக்காக சலுகைகளை எதிர்ப்பார்க்கின்ற நிலப்பிரபுவத்துவ நீட்சியுடன் கூடியதான இலங்கையின் எஜமானிய ஆதரவு கலாசாரத்தில், ஊழல் மிக்க, கறைபடிந்த அரசியல்வாதிகளின் பிடியில் இருந்து தம்மையும், நாட்டையும் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையுடன், அவர் ஹீரோவாக பாராட்டப்படுவார்.

நியாயமான சமூகமொன்று வேண்டுமெனக் கோருகின்ற அதேசமயம் இப்போதிருக்கும் நிலைமையைத் தொடர்ந்து பேணும் கலாசாரத்தை தக்கவைக்க முனையும் இரட்சகர்கள் மற்றும் பிதாமகர்கள் மீது மக்கள் ஈர்க்கப்படுவது ஏன்? இத்தகையதொரு நாட்டின் பகுத்தறிவு அற்ற மையத்தையும், தந்தைவழி இராச்சியம் உருவாவதை ஆதரிக்கும் தனிநபர் வழிபாட்டு முறையையும் அசோகன் குணாதிசயம் என்ற பகுப்பாய்வு கட்டமைப்பின் மூலம் புரிந்து கொள்ள முடியும். அசோகன் குணாதிசயத்தை மைக்கல் ரொபர்ட்ஸ் இவ்வாறு விபரித்திருக்கிறார். “இது மேல்நிலையில் உள்ள ஒருவருக்கும், கீழ்ப்படிந்து நடப்பவருக்கும் இடையிலான உறவை கருத்தியலாக்கம் செய்யும் ஒரு கலாசாரமாகும். மேல்நிலையில் உள்ளவர் நன்னெறி வாழ்க்கைக்கு முன்னுதாரணமாகக் கருதப்படுவார். அவர் சமூகத்திற்கு நன்மை தரக்கூடிய கொடைத்தன்மையின் மூலாதாரமாக இயங்குவார். அவரிடமிருந்தே அந்தஸ்தும், அதிகாரமும் தோற்றம் பெறும். அவரே மையமானதும் முக்கியமானதுமான சக்தியாக கருதப்படுவார்” என்று மைக்கல் ரொபர்ட்ஸ் கூறுவார்.

நவயுகத்தில், இத்தகைய இரட்சகராகக் கருதப்படும் தலைவருக்கான விசுவாசமானது,  ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் ஆகியோருக்கு கட்-அவுட் வைத்தல் மூலமும், ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், இத்தகைய உயர் பதவிகளில் உள்ளவர்களின் பெயர்களையும், புகைப்படங்களையும் பதாதைகளில் சேர்த்தல் மூலமும், அவர்களின் வழிகாட்டலுடன் தான் பொதுப் பணத்தைப் பயன்படுத்தி அரச திட்டங்கள் ஆரம்பிக்கப்படுவதாக அறிவிப்பதன் மூலமும் வெளிப்படுத்தப்படுகின்றன. எனவே, அரசுக்கும், தனிப்பட்ட அரசியல்வாதிக்கும் இடையில் வித்தியாசம் இல்லாமல் போவதோடு, அந்தத் தனிநபரே அரசாக மாறுவார்.

தேர்தல் திகதியை தீர்மானிப்பதற்காக இன்னமும் ஜோதிடர்களிடம் தங்கியிருக்கும் சமூகத்தில், தர்க்கபூர்வமான சிந்தனைக்கு இடமில்லை. விமர்சனங்களையும், அதிருப்தியையும் அடக்கி கட்டுப்படுத்துவதற்கு ஒருவர் வகிக்கும் பதவியின் மீதல்லாமல் அவரைத் தனிப்பட்ட ரீதியில் தாக்கும் உத்திகள் பயன்படுத்தப்படும். ஆட்சியாளர்களுடன் தொடர்புடைய ஊடக நிறுவனங்கள் கட்டவிழ்த்து விடும் இனவாதத்திலும், போலிச் செய்திகளிலும் தங்கியிருக்கும் மிகை தேசியவாதத்தில் சிக்கியுள்ள மக்கள், உண்மைக்கோ, பகுப்பாய்விற்கோ, காரண காரியங்களுக்கோ செவிமடுப்பது கிடையாது.

முறைசார் பொறிமுறைகள் இயங்காதபோது, முறைசாரா வழிமுறைகள் கோலோச்சுதல்

சட்டவாட்சியை சீர்குலையச் செய்யும் மற்றொரு வழிமுறையாக இருப்பது, புதிய வடிவிலான சட்டத்தையும், ஒழுங்கையும் உருவாக்குவதாகும். இங்கு சமூக நடத்தையை – குறிப்பாக மாற்றுக் கருத்துக்கள் வெளிப்படுத்தப்படுவதை – கட்டுப்படுத்துவதற்கு அரசு பயன்படுத்தும் ஆயுதமாக சட்டம் மாறுவதுடன், சட்டவாட்சிக்கு உரிய மதிப்பு வழங்கப்பட மாட்டாது. 2020ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் தமது வாய்மூல பணிப்புரைகளை சுற்றறிக்கைகளாக கருதுமாறு அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விடுத்த பணிப்புரையின் மூலம் சட்டவாட்சி பற்றிய அவரது கருத்துநிலை தெளிவானது. 2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் “அரசாங்கத்தின் நிறைவேற்று அதிகார பீடத்தினதும், சட்டவாக்க சபையினதும் செயற்பாடுகளில் நீதித்துறை அநாவசியமாக தலையிடாதிருப்பது முக்கியமானது” என்று அவர் கூறினார். சட்ட முறைமைகளும், நடைமுறைகளும் நிறைவேற்று அதிகார பீடத்தின் அல்லது அரசின் வசதிக்கேற்ப பிரயோகிக்கப்படுமாயின் அல்லது அமுலாக்கப்படுமாயின், சட்டம் நியாயமற்ற முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற நிலை உருவாகும்.

முறையான விதிகளும், நடைமுறைகளும் செயற்றிறன் வாய்ந்த முறையில் இயங்காவிட்டாலோ, நியாயமற்ற முறையில் பிரயோகிக்கப்பட்டாலோ, பாரபட்சமான விதத்தில் அமுலாக்கப்பட்டாலோ, காரியங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக முறையற்ற வழிமுறைகளைப் பயன்படுத்தும் போக்கு உருவாகி விடும். இது சட்ட நடைமுறைகள் மீதும், விதிமுறைகள் மீதும் பாதமான தாக்கத்தை ஏற்படுத்தும். இது எமக்குப் புதியது அல்ல. இது எமது கலாசாரத்தில் ஆழ வேரூன்றி இருக்கிறது. எனினும், இது ராஜபக்‌ஷ அரசுகளின் ஆட்சிகாலத்தில் புதிய வடிவத்தையும், முக்கியத்துவத்தையும் பெறுகிறது.

சீரற்ற முறைமைகள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு கலாசாரத்தில், ‘காரியங்களை நிறைவேற்றுவதற்காக’ ஆட்சியாளர்கள் தாம் அறிந்த அல்லது அவர்களுக்கு விசுவாசமான, குறிப்பாக குடும்ப அங்கத்தவர்கள் அல்லது நண்பர்களை, அதிகாரப் பதவிநிலைகளில் நியமித்தல் நிகழும். இத்தகைய நபர்கள் சட்டரீதியான விலக்களிப்புடன் சட்டத்திற்குப் புறம்பான வழிகளில் செயற்படக்கூடியதாக இருப்பதைக் காணலாம். உதாரணமாக, இலங்கை சுற்றுலா அதிகாரசபையின் (SLTA) தலைவர் எழுதிய கடிதத்தில், ஜனாதிபதியின் உறவினரான உதயங்க வீரதுங்க, சகல சுகாதார விதிமுறைகளையும் தாண்டி, SLTAஇற்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகளை மதிக்காமல் சுற்றுலாக்களை மேற்கொள்ள முடிந்திருப்பதாக தோன்றுகிறது. ஆட்சிபீடத்தின் துணை இருந்தால், எவரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கலாம் என்பதையே இது பிரதிபலிக்கிறது.

இலங்கையில் ஜனநாயகத்தை சீர்குலைத்து, தேர்தல் எதேச்சாதிகாரத்தை வலிதாக்கிக் கொள்ள முடியுமாக இருப்பதற்குரிய காரணம், இங்கு ஜனநாயக விழுமியங்கள் அகவயப்படுத்தப்படாமல் இருப்பதாலா? ஜனநாயகம் வாக்களித்தலில் ஆரம்பித்து, அதனுடன் முடிந்து விடுகிறதென இலங்கையர்களாகிய நாம் நினைக்கிறோமா? தேர்தல்களுக்கு இடையில் அரசாங்கத்தைப் பொறுப்புக்கூற வைத்தல் எமது குடியியல் கடமை என்பதை நாம் புரிந்து கொண்டுள்ளோமா? இதில் ஒன்று மட்டும் கேள்விக்கு இடமின்றி நிரூபணமாகிறது. இலங்கையின் அரசியல்வாதிகள் பலர், குறிப்பாக சமகால ஆட்சியாளர்கள், அரசாங்கத்தின் மீதான விமர்சனத்தையும், அதிருப்தியையும் ஒவ்வொரு பிரஜையினதும் குடியியலில் கடமை என்பதை ஏற்றுக்கொள்ள மறுத்து, அவற்றை தேசத்திற்கு எதிரானதாகவும், தேசத்துரோகமாகவுமே நோக்குகின்றனர். இதில் தான் பெரும் பிரச்சினை உள்ளது.

அம்பிகா சற்குணநாதன்