படம் | Capitalbay

காணாமல்போன பிள்ளையின் அம்மாக்கள். ‘இப்படியொரு அம்மாக்கள்’ நம் மத்தியில் உலாவுகின்றனர். அவர்களுடனான ஒருநாள் வாழ்தல் எப்படியானது. புகைப்படங்களைத் தாங்கி அவர்கள் நடத்தும் போராட்டத்தை ரசிக்கும்பொழுதும், அதை செய்தியாக படிக்கும்போதும், கண்ணீர் ததும்பும் அந்தக் கண்களை நிழற்படங்களில் தரிசிக்கும்போதும், அவர்களிடம் செய்தி சேகரிக்கும்போதும், அந்தத் தாய்களின் ஒருநாள் எப்படியானதென்றோ, அந்தக் குடும்பங்களின் ஒரு இரவு எப்படியானதென்றோ யாரும் நினைத்துப் பார்த்ததுண்டா? உதாரணத்துக்கு ஒரு தாயின் நாளொன்றை அனுபவித்ததுண்டா? அந்த வாழ்தலை கற்பனைகூட செய்துபார்க்க தவறியவர்கள் கட்டுரையினுள் நுழையலாம்.

முதல் நாள் இரவு எப்போது முடிந்ததென்று அந்த அம்மாவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இரவு முழுதும் அவளின் கண்களை நனைத்த, தொலைந்த மகனின் நினைவு கண்ணோரத்தில் உப்பாய் படிந்து படையாக இருக்கும். தூக்கமற்ற கண்களில் துயரக் கோடுகள்தான் புதிதுபுதிதாய் வரையப்பட்டுக் கொண்டிருக்கும். திடுக்கிட்டு எழும்பும்போதெல்லாம் மகனின் கனவு முடிந்திருக்கும். ஆக கனவுக்கும், நினைவுக்கும் இடையிலான அந்தர நிலைத் தூக்கத்தை அனுபவித்த கண்கள் சுருங்கி, ஈர்ப்பை இழந்திருக்கும்.

கடவுள் மட்டுமே அவளின் இறுதி நம்பிக்கையாக இருக்கும். மற்றையது அனைத்தையும் மறந்திருக்கும் அந்தத் தாய் மனது. இதுவரையும் நம்பிக்கையே இல்லாமல் கல்லாய் இருந்த கடவுளை இப்போதுதான் அவள் கொண்டாடத் தொடங்கியிருக்கிறாள். மகனின் பிரிவு அந்தக் கல்லுக்கு பாலும், நீரும், பிரசாதமும், மூவேளையும் மலர் மாலைகளையும் வழங்கியிருக்கிறது. இப்படித்தான் பல கடவுள்கள் பிள்ளைகளை பறித்துக் கொண்டு பிறக்கிறார்கள். கடவுளின் அசரீரிக்காக விரதமிருந்து விரதமிருந்து எலும்பு மட்டுமே அவளுடலில் மிஞ்சியிருக்கும். மகனின் பெறுமதியைவிட அவனின் வருகைக்காக கடவுளிடம் வைக்கப்பட்டிருக்கும் நேர்த்திக் கடன்களின் பெறுமதி அதிகரித்திருக்கும்.

அவ்வாறானதொரு அம்மா கடவுளுக்கு அடுத்த நிலையில் நம்பியிருப்பது ஜோதிடர்களை. அவன் வயிற்றுப் பிழைப்புக்கு ஆயிரம் பொய் மூட்டைகளை சுமந்துகொண்டு, இதுபோன்ற அம்மாக்களின் வாசல் வந்துவிடுகின்றான். அல்லது அம்மாக்கள் அவன் வாசல் சென்றுவிடுகின்றனர். எப்படியாவது பிள்ளைகளை பறிகொடுத்த தாய்களை அவன் கண்டுபிடித்துவிடுகிறான்; அல்லது அவர்கள் கண்டுபிடித்துவிடுகிறார்கள். எந்த ஆணைக்குழுவும் சொல்லாத தகவல்களை ஜோதிடக்காரன் சொல்லிவிடுகிறான்.

“உங்கள் மகன் நல்லபடியாக தீவொன்றில் இருக்கிறான். விரைவில் வருவான். அதற்காக இந்தக் கடவுளுக்கு இவ்வளவு நேர்த்தி, இத்தனை நாள் விரதம்” என்று எதையாவது சொல்லிவிட்டு, காணிக்கையை வாங்கிக் கொண்டு கிளம்பிவிடுகிறான். அவளின் நம்பிக்கைப்படி கடவுளின் பிரதிநிதி ஜோதிடக்காரன். கடவுள் மறுபடியும் உச்ச நம்பிக்கையை பெற்றுவிடுகிறார். அவருக்கான செலவு இன்னமும் அதிகரிக்கின்றது. ஜோதிடர் சொன்ன அரிய வசனத்தை ஊர் முழுதும் விதம் விதமாக அவள் சொல்லிப் பரப்புகிறாள். தீவென்பது வெளிநாடாக இருக்கலாம் என்றால், இன்னொருதாய் அந்தத் தீவின் திசையை சொல்லிவிடுகிறாள். இன்னொரு தாய் அந்தத் திசையில் இருக்கும் நாடுகளைச் சொல்லி… இப்படியே அம்மாக்களின் பொழுதுபோக்கு நேரங்கள் தீவைக் கண்டுபிடித்தலிலேயே முடிகின்றன.

மகன் தொலைந்துபோனதிலிருந்து நல்ல உணவுகள் வீட்டில் கிடைப்பதில்லை. வீட்டிலிருக்கும் ஏனைய பிள்ளைகள் அடிக்கடி உணவகச் சாப்பாடுகளை நல்ல உணவுக்காக சாப்பிடவேண்டியிருக்கிறது. பெரும்பாலான நாட்களில் அப்பாவின் சமையல்தான் ஏனைய பிள்ளைகளுக்கு கிடைக்கின்றது. மாதத்தில் இரண்டுக்கு மேற்பட்ட நாட்களில் மகனின் புகைப்படத்தை தாங்கியபடி போராடப் போய்விடுகிறாள் அம்மா. அரசியல் கட்சிகள் தம் அரசியலுக்காகவும், அடையாளம் தேடிக் கொள்வதற்காகவும் காணாமல்போன பிள்ளைகளின் அம்மாக்களின் கண்ணீரைப் பயன்படுத்திக் கொள்கின்றன. அவர்களால் இந்தத் தாய்களுக்கு எந்தப் பலனும் இதுவரை கிடைத்ததில்லை. ஆனால், இலங்கைக்கு வெளிநாட்டு தலைவர்கள் வரும்போதெல்லாம் இந்த அம்மாக்களை கூட்டி போராட்டம் நடத்த இந்த கட்சிகள் தயங்குவதேயில்லை. இதுவும் ஒருவித அரசியல் என்பதை தெரிந்தும் தெரியாமலும், பிள்ளைகளுக்கான போராட்டம் என்றாலே கண்ணீரோடு, முதல்நாள் அதிகாலையிலேயே தயாராகிவிடுகிறது இந்த வகை தாய்களின் கூட்டம்.

தொலைந்த மகனுக்கு பிடித்த சுவையில் சமைக்கத் தொடங்கிய அம்மா, அவனின் தொலைவோடு அந்தச் சமையலையே மறந்திருக்கக் கூடும் என்று ஏனைய பிள்ளைகள் நினைத்துக் கொள்கிறார்கள். அவன் வீட்டிலிருந்த காலத்தில் இருந்த சமையலின் சுவை இப்போதெல்லாம் இருப்பதில்லை. ஏதோ ஒரு உணவில் உப்பை கலந்து பரிமாற்றப்படுகிறது என்ற எண்ணம் அதிகமாக உணரும் தருணங்களில் உணவக சாப்பாடு பிடித்துப் போகிறது. ஒரு மகனின் பிரிவால் அம்மா தன் மற்றைய பிள்ளைகளின் அன்பை இழக்கிறாள்.

அவளுக்கு இப்போதெல்லாம் தங்கம், நகை, பணம் முதலான பொருட்களை சேமிப்பதில் ஆர்வம் குறைந்துவருகிறது. தொலைந்த தன் மகன் ஆசையோடு வளர்த்த நாய்க்குட்டியிலிருந்து அவன் உணவருந்திய சாப்பாட்டுக் கோப்பை வரையிலான நினைவுப் பொருட்களை சேமிக்கத் தொடங்கியிருக்கிறாள். அவன் காணாமல்போனதிலிருந்து அணியப்படாத துணிகளில் அழுக்கிருப்பதாக கற்பனை செய்துகொண்டு, அதை சுத்தம் செய்யும் நாட்களும் நடக்கின்றன. இது பைத்தியக்காரத்தனத்தின் உச்சம் என்பார்கள் அந்த வீடுகளின் அப்பாக்கள். அவனின் சைக்கிள் யார் கை படாமலும் அப்படியே நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. அவனின் அறையை புனித அறையாக மாற்றியிருக்கிறாள் அம்மா.

அம்மாவின் இதுபோன்ற நடவடிக்கைகள் வீட்டில் பெருங்குழப்பத்தையே ஏற்படுத்திவிடுகிறது. அடிக்கடி சண்டை நடக்கிறது. ஒவ்வொருவரும் வீட்டின் ஒவ்வொரு மூலையாக உட்கார்ந்தோ, கூனிக் குறுகிப் படுத்தோ அயர்ந்துபோகிறார்கள். பெரும்பாலான இரவுகளில் அவர்கள் வீட்டு அடுப்பு புகைவதேயில்லை. அனைவரது வயிறும் நடுச்சாமத்தில் எரியும். ஆனாலும், ஒருவருக்கொருவர் அந்தப் பசியின் கொடூரத்தை பகிர்ந்துகொள்வதில்லை. கவலைபடக்கூடாது என்ற எண்ணம் அவர்களுக்குள் இன்னமும் இருக்கிறது. இப்படியான இரவுகளை வெறுக்கிறார்கள்; எங்காவது அந்த இரவிலேயே தொலைந்துபோகலாம் என்று தனித்தனி மன அறைகளுக்குள் திட்டம் தீட்டுகிறார்கள்; அதற்காக யாருக்கும் தெரியாமல் எழுந்திருக்கையில்தான் தெரிகிறது யாருமே தூங்கவில்லையென்பது. ஆக​வேதான் அந்த வீடுகளிலிருந்து திருட்டுத்தனமாக தப்பிக்கவும் வழியில்லை. காரணம் யாருமே உறங்கினால்தானே தப்பிக்கமுடியும். இப்படியாக அனைவரும் தொலைந்தவனின் நினைவால் உருவாகியிருக்கும் அந்த வீட்டிலிருந்து வெளியேறிவிடவே நினைக்கிறார்கள். ஆளுக்கொரு நாடாக புலம்பெயர்ந்து சிதறிவிடல் சிறந்ததென்கிறான் கடைசிச் சகோதரன். இப்படியாக புலம்பெயர்ந்துவிடுகிறோம்.

ஜெரா

Jera