பட மூலம், AFP

இலங்கை புலம்பெயர்வோருக்கான ஐக்கிய நாடுகளின் வலையமைப்பு (The UN Network on Migration in Sri Lanka) கடந்த நவம்பர் மாதம் 11 திகதி சர்வதேச புலம்பெயர்வோருக்கான அமைப்பினால் (International Organization for Migration), உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அண்மை காலங்களாக சர்வதேச புலம்பெயர் தொழிலாளர் சமவாயங்கள் மற்றும் சர்வதேச தொழில் சட்டங்களில் கொண்டுவரப்பட்டுள்ள சீர்திருத்தங்கள், இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சட்டங்களில் மற்றும் அதன் கொள்கைகளில் உள்ளடக்கி அதனை வலுவூட்டுவதற்கான தேவைப்பாடு காரணமாக இந்த வலையமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் பெற்றுள்ள இலங்கை அரசாங்கமானது, புலம்பெயர் தொழிலாளர்களையும் மற்றும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களின் உரிமைகளை மேலும் உறுதிப்படுத்துவதற்கு அரச சார்பற்ற அமைப்புகளுடன் இணைந்து ஒரு விரிவான செயற்திட்டத்தின் ஊடாக தொழில்வர்க்கத்தினருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களையும் மற்றும் அந்நிய செலாவணியை  அதிகரிக்க முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சியானது மிகவும் வரவேற்கத்தக்கதொன்றாகும்.

இன்று இலங்கை தொழில் வர்க்கத்தினரிடையே வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையானது பெரும் தாக்கத்தை செலுத்தும் ஒரு காரணியாக காணப்படுகின்றது. இத்துறையினால், வெளிநாட்டில் ஈட்டப்படும் அந்நிய செலாவணி நாட்டின் பொருளாதார உயர்வு மட்டுமன்றி, புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பத்தின் பல்வேறு வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பினை வழங்கி வருகின்றது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புள்ளிவிவரங்களின்படி, 1.2 மில்லியனுக்கும் அதிகமான இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் வெளிநாடுகளில் பணியாற்றுகின்றனர், மேலும் அவர்கள் 2019ஆம் ஆண்டில் 07 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டியுள்ளனர்.

தொடரும் சவால்கள்

1960-70 ஆண்டு காலப்பகுதியில், வளைகுடா நாடுகளின் எண்ணெய் வளம் சார் பொருளாதார வளர்ச்சியுடன் வளர்ச்சி பெறும் இலங்கை புலம்பெயர் தொழில் துறையானது, நாளடைவில் தொழில் தரு நாடுகளுடன் இருதரப்பு மற்றும் பலதரப்பு ஒப்பந்தங்கள் செய்துகொண்டு அத்துறையை மேலும் வலுப்படுத்துகின்றது. இதன் அடிப்படியில், வீட்டுப்பணிப்பெண்களாகவும் மற்றும் கட்டுமான, உல்லாச துறைகளில் பணியாற்ற இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சந்தர்ப்பங்கள் அதிகரிக்கத் தொடங்கியது. பின்னர், மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்ற உள்நாட்டு போர்கள், HIV/Aids தீவிர நோய் பரவல், பல்வேறு தொற்று நோய் பரவல் மற்றும் பொருளாதார வீழ்ச்சி போன்ற காரணங்களாலும், பல இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிரான மனித உரிமை முறைப்பாடுகளின் விகிதாசாரம் உயர்வடைந்து செல்வதை அவதானித்த இலங்கை அரசாங்கமானது, தனது கொள்கைகளில் மாற்றங்களை கொண்டுவந்தது. இவ்வாறான மாற்றங்கள் ஏற்படுத்தியும், இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் இன்னமும் பல்வேறு உரிமை மீறல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இதில் அதிகமான குறைவான சம்பளம் பெறுபவர்களே இவ்வாறான உரிமை மீறல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

தற்போது நிலவும் கொரோனா வைரஸின் தாக்கத்தினால் வதிவிட விசாவில் உள்ளவர்கள் மட்டுமின்றி உல்லாச விசாவில் தொழில் வாய்ப்பு பெற்றுக்கொள்ள மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றவர்கள் பெரும் சவால்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். மிகமுக்கியமாக, இவர்கள் சமூக பொருளாதார மற்றும் தொழில் உரிமை சார்ந்த நெருக்கடிகளை சந்தித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. தற்போது நிலவும் சூழலில் நிலவுகின்ற பாரிய ஊதிய திருட்டு (Wage Theft – நிலுவை சம்பளம் மற்றும் சேவைமுடிவு நன்மைகள் வழங்காமல் பணிநீக்கம்) போன்ற உரிமை மீறல்களுக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தொழில்தரு நாடுகளை விமர்சித்து வருகின்றனர். தொழில் இழந்து தமது சொந்த நாட்டுக்கு திரும்ப வேண்டிய நிர்பந்தத்தால் மேற்குறிப்பிட்டுள்ள உரிமை மீறல்களுக்கு எதிரான நிவாரணத்தை பெற்றுக்கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் நாடு திரும்புகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஒரு காலகட்டத்தில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நடைபெற்ற போர்கள் (குவைத், ஈராக், லெபனான், யெமன்) காரணமாக இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களை மீண்டும் நாட்டிற்கு வரவழைப்பதற்கு இலங்கைத் தூதரகங்களில் மற்றும் கொன்சுலார் பிரிவுகளில் எடுக்கப்பட்ட முயற்சிகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் மற்றும் அவர்களை சமூகத்தில் மீள்இணைத்தல் போன்ற விடயங்களை இன்றைய காலகட்டத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், கொரோன தனிமைப்படுத்தலின் பின்னரான செயற்திட்டம் இல்லாமை புலம்பெயர் தொழிலாளர்களுடைய சமூக பொருளாதார பிரச்சினையை மேலும் விரிவுபடுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமில்லை. ஆகக்குறைந்தது, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் (SLBFE) காப்புறுதி பதிவு செய்தவர்களுக்கான தகுந்த நிவாரணம் கிடைக்க வழிசெய்தல் அவர்களின் சமூக பொருளாதார பிரச்சினைக்கு ஒரு தற்காலிக தீர்வாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமில்லை.

விரிவாக்கப்படவேண்டிய சட்ட பொறிமுறைகள்

மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள இலங்கைத் தூதராலயங்களில் மற்றும் கொன்சுலார் பிரிவுகளில் பணிபுரிகின்ற தொழில்-சட்ட-ஆலோசனை உத்தியோகத்தர்கள் பல்வேறுபட்ட உரிமை சார்ந்த பிரச்சினைகளுக்கு தகுந்த நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு தொடர்ந்தும் பங்களிப்பு வழங்கிவருகின்றனர். தொழில்-சட்ட-ஆலோசனை உத்தியோகத்தர்கள், தாங்கள் பணிபுரியும் நாடுகளில் உள்ள தொழில் சட்ட விதிகளின் அமுலாக்கத்தை மிக நுணுக்கமாகத் தெரிந்து கொள்ளவேண்டிய தேவைப்பாடு மற்றும் அதனை மேம்படுத்த வேண்டிய தேவைப்பாடு பல சந்தர்ப்பங்களில் வலியுணர்த்தப்பட்டுள்ளது. இதற்கு மிக பிரதான காரணமாக, புலம்பெயர் தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற தனித்துவமான தொழில் உரிமை சார்ந்த பிரச்சினைகள் பகுப்பாய்வு செய்கின்ற தன்மையும், அதன் அணுகுமுறையில் காணப்படும் சவால்களும் ஆகும்.

இதைத்தவிர, தற்போதய நடைமுறையில் நிலவும் ஊதிய திருட்டு, பணிநீக்கம் போன்ற பாரிய அளவிலான உரிமை மீறல்களுக்கு இலங்கைத் தூதரகங்களில் மற்றும் கொன்சுலார் பிரிவுகளில் போதிய தலையீடு இன்மை மிகவும் கவலைக்குரிய விடயமாகக் காணப்படுவதுடன், அவர்களினால் கிடைக்கப்பெறும் ஒத்துழைப்புக்கு நம்பிக்கை இல்லாத்தன்மையை சுட்டிக்காட்டுகின்றது. மிகமுக்கியமாக, இலங்கை அரசாங்கத்தால் செலவுகளைக் குறைப்பதற்காக கிட்டத்தட்ட 16 நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் நிறுவப்பட்டுள்ள தொழில் பிரிவுகளை நீக்குவதற்கு எடுத்துவரும் நடவடிக்கையானது, இனிவரும் காலங்களில் உரிமை சார்ந்த பிரச்சினைகளுக்குப் புலம்பெயர் தொழிலாளர்கள் எவ்வாறு தகுந்த நிவாரணம் பெற்றுக்கொள்வது மிகப்பெரிய சவாலாக அமையப்போகின்றது.

தற்போது நிலவுகின்ற பொருளாதார சூழல் காரணமாக உலகநாடுகள் பாரிய சவால்களுக்கு முகம்கொடுத்து வருகின்றன. இந்நிலைமை தொழில்தரு நாடுகளில் காணப்படுவதினால், இலங்கை அரசாங்கம் தனது புலம்பெயர் தொழில் வர்க்கத்தினை எவ்வாறு தயார்படுத்தப்போகின்றது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகக் காணப்படுகின்றது. குறிப்பாக, முறைசாரா துறை ஆதிக்கத்தின் காரணமாக நேரடி ஊதியம் (Direct Payroll) பெறுபவர்கள் என்ற தன்மை மாறி, மூன்றாம் தரப்பினரூடாக (Outsourced) தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது சர்வதேச தொழில் சட்ட நியமனங்களுக்கு அச்சுறுத்தலாக மாறிக்கொண்டு வருகின்றது. இதன் காரணமாக, கீழ் மற்றும் இடைநிலை மட்டங்களில் உள்ள தொழில்வர்க்கத்தினர் பெரும்பான்மையானோர் வேலை-வாழ்க்கை சமநிலையை (Work-Life Balance) இழக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலைமை காரணமாக, இனிவரும் காலங்களில் தனது தொழில்வர்க்கத்தினரை சர்வதேச தொழில் சந்தைக்கு ஒருங்கிணைக்க முனையும் இலங்கை அரசாங்கமானது, தொழில்தரு நாடுகளுடன் சர்வதேச தொழில் உரிமை சார்ந்த உடன்படிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் காணப்படுமிடத்து தனது தேசிய கொள்கைகளை பன்முகப்படுத்த வேண்டிய தேவைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு மேம்படுத்தலின் அவசியம்

அண்மைக்காலங்களாக மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளில் தொழில் சட்டங்களில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதில் ஒன்றான வருகைக்கு பின்னரான (Post-Arrival Orientation Awareness) விழிப்புணர்வு செயற்திட்டத்தை வளைகுடா நாடுகள் எதிர்வரும் காலங்களில் அமுல்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் கடந்த வருடம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் (SLBFE) வழங்கப்படும் புறப்பட முன்னரான (Pre-Departure Orientation Awareness) விழிப்புணர்வு கையேட்டில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளவேண்டிய அவசியம் காணப்படுகின்றது.​

தென் கொரிய, ஜப்பான் போன்று நாடுகளுக்கு தனித்துவமாக அமுல்படுத்தப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சி போன்று மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளுக்கும் தனித்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி அறிமுகப்படுத்துவது காப்புறுதி பதிவு (SLBFE Insurance) செய்து வெளிநாடு செல்பவர்களுக்கு நன்மை பயக்கும் என்பதில் எவ்வித சந்தேகமில்லை. புலம்பெயர் தொழிலாளர்களிடம் விரிவான சட்டவிழிப்புணர்வு இல்லாமை காரணங்களால், அவர்கள் பணிபுரியும் நாடுகளில் நிவாரணம் பெறமுடியாத சந்தர்ப்பங்களில் இலங்கைத் தூதரகங்களில் மற்றும் கொன்சுலார் பிரிவுகளை குற்றம் சாட்டுவது வழமையான ஒன்றாக காணப்படுகிறது.

இதைத்தவிர, வளைகுடா நாடுகளினால்  அமுல்படுத்தப்படும் வருகைக்கு பின்னரான (Post-Arrival Orientation Awareness) விழிப்புணர்வு செயற்திட்டத்தால் உல்லாச விசாவில் சென்று தொழில் வாய்ப்பு பெற்றுக்கொள்பவர்கள் மட்டுமன்றி, வதிவிட விசாவில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு தொழில் உரிமை மீறல்கள் போன்ற பிரச்சினைகளுக்கு அந்நாட்டு சட்ட பொறிமுறையை அணுகி தகுந்த நிவாரணங்களை பெற்றுக்கொள்வதற்கு வழிசமைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமில்லை. ஆகவே, இலங்கை அரசாங்கமானது, வளைகுடா நாடுகளுடன் இணைந்து புறப்பட முன்னரான (Pre-Departure Orientation) மற்றும் வருகைக்கு பின்னரான (Post-Arrival Orientation) விழிப்புணர்வு நிகழ்சசிகளை இலங்கை புலம்பெயர் தொழிலாளரின் நன்மை கருதி பரிந்துரைகள் செய்வதற்கு இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளுதல் சாலச்சிறந்தது.

மீளிணைத்தல் கொள்கையும் அதன் அமுலாக்கலும்

ஒரு மில்லியனுக்கு அதிகமான இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸின் தாக்கத்தினால் பல்வேறு விதங்களில் பாதிப்படைந்துள்ள இவர்கள் தாய் நாட்டுக்கு திரும்பி வருவது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இதன் காரணமாக, இவர்களை உள்ளூர் தொழில் சந்தைகளில் (Domestic Labour Market) ஒருங்கிணைப்பதற்கான தேசிய கொள்கையில் (Sub Policy on Return and Reintegration of Migrant Workers) சீர்திருத்தங்கள் கொண்டுவருவதற்கான தேவைப்பாடு தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

நாடு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களின் சர்வதேச ரீதியில் கிடைக்கப்பெற்ற திறமை மற்றும் தொழில் அனுபவங்களை மதிப்பீடு செய்வதற்கும் மற்றும் அவர்களுடைய தகவல்களை உள்ளடக்கிய தொழில் வங்கி (Database – Job bank) போன்ற சாத்திய பொறிமுறை தேசிய கொள்கை அடிப்படையில் அமுல்படுத்தாத காரணத்தினால், இவர்கள் மீண்டும் வெளிநாட்டு வேலைவாய்ப்பை தேடிச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளாகியுள்ளனர். இதனால், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களின் உளவியல்-சமூக பிரச்சினைகளுக்கு இது பெரும் தாக்கத்தினை செலுத்துகின்றமை யாராலும் மறுக்கமுடியாத உண்மை.

இலங்கை அரசாங்கம் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களும் இணைந்து புலம்பெயர்வோர் மற்றும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாயத்தின் உருவாக்கத்தின் 30ஆவது ஆண்டு நிறைவை இன்று 18ஆம் கொண்டாடுகின்றது. கொரோனா வைரஸின் தாக்கத்தினை கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள தீவிர முயற்சி வரவேற்கத்தக்கதொன்றாக இருந்தாலும், கொண்டாடப்படும் சர்வதேச தினமானது இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுடைய உரிமைகளுக்கு பல நேர்த்தியான மாற்றங்களுக்கு வழிசமைக்கும் சந்தர்ப்பத்தில் மட்டுமே அது அர்த்தமுள்ள ஒரு நிகழ்வாக கருதப்படும்.

பிரான்சிஸ் சொலமன்ரைன்
பயிற்சி மற்றும் அபிவிருத்திக்கான மத்திய கிழக்கு நிலையம் – துபாய்