பட மூலம், . EPA-EFE/CHAMILA KARUNARATHNE, Dailymaverick

மஹர சிறைச்சாலையில் நவம்பர் 20, 2020 அன்று ஆரம்பித்த ஒரு கலவரத்தில் 11 சிறைக்கைதிகள் கொல்லப்பட்டதுடன் 100 இற்கும் அதிகமான கைதிகள் காயமடைந்தனர். இதன் பின்னர் நீதி அமைச்சர் சம்பவத்தை விசாரணை செய்வதற்கு ஒரு குழுவினை நியமித்தார். இக்குழுவின் இடைக்கால அறிக்கை நாடாளுமன்றத்தில் டிசம்பர் 9ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டாலும், அது உத்தியோகபூர்வமாக பகிரங்கமாக வெளியிடப்படவில்லை. ஆனாலும், அறிக்கையின் பிரதியொன்று நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் இக்கட்டுரை ஆசிரியருடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது.  அறிக்கையின் சில முக்கியமான அவதானித்தல்கள் மற்றும் பரிந்துரைகளின் ஒரு சாராம்சம், ஆசிரியரின் சில குறிப்புகள் மற்றும் பின்னணித் தகவல்களுடன் கீழே தரப்பட்டுள்ளது.

மஹர சிறைச்சாலையில் கைதிகள் எண்ணிக்கை

விசாரணைக் குழுவின் படி, சம்பவம் நிகழ்ந்த சமயம், மஹர சிறைச்சாலை அது கொண்டிருக்கக்கூடிய கைதிகளின் எண்ணிக்கையை விட மூன்று மடங்கில், 2782 கைதிகளைக் கொண்டிருந்தது. அதில், 77% அல்லது 2148 பேர்கள், சந்தேகநபர்கள் (விளக்கமறியல் கைதிகள்) ஆவர். வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து 112 நோயாளிகள் (கொவிட் – 19 இற்கான சோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்படாதவர்கள்) மற்றும் போகம்பரை சிறைச்சாலையிலிருந்து (கைதிகளின் தனிமைப்படுத்தலுக்காக ஒதுக்கப்பட்ட ஒரு பழமையான சிறைச்சாலை வசதி) மேலும் சிலரும் மஹர சிறைச்சாலை மற்றும் அதன் சுற்றாடலுக்குக் கொண்டு வரப்பட்டனர்.

ஏற்கனவே பிணை வழங்கப்பட்டு பணம் செலுத்திய கைதிகளை விடுவிப்பதில் தாமதங்கள் இருந்ததை விசாரணைக் குழு அவதானித்தது. பொலிஸிற்கு சட்ட மா அதிபரினால் கொடுக்கப்பட்ட அறிவுறுத்தலின் அடிப்படையில், அபராதம் அல்லது பிணை கொடுப்பனவு செய்த பின்னர் மற்றைய கைதிகள் விடுவிக்கப்படுவதற்கு ஏதுவாக விடுவித்தல்களை விரைவுபடுத்துவதற்கு குழு பரிந்துரைத்தது. தனிநபர் பிணையின் அடிப்படையில் சிறையிலிருந்து விடுவிப்பதற்கு வசதியளிக்கும் முகமாக பிணை செலுத்த முடியாத கைதிகள் சார்பாக மனுக்களைத் தாக்கல் செய்வதற்கு சிறைச்சாலைத் திணைக்களத்திற்கு விசாரணைக் குழு பரிந்துரைத்துள்ளது. வயது முதிர்ந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, தண்டனைக் காலத்தின் நீளத்தைக் கவனத்தில் கொண்டு, குற்றத் தீர்ப்பளிக்கப்பட்ட கைதிகளை விடுவிப்பதற்கான ஒரு செயல்முறையின் அமுல்படுத்தலுக்கும் கூட குழு பரிந்துரைத்தது.

சம்பவத்தையடுத்து உடனடியாக, சிறைச்சாலைகளுக்குப் பொறுப்பான முன்னாள் இராஜாங்க அமைச்சர் நாடாளுமன்றத்தில் பேசுகையில், இலங்கை சிறைச்சாலைகள் சுமார் 11,000 பேர்கள் வரையிலானவர்களையே கொண்டிருக்கக்கூடிய ஒரு கொள்ளளவைக் கொண்டிருந்த போதிலும், அவை 32,000 வரையான கைதிகளைக் கொண்டுள்ளன எனக் குறிப்பிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புள்ளிவிபரங்களின் படி, 2019இல் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்ட நபர்களாக சிறைச்சாலைகளில் அனுமதிக்கப்பட்டோர்களில் 20,420 பேர்கள் (70% இற்கும் அதிகமானவர்கள்) பிணைப் பணம் செலுத்தத் தவறியதன் காரணத்தினாலானவர்களாவர். 2015-2019 இற்கிடைப்பட்ட வருட காலத்தில் சிறைச்சாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் 78-82% ஆனவர்கள் சந்தேக நபர்களாக (விளக்கமறியல் கைதிகளாக) இருந்தனர் என்பதையும் புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. சிலர், பிணைக்கான தொகையை வைப்புச் செய்வதற்கு இயலாமையின் காரணமாக விளக்கமறியலில் வைக்கப்பட்ட வேளையில், மற்றையவர்கள் பொலிஸ் மற்றும் நீதவான்கள் விளக்கமறியல் என்பதை ஒரு விதியாகவும் மற்றும் பிணை விதிவிலக்காகவும் தெரிவு செய்வதன் காரணமாகவும் சிறை வைக்கப்பட்டனர்.

உடனடித் தூண்டல்களும் ஆர்ப்பாட்டம் மற்றும் கோரிக்கைகளுக்கான காரணங்களும் 

மஹர சிறைச்சாலைக் கைதிகளிடம் நவம்பர் 25ஆம் மற்றும் 27ஆம் திகதிகளில் சுமார் 1000 பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன என அறிக்கை குறிப்பிடுகிறது. இதன் பெறுபேறுகள் 28ஆம் திகதி மாலை மற்றும் 29ஆம் திகதி காலை கிடைக்கப் பெற்றதுடன் அது சுமார் 180 கைதிகளும் 6 சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் நோய்த்தொற்றுக் கொண்டிருப்பதை உறுதி செய்தது. இது, மஹர சிறைச்சாலையில் பி.சி.ஆர் சோதனை மேற்கொண்டவர்களுள் 18% ஆனவர்கள்; நோய்க்கான தொற்றுறுதி கொண்டுள்ளனர் என்பதைக் காட்டியதுடன் அந்த சமயத்தில் நாட்டில் பி.சி.ஆர் சோதனைகளின் போது  உறுதிப்படுத்தப்பட்ட நோய்த் தொற்றின் குறைவான சராசரி 3% விட, மிகவும் உயர்வான வீதமென்பதை அது அர்த்தப்படுத்தியது. அத்தோடு, அது மஹர சிறைச்சாலைக் கைதிகளுள் சுமார் 35% ஆனவர்களுக்கு மாத்திரமே பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதையும் காண்பித்தது.

சோதனைகளின் பெறுபேறுகள் பற்றிய செய்திகள் சிறைச்சாலைக்கு வெளியே உள்ளவர்கள் மற்றும் உத்தியோகபூர்வமற்ற முறைகள் மூலமாக கைதிகளைச் சென்றடைந்ததுடன் இது உயிருக்கான ஆபத்தான நிலை பற்றிய பயத்தை விதைத்து சிறைச்சாலையினுள் அமைதியின்மையை ஏற்படுத்தியது என விசாரணைக் குழு குறிப்பிடுகிறது. தங்களது உயிர்களைப் பாதுகாப்பதற்கான கோரிக்கைகளால் உந்தப்பட்ட ஆர்ப்பாட்டம் நியாயமானதென குழு தீர்மானித்தது. கைதிகளின் 4 முக்கியமான கோரிக்கைகளாக, ஏற்கனவே பிணை வழங்கப்பட்டவர்களை விடுவிப்பது, உட்கொள்வதற்குப் பொருத்தமான உணவு வழங்குவது, அனைத்துக் கைதிகளுக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வது மற்றும் கொவிட் – 19 வைரஸ் தொற்றுள்ளவர்களாக உறுதி செய்யப்பட்டவர்களை சிறைச்சாலையிலிருந்து வெளியகற்றுவது என்பவை இருந்தன. ஆர்ப்பாட்டத்தின் தீவிரம், சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து விரைவான தீர்வுகளை பெறுவதற்காக கைதிகளின் நிர்க்கதி நிலையுடன் தொடர்புபட்டிருந்தது எனவும் விசாரணைக் குழு தெரிவித்தது.

துப்பாக்கிச் சூடு

கைதிகள் எவரும் துப்பாக்கிகளுக்கான வழிவகைகளையோ அல்லது அவற்றைப் பாவிக்கவோ இல்லையென அறிக்கை குறிப்பிடுகிறது. சிறைச்சாலை அதிகாரிகள் மாத்திரதே துப்பாக்கிகளை உபயோகித்தனரெனவும், அதுவும் கூட கண்ணீர்ப் புகை, இறப்பர்க் குண்டுகள் என்பவற்றைப் பாவித்தும், வான் நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்த பின்னரே மேற்கொள்ளப்பட்டது.  29ஆம் திகதி மதியத்தின் பின்னர், ஒன்று திரண்டவர்கள் இரு திசைகளில் கலைந்து சென்ற பின்னர், ஏற்பட்ட அமைதியின்மையின் ஆரம்ப நிலைகளின் போதான துப்பாக்கிப் பிரயோகத்தின் காரணமாக கைதியொருவர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. 30ஆம் திகதி, தண்ணீர் மற்றும் உணவு வழங்கல் தொடர்பாக பிரச்சினைகள் அங்கே ஏற்பட்டதுடன், அன்று மாலை தண்ணீருக்கான கோரிக்கை உட்பட, மேலும் அமைதியின்மை ஏற்பட்டதுடன், அவை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வதற்கும் இதனால் சில கைதிகள் காயமடைவதற்கும் இட்டுச் சென்றது. இறப்புகள் அருகாமையிலிருந்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகங்களினால் ஏற்பட்டதா என்பதை பிரேத பரிசோதனைகள் மாத்திரமே தீர்மானிப்பதற்கு முடிமென அறிக்கை தெரிவிக்கின்றதுடன், அதனால் பிரேத பரிசோதனைகள் முடிவடையும் வரை இறந்தவர்களின் உடலங்கள் புதைக்கப​படவோ அல்லது தகனம் செய்யப்படவோ கூடாது எனவும் அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

உணவு

ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைளுள், உட்கொள்ளக் கூடியதான உணவுக்கான கோரிக்கை நியாயமான கோரிக்கைளுள் ஒன்றாக விசாரணைக் குழு இனங்கண்டதுடன் தனது இடைக்கால அறிக்கையின் பரிந்துரைகளுள் ஒன்றாக அதனை உள்ளடக்கியது. உறவினர்களின் வருகைகள் இடைநிறுத்தப்பட்ட சமயங்களில் உணவு மற்றும் ஏனைய அத்தியாவசியங்கள் நலன்புரி நிலையங்கள் மூலமாக வழங்கப்படுவதற்கான ஒரு பொறிமுறையின் அமுல்படுத்தலுக்கும் கூட குழு பரிந்துரைத்தது. கைதிகளுள் பெரும்பாலானவர்கள் வருகை தரும் குடும்ப உறுப்பினர்களிடமிருந்தே உணவைப் பெறுகின்றனர் எனபதை பெரும்பாலும் கவனத்தில் கொண்டு அது மேற்கொள்ளப்பட்டதாக இருக்கலாம். எனினும், 2019இல் நாளொன்றுக்கு ஒரு கைதிக்கான உணவுக்காக சராசரிச் செலவு ரூ.151 ஆக (அண்ணளவாக USD 0.82) இருந்தமையுடன், உணவுக்கான பாதீட்டு தாக்கங்களை இடைக்கால அறிக்கை கவனத்தில் கொள்ளவில்லை.

சுகாதாரப் பராமரிப்பு

சம்பவத்திற்கு முன்னர் காய்ச்சல் கொண்டிருந்தவர்களாக அவதானிக்கப்பட்ட கைதிகள் சோதனைக்காக சிறைச்சாலை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படவில்லை என்பதை குழு அவதானித்தது. சம்பவத்தின் பின்னர், கூடுதலான பி.சி.ஆர் சோதனைகள் மற்றும் துரித அன்டிஜென் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன என்றும், கொவிட் – 19 தொற்று உள்ளவர்களாக உறுதி செய்யப்பட்டவர்கள் சிறைச்சாலையிலிருந்து வெளி அகற்றப்பட்டனர் எனவும் குழு தெரிவித்துள்ளது. சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களுக்கு இயலுமான விரைவில் பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொள்வதற்கும், கொவிட்-19  தொற்று உள்ளவர்களாக உறுதி செய்யப்பட்டவர்களை சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பவும் மற்றும் தொற்று உறுதி செய்யப்படாதவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதற்கும் அவர்கள் பரிந்துரைத்தனர். எனினும், மஹர சிறைச் சம்பவம் நிகழ்வதற்கு இரண்டு வாரம் முன்பதாக கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பினாலும்  கூட முன்மொழியப்பட்ட மற்றும்  கைதிகளால் விடுக்கப்பட்ட அனைத்துக் கைதிகளிற்கும் பி.சி.ஆர் சோதனையைச் செய்வதற்கான கோரிக்கையை, விசாரணைக் குழு பரிந்துரைக்கவில்லை. கொவிட்-19 தொற்று அல்லாத நோயாளிகளுக்குப் பொருத்தமான சுகாதாரப் பராமரிப்புக்கும் விசாரணைக் குழு பரிந்துரைத்தது.

குடும்பங்களுடனான தொடர்பாடல்

சம்பவத்தின் பின்னர், டிசம்பர் 3ஆம் திகதி குழு சிறைச்சாலைக்கு விஜயம் செய்த போது, மஹர சிறைச்சாலை அத்தியட்சகரிடம் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களிடமிருந்து அவர்களின் குடும்பங்களுக்கு தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்வதற்கு வசதியேற்படுத்திக் கொடுக்கும்படி குழு கேட்டுக் கொண்டதாக அறிக்கை குறிப்பிட்டது. ஆனாலும், டிசம்பர் 5ஆம் திகதியன்று கூட, நிர்க்கதியாகிப் போயுள்ள குடும்பங்கள், தங்களின் அன்புக்குரியவர்கள் பற்றி தகவல்களை அறிந்து கொள்வதற்கும், உயிர் தப்பியவர்களிடமிருந்து குறைந்தபட்சம் ஒரு தொலைபேசி அழைப்பையாவது பெற்றுக் கொள்வதற்காகவும் வேண்டி சிறைச்சாலை வாசலிற்கு வெளியே காத்து நின்றனர்.  சம்பவத்தின் பின்னரான அவதானித்தல்களில் விசாரணைக் குழு இந்த முக்கியமான தவறுதலைக் கவனிப்பதற்குத் தவறியது. ஆனாலும், கைதிகள் மற்றும் அவர்களின் குடும்பங்களிற்கிடையில் தொலைபேசி அழைப்புகளின் அதிகரித்த வாய்ப்புகளுக்கு குழு பரிந்துரைத்ததுடன் கைதிகள் மற்றும் குடும்பங்களுக்கிடையில் சிறந்த தொடர்பாடலுக்கு வசதியளிப்பதற்காக ஒரு மையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டது.

கைதிகளின் மருந்து உட்கொள்ளல், கைதிகளிற்கிடையிலான சண்டை மற்றும் சொத்துச் சேதம்

சிறைச்சாலை வைத்தியசாலையில் கைதிகள் மருந்து உட்கொண்டதை அறிக்கை அவதானிக்கிறது, ஆயினும், இது தொடர்பில் நிபுணர்களின் அபிப்பிராயம் பெறப்படும் வரை, அவை கைதிகளின் நடத்தையில் ஒரு தாக்கத்தைக் கொண்டிருக்குமா என்பது பற்றி அது தனது அபிப்பிராயம் தெரிவிப்பதை ஒதுக்கி வைக்கிறது. டிசம்பர் 2ஆம் திகதி, இலங்கை உளவியல் கல்லூரி வைத்தியர்கள் தெளிவுபடுத்துகையில், உளவியல் சிகிச்சையின் போது உபயோகிக்கப்படும் மருந்துகள் வன்முறையான அல்லது ஆக்ரோஷமான நடத்தைகளுக்கு காரணமாக இருப்பதில்லை எனவும் அவ்விதமான பல மருந்துகள் மனதில் அமைதியையும் சில சந்தர்ப்பங்களில் உறக்கத்திற்கான அசதியையும் ஏற்படுத்துகின்றன என்றனர்.

கைதிகளில் சிலர், ஒருவரையொருவர் தாக்கி காயங்களை ஏற்படுத்திக் கொள்வதற்கும், சில மணி நேரத்திற்கு இரண்டு சிறைச்சாலை உத்தியோகத்தர்களைப் பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருக்கவும் மற்றும் கட்டடங்கள், சொத்துகள் மற்றும் ஆவணங்கள் என்பவற்றுக்கு சேதம் விளைவிக்கவும் இந்த அமைதியின்மையை உபயோகித்ததை குழு கவனத்தில் கொண்டது. கைதிகள் இரும்புக் கம்பிகள், கத்திகள், வெட்டுக் கத்திகள், மற்றும் வாள்கள் என்பவற்றைக் கொண்டிருந்தனர் என அறிவிக்கப்பட்டது. எனினும், இவ்வாறான பொருட்கள் அல்லது ஆயதங்களை உள்ளே எடுத்து வருவதற்கும் மற்றும் கைதிகள் அவற்றைத் தம்வசம் வைத்திருக்கவும் அனுமதித்த சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் பற்றி அறிக்கையில் எதுவும் கூறப்படவில்லை. கைதிகளிற்கிடையிலான கலவரம், மதியம் அல்லது மாலையில் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் ஆரம்ப துப்பாக்கிப் பிரயோக நிலைமையின் பின்னர் இரவு நடைபெற்றதை அறிக்கை குறிப்பிடுகிறது. கைதிகள் தங்களிற்கிடையில் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் வேளையில் கூட சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் துப்பாக்கிப் பிரயோகம் நிகழ்த்தப்பட்டதாக, அறிக்கை தெரிவிக்கின்றது.

சாராம்சம்

மஹர சிறைச்சாலையில் கொவிட்-19 இன் நோய்த் தொற்றின் உறுதிப்படுத்தல் வீதம் நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ளதை விட ஆறு மடங்கு அதிகமானதாகவும், கைதிகளின் எண்ணிக்கை சிறைச்சாலையின் கொள்ளளவை விட மூன்று மடங்கு அதிகமானதாக இருந்த போதிலும் கூட இந்த இடைக்கால அறிக்கை உணவு, குடும்பங்களுடனான தொடர்பாடல், அனைத்துக் கைதிகளுக்குமான பி.சி.ஆர் சோதனையின்மை தொடர்பில் பிரச்சினைகள் இருந்ததாக உறுதிப்படுத்துகிறது. சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதை உறுதிப்படுத்தும் அறிக்கை பிரேத பரிசோதணை முடிவடையும் வரை உடலங்கைளை புதைக்கவோ அல்லது தகனம் செய்யவோ வேண்டாமெனவும் பரிந்துரைக்கிறது​

அரச சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியமை மற்றும் ஏனைய குற்றங்களுக்குப் பொறுப்பான சிறைககைதிகளுக்கு எதிராக புலன்விசாரணைகளையும் மற்றும் வழக்கு நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துவதற்கு பரிந்துரைக்கும் இவ் இடைக்கால அறிக்கை, சிறைச்சாலை அதிகாரிகளின் கவனக்குறைவுகள் தொடர்பான விசாரணைகளின் வெளிபடுத்துதல்கள் பற்றி அபிப்பிராயம் எதனையும் தெரிவிப்பதற்கு இயலாதுள்ளதெனக் குறிப்பிடுவதுடன், மேலும் விபரங்களுடன் ஒரு முழுமையான அறிக்கையைச் சமர்ப்பிக்கும் வேளையில் இதன் மீது கவனம் செலுத்தப்படுமெனவும் வாக்குறுதி அளிக்கிறது.

இடைக்கால அறிக்கை, நீதிச் செயற்பாடுகள் அதன் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நாங்கள் எதிர்பார்த்திருக்கையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட மேலும் விரிவான அறிக்கை மற்றும் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பினால் தயாரிக்கப்பட்ட ஒரு குறிப்பு என்பவற்றோடு, இந்த இடைக்கால அறிக்கை மேலும் ஆராயப்படுவதற்கு உரியதாகின்றது.

ருக்கி பெர்னாண்டோ

குறிப்பு: நாடாளுமன்ற உறுப்பினரின் அனுமதியுடன் பொதுநலன் கருதி முழுமையான விசாரணை அறிக்கை கட்டுரை ஆசிரியரால் வெளியிடப்படுகிறது.