பட மூலம், Eranga Jayawardena/ AP Photo , Courthousenews
“எங்கே என் மகன், எங்கே என் சகோதரன்?”
கூடியிருந்த மக்களின் குரல் பெருவலியாக ஒலிக்கிறது.
டிசம்பர் 5ஆம் திகதி, மஹர சிறைச்சாலை வாயில், ஐம்பது பேர் வரை திரண்டிருக்கிறார்கள். சிறைச்சாலையில் 11 உயிர்கள் பலியாகி, நூற்றுக்கு மேலானவர்கள் காயமடைந்து, ஆறு நாட்கள் கடந்திருக்கிறது.
பலர் சிறைக் கைதிகளின் தாய்மார். ஏனைய குடும்பத்தவர்களும் இருந்தார்கள். ஒரு பெண் ஒக்டோபர் 3ஆம் திகதி சிறைச்சாலை சென்று மகனைப் பார்த்திருந்தார். ஒக்டோபரில் கைதிகளைச் சந்திக்க உறவினர் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதன் பின்னர், நவம்பர் மாதம் அவரது மகன் தொலைபேசியில் பேசியிருந்தார்.
நவம்பர் 29ஆம் திகதி சிறைச்சாலைக்குள் ஆட்கொலைகள் நிகழ முன்னர், இன்னும் சிலர் சிறைச்சாலை சென்று அவர்களுடைய உறவுகளைச் சந்தித்திருந்ததுடன் தொலைபேசி ஊடாகவும் பேசியிருந்தனர். அங்கிருந்த தாயொருவர், வன்முறைச் சம்பவம் இடம்பெற முன்னர் தன்னுடைய மகனுக்கு பிணை வழங்கப்பட்டிருந்த போதிலும் விடுவிக்கப்படவில்லையென்று கூறினார்.
சிறைச்சாலைக்குள் இருப்பவர்கள் தமது அன்புக்குரியவர்கள். அவர்களுக்கு என்ன நடந்ததை அறியும் ஆவல் வெளியில் நின்றவர்களுக்கு இருந்தது. கொஞ்சம் தூரத்தில் இருந்து பார்த்து விட்டாலும் போதுமென சிலர் கூறினார்கள். தொலைபேசியிலாவது பேச வேண்டும் என வேறு சிலர் குறிப்பிட்டார்கள். சிறைச்சாலையில் உள்ளவர்கள், தனிமைப்படுத்தலுக்கோ வைத்தியசாலைக்கோ அனுப்பப்பட்டவர்களின் பட்டியலைத் தருமாறு சிலர் கோரினார்கள். கண்ணீரும் கம்பலையுமாக இருந்த தாயொருவர் இரு படங்களைக் காட்டினார். ஒரு படத்தில் வீட்டிலிருக்கும் மகன். மற்றைய படத்தில் காயமடைந்து இரத்தம் வழியும் நபர். இருவரும் ஒருவராகத் தோன்றினார்கள். படுகொலைகள் நிகழ்ந்த சமயம், சிறைக்குள் இருந்தவர்களுக்கு என்ன கதி நேர்ந்தது, அவர்கள் நலமாக இருக்கிறார்களா என்பதை உறுதியாக அறிந்து கொண்டு, நிச்சயமற்ற தன்மைக்கு முற்றுப்புள்ளி வைப்பது திரண்டிருந்த குடும்பங்களின் நோக்கமாக இருந்தது.
சிறைச்சாலை நுழைவாயிலுக்கு அருகில் நான் நின்று கொண்டிருந்தேன். உத்தியோகத்தர்கள் இரண்டு பேர் அருகிலுள்ள கட்டடத்தின் மரப்பலகையில் இரு அறிவித்தல்களை ஒட்டினார்கள். சிறைச்சாலையில் இருக்கும் தமது அன்புக்குரியவரிடம் இருந்து நீண்டநாட்களாக அழைப்பேதும் கிடைக்காத குடும்பங்கள், குறித்ததொரு இலக்கத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும் என ஒரு அறிவித்தலில் கூறப்பட்டிருந்தது. சில கைதிகள் பிணை கிடைத்த பின்னர், அக்கரைப்பற்று இராணுவப் பாதுகாப்பு நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், தனிமைமைப்படுத்தலுக்குப் பின்னர் அவர்கள் விடுதலை பெறுவார்கள் எனவும் மற்றையதில் எழுதப்பட்டிருந்தது. மேலதிக விபரங்களை அறிய தொலைபேசி இலக்கமொன்றும் தரப்பட்டிருந்தது. இரு அறிவித்தல்களிலும் மஹர சிறைச்சாலையின் அத்தியட்சகர் கையொப்பம் இட்டிருந்தார்.
அதே கட்டடத்தில் ஒட்டப்பட்டிருந்த முன்னைய அறிவித்தல், கூடியிருந்த குடும்பத்தவர்களுக்கு காண்பிக்கப்பட்டது. அதில் சிறைச்சாலை எண்களுடன் 93 பேரின் பெயர்கள் பட்டியலிடப்பட்டு இருந்தன. அதில் கையொப்பம் எதுவும் இருக்கவில்லை. பிரதான நுழைவாயிலுள்ள காவலர் விளக்கம் அளித்தார். இது காயமடைந்தவர்களின் பட்டியல் என்றார். இன்னமும் வைத்தியசாலையில் உள்ள சிலரும், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பின்னர் மஹர சிறைக்குத் திருப்பி அழைத்து வரப்பட்டுள்ள சிலரும் பட்டியலில் உள்ளதாக அவர் கூறினார். இந்தக் காவலர் பொறுமையாகவும், மரியாதையாகவும் கேள்விக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார். விளக்கம் அளிக்கும் நடைமுறை தாண்டி, அவரிடம் உண்மையான பதில்கள் இருக்கவில்லை.
பெயர்களையும், தொலைபேசி இலக்கங்களையும், உறவுமுறையையும் எழுதுங்கள், நாம் உரிய கைதி தொலைபேசி மூலம் குடும்பத்தை தொடர்பு கொள்ள ஏற்பாடு செய்கிறோம் என சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் குடும்பத்தவர்களிடம் சொன்னார்கள். சிலர் தகவல்களை எழுதினார்கள். மற்றவர்கள், இது பொய்யெனக் கூறி கோபத்துடன் புத்தகத்தை நிராகரித்தார்கள். தாம் இதற்கு முன்னரும் பல நாட்கள் சிறைச்சாலை வாசலில் நின்றிருக்கிறோம், புத்தகங்களில் எழுதி இருக்கிறோம், ஆனால், ஒரு அழைப்பேனும் கிடைக்கவில்லை என்று அவர்கள் சொன்னார்கள்.
தாம் ஆறு நாட்களாக தினந்தோறும் அதிகாலை ஐந்து மணி முதல் மாலை ஆறு மணி வரை அங்கு நின்றபோதிலும், தமது மகன் பற்றி எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என்று தாயொருவர் கூறினார். மகனும், மகளும் சிறியவர்களாக இருந்தபோதே தமது கணவன் இறந்து விட்டதாக அந்தத் தாய் குறிப்பிட்டார். வீடுகளில் வேலை செய்து இருவரையும் வளர்க்க எவ்வளவு பாடுபட்டிருப்பேன் என அவர் கவலைப்பட்டார். பணம் செலவழித்து பல பஸ்களில் ஏறி வந்து சிறைச்சாலை வாசலில் நின்று கொண்டிருந்ததால், இவ்வாரம் வருமானத்தையும் இழந்ததாக அவர் கூறினார்.
சிறைச்சாலைக்குள் இருந்து சிறைச்சாலைகள் திணைக்களத்திற்குச் சொந்தமான பஸ்ஸொன்று வெளியே வந்து கூடியிருந்தவர்களைத் தாண்டி விரைந்து சென்ற வேளையில் கூடியிருந்தவர்கள் ஆர்ப்பரித்தார்கள். தமது உறவுகளான கைதிகள் இனந்தெரியாத இடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறார்களோ என்ற சந்தேகத்துடன், பஸ்ஸுக்குள் உள்ளவர்களின் முகத்தைப் பார்க்கவோ, பேசவோ வேண்டுமென கோரிக்கை விடுத்தார்கள். பஸ்ஸுக்குள் இருப்பர்கள் சிறைச்சாலை உத்தியோகத்தர்களோ என்ற சந்தேகமும் நிலவியது. ஆத்திரமடைந்த பலர் வேறெந்த பஸ்ஸேனும் வந்தால், அதனைத் தடுப்பதெனத் தீர்மானித்தார்கள். எனினும், அதற்கு அவகாசம் இருக்கவில்லை. வந்த பஸ் கூட்டத்தைத் தாண்டிச் சென்றிருந்தது. ஒரு மணித்தியாலம் வரை வேறெந்த பஸ்ஸும் வரவில்லை.
மஹர கைதிகளின் துயரம் தோய்ந்த குரல்கள், இலங்கை முழுவதும் வலிந்து காணாமலாக்கப்பட்ட குடும்பத்தவர்களின் கோரிக்கைகளை ஞாபகப்படுத்தின. பல வருடகாலம் வீதியோரங்களில் ஆர்ப்பாட்டம் செய்து, தமது அன்புக்குரியவர்களுக்கு நேர்ந்த கதி என்னவென்று கேட்ட தமிழ்க் குடும்பங்களின் துயரங்களும் ஞாபகத்தில் வந்தன. இரு சந்தர்ப்பங்களிலும் இந்தக் குடும்பங்கள் மிகவும் அடிப்படையான கேள்வியைத்தான் முன்வைத்தன. உங்கள் பராமரிப்பில் இருந்த எமது அன்புக்குரியவருக்கு என்ன நடந்தது? அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா? முறையாகப் பராமரிக்கப்படுகிறார்களா? அவர்கள் காயப்படுத்தப்பட்டிருந்தால், அதற்கு யார் பொறுப்பு? எமது கேள்விகளுக்கு யாரிடம் பதில் பெறலாம்?
இலங்கை சட்டத்தின் பிரகாரம், உத்தியோகபூர்வமான பொறுப்பில் இருந்து கொண்டு, முறையான காரணம் இல்லாமல் இன்னொருவரை தடுத்து வைத்து அல்லது சுதந்திரத்தை இல்லாமல் செய்து, அதனை ஏற்றுக் கொள்ள மறுக்கின்ற, தடுத்து வைக்கப்பட்ட ஆளுக்கு நேர்ந்த கதியை மறைக்கின்ற, அவர் இருந்த அல்லது இருக்கின்ற இடத்தை வெளியிடத் தவறுகின்ற அல்லது வெளியிட முடியாமல் இருக்கின்ற ஒருவர், வலிந்து காணாமலாக்கப்பட்ட குற்றத்தின் அடிப்படையில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்படலாம். இது 20 வருடகால சிறைத்தண்டனை பெறக்கூடிய குற்றச்செயலாகும். அத்தகைய குற்றவாளிக்கும் ஒரு மில்லியன் ரூபா அபராதத்தையும், ஐயாயிரம் ரூபாவிற்கு குறையாத இழப்பீட்டையும் செலுத்த வேண்டிய கடப்பாடும் இருக்கிறது. இது மஹர சிறைச்சாலை கைதிகளின் சுதந்திரத்தை இல்லாமல் செய்து, அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்ற தகவலை குடும்பத்தவர்களுக்கு அறிவிக்க மறுக்கும் உத்தியோகத்தர்களுக்கு ஏற்புடையதாக இருக்க மாட்டாதா?
இந்தப் படுகொலைகள் நிகழ்ந்து ஆறு நாட்களாகிய நிலையில், தப்பிப் பிழைத்த கைதிகளை தூரத்தில் இருந்தேனும் பார்ப்பதற்கோ, குறைந்தபட்சம் ஒரு தொலைபேசி அழைப்பையாவது மேற்கொள்ளவோ அவர்களின் குடும்பத்தவர்களை அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும் அல்லவா?
ருக்கி பெர்னாண்டோ