பட மூலம், NBCnews
நான் அமெரிக்க முதலாளித்துவத்தையும் ஏகாதிபத்தியத்தையும் கடுமையாக எதிர்த்து விமர்சிப்பவன் என்பதை எனது கட்டுரைகளைத் தொடர்ந்து வாசித்து என்னைக் கௌரவிப்பவர்கள் நன்கு அறிவார்கள். ஆனால், ஒரு விடயத்தில் நான் உறுதியாக இருக்கிறேன். அமெரிக்காவும் (வேறு சில தாராள ஜனநாயக நாடுகளும்) இலங்கை, இந்தியா, பர்மா, ஜப்பான் மற்றும் இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையினராகக்கொண்ட அரசுகளையும் விட குறைந்தளவிற்கே இனவெறியையும் மதவெறியையும் நாகரிக முதிர்ச்சியற்ற கலாசாரத்தையும் கொண்டிருக்கின்றன.
இன்று இந்தச் சிந்தனை எனக்கு மீண்டும் பிறந்தது. அமெரிக்கா கறுப்பினத்தவரான ஜனாதிபதியொருவரை முன்னர் இரண்டாவது பதவிக்காலத்திற்கும் தெரிவு செய்திருந்தது. இப்போது அறிவில் குறைந்த ட்ரம்ப் ஆதரவாளர்கள் எதிர்த்தபோதிலும்கூட, இந்திய தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த ஒரு கலப்பினத்துப் பெண்மணியை துணை ஜனாதிபதியாக அமெரிக்கர்கள் தெரிவு செய்திருக்கிறார்கள். அத்துடன், இப்போது இரண்டாவது தடவையாக கத்தோலிக்கர் ஒருவரை அமெரிக்கா ஜனாதிபதியாகத் தெரிவுசெய்திருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. முதலில் ஜனாதிபதியாகத் தெரிவான கத்தோலிக்கர் ஜோன்.எவ்.கென்னடி. பௌத்தர்கள் அல்லாதவர்கள், அதாவது ஒரு முஸ்லிமோ அல்லது தமிழரோ இலங்கையின் ஜனாதிபதியாக அல்லது பிரதமராக என்றாவது ஒருநாள் வருவார்கள் என்று உங்களால் கற்பனை செய்யமுடியுமா? அவ்வாறு கற்பனை செய்ய உங்களால் முடியுமாக இருந்தால் உங்களது கற்பனைத்திறன் எனது கற்பனைத்திறத்தை விடவும் வளமானதாக இருக்கும் என்றுதான் சொல்லவேண்டும்.
‘கறுப்பர்களின் உயிர்களும் முக்கியமானவை” போன்ற இயக்கங்களில் ஆயிரக்கணக்கில் வெள்ளையினத்தவர்களும் அணிதிரண்டதைப்போன்று இலங்கையில் 1983 கறுப்பு ஜுலை இனவன்முறை அல்லது முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து பெரும்பான்மைச் சமூகத்தவர்கள் அணிதிரளக்கூடிய ஒரு நாளை என்னால் முன்னுணர முடியவில்லை. இனங்களுக்கிடையிலான நீதிக்கும் சமத்துவத்திற்குமான இயக்கத்திற்குத் தலைமை தாங்கியவர் பறங்கி கத்தோலிக்கரான வணபிதா போல் காஸ்பர்ஸ். அவரது பிரதான உதவியாளர்களாக இருந்தவர் ஒரு தமிழ் கத்தோலிக்கர் – இனவாதமற்ற மார்க்சியவாதி. அண்மைக்காலத்தில் நான் சேர்ந்து பணியாற்றிய முற்போக்கான மதகுருவான வண சோபித தேரர் சிறுபான்மையினத்தவர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளைக் கண்டித்து ஒருபோதும் தீவிரமாகத் தலையிட்டதில்லை – நான் கூறுவது தவறு என்றால் காலஞ்சென்ற தேரரிடம் மன்னிப்புக்கேட்பேன்.
கொவிட் – 19 தொற்றுநோயைத் தோற்கடிக்க தேசிய அமைச்சரவையொன்று அமைக்கப்பட வேண்டும் என்ற எனது கோரிக்கையை மீண்டும் இவ்விடத்தில் நான் முன்வைக்கிறேன். பைடன் தேசிய ஐக்கியத்திற்கான தேடலில் கட்சி அரசியல் மனப்பான்மைகளுக்கு அப்பால்சென்று அழைப்புவிடுத்திருக்கிறார். அவர் கொவிட்டின் விளைவான படுமோசமான சுகாதார நெருக்கடியையும் வேறு பல சவால்களையும் எதிர்நோக்குகிறார். தேசிய அமைச்சரவை என்று நான் கூறுவது தேசிய அரசாங்கத்தை அல்ல. ஆனால், இரண்டாவது உலகமகா யுத்தத்தின் போது உயிர்வாழ்விற்கு ஏற்பட்ட சவாலைச் சந்திப்பதற்கு வின்ஸ்ரன் சேர்ச்சில் அமைத்த அமைச்சரவையை மனதிற்கொண்டே நான் அந்தக் கோரிக்கையை முன்வைக்கிறேன். உயிர்வாழ்வுச் சவாலை முறியடித்த பிறகு கட்சிகள் அவற்றின் சொந்த அடையாளங்களை முன்னிலைப்படுத்தி மீண்டும் செயற்படலாம். இந்த அம்சத்தை அக்கறையுடன் நோக்கக்கூடிய அளவிற்கு கோட்டபாயவும் மஹிந்தவும் சஜித்தும் சம்பந்தனும் தூரநோக்குடையவர்கள் அல்ல. எனது யோசனையை எவரும் அக்கறையுடன் நோக்கவில்லை.
எனது இந்தக் கருத்துக்களின் சுருக்கத்தை ஒரு விசேட குறிப்புடன் சேர்த்து சிலருக்கு மின்னஞ்சலில் அனுப்பிவைத்தேன். இலங்கையில் இனவெறியை ஒருபோதும் சகித்துக்கொள்ளாதிருப்பதற்கு உங்களை ஊக்கப்படுத்துவதே இந்த மின்னஞ்சலின் நோக்கம். இனவெறியைத் தோற்றுவிப்பதற்கான போராட்டத்தை ஒருபோதும் கைவிடக்கூடாது. தாராளமயப்போக்குவடையவர்களுடன் (லிபரல்) சேர்ந்து மார்க்சியவாதிகளாகிய நாம் சிலவிடயங்களை அடிப்படையாகக்கொண்டு கூட்டணியை அமைக்கமுடியும் என்பதே அந்தக் குறிப்பாகும். மூன்று பேரிடமிருந்து பதில்கள் கிடைத்தன. அவற்றைக் கீழே தருகின்றேன். அந்தப் பதில்களுக்கிடையில் அடைப்புக்குறிக்குள் குறிப்பிடப்படுபவை எனது கருத்துக்களாகும்.
பதில் 1
முன்னேறிய முதலாளித்துவ சமுதாயங்களில் அல்லது கைத்தொழில்துறையில் நன்கு அபிவிருத்தியடைந்த முதலாளித்துவ சமுதாயங்கள் பெருமளவிற்கு முற்போக்கானவையாகவே இருக்கின்றன என்பதை நாம் எப்போதும் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். உங்களது கருத்து இதை அடிப்படையாகக்கொண்டே அமைந்திருக்கிறது.
பதில் 2
பெரும்பாலான தெற்காசிய நாடுகள், ஜப்பான் மற்றும் இஸ்லாமிய அரசுகளை விடவும் அமெரிக்கா குறைந்தளவு இனவெறியையும் மதவெறியையும் கலாசார அடிப்படையில் பின்தங்கிய தன்மையையும் கொண்டதாகவே இருக்கிறது என்ற உங்களது கருத்தை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். எனது வாழ்நாளில் இலங்கையில் சிங்கள – பௌத்தர் அல்லாத ஒருவர் ஜனாதிபதியாகவோ அல்லது பிரதமராகவோ வருவார் என்று என்னால் நினைத்துப்பார்க்கவோ அல்லது கற்பனை செய்யவோ முடியவில்லை. (இதை எழுதியவர் ஒரு சிங்களவர், பெயரளவில் பௌத்தர்) நாம் இன்னமும் பெருமளவிற்கு நிலப்பிரபுத்துவ சிந்தனைகொண்டவர்களாகவும் குலமரபு குணாதிசயத்தையுடைவர்களாகவும் இருக்கின்றோம். இது கவலைக்குரியதும் துயர் நிறைந்ததுமாகும். நான் என்னை ஒரு மார்க்சியவாதியாகவோ தாராளவாதப்போக்குடைய ஒருவராகவோ (லிபரல்) கருதவில்லை. என்னை ஒரு மனிதாபிமானி என்று அழைப்பதற்கே விரும்புகிறேன். இலங்கையில் இனவெறிக்கு எதிரான போராட்டத்தில் என்னால் செய்யக்கூடியது எதுவோ அதை இறக்கும்வரை செய்வேன்.
பதில் 3
ஒரு முஸ்லிமோ அல்லது பௌத்தரோ என்றைக்காவது ஒருநாள் அமெரிக்காவின் ஜனாதிபதியாக வருவது குறித்து உங்களால் கற்பனை செய்து பார்க்கமுடியுமா? (ஆம், என்னால் முடியும். ஒரு கறுப்பரினால், கத்தோலிக்கரினால், ஒரு இந்தியரால் முடியுமென்றால் ஒரு பௌத்தராலும் நிச்சயமாக முடியும்). இலங்கை மதவெறியில் ஆழமாகப் புதைந்துபோயிருக்கிறது. உங்களுக்கு சொற்ப விளக்கமே இருக்கிறது. அமெரிக்கர்கள் கூடுதலான அளவிற்கு தாராளப்போக்குடையவர்களாக இருக்கிறார்க்ள என்றால், அதற்குப் பிரதான காரணம் ஒரு குடியேற்றவாசிகளின் நாடாகும். இலங்கை, இந்தியா போன்ற நாடுகள் பிரதானமாக சுதேச சனத்தொகையைக் கொண்டவையாகும். இந்தப் பிரச்சினையின் மறுபக்கம் ஒன்றும் இருக்கிறது. அதாவது, பிரான்ஸில் என்ன நடக்கிறது என்பதைப் பாருங்கள். பெரும் எண்ணிக்கையில் முஸ்லிம் குடியேற்றவாசிகளை அனுமதித்ததன் மூலம் அவர்கள் இப்போது முந்திச்சென்றுவிட்டார்கள். இப்போது ‘பிரெஞ்சு அடையாளம்” என்று ஒன்று இல்லை. முஸ்லிம் பகுதிகளுக்குள் செல்வதற்கு அவர்கள் பயப்படுகிறார்கள். நான் எந்தக் குழுவையும் குற்றஞ்சொல்லவில்லை. ஆனால், ஐரோப்பா முஸ்லிம்களினால் ஆக்கிரமிக்கப்பட்டு தீவிரவாத மயப்படுத்தப்படுகின்றது.
(இந்தியா பல்வகைமையைக் கொண்ட ஒருநாடு. அதன் மிகவும் பிரபல்யமான பிரதமர் நாஸ்திகர் என்று தன்னைச் சூளுரைத்தவர். சீக்கியர் ஒருவரும் பிரதமராக இருந்திருக்கிறார். இரு தமிழர்கள், பல முஸ்லிம்களும் சீக்கியர்களும் ஒரு மலையாள தலித்தும் ஜனாதிபதிகளாக இருந்திருக்கிறார்கள்).
குமார் டேவிட்
USA Is Less Racist And Bigoted Than Sri Lanka என்ற தலைப்பில் ‘கொழும்பு ரெலிகிராப்’ இல் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.