பட மூலம், TIME
2020 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள் அமெரிக்காவுக்கு மாத்திரமல்ல, உலகளாவிய ரீதியிலும் பரந்தளவு விளைவுகளைக் கொண்டிருக்கிறது. தேர்தல் முடிவுகள் அமெரிக்காவுக்குள் ஆபிரிக்க அமெரிக்க மக்கள், முஸ்லிம் சனத்தொகை, அண்மைக்காலத்தில் லத்தீன் அமெரிக்க மற்றும் வளர்ச்சியடைந்துவரும் நாடுகளில் இருந்து வந்த குடியேற்றவாசிகளுக்கு நிச்சயமாக பயன்தரும். ஜனாதிபதி டொனால்ட் டரம்பின் கீழ் இருந்ததை விடவும் கூடுதலான அளவு சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பு அமெரிக்க சனத்தொகையில் இந்த பிரிவுகளுக்கு கிடைக்கும். வெள்ளையர் சனத்தொகையில் வறிய பிரிவினர் கூட, அவர்களில் பெரும்பாலானவர்கள் ட்ரம்புக்கே வாக்களித்திருந்தாலும், நிதிச் சீர்திருத்தங்கள், வேலைவாய்ப்பின்மை குறைப்பு மற்றும் பின்தங்கிய பிரிவினரை நோக்கிய வேறு சமூக நலன்புரித் திட்டங்களினால் பயனடைவர்.
கொவிட் – 19 தொற்றுநோயின் விளைவான சுகாதார நெருக்கடியை சிறப்பான முறையில் கையாளுவதன் மூலமாக உடனடியாகவும் நீண்டகால அடிப்படையிலும் கணிசமான பயன்களைப் பெறக்கூடியதாக இருக்கும். அத்துடன், காலநிலை மாற்றம் போன்ற சுற்றுச்சூழல் பிரச்சினைகளைப் பொறுத்தவரை பெருமளவுக்கு மருத்துவ மற்றும் விஞ்ஞான நிபுணத்துவத்தில் நம்பிக்கை வைத்து செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். அமெரிக்காவின் பல பகுதிகள் சூறாவளிகளினாலும் காட்டுத்தீயினாலும் உருக்குலைந்து போயிருக்கின்றன. இந்த அனர்த்தங்களுக்கும் சுற்றுச்சூழல் கொள்கைக்கும் இடையில் உள்ள உறவுமுறையை புதிய நிர்வாகம் விளங்கிக்கொள்ளும்.
இந்தப் பிரச்சினைகளை கையாளுகின்ற விடயத்தில் கூடுதலான அளவிலும் சிறப்பாகவும் முதலீடுகளும் சர்வதேச ஒத்துழைப்பும் கிடைக்கும். ட்ரம்பின் நிர்வாகத்தில் அமெரிக்கா வாபஸ் பெற்றுக்கொண்ட காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் உடன்படிக்கை போன்ற சர்வதேச செயற்திட்டங்களில் பைடன் நிர்வாகம் மீண்டும் இணைந்துகொள்ளும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றம் யுனெஸ்கோ போன்ற சர்வதேச நிறுவனங்களில் இருந்தும் விலகிய அமெரிக்கா, உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து விலகும் தனது விருப்பத்தையும் வெளிப்படுத்தியிருந்தது. வெளியுறவுக் கொள்கைக்கு பல்தரப்பு அணுகுமுறையை பெருமளவுக்கு கடைப்பிடிக்கப்போவதற்கான சமிக்ஞையை பைடனின் அணி ஏற்கெனவே காட்டியிருக்கிறது.
இலங்கையின் வெளியுறவுக்கொள்கை இப்போது பெரும்பாலும் அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கத்தின் நலன்களுடன் பிணைக்கப்பட்டதாகவே இருக்கிறது. கடந்த காலத்தில் அதன் வெளியுவுக்கொள்கையின் முன்னுரிமைகள் பெருமளவுக்கு மூன்றாம் உலக நோக்குடையவையாகவே இருந்தன. உதாரணமாக, பாலஸ்தீன நெருக்கடி இலங்கைக்கு பெரும் முக்கியமானதாக விளங்கிய காலம் ஒன்று இருந்தது. அமெரிக்காவின் வரலாற்றில் ட்ரம்ப் நிர்வாகமே மிகவும் தீவிரமாக இஸ்ரேலை ஆதரிக்கின்ற – பாலஸ்தீனர்களுக்கு எதிரான நிர்வாகம் என்ற உண்மை அதன் வெளியுறவுக் கொள்கையை எதிர்ப்பதற்கு முக்கியமான காரணியாக இருந்திருக்கும். ஆனால், இலங்கையில் தற்போது நிலவுகின்ற முஸ்லிம் விரோத உணர்வுகளின் பின்புலத்தில், இந்தப் பிரச்சினை முக்கியத்துவம் பெறவில்லை.
இலங்கையைப் பொறுத்தவரை, அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டிருக்கும் ஜோ பைடனின் நிர்வாகம் உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும மனித உரிமைகள் பிரச்சினைகளில் ஒத்துழைப்புக்கு மிகவும் கூடுதல் கவனம் செலுத்தும் என்பது நேரடி முக்கியத்துவம் கொண்டதாக இருக்கப்போகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா மீண்டும் இணைந்துகொள்ளக்கூடும் என்பதுடன் கொள்கைப் பிரச்சினைகளில் மீண்டும் சம்பந்தப்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இந்த கொள்கைப் பிரச்சினைகளில் சில இலங்கைக்கு பொருத்தமானவையாகும்.
குறிப்பாக, இனத்துவச் சிறுபான்மையினரின் நல்வாழ்வுடனும் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற பெரும் எண்ணிக்கையிலான குடிமக்கள் படுகொலையுடனும் தொடர்புடைய ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் நடவடிக்கைகளில் அமெரிக்கா முன்னணி பாத்திரத்தை வகித்தது. இத்தகைய பிரச்சினைகளில் ட்ரம்ப் நிர்வாகம் அக்கறை கொண்டதாக இருக்கவில்லை என்கிற அதேவேளை, தற்போதைய இலங்கை அரசாங்கமும் மனித உரிமைகள் பேரவை நிபந்தனைகளுக்கு இணங்கிச்செயற்படுவதில் முன்னேற்றத்தை காண்பிக்கவில்லை. இலங்கைஅரசாங்கமும் மக்களில் சிலரும் ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படவேண்டும் என்று விரும்பியிருக்கக்கூடும்.
மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்துபவர்களின் நோக்கை அடிப்படையாகக் கொண்டு பார்க்கையில், புதிதாக ஒரு முன்னேற்றம் ஏற்படுவதற்கான நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் பைடன் நிர்வாகம் கொடுக்கிறது. என்றாலும், மாறிவிட்ட சூழ்நிலைகளின் காரணமாக தெரிவுகள் மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்பெல்லையையே கொண்டிருக்கின்றன. மாறிவிட்ட சூழ்நிலைகளில் இலங்கையில் ஏற்பட்ட அரசாங்க மாற்றமும் உள்ளடங்குகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. தெற்காசியப் பிராந்தியத்தில் சீனாவின் ஈடுபாடு அதிகரித்துவருகின்றமையும் சூழ்நிலை மாற்றங்களில் முக்கியமான ஒன்றாகும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும் வேறு சர்வதேச மன்றங்களிலும் இலங்கைக்கு ஆதரவாக செயற்படுவதாக சீனா உறுதியளித்திருக்கிறது. அதேவேளை, சீனாவுடனான இரு தரப்பு உறவுகளில் பாதகமான விளைவுகள் ஏற்டக்கூடும் என்ற காரணத்தால் பைடன் நிர்வாகமும் நெருக்குதலைக் கொடுக்கத் தயங்கக்கூடும்.
ஒவ்வொரு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலும் தனித்தன்மை வாய்ந்தவையே என்று கூறமுடியும். ஆனால், 2020 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வழமையை விடவும் பல வழிகளில் தனித்தன்மை வாய்ந்ததாகும். தற்போதைய சூழ்நிலையில் இனம், பால்நிலை, குடிவரவு, மனித உரிமைகள் மற்றும் வெளியுறவு கொள்கைப் பிரச்சினைகளில் பலவும் முன்னென்றும் இல்லாத அளவுக்கு பரிமாணத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன. மறுதலையாக்க முடியாத பல சிக்கலான மாற்றங்கள் ஜனாதிபதி ட்ரம்பின் நான்கு வருடகால நிர்வாகத்தில் இடம்பெற்றிருக்கின்றன. மேலும், நான்கு வருடங்கள் இந்த மாற்றங்களை மேலும் முன்னெடுத்துச் சென்று நடைமுறையில் அறவே மாற்றியமைக்க முடியாதவையாக்கிவிட்டிருக்கும். தேசத்தின் பண்பும் படிமமும் உலக விவகாரங்களில் அதன் இடமும் மாற்றியமைக்கப்பட்டிருக்கும். சர்வதேச விவகாரங்களில் அமெரிக்காவின் முன்னணி வகிபாகம் காரணமாக உலகளாவிய ரீதியில் நிலையான பெரிய தாக்கம் ஏற்பட்டிருக்கும். இந்த மாற்றங்களில் சிலவற்றையாவது இல்லாமல் செய்யக்கூடிய சாத்தியத்தை ஜனாதிபதி மாற்றம் கொண்டுவந்திருக்கிறது.
ட்ரம்பின் கொள்கைகளை மறுதலையாக்குவதிலிருந்து முற்போக்கான திசையில் செல்வது வரை அமெரிக்க அரசாங்கம் எந்தளவுக்கு செயற்படக்கூடியதாக இருக்கும் என்பது பைடன் நிர்வாகத்தின் குணாதிசயத்திலேயே தங்கியிருக்கிறது. பேர்னி சாண்டேர்ஸ், எலிசபெத் வாரென் மற்றும் ஸ்ரேஸி ஏபிராம்ஸ் போன்றவர்களுக்கு முக்கிய பதவிகள் கொடுக்கப்படுமானால், உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் பரந்த விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய மாற்றங்கள் சாத்தியமாகலாம். ஆனால், செனட்டை கட்டுப்பாட்டில் வைத்திருக்காமல் கணிசமான மாற்றங்கள் ஏற்படுவதென்பது கஷ்டமானதாகும். இதற்கு ஜோர்ஜியா மாநிலத்தில் இன்னும் சில வாரங்களில் நடைபெறவிருக்கும் செனட் சபைக்கான இறுதிதேர்தல் போட்டியில் ஜனநாயக கட்சிக்காரர்கள் வெற்றிபெறவேண்டியது அவசியமாகும்.
கலாநிதி தேவநேசன் நேசையா
President Joe Biden’s Impact on the World and Sri Lanka என்ற தலைப்பில் 11.11.2020 அன்று கிறவுண்ட்விவ்ஸ் தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.