பட மூலம், Vox.com

நவம்பர் 3 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கும் குறைவான காலம் முன்னதாக இந்தியா, இலங்கை, மாலைதீவு, இந்தோனேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு சூறாவளிச் சுற்றுலா மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்க அமைச்சர் மைக் பொம்பியோ அமெரிக்கா தலைமையிலான  சீன எதிர்ப்பு கூட்டணிக்குள் இந்த நாடுகளை வளைத்துப்போடுவதற்கு கடுமையாக முயற்சித்தார்.

பல நிச்சயமற்ற நிலைவரங்களை தோற்றுவிக்கக்கூடிய தேர்தலொன்றுக்கு முன்னதாக இந்தக் கடுமையான பயணங்களை மேற்கொண்டதில் பொம்பியோ காட்டிய அவசரமும் அவசியமும் பெருமளவு ஊகங்களுக்கு வழிவகுத்தது.அமெரிக்காவில் தேசியவாதிகளின் வாக்குகளைப் பெறுவதற்காக சீனாவுக்கு எதிராக ட்ரம்ப் முன்னெடுத்திருக்கும் பரந்த வியூகத்தின் ஒரு பகுதியா அல்லது மிதவாதியான ஜோ பைடன் அதிகாரத்துக்கு வந்தாலும் கூட ட்ரம்பின் சீன விரோதக் கொள்கை மாற்றியமைக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யும் ஒரு முயற்சியா இந்த இராஜாங்க அமைச்சரின் இந்த உலகவலம் ? இரண்டுக்கும் ஓரளவு பொதுவானதாக இருக்கக்கூடும்.

பல அபிப்பிராய வாக்கெடுப்புகள் ட்ரம்ப் தோல்வியடைவார் என்று கூறியிருக்கின்றபோததுலும்  அவர்  மீண்டும் வெற்றிபெறக்கூடும் என்பதை நிராகரிக்கமுடியாது. தேர்தலுக்கு முன்னரான அபிப்பிராய வாக்கெடுப்பு  அனேகமாக குறிப்பிட்ட சில உளவியல் காரணிகளையும் வாக்களிப்பு நிலையத்தில் வாக்காளர்களின் மனதில் இறுதிநிமிடத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்களையும் கணக்கில் எடுப்பதில்லை. ட்ரம்புக்கு வாக்களிக்கப்போவதை ஒத்துக்கொள்வதில் அசௌகரியத்தை உணரக்கூடிய வாக்காளர்களிடமிருந்து உட்கிடையான ஆதரவு அவருக்கு இருக்கிறது என்று ஜோர்ஜியாவை தளமாகக்கொண்ட ட்ரஃபல்கார் குழுமத்தின் தலைவரான றொபேர்ட கஹேலி கூறுகிறார்.

நவம்பர் 3 ட்ரம்ப் குறுகிய வித்தியாசத்தில் மீண்டும் தெரிந்தெடுக்கப்படுவார் என்று கஹேலி தெரிவித்தார். 2016 தேர்தலில் ஹிலாரி கிளின்டனே வெற்றிபெறுவார் என்று எல்லோருமே எதிர்வு கூறியபோது ட்ரம்ப் வெற்றிபெறுவார் என்று சரியாக எதிர்வுகூறியது தானே என்று தனது நிலைப்பாட்டுக்கு நம்பகத்தன்மையைக் கற்பிக்கிறார் அவர். ட்ரம்பைப் போன்ற சர்ச்சைக்குரியவரும் மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தக்கூடியவருமான ஒரு வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதை பெருமளவு மக்கள் (அனாமதேய கருத்துக்கணிப்பாளர்களிடமிருந்து கூட)  மறைப்பதற்கு வழிவகுக்கும் சமூக நெருக்குதல்களை கஹேலி கருத்திலெடுத்தே தனது  எதிர்வைக் கூறுகிறார்.

எது எவ்வாறிருந்தாலும், ட்ரம்பும் பொம்பியோ போன்ற அவரின் நிர்வாகத்தின் உறுப்பினர்களும் அவர் வெற்றிபெறுகிறாரோ இல்லையோ அவரின் சீன எதிர்ப்புக்கொள்கை அமெரிக்காவினதும் சுதந்திர உலகினதும் பாதுகாப்புக்கும் சுபீட்சத்துக்குமான அமெரிக்க வெளியுறவுக்கொள்கையின் அகற்றமுடியாத ஒரு பகுதியாக்கப்படவேண்டும் என்று நம்புகிறார்கள். சீன விரோத நிலைப்பாடு தேர்தலில் வெற்றிபெறுவதற்கு நல்லதாக இருக்கின்ற அதேவேளை, ஒரு உலக வல்லரசாக அமெரிக்கா நீடித்து நிலைப்பதற்கும் முக்கியமானதாகும்.

சீனா மீது ட்ரம்ப் ஏன் கூடுதல் அழுத்தம்?

ட்ரம்பின் சீன எதிர்ப்புக் கொள்கையின் மிகவும் ஆக்ரோஷமான – வெளிப்படையான  ஆதரவாளர்களில் ஒருவர் பொம்பியோ. அந்த கொள்கை ட்ரம்பின் (‘அமெரிக்கா முதலில்’ என்ற பாணியிலான அமெரிக்க தேசியவாத) மிகவும் பிரதானமான தேர்தல் பிரசாரத்தின் அங்கமாகும். பாதுகாப்பு காரணங்களைக் காட்டி ட்ரம்ப் நிர்வாகம் சீனாவின் செயலிகளான ‘வீ சற்’ (WeChat), ரிக்ரொக் (Tiktok ) ஆகியவை மீது தடைவிதித்திருக்கிறது. ஹுவாவீயின் 5 ஜி தொழில்நுட்பத்துக்கு எதிராக ட்ரம்ப் நிர்வாகம் பிரசாரம் செய்துவருகிறது. அத்துடன், வெளிப்படைத்தன்மையின்றி செயற்படுவதற்காக கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் 24 சீனக்கம்பனிகளில் ஹுவாவீயும் அடங்குகிறது.

“கெடுதியான உடன்படிக்கைகள் மூலமாக சீனக்கம்யூனிஸ்ட் கட்சி ஒரு காட்டுமிராண்டித்தனமாக நடந்து சுயாதிபத்தியத்தை மீறுகின்ற, நிலம் மற்றும் கடலில் அத்துமீறல்களைச் செய்துவருவதை நாம் காண்கிறோம். அமெரிக்கா வேறுபட்ட வழியில் அதாவது பங்காளியாக, நண்பனாக வருகிறது” என்று பொம்பியோ கொழும்பில் கூறனார். அவர் முன்னதாக டோக்கியோவிலும் புதுடில்லியிலும் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிய குணாதிசயங்கள் என்று கூறப்படுகின்றவற்றைப் பற்றி பேசியிருந்தார். கொழும்பில் பொம்பியோ அமெரிக்காவின் விருப்புக்குரிய திட்டமான  480 மில்லியன் டொலர்கள் எம்.சி.சி. நன்கொடைத்திட்டத்தையும் கூட ஓரங்கட்டிவிட்டு சீனா மீது முழுஅளவில் தாக்குதல்களைத் தொடுத்தார். பொம்பியோவின் பிரதி இராஜாங்க அமைச்சர் டீன் தோம்சன் வாஷிங்டனில் செய்தியாளர் மாநாடொன்றில், சர்வாதிகார – ஏகாதிபத்திய சீனாவுக்கும் அமெரிக்கா தலைமையிலான ஜனநாயக சுதந்திர உலகுக்கும் இடையில் தெரிவொன்றைச் செய்யவேண்டும் என்று வெளிப்படையாக கோரிக்கை விடுத்திருந்தார்.

பொம்பியோவின் சுற்றுப்பயணங்கள் எந்தளவுக்கு வெற்றி?

வழமைக்கு மாறானதும் இடர்மிக்கதுமான பொம்பியோவின் சுற்றுப்பயணத்தின் சாதனைகளை நோக்கும்போது  விளைவுகள் ‘கலப்பானவையாக’ இருக்கின்றன என்றே எவராலும் கூறமுடியும். அவரின் டில்லி விஜயத்தின்போது முக்கியத்துவம் வாய்ந்த ‘அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு உடன்படிக்கை’ இல்  (Basic Exchange and Cooperation Agreement – BECA  ) அமெரிக்காவும் இந்தியாவும் கைச்சாத்திட்டன. இந்த உடன்படிக்கை பல்வேறு துறைகளில்  முக்கியமான தரவுகளை இரு நாடுகளும் பரிமாறிக்கொள்வதற்கு அனுமதிக்கிறது. இது 4000 கிலோமீட்டர்  இமாலய எல்லையோரத்தில் ஆக்கிரமிப்புத்தன்மையுடனும் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்ப வளங்களுடனும் விளங்குகின்ற சீன இராணுவத்தை இந்தியா எதிர்கொள்வதற்கு உதவும்.

ஆனால், இந்த வசதியைப் பெற்றுக்கொள்வதில் இந்தியர்கள் மகிழ்ச்சியடையும் அதேவேளை அவர்கள் சீனாவை கடுமையாகக் குறைகூறுவதில் பொம்பியோவுடன் இணைந்துகொள்ளவில்லை. உண்மையில், வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரோ அல்லது பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கோ பொம்பியோவுடனான கூட்டு செய்தியாளர் மாநாட்டில் சீனா பற்றி எதையும் குறிப்பிடவுமில்லை. அமெரிக்காவின் தடைவிதிப்பு அச்சுறுத்தலுக்கு மத்தியில் ரஷ்யாவிடமிருந்த எஸ்.400 ரக ஏவுகணைகளை  கொள்வனவு செய்வதற்கு இந்தியா மேற்கொள்கின்ற முயற்சிகள் பற்றிய கேள்விக்கு பதிலளிப்பதை ராஜ்நாத் சிங் தவிர்த்துக்கொண்டார். பாகிஸ்தான் மீதும் அந்த நாடு நடைமுறைப்படுத்துகிறதாகக் கூறப்படுகின்ற எல்லை கடந்த பயங்கரவாதம் மீதுமே இந்தியா தனது முழுக்கவனத்தையும் செலுத்தியது. பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டியங்கும் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்திய – அமெரிக்க ஒத்துழைப்பை பொம்பியோ அங்கீகரித்த அதேவேளை, அது அவருக்கு அதிமுக்கிய அக்கறைக்குரிய பிரச்சினை அல்ல என்பது வெளிப்படையானது.

மூலோபாய கூட்டுப்பங்காண்மையுடன் (Strategic Partnership) இணைந்ததாக மூலோபாய சுயாட்சியையும் (Strategic Autonomy) பேணுவதில் கொண்டிருக்கும் ஆர்வத்தை அடிக்கடி இந்தியா வெளிப்படுத்தி வந்திருக்கிறது. இது விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை அவதானிகள் சுட்டிக்காட்டுகிறார்கள். இதை தொடர்ச்சியான எரிச்சலாக அமெரிக்கா நோக்குகிறது. சீனாவுடன் எல்லைப்பேச்சுக்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், சீனாவுடன் இணக்கப்பாடொன்றைக் கண்டுவிடலாம் என்று  இந்தியா நம்புகிறது. அதனால், அமெரிக்காவுடன் கூடுதலான அளவுக்கு நெருக்கமான உறவை பாதகமானதாக சீனா உணரும் என்று புதுடில்லி சந்தேகிக்கிறது.

இலங்கை

பொம்பியோவின் தெற்காசிய சுற்றுப்பயணத்தின்  இரண்டாவது நாடாக இலங்கை அமைந்தது. டில்லியில் இருந்து அவர் நேரடியாக கொழும்பு வந்தார். ஆனால், இங்கு அவர் ஜனாதிபதி கோட்டபாயவுடனும் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடனும் நடத்திய பேச்சுவார்த்தைகளின்போது வெளியிட்ட சீன விரோத ஆரவாரப்பேச்சுக்கள் எடுபடவேயில்லை. சீன – அமெரிக்க மோதலின் ஒரு களமாக தனது நாடு மாறுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்ற ஜனாதிபதி கோட்டபாயவின் கருத்துடன் பொம்பியோ திருப்திப்பட்டுக்கொள்ளவேண்டி ஏற்பட்டது. வெளியுவுக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் விவகாரத்தில் இலங்கையின் சுயாதிபத்தியத்தை விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி கூறினார். பாரிய உள்கட்டமைப்பு திட்டங்களில் பெருமளவு முதலீடுகளைச் செய்கின்ற சீனாவின் கடன்பொறிக்குள் இலங்கை வீழ்ந்துவிடவில்லை என்றும் அவர் வலியுறுத்திக் கூறினார்.

இலங்கையில் முதலீடுகளைச் செய்யுமாறு கோட்டபாய அமெரிக்காவிடம் உறுதியாக வலியுறுத்தினார். இலங்கையில் அமெரிக்கா குறிப்பாக சுற்றறுலாத்துறையில் முதலீடுகளைச் செய்யுமென்று கூறுவதைத் தவிர பொம்பியோவுக்கு வேறுவழி இருக்கவில்லை.அமெரிக்காவின் முதலீடுகள் இலங்கையில் அதிகமாகத் தேவைப்படுகின்ற தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் விவசாயம் உட்பட பல துறைகளை தினேஷ் குணவர்தன பட்டியலிட்டார். இதை நோக்கி உறுதியாகச் செயற்படுவதற்கு இரு தரப்பினரும் இணங்கிக்கொண்டனர். ஆனால், பொம்பியோ செய்தியாளர் மாநாட்டையும் ரூபவாஹினி தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலையும் தனது திருப்திக்கு அவதூறுசெய்வதற்கு பயன்படுத்திக்கொண்டதைக் காணக்கூடியதாக இருந்தது.

மாலைதீவில் நகர்வுகள் 

அடுத்த கட்டமாக மாலைதீவு சென்ற பொம்பியோ அங்கு பெரிதாக செய்வதற்கு எதுவும் இருக்கவில்லை. ஏனென்றால், ஜனாதிபதி இப்ராஹிம் சோலீ மேற்குலகிற்கு சார்பானவராகவே இருக்கிறார். வெளிப்படையாக சீனாவுக்கு ஆதரவானவராக செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீன் உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகளுக்காக பெருமளவு கடன்களை பெய்ஜிங்கிடம் பெற்றிருந்தார். மாலைதீவு சீனாவின் கடன்பொறிக்குள் அகப்பட்டுவிட்டதாகவே கூறப்பட்டது. யாமீன் அரசாங்கம் ஊழலுக்காகவும் எதேச்சாதிகாரத்துக்காகவும் மக்களால் வெறுக்கப்பட்டு 2018 தேர்தலில் வீழ்த்தப்பட்டது.

மாலேயில் முழுமையான ஒரு அமெரிக்கத் தூதரகம் அமைக்கப்படும் என்றும்  கொழும்பில் உள்ள தூதரகத்துடனான தொடர்புகள் துண்டிக்கப்படும் என்றும் பொம்பியோ அறிவித்தார். ஒரு புறத்தில் ஏடன் குடாவுக்கும் ஹோர்மஸ் நீரிணைக்கும் இடைப்பட்ட மேற்கு இந்து சமுத்திர சோதனை நிலைகளின் கட்டண அறவீட்டு மையமாகவும் மறுபுறத்தில் மலாக்கா நீரிணைக்கும் கிழக்கு இந்துசமுத்திரத்துக்கும் இடைப்பட்ட மையமாகவும் மாலைதீவை கடல்சார்துறை நிபுணர்கள் வர்ணிக்கிறார்கள். அதனால், மாலைதீவுடன் பாதுகாப்பு உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்வதில் அமெரிக்கா அக்கறையாக இருந்துவந்திருக்கிறது. இந்த நோக்கில் கட்டமைப்பு உடன்படிக்கை என்ற பெயரில் இரு நாடுகளும் செப்டெம்பரில் ஒரு உடன்டிக்கையில் கைச்சாத்திட்டன. சுதந்திரமானதும் திறந்ததுமான ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் சட்டங்களையும் விழுமியங்களையும் உறுதியாகக் கடைப்பிடிப்பதற்கான பொதுவான கடமைப்பொறுப்பில் ஏனைய நாடுகளுடன் மாலைதீவும் இணைந்துகொள்வதற்கு உடன்டிக்கை வழிவகுக்கும் என்று அமெரிக்கத் தூதுவர் அலைனா ரெப்லிற்ஸ் ஜப்பானின் நிக்கி ஏசியன் றிவீயூவுக்கு கூறியிருந்தார்.

இந்தோனேசியா

சீனாவைச் சுற்றிவளைக்கும் தனது மூலோபாயத்திற்குள் இந்தோனேசியாவைக் கொண்டுவருவதற்கும் அமெரிக்கா அக்கறை காட்டுகின்றது. இந்தோனேசியாவின் பாதுகாப்பு அமைச்சர் பிரபோவோ சூபியான்ரோ அண்மையில் வாஷிங்டனுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். ஆனால், இந்தோனேசியாவின் முக்கிய வர்த்தக பங்காளியாக சீனா விளங்குவது இது விடயத்தில் ஒரு மட்டுப்படுத்தும் காரணியாக இருக்கிறது. மானியங்கள் மற்றும் சமப்படுத்தல் ஏற்பாடுகள் தொடர்பான உலக வர்த்தக நிறுவனத்தின் கீழான விசேட கவனிப்பு நாடுகள் பட்டியலில் இருந்து இந்தோனேசியாவை அமெரிக்கா நீக்கிய செயலால் அந்த நாடு ஆத்திரமடைந்திருக்கிறது. அந்த செயல் அமெரிக்காவுக்கான இந்தோனேசிய ஏற்றுமதிகளை பெரிதும் பாதித்திருக்கிறது. சீனாவுடன் மீன்பிடி உரிமைகள் தொடர்பில் சில சர்ச்சைகள் இந்தோனேசியாவுக்கு இருக்கிறது. மலாக்கா நீரிணையை சீனாவின் ஊடுருவல்களில் இருந்து சுதந்திரமானதாக வைத்திருப்பதில் அமெரிக்காவுக்கு  இந்தோனேசியா உதவுவதாக இருந்தால், வர்த்தக முனையில் அந்த நாட்டுக்கு அமெரிக்காவிடமிருந்து சில பொருளாதார சலுகைகள் கிடைத்தாகவேண்டும்.

வியட்நாம்

அமெரிக்காவுக்கும் வியட்நாமுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்டுத்தப்பட்ட 25 வருடநிறைவு தினத்தில் பொம்பியோ அந்த நாட்டுக்கு சென்றிருந்தார். சீனா தொடர்பில் அமெரிக்காவுக்கும் வியட்நாமுக்கும் பொதுவான அச்சமொன்று இருக்கிறது. ஆனால் அதேவேளை, வியட்நாமுக்கு வாஷிங்டனுடன் சில வர்த்தகச் சர்ச்சைகளும் உள்ளன. அமெரிக்காவுக்கான ஏற்றுமதிகளை ஊக்குவிப்பதற்கு வியட்நாம் தனது நாணயத்தை மதிப்பிறக்கம் செய்வதாத வாஷிங்டன்  குற்றஞ்சாட்டுகிறது. ஆனால், வியட்நாம் இதை மறுதலிக்கிறது. இந்தோனேசியா, இலங்கை போன்று வியட்நாமும் மனித உரிமைகள் பிரச்சினைகளை கையிலெடுத்து உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையீடுகளைச் செய்வதை வெறுக்கிறது.

பி.கே.பாலச்சந்திரன்

Pompeo’s pre-poll peregrination in perspective என்ற தலைப்பில் newsin.asia தளத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.