பட மூலம், CNtraveler
உலகின் எந்தப்பகுதியில் என்றாலும் அரசியலும் மதமும் ஒரு பதற்றத்தை ஏற்படுத்துகின்ற கலவையாகும். ஆனால், இது இந்தியாவைப் பொறுத்தவரை, அதுவும் ஊரடங்கைப் படிப்படியாகத் தளர்த்தி பொருளாதாரத்தை மீட்டெடுக்கின்ற அதேவேளை கொவிட்-19 ஐக் கட்டுப்படுத்துவதற்கும் பெரும் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கும் நிலையில், குறிப்பாக ஒரு பிரத்யேகமான உண்மையாகும்.
இத்தகைய ஒரு பின்புலத்தில் ஒருமாத இந்து பண்டிகைக்காலத்திற்கு முன்னதாக வணக்கத்தலங்கள் மீது மக்களை கவனம் செலுத்தவைப்பது மிகுந்த பகைமையை உண்டாக்குகின்ற ஒரு காரியமாகலாம். மதுபானவிடுதிகள் திறக்கப்படும் அதேவேளை, பக்தர்களின் வழிபாட்டிற்காக இந்து ஆலயங்கள் ஏன் இன்னமும் திறக்கப்படவில்லை என்று மஹராஷ்டிர மாநிலத்தின் முதலமைச்சரை ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி கடிதம் மூலம் கேட்டிருப்பது பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.
ஆளுநர் கடிதத்தை அனுப்பியதற்கு மறுநாள் மத்திய மும்பையில் உள்ள பிரபலமான சித்திவிநாயகர் ஆலயத்திற்கு வெளியே எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் பெருமளவில் கூடிநின்று ஸ்லோகங்களை எழுப்பினர். அதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் அரசியல் வட்டாரங்களில் எச்சரிக்கை மணியையும் ஒலிக்கவைத்திருக்கிறது.
“வணக்கத்தலங்களைத் திறப்பதை மீண்டும் மீண்டும் நீங்கள் பிற்போட்டு வருவதற்கு உங்களுக்கு கடவுளால் ஏதேனும் முன்னெச்சரிக்கை கிடைக்கப்பெற்றதா என்று நான் வியப்படைகிறேன். இல்லையென்றால் நீங்கள் பெரிதும் வெறுக்கின்ற மதச்சார்பின்மை கொள்கைக்கு தீடீரென்று மாறிவிட்டீர்களா?”
– என்று ஆளுநர் முதலமைச்சர் உதவ் தாக்கரேயை கடிதத்தில் கேட்டிருக்கிறார்.
அக்டோபர் 17 இந்து பண்டிகைக்காலம் தொடங்குகின்ற நிலையில் கோஷ்யாரியின் கருத்துக்கள் கொவிட்-19 கட்டுப்பாடுகளை மீறி பண்டிகைகளின்போது வணக்கத்தலங்களுக்குள் பிரவேசிக்க பக்தர்களைத் தூண்டக்கூடும் என்று அவதானிகள் கூறுகிறார்கள். மஹராஷ்டிரா மாநிலத்திலுள்ள சகல ஆலயங்களும் விரைவாகத் திறக்கப்பட வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி கோரிக்கை விடுத்திருக்கிறது.
அரசியலமைப்பு ரீதியான அதிகாரத்தைக்கொண்ட ஆளுநரிடமிருந்து கிடைக்கப்பெற்ற கடிதத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்பை உணர்ந்தவராக முதலமைச்சர் உதவ் தாக்கரே தனது பதிலில், கொவிட்-19 ஐக் கட்டுப்படுத்துவதற்கே அதியுயர் முன்னுரிமையை வலியுறுத்தியிருப்பதுடன் இந்திய அரசியலில் பொதிந்திருக்கும் மதச்சார்பின்மை பற்றிய சர்ச்சை அநாவசியமானது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். மஹராஷ்டிராவில் ஆளும் கூட்டணியில் மூத்த தலைவரான சரத் பவார் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் ஆளுநர் பயன்படுத்தியதாகக் கூறப்படுகின்ற வரம்புமீறிய வார்த்தைகள் குறித்து முறைப்பாடு செய்திருக்கிறார்.
“ஒருபுறத்தில் மாநில அரசாங்கம் மதுபானவிடுதிகளையும் கடற்கரைகளையும் திறப்பதற்கு அனுமதித்திருக்கின்ற அதேவேளை, மறுபுறத்தில் எமது தெய்வங்கள் ஊரடங்கிற்குள் முடங்கிக்கிடக்க சபிக்கப்பட்டிருக்கின்றனர்”
– என்று ஆளுநரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பாரதிய ஜனதா கட்சி பல வருடங்களாக தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான முக்கிய பிரசார பொருளாக இந்து தேசியவாதத்தைப் பயன்படுத்தியிருக்கிறது. ஏழு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக சர்ச்சைக்குரியதாக இருந்துவந்ததும் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான முரண்பாடுகளுக்கு முக்கியமான காரணியாக விளங்குவதுமான அயோத்தியில் ஆலயமொன்றை நிர்மாணிப்பதற்காக கடந்த ஆகஸ்டில் நடைபெற்ற அடிக்கல் நாட்டும் வைபவத்தை பிரதமர் மோடி முன்னின்று நடத்தினார்.
மஹராஷ்டிரா ஆளுநரை பதவி நீக்குமாறு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்திருக்கிறது. இந்தியாவின் அரசியலமைப்பின் அடிப்படையானதும் மாற்றமுடியாததுமான அம்சமே மதச்சார்பின்மை என்று டுவிட்டரில் பதிவுசெய்திருக்கும் உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன், அந்த நீதிமன்றம் தானாகவே சட்டநடவடிக்கை எடுத்து ஆளுநரை பதவி நீக்குவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் யோசனை தெரிவித்திருக்கிறது.
சிவசேனை கட்சி, காங்கிரசுடனும் தேசியவாத காங்கிரசுடனும் சேர்ந்து மஹராஷ்டிர மாநிலத்தை ஆள்கின்றதும் இந்தப் பிரச்சினைக்கான காரணத்தின் ஒரு பகுதியாகும். பாரதிய ஜனதாவுடன் 3 தசாபத்தகாலமாகக் கொண்டிருந்த கூட்டணியை சிவசேனை கடந்த வருடம் முடிவிற்குக் கொண்டுவந்ததையடுத்து இரு தரப்பிற்கும் இடையே கடுமையான அரசியல் குரோதம் தோன்றியது. இருகட்சிகளுமே இந்துக்களின் வாக்குகளைப் பெறுவதற்காகப் போட்டி போடுகின்றவையாகும். இந்தியாவின் 138 கோடி மக்கள் சனத்தொகையில் 80 சதவீதமானோர் இந்துக்கள்.
இம்மாதப்பிற்பகுதியில் பீஹார் மாநிலத்தில் சட்டசபைத்தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. அதில் போட்டியிட்டு ஆட்சியைக் கைப்பற்றுவதில் தீவிர அக்கறை கொண்டிருக்கும் பாரதிய ஜனதா கட்சி அடுத்த வருடம் ஏப்ரலில் மேற்கு வங்காளத்தில் நடைபெறவிருக்கும் சட்டசபைத் தேர்தலிலும் அதிக கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறது. அந்த மாநிலத்தில் வெற்றியைப் பெற்றால் நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் (லோக்சபா) 42 ஆசனங்களில் மிகவும் கூடுதலானவற்றைப் பிறகு கைப்பற்றுவது இலகுவாக இருக்கும்.
அக்டோபர் 17 நவராத்திரியுடன் தொடங்கும் பண்டிகைக்காலம் துர்கா பூஜை, தஸரா பண்டிகையைத் தொடர்ந்து நவம்பர் 14 தீபாவளியுடன் நிறைவுபெறுகிறது. மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜை மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்ற ஒன்றாகும்.
பல மாநிலங்கள் பக்தர்கள் ஆலயங்களுக்குள் பிரவேசிப்பதைக் கட்டுப்படுத்தியிருக்கின்றன. இருந்தாலும் அந்தக் கட்டுப்பாட்டினால் மதகுருமாருக்கும் மற்றவர்களுக்கும் வைரஸ் தொற்று ஏற்படுவதைத் தடுக்கமுடியவில்லை. உலகின் மிகவும் செல்வச்செழிப்புள்ள ஆலயங்களில் ஒன்றான திருப்பதியில் சுமார் 1000 பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது. அந்த ஆலயம் மீளத்திறக்கப்படுவதற்கு முன்னதாக ஒருசில மதகுருமாரும் பலியாகியிருக்கிறார்கள்.
இந்தியாவில் 72 இலட்சம் பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியிருக்கிறார்கள். அமெரிக்காவிற்கு அடுத்ததாக உலகில் கொவிட்-19 இனால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா விளங்குகின்றது. இந்தியாவில் இந்தத் தொற்றிலிருந்து குணமடைவோரின் வீதம் உலகில் மிகவும் உயர்ந்த ஒன்றாக இருக்கிறது. ஆனால், பண்டிகைகளும் குளிர்கால மாதங்களும் புதிய தொற்று அலையொன்றை மூளவைக்கலாம் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
ஆகஸ்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களின் போது கொவிட்-19 இற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளில் காணப்பட்ட தளர்வு, தொற்று வீழ்ச்சிகண்டு வந்திருந்த நிலைவரத்தைத் தலைகீழாக்கி புதிதாகப் பெருமளவானோருக்கு தொற்று ஏற்படுவதற்கு வழிவகுத்தது என்று மஹராஷ்டிர மாநிலத்தின் கொவிட் செயலணியின் தலைவரான ஷாஷான் யோஷ் கூறினார்.
நவராத்திரி காலத்தில் பெண் தெய்வங்களுக்கு ஒன்பது சுபநாட்களில் பூஜை வழிபாடுகள் செய்யப்படும். ஆலயங்களுக்குச் செல்லும் மக்கள் வண்ண ஒளிவிளக்குகள் பூட்டி, இந்திய இசையுடன் கூடிய சமூக நடன நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். மிகவும் அழகாக உடையணிந்த சிறுமிகளும் பெண்களும் பெருமளவில் கூடுவார்கள்.
மும்பையில் மாத்திரம் ஆயிரக்கணக்கான அத்தகைய சமூக நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஒவ்வொரு அரங்கிலும் சில ஆயிரம்பேர் பங்குபற்றலாம். இதனால், தொலைக்காட்சி சேவைகளுக்கும் விசேட ஆடை அணிகலன்கள், இசை மற்றும் ஒளிவிளக்குகளை வழங்குகின்ற வர்த்தகர்களுக்கும் அலங்காரம் செய்பவர்களுக்கும் பாடகர்களுக்கும் நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்களுக்கும் இந்தப் பண்டிகை நாட்களில் பெரும் இலாபம் கிடைக்கும்.
தொற்றுநோய் அச்சம் காரணமாக இவ்வருடம் பொதுக்கொண்டாட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இதனால், சிலர் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. இந்தியா பூராகவும் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியிருக்கும் 72 இலட்சம் பேரில் 15 இலட்சம் பேர் மஹராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள். இந்தியாவின் மாநிலங்களில் இந்த மாநிலமே வைரஸ் தொற்றில் முன்நிலையில் இருக்கிறது. மஹராஷ்டிராவில் 6000 இற்கும் அதிகமான ஆலயங்கள் இருக்கின்றன. மும்பையில் பிரபல்யம் மிக்க புராதன ஆலயங்கள் பண்டிகைக்காலங்களில் பெரும் எண்ணிக்கையானோரைக் கவருவதால் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதென்பது அசாதாரணமான காரியமாகும். இதனால், சமூக இடைவெளியினைப் பேணுவதென்பது உண்மையில் சாத்தியமில்லாததாகப் போகிறது.
சுமித் சர்மா
Politics, religion undermine India’s war on virus என்ற தலைப்பில் ‘ஏசியா டைம்ஸ்’ இல் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.