பட மூலம், USNews
ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளினால் ஆகஸ்ட் 30ஆம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் வேறுபட்ட பிரதேசங்களில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இத்தினத்தை நினைவுகூருவதற்கான நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தன. காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் மத்திய மாகாணத்தின் திகன நகரில், கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் சந்தை ஒன்றை நடத்தின. வட பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் யாழ்ப்பாணத்தில் எதிர்ப்பு ஊர்வலம் ஒன்றில் இணைந்து கொண்டன. கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு நகரில், காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் ஒன்றிணைந்து நகரில் எதிர்ப்பு ஊர்வலம் ஒன்றை நடத்தின. 29ஆம் திகதி வட மாகாணத்தின் வவுனியா நகரில் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டன. கடந்த 28ஆம் திகதி மேல் மாகாணத்தின் கொழும்பு நகரில் தடுத்துவைக்கப்பட்டுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு ஆதரவாக எதிர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த முன்னாள் பணிப்பாளர் மேற்கொண்ட விசாரணைகளினால் காணாமல் ஆக்குதல் மற்றும் ஏனைய தீவிர குற்றங்களுக்காக சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள், இராணுவப் புலனாய்வு அதிகாரிகள், ஒரு சிறைச்சாலை அதிகாரி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டனர்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் இடம்பெற்ற நிகழ்வுகளில் பெரும்பாலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியதுடன் மத்திய மாகாணத்தின் திகன நகரில் இடம்பெற்ற நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டோரின் சிங்களக் குடும்பங்கள் கலந்து கொண்டிருந்தன.
நாடாளுமன்ற சட்டம் ஒன்றினால் உருவாக்கப்பட்ட உண்மையை கட்டியெழுப்புவதற்காக (நீதியை அல்ல) காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் (OMP) அனைத்து சமூகங்களிலும் இருந்து காணாமல் போன மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரை, அவ்விடயம் தொடர்பாக இயங்கும் நிறுவனங்களுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு நினைவு கூர்ந்தது. கொழும்பில் உள்ள சில இராஜதந்திரிகள் மற்றும் ஐக்கிய நாடுகளின் வதிவிடப்பிரதிநிதி போன்றோர் தமது கரிசனைகள் மற்றும் நோக்குகளை டுவிட்டர் மூலம் வெளியிட்டனர். ஆகஸ்ட் 30ஆம் திகதியை சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோரின் சர்வதேச நினைவு கூரும் தினமாக அறிவித்த ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தில், மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் ஒரு தரப்பாக இருந்த போதும், அத்தினத்தை நினைவு கூர்வதற்காக மேற்கொள்ளப்பட்ட எந்த ஒரு முன்னெடுப்பையும் என்னால் செய்திகள் வாயிலாக அறிய முடியவில்லை.
கலை
ஆகஸ்ட் 30 தினத்துடன் தெளிவான இணைப்பைக் கொண்டிராத போதும், இவ்வருடம் மிகவும் சுவாரசியம்மிக்க நிகழ்வொன்று இலங்கையில் நடந்தது. காணாமல்போன நபர் ஒருவரின் தாய் எதிர்கொள்ளும் துயரங்களை சுட்டிக்காட்டும் “பாங்ஷு” என்ற திரைப்படத்தின் திரையிடலே அந்நிகழ்வாகும். இலங்கையின் பல பகுதிகளில் இத்திரைப்படம் கடந்த 21ஆம் திகதி திரையிடப்பட்டது. பல திரையரங்குகளில் பின்னர் கலந்துரையாடல் நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன. படத்தின் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் என்பன செப்டெம்பர் மாதத்திலும் தொடரவுள்ளது.
குறித்த தினத்தை காணாமால் ஆக்கப்பட்டவர்களின் பிள்ளைகளைக் கொண்டு சுவர்ச்சித்திரம் வரைதல் நிகழ்வின் ஊடாக நினைவுகூரவும் முயற்சியொன்று முன்னெடுக்கப்பட்டது. எவ்வாறாயினும் காணாமல் ஆக்கப்பட்டவரின் மனைவியால் அச்சித்திரங்களை வரைவதற்கான சுவர் ஒன்றைப் பெற்றுக்கொள்ள முடியாமையினால் இம்முயற்சி கைகூடவில்லை. அவ்வாறான சுவர் ஒன்றைப் பெறுவதற்கு ஐக்கிய நாடுகள் சபைக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை உட்பட பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சில மதத்தலைவர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள் இவ்விடயம் தொடர்பில் அனுதாபம் கொண்டவர்களாகக் காணப்பட்ட போதும், தமது அமைப்புகளின் சுவர்களை இம்முயற்சிக்காக வழங்குவதற்கு அச்சமுற்ற நிலையில் காணப்பட்டனர். அவர்களில் ஒருவர் குறித்த சித்திரங்கள் எவ்வாறு அமையப்போகின்றன என என்னிடம் கேட்டார். எனினும், “அதை என்னால் எதிர்வு கூறவோ பிள்ளைகளின் கலைச் சுதந்திரத்தை தணிக்கை செய்யவோ முடியாது” என்ற பதிலைத்தான் என்னால் வழங்க முடிந்தது.
பழிவாங்கல்கள்
ஆகஸ்ட் 30 தினத்தை நினைவுகூருவதற்காக குடும்பங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பல நிகழ்வுகள் கட்டுப்பாடுகளையும் மிரட்டல்களையும் எதிர்கொண்டன. திகன நகரில் நிகழ்வை ஏற்பாடு செய்த மதபோதகரிடம் விசாரணைகளை மேற்கொண்ட புலனாய்வு அதிகாரிகள் நிகழ்வுகளில் LTTE உறுப்பினர்களின் புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளனவா எனவும் கேட்டிருந்தனர். யாழ்ப்பாணத்தில் எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக புறப்பட்ட சில காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களிடம் கலந்து கொள்ள வேண்டாம் எனக் கூறப்பட்டதுடன் அவர்களுக்குப் போக்குவரத்துச் சேவைகளை வழங்குவதற்காக அமர்த்தப்பட்டிருந்த சில பேரூந்து உரிமையாளர்கள் மிரட்டல் காரணமாக போக்குவரத்துச் சேவை வழங்குவதில் இருந்து பின்வாங்கினர்.
ஆனால் மிக தீவிரமான தடை மட்டக்களப்பிலேயே ஏற்படுத்தப்பட்டது. அங்கு, எதிர்ப்பு ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு மிகவும் பிரயத்தனம் மேற்கொண்ட பொலிசார் நீதிபதியையும் தவறாக வழிநடத்த முயன்றுள்ளதாகத் தெரிய வருகின்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் ஒன்று கூடினர். சில அருட்சகோதரிகளும், காணாமல் ஆக்கப்பட்ட கத்தோலிக்க போதகர் ஒருவரின் படத்தைக் கையில் ஏந்திய மாவட்டத்தின் மறைமாவட்ட ஆயரும் அங்கு இருந்தார். மட்டக்களப்பு பொலிஸாரினால் பெறப்பட்ட தடையுத்தரவில் முகவரியிடப்பட்ட நபர் எதிர்ப்பு பேரணியில் கலந்துகொண்டிருக்கவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் தேவாலய வளாகத்தினுள் நுழைந்த பொலிஸார், காணாமல் ஆக்கப்பட்டோரின் வயது முதிர்ந்த குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சில ஆதரவாளர்கள் வீதிக்குச் செல்வதைத் தடுக்கும் நோக்கில் தேவாலய வளாகத்தின் கதவைப் பூட்டினர். எனினும், ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு வழியாகக் கதவைத் திறந்ததுடன் அவர்களை நிறுத்துவதற்காகப் பொலிஸார் மேற்கொண்ட முயற்சிகளை எதிர்த்து கடும் வெயிலில் இரண்டு கிலோமீற்றர்கள் நடந்து காந்திப் பூங்காவைச் சென்றடைந்தனர். ஒரு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மறைமுகமாக தன்னை அச்சுறுத்தியதாக (நீங்கள் நடத்துங்கள், நான் பார்த்துக் கொள்கிறேன் எனக் கூறப்பட்டது) ஒரு பெண் குற்றம் சுமத்தினார். இன்னொரு பெண் வைத்திருந்த தனது காணாமல் ஆக்கப்பட்ட கணவரின் ஒரேயொரு புகைப்படத்தை பொலிஸ் அதிகாரி பறித்தெடுத்ததைத் தொடர்ந்து கவலையும் ஆத்திரமுமடைந்தார்.
நீதிமன்ற ஆணை
நீதிமன்ற ஆணையில் பேரணிக்கு எதிரானவர்கள் பதில் நடவடிக்கை எடுக்கக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், அவ்வாறு பதில் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளோர் யார் என்பதை அல்லது அவ்வாறான நபர்கள் பதில் நடவடிக்கைகளில் ஈடுபடுவது தடுக்கப்படுவதை உறுதி செய்ய பொலிஸார் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் எவை என்பதை குறித்த நீதிமன்ற ஆணையில் குறிப்பிட்டிருக்கவில்லை. எச்சரிக்கை மிகுந்த விதத்தில் குறித்த நிகழ்வு சட்டவிரோதமானது எனக் குறிப்பிட்டிருந்ததுடன் பேரணி தொடர்பான மூன்று கரிசனைகளை பொலிஸார் வெளியிட்டிருந்தனர்.
முதலாவது கரிசனையாக, குறித்த நிகழ்வு வாகன நெரிசலை ஏற்படுத்தக்கூடுமெனவும் மக்களின் இயல்பு வாழ்வைப் பாதித்து பொது அமைதிக்கு பங்கம் ஏற்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், நிகழ்வு ஞாயிற்றுக்கிழமையே இடம்பெற ஏற்பாடாகியிருந்தது என்ற யதார்த்தத்தைப் பொலிஸார் புறக்கணித்திருந்தனர். குறித்த நிகழ்வு பொது மக்களுக்கு எந்தவித அசௌகரியத்தையும் ஏற்படுத்தவில்லை. குடும்பங்கள் வீதியோரத்திலேயே நடந்து சென்றதுடன் வீதிகளைக் கடப்பதற்கு, உதவும் தன்மை கொண்ட போக்குவரத்துப் பொலிஸாரின் ஆதரவும் கிடைத்தது. எந்த வீதிகளும் மூடப்படவில்லை. வாகனங்கள், பாதசாரிகள், கடைகள், அலுவலகங்கள் அல்லது வீடுகள் உட்பட எவற்றுக்கும் எந்தவிதத் தடையும் ஏற்படுத்தப்படவில்லை. மட்டக்களப்பில் சில வாரங்களுக்கு முன்னர் அரசாங்கத்தின் சார்பாக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வெற்றிப் பேரணியில் குறித்த நிகழ்வை விட அதிக அசௌகரியங்கள் ஏற்படுத்தப்பட்டதை நான் கண்ணுற்றேன்.
போராட்டத்தில் சமூக இடைவெளியைப் பேணுவது சிரமமாக அமையுமென்பதால் அதிக மக்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகக் கூடும் என்பது பொலிஸார் கொண்டிருந்த இன்னொரு கரிசனையாக அமைந்திருந்தது. எனினும், ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊர்வலத்தில் சமூக இடைவெளியைப் பேணி சிறு குழுக்களாகவே நடந்து சென்றனர். சமூக இடைவெளி குறைவடைந்த சமயங்களில் பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை தடுக்க முற்பட்டனர். பௌதீக இடைவெளி தொடர்பான பொலிஸாரின் புதிய கரிசனை அசாதாரணமானதாக அமைந்திருந்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் பொழுது தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பாரிய அளவில் மக்களை நெருக்கமாக ஒன்று கூட்டி தேர்தல் பிரச்சாரங்களை நடத்திய வேளை பொலிஸார் நீதிமன்ற ஆணைகளைப் பெற்று அவற்றில் தலையிடுவதற்கு எந்தவித முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கவில்லை.
காணாமல் ஆக்கப்பட்டோரின் துயரங்களை LTTE (இலங்கை மற்றும் ஏனைய பல நாடுகளில் பயங்கரவாத இயக்கம் என தடைசெய்யப்பட்ட அமைப்பு) அமைப்பின் மீள் உருவாக்கத்துடன் இணைத்தவை என்று பொலிஸார் நீதிமன்ற ஆணையில் சுட்டிக்காட்டியதே மிகவும் அபத்தமான மற்றும் பயங்கரமான கரிசனையாகும். காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என அறிய முயற்சிக்கும், அத்துடன் இப்பாதகங்களை மேற்கொண்டோரை அவர்கள் மேற்கொண்ட குற்றங்களுக்கு சட்டரீதியாக பொறுப்பானவர்களாக, நிராகரிக்கப்பட வேண்டியவர்களாக மாற்றி தண்டனை பெற்றுக்கொடுக்க முயற்சிக்கும் குடும்பங்களை அவமானப்படுத்தி, அவர்களைப் பயங்கரவாதிகளாக அல்லது பயங்கரவாத ஆதரவாளர்களாக முத்திரை குத்தும் முயற்சியாகவே பொலிஸாரின் இக்கரிசனை நோக்கப்படவேண்டியுள்ளது.
கடந்த காலங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் செயற்பாட்டாளர்களை அவ்வாறு செயற்படுவது பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதற்கு ஒப்பானதாகும் எனக்கூறி மிரட்டும், பின்வாங்க வைக்கும் முயற்சிகள் அரச புலனாய்வு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டது. மட்டக்களப்பு எதிர்ப்பு ஊர்வலம் உள்ளடங்கலாக கடந்த பல வருடங்களாக காணாமல் ஆக்கப்பட்ட நபர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் நான் மேற்கொண்டு வரும் இடையீடுகளில், ஒருபோதும் அவர்கள் வன்முறை, ஆயுதப்போராட்டம் மற்றும் தனியான தேசமொன்றுக்கு ஆதரவு வழங்கியதை நான் செவியுற்றதில்லை.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையைக் கண்டறிவது, அவற்றை மேற்கொண்டவர்களை பொறுப்புக்கூற வைப்பது மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்குவது என்பன அரசாங்கத்தின் கடமைகளாகும். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் அக்குடும்பங்களுக்கு ஆதரவளிப்பவர்கள் பயங்கரவாதிகள் அல்லது பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பவர்கள் என அழைக்கப்படாமல் சுதந்திரமாக மற்றும் பாதுகாப்பாக உண்மை மற்றும் நீதியைத் தேடும் முயற்சிகளில் ஈடுபடுவதை உறுதி செய்வதும் அரசாங்கத்தின் பொறுப்பாக அமைகின்றது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் காண்பிக்கும் துணிவு மற்றும் உறுதி என்பவை விசேடமாக மட்டக்களப்பில் பொலிஸாரின் தடைகளுக்கு எதிராகக் காண்பிக்கப்பட்ட அடிபணியாமை மற்றும் எதிர்ப்பு என்பன ஊக்கமளிப்பனவாக அமைந்துள்ளது. காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம், அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள், ஊடகங்கள், வெளிநாட்டு அரசாங்கங்கள், ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள் மற்றும் அமைப்புகள், நல்லெண்ணம் கொண்ட பொதுமக்கள் போன்றோர் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் மற்றும் போராட்டங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்.
ருக்கி பெர்னாண்டோ
Disappearances in Sri Lanka: Struggles by Families and Reprisals என்ற தலைப்பில் 02.09.2020 அன்று கிறவுண்விவ்ஸ் தளத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.
1. https://undocs.org/A/RES/65/209
2. https://www.facebook.com/ompsrilanka
3. https://www.tamilguardian.com/content/diplomats-sri-lanka-tweet-day-disappeared
4. https://www.facebook.com/paangshu
5. https://twitter.com/vikalpavoices/status/1300154746469257216
6. https://twitter.com/vikalpavoices/status/1299953380782034944