பட மூலம், The Economic Times

கொரோனா வைரஸ் பாதிப்பும் மற்றும் வளைகுடா பொருளாதார பின்னடைவும்

கொரோனா வைரஸின் தாக்கம் உலகையே பயங்கரமாக பாதித்துக்கொண்டிருக்கின்ற வேளையில் துரதிஷ்டவசமாக ஒவ்வொரு நாடுகள் தடுக்க முடியாத உயிரிழப்புக்களையும் பாரிய பொருளாதார நெருக்கடிகளையும் சந்தித்துவருகின்றன. கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும்வரை உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்துச் செல்லலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்து வருகின்றது. மத்திய கிழக்கு நாடுகளைப் பொறுத்தவரையில் கொரோனா வைரஸின் தாக்கத்தினால் கிட்டத்தட்ட 1.8 மில்லியன் மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். வளைகுடா நாடுகளில் தற்போதைய புள்ளிவிபரத்தின்படி கொரோனா வைரஸின் தாக்கத்தினால் சவூதி அரேபியாவில் 3956, ஓமானில் 689, குவைத்தில் 535, ஐக்கிய அரபு இராஜியத்தில் 387, பஹ்ரைன் மற்றும் கத்தார் நாடுகளில் கிட்டத்தட்ட 190 மரணங்கள் பதிவாகியுள்ளன. இவ்வெண்ணிக்கை அதிகரிக்கலாம் என நம்பப்படுகின்றது.

எண்ணெய் வளங்களின் உற்பத்தியைக் கொண்டு பொருளாதாரத்தில் துரித வளர்ச்சி கண்டுவந்த இவ் வளைகுடா நாடுகள், தற்போது நிலவிவரும் கொரோனா வைரஸின் தாக்கத்தினாலும் உலக எண்ணெய் விலையின் வீழ்ச்சியினாலும் மேலும் பொருளாதார சவால்களையும் நெருக்கடிகளையும் பாரிய அளவில் எதிர்நோக்கிவருகின்றன. அமெரிக்காவில் உள்ள சர்வதேச நிதி நிறுவனமானது (Institute of International Finance -IIF ), நிலவிவரும் நெருக்கடிகளின் காரணமாக வளைகுடா நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product) இவ்வருட இறுதிக்குள் 4.4% குறைவடையப்போவதாக சுட்டிக்காட்டியுள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கத்தினாலும் நிலவிவரும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர் தங்கள் வியாபார செயற்பாடுகளில் இருந்து பின்வாங்குவதும் பணியாளர்களை பணிநீக்கம் செய்தல், தன்னார்வ ஓய்வு மற்றும் அடிப்படை சம்பள அளவை குறைத்தல் போன்ற விடயங்கள் வளைகுடா நாடுகளில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவருகிறது. வளைகுடா பொருளாதாரத்தில் அதிக ஆதிக்கம் செலுத்தும் உல்லாசத்துறை, சுகாதாரத்துறை, போக்குவரத்துத்துறை, கல்வித்துறை மற்றும் கட்டுமானத்துறை போன்ற துறைகளில் சரிவு ஏற்பட்டுள்ள காரணங்களால், தற்போது நிலவிவரும் ஸ்தீரமற்ற தன்மையை கவனத்தில் கொண்டு எதிர்வரும் பொருளாதர கொள்கையை சீர்செய்வதற்கான அவசியத்தையும் தேவையையும் இந்நாடுகள் முன்னுரிமைப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அறிமுகம் செய்யப்பட்ட பெறுமதி சேர் வரியின் (Value Added Tax- VAT) மூலம் கிடைக்கப்பெற்ற வருமானத்தினால் பொருளாதாரத்துக்கு குறிப்பிட்ட வகையில் நன்மையினை இது ஏற்படுத்தியுள்ளது என வளைகுடா நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கள் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளன. இது இவ்வாறு இருக்கும் சந்தர்ப்பதில், கொரோனா வைரஸ் தாக்கத்தினால் குறிப்பிட்ட காலமாக தொடர்ச்சியாக அமுலில் நிலவிவந்த ஊரடங்கு சட்டங்கள் மற்றும் கடின அமுலாக்கங்கள் தற்போது தளர்க்கப்பட்டு வருகின்றமை, மீண்டும் உல்லாசத்துறை ஆரம்பிக்கப்பட்டமை போன்ற விடயங்கள் பொருளாதாரத்தை விஸ்திரப்படுத்துவதற்கான ஒரு சிறிய நகர்வாக கருதப்படுகின்றது. எனவே, இந்நாடுகள் தங்கள் பொருளாதார செயற்பாட்டை பன்முகப்படுத்தும் தங்கள் கொள்கைகளை வலுப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

புலம்பெயர் தொழிலாளர்களும் கொரோனா வைரஸின் தாக்கமும்

வளைகுடா நாடுகளில் காணப்படும் சனத்தொகையில் 35 மில்லியன் மக்கள் புலம்பெயர் தொழிலாளர்கள் ஆவர். கொரோனா வைரஸின் தாக்கத்தினால் பல்வேறு முறையில் பாதிப்படைந்துள்ள புலம்பெயர் தொழிலாளர்களின் அதிகமானோர் துரதிஷ்டவசமாக தங்கள் நாடுகளுக்கு வெளியேறவேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகியுள்ளனர். மிக முக்கியமாக, சர்வதேச விமானப் போக்குவரத்துத் துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவு காரணமாக, வளைகுடா நாடுகளில் பாதிப்புக்குள்ளாகியுள்ள தொழிலாளர்கள், கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் மாணவர்களைத் தங்கள் தாய்நாடுகளுக்குக் கொண்டு செல்ல விமான அமைப்புகளுக்கு நிபந்தனை அடிப்படையில் அனுமதியை வழங்கியுள்ளதால் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் நாடுகளில் காணப்படுகின்ற அரசியல் தலையீடுகள் மற்றும் தூதரகங்களில் காணப்படும் பக்கச்சார்பு நிலைமை போன்ற காரணங்களால் இப்புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது தாய்நாட்டிற்கு போய் சேரும்வரை பல இன்னல்களுக்கு முகம்கொடுத்துவருகின்றனர்.

தூதரகங்களில் மற்றும் வெளிநாட்டு விவகார அமைச்சில் பதிவுசெய்துகொண்டவர்கள் தங்களுக்கான அனுமதி தாமதமாகும் சந்தர்ப்பத்தில் பல மாதகால வரை காத்துக்கிடக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகியுள்ளனர். இதையும் விட மிக முக்கியமாக ஒருவழி விமான பயணசீட்டு மற்றும் தனிமைப்படுத்தல் செலவு மிக அதிகமாக காணப்படுவதினால் இச்செலவுகளை ஏற்க முடியாத சந்தர்ப்பத்தில் தொழில் இழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் விசா முடிவடைந்த நிலையிலும் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பமுடியாமல் சிக்கித்தவித்து வருகின்றனர்.

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களும் கொரோனா வைரஸின் தாக்கமும்

ஒரு மில்லியனுக்கு அதிகமான இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸின் தாக்கத்தினால் பல்வேறு விதங்களில் பாதிப்படைந்துள்ள இலங்கை புலப்பெயர் தொழிலாளர்கள், எதிர்பாராத பல இன்னல்களுக்கு முகம்கொடுத்து வருவதுடன், தொழில் நீக்கம் செய்யப்பட்டவர்கள் இலங்கைக்கு செல்லவேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகியுள்ளனர். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தகவலின் படி, கிட்டத்தட்ட 2000 இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் கொரோனா வைரஸின் தாக்கத்தினால் பாதிப்படைந்துள்ளதுடன், இதுவரை 52 பேர் வரை மரணித்துள்ளதாக அறிவித்துள்ளது.

வளைகுடா நாடுகளுக்கு தொழில்புரிய செல்லும் இலங்கையர்கள் கட்டாயமாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் காப்புறுதி பதிவுசெய்து கொள்வதன் அவசியத்தை பலவிதங்களில் உணர்த்தியுள்ள இலங்கை அரசாங்கமானது, இன்னமும் சுற்றுலா விசாவில் தொழில் வாய்ப்பு தேடிச் செல்லும் இலங்கையர்கள் அதிகமாகவே காணப்படுகின்றனர். கொரோனா வைரஸின் தாக்கத்தினால் பாதிப்படைந்தவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளை வெளிநாட்டில் உள்ள இலங்கை நலன்புரி அமைப்புகளுடன் இணைந்து தூதரகங்கள் பல்வேறு விதத்தில் பூர்த்திசெய்துகொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும், இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகின்ற அரசியல் அசமந்தப்போக்குத்தனம், தலையீடுகள் மற்றும் தூதரகங்களில் காணப்படும் பக்கச்சார்பு போன்ற விடயங்களினால் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் காப்புறுதி பதிவு செய்தவர்கள் உட்பட நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்கள் அனைவரும் தாய்நாடு திரும்ப முடியாமல் பல இன்னல்களுக்கு முகம்கொடுத்துவருகின்றனர். உதாரணங்களாக, வளைகுடா நாடுகளிலிருந்து தாய்நாட்டிற்குத் திரும்ப முடியாமல் இருக்கும் இலங்கையர்கள், அனுமதி தாமதம் காரணமாக தூதரக பிரதான நுழைவாசல்களை முற்றுகை இடுவதும், தூதக ஊழியர்களுக்கு சவால் விடுவதும் மற்றும் அருகாமையில் உள்ள திறந்த வெளியரங்குகளில் நித்திரை கொள்வது போன்ற சம்பவங்கள் அண்மைகாலங்களாக சமூக வலைத்தளங்களில் பிரசுரிக்கப்பட்ட வருகின்றமை அவர்களில் ஆதரவற்ற நிலைமையை எடுத்துக்காட்டுகின்றது.

மேலே குறிப்பிட்டதுபோல், தொழில்களை இழந்து பரிதவிக்கும் இலங்கையர்கள் விமான பயணசீட்டு மற்றும் தனிமைப்படுத்தல் செலவுகளை ஏற்றுக்கொள்வதற்காக தாய்நாட்டில் உள்ள தங்கள் உடைமைகளை விற்கவேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதைத்தவிர விசா முடிவடைந்த நிலையிலும் தங்கள் தாய் நாட்டுக்குத் திரும்பமுடியாமல் சில இலங்கையர்கள் சிக்கித்தவித்து வருகின்றனர்.

இலங்கை அரசாங்கமானது, கொரோனா வைரஸின் தாக்கத்தைக் குறைப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக மற்றைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் அதன் பாதிப்பு மிக குறைவாகவே உள்ளது. அண்மையில் முடிவடைந்த பொதுத் தேர்தலில் இறுதிக்கட்ட பிரச்சாரங்கள் தாய்நாடு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களை இலக்குவைத்து முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது மிகவும் வருத்தத்துக்குரிய விடயமாகும். குறிப்பாக, அந்நிய செலவாணியை நாட்டிற்கு அதிகமாக ஈட்டித்தருவதினால் கடல் கடந்த வீரர்கள் என்று வர்ணிக்கப்பட்ட இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள், தனிமைப்படுத்தலின் பின் உள்ளூரில் பொருளாதார செயற்பாட்டினை முன்னெடுத்துச் செல்வதற்கு ஒரு நிலையான வேலைத்திட்டம் காணப்படாமை நாடு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

காப்புறுதி பதிவுசெய்த இலங்கை தொழிலாளர்கள்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் காப்புறுதி செய்துகொள்ளும் இலங்கையர்களுக்கு பல நன்மைகள் இருக்கும் சந்தர்ப்பத்தில், தாய்நாட்டிற்குத் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களின் தனிமைப்படுத்தல் காலத்தின் பின் அவர்களுக்கான காப்புறுதி நன்மைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் முன்னெடுத்துள்ளதா என்பது மிகப்பெரிய கேள்வியாகக் காணப்படுகின்றது. தாய்நாட்டிற்குத் திரும்பும் அவசரத்தில் உள்ள தொழிலாளர்கள் காப்புறுதியினால் கிடைக்கப்பெறும் நன்மைகளைப் பெற்றுக்கொள்ள தவறவிடுகின்றனர். இதற்கு இலங்கை புலப்பெயர் தொழிலாளர்களுக்கான கொள்கையில் காணப்படும் இடைவெளிகள் மிகப்பெரிய காரணமாக அமைகின்றது.

புலம்பெயர் தொழிலாளர்களின் கொள்கை மேம்படுத்தலின் தேவைப்பாடு

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான கொள்கை இன்னமும் சட்டமாக்குவது தொடர்பாக பல்வேறு தரப்பினர் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள், குறிப்பாக தேசிய மற்றும் சர்வதேச பிரச்சாரங்கள், சிவில் சமூக முன்னேற்ற செயற்பாடுகள் வலிமை குறைந்து காணப்படுவதினால் வெளிநாடுகளில் பணிபுரிந்து சவால்களுடன் நாடு திரும்பும் இலங்கையர்களுக்கான ஒரு நிரந்தர நிவாரண நிகழ்ச்சித் திட்டம் காணப்படாதவிடத்து மற்றும் திறமையுடன் தொழில் அனுபவத்தை பெற்றுக்கொண்டு நாடு திரும்பியவர்களுக்கு தேசிய தொழில் சந்தையில் மறுஒருங்கிணைப்புச் செய்வதற்கான முன்னேற்பாடு திட்டம் சாதகமாகக் காணப்படாத சந்தர்ப்பத்தில் திறமை வாய்ந்த தொழில்வர்க்கத்தினரை இலங்கை அரசாங்கம் இழக்கவேண்டிய நிலைமை தொடரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

இத்தகைய சவால்களை முறியடிக்கும் திட்டங்களை இலங்கை அரசாங்கம் கொண்டுவர தவறும் பட்சத்தில் அந்நிய செலாவணியை மட்டுமன்றி, உலகச்சந்தையில் இலங்கை தொழில் வர்க்கத்தினருக்கான தொழில் வாய்ப்புக்களை இழக்கக்கூடிய அபாயத்தை எதிர்நோக்க வேண்டிவரும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு தொடர்பான செயற்பாடுகள் தொழில் அமைச்சிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தொழில் அமைச்சர் தனது முதல் நாடாளுமன்ற அமர்வில் கிட்டத்தட்ட 16 நாடுகளில் உள்ள இலங்கை தூதரகத்தில் நிறுவப்பட்டுள்ள தொழில் பிரிவுகளை நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக குறிப்பிட்டிருந்து வெறுமனே அரசாங்கச் செலவுகளைக் குறைப்பதற்குக் காரணமாக அமைந்தாலும், புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகளை மேலும் பாதிப்படையச் செய்யும் ஒரு காரணியாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

ஆகவே, தற்போது நிலவி வரும் வைரஸ் தாக்கத்தை மற்றும் பொருளாதார மாற்றங்ளுக்கு தற்காலிக தீர்வை கவனத்தில் கொள்ளாது புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக கொள்கைகளை மற்றும் சட்டங்களை மறுபரிசீலனை செய்து இலங்கை தொழிலாளர் வர்க்கத்தினரை உலகசந்தையில் ஒருங்கிணைப்பது புலம்பெயர் தொழிலாளர்களுடைய சர்வதேச உடன்படிக்கை மற்றும் தேசிய கௌரவத் தொழில் நியமங்களுக்கு பொருந்தும்படி செய்வதை உறுதிபடுத்தும்.

பிரான்சிஸ் சொலமன்ரைன்
பயிற்சி மற்றும் அபிவிருத்திக்கான மத்திய கிழக்கு நிலையம் – துபாய்