பட மூலம், The Atlantic
ஜோர்ஜ் ஃபிளொயிட் பிரபலமானவர் அல்ல. அவர் அமெரிக்காவின் தலைநகரில் கொல்லப்படவில்லை. மாறாக, அவ்வளவு அறியப்படாத நகரொன்றின் மூலையில் இறுதிமூச்சை விட்டார்.
இருந்தபோதிலும், அவரது மரணம் அமெரிக்கா முழுவதும் பரவியதொரு இயக்கத்திற்கு வித்திட்டுள்ளது. இந்த இயக்கம் பிரேசிலில் இருந்து இந்தோனேஷியா வரையிலும், பிரான்ஸில் இருந்து அவுஸ்திரேலியா வரையிலும் ஆர்ப்பாட்டங்களைத் தூண்டி விட்டிருக்கிறது. இது சமூக மாற்றத்திற்காக சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளும் வாய்ப்பைத் தந்திருக்கிறது, தவற விடப்படக்கூடாத வாய்ப்பு.
இன்று அமெரிக்காவின் மீது கவனம் குவிக்கிறோம். பெருநகரங்களில் ஆர்ப்பாட்டம். அது தவிர கரையோரங்களில் இருந்து தொலைவில் இருக்கின்ற சிறு நகரங்களிலும் மாற்றத்தைக் கோரும் வலுவான குரல்கள். அந்நாட்டின் கறைபடிந்த வரலாற்றில் மிகவும் பரந்த அளவிலான எதிர்ப்பியக்கமாக இதைச் சொல்லலாம். ஆங்காங்கே அடக்குமுறைகள். எனினும், பொதுவாக நோக்கினால், இதனை அமைதியான ஆர்ப்பாட்டமாகக் கருத முடியும். அமெரிக்காவின் சகல இனத்தவர்களும் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
வந்தேறு குடிகளால் சமூகம் அராஜகமாக மாறுகிறது என்று இனவாதம் பேசி தேர்தல் வியூகங்களை வகுக்க முனையும் டொனல்ட் ட்ரம்ப் போன்றவர்களையும் சவாலுக்கு உட்படுத்தியிருக்கிறது.
ஆப்பிரிக்க வம்சாவளி அமெரிக்கர்கள் மீது பொலிஸார் கட்டவிழ்த்து விட்ட வன்முறைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டம், இனவாதத்தின் சகல வடிவங்களையும் பரீட்சித்துப் பார்ப்பதற்குரிய வாய்ப்பை வழங்கியுள்ளது.
அமெரிக்காவில் வெளிப்படையாகத் தெரியும் மாற்றங்கள். சமூகத்தில் கட்டமைக்கப்பட்ட நிறவெறியையும், பொலிஸாரின் அடாவடித்தனத்தையும் இல்லாதொழிக்க வேண்டும் என்ற தெளிவான இலக்குகள். அவற்றை நோக்கி வழிநடத்தப்படும் போராட்டங்கள் பலாபலன்களைத் தந்திருக்கின்றன.
மறுபுறத்தில், சமூக ஊடகங்கள் மூலம் ஒட்டுமொத்த உலகமும் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறது. பூகோள ரீதியிலும் வெளிப்படையாகக் கணிக்கக்கூடிய மாற்றங்கள். அவை உலகைப் புரட்டிப் போட்டு சமூக சமநீதியை ஏற்படுத்தி இருக்கின்றனவா என்று கேட்டால், அதற்கு பதில் சொல்வது கடினம்.
எனினும், தாம் இனரீதியாக புறக்கணிக்கப்படுவதையும், தமக்குச் சலுகைகள் மறுக்கப்படுவதையும் உரத்துச் சொல்ல ஒடுக்கப்பட்ட தரப்புக்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மறுபுறத்தில், ஒடுக்கிய தரப்பை இனத்துவேசத்திற்கு பொறுப்புக் கூற வைத்து, நிலையான மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் சமூக ஏற்றத்தாழ்வுகள் பற்றிய சிக்கலான, கசப்பான சம்பாஷணைகளை ஆரம்பிக்கக்கூடிய சாத்தியமும் உருவாகியுள்ளது.
இந்த மாற்றம் நிகழ்ந்த விதத்தையும், அதன் தாக்கத்தையும் ஆராயலாம்.
மே மாதம் 25ஆம் திகதி ஜோர்ஜ் ஃபிளொயிட் கொல்லப்பட்ட மறுநாள், மின்னபொலிஸ் நகரில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. பொலிஸார் படைப்பலத்தைப் பிரயோகித்து அடக்க முனைந்தார்கள். கண்ணீர்ப் புகையும், ரப்பர் ரவைகளும் பயன்படுத்தப்பட்டன.
சில மணித்தியாலங்களுக்குள் லொஸ் எஞ்சல்ஸ் அடங்கலாக பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. சமீபகால வரலாற்றில், பொலிஸாரின் கைகளில் சிக்கி மரணத்தைத் தழுவிய கறுப்பின-அமெரிக்கர்களையும் நினைவுகூர்ந்து மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடியபோது, அதன் ஆர்ப்பாட்டத்தின் வீரியம் வெளிப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவின் பல நகரங்களில் அடித்தள மட்டத்தில் இனத்துவேஷத்தைக் கட்டுப்படுத்த பல சட்டதிட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
மினபொலிஸ் நகரில், பொலிஸார் Choke-hold என்ற முறையில் எதிராளியை இறுக்கிப் பிடிப்பது தடை செய்யப்பட்டது. இது ஜூடோ விளையாட்டில் பயன்படுத்தப்படும் உத்தியாகும். ஏதிராளியின் கழுத்தின் ஊடாக இரத்தமும், மூச்சுவிடும் காற்றும் பாய்ந்தோடுவதை தடுக்கும் வகையில் உடலை இறுக்கிப் பிடிப்பது. இத்தகைய உடும்புப் பிடியின் மூலம் அமெரிக்கப் பொலிஸார் எமலோகத்திற்கு அனுப்பிய கறுப்பினத்தவர்களின் பட்டியலில் ஜோர்ஜ் ஃபிளொயிட்டைத் தவிர வேறு பலரும் இருக்கிறார்கள்.
மின்னபொலிஸ் நகரில் பொலிஸாரின் அடாவடித்தனங்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கே ஒப்படைக்கும் சட்டமும் நிறைவேற்றப்பட்டது. சக உத்தியோகத்தர் சட்டத்திற்குப் புறம்பான விதத்தில் பலத்தைப் பிரயோகிக்கும் பட்சத்தில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் மௌனம் காக்க முடியாது. உடனடியாக தலையீடு செய்து, மேலதிகாரிகளுக்கும் அறிவிக்க வேண்டும்.
நியூயோர்க்கில், 75 வயதுடைய ஆர்ப்பாட்டக்காரரை கீழே விழுத்தி, இழுத்துச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இரண்டு பேர் இடைநிறுத்தப்பட்டதையும் குறிப்பிட வேண்டும். நிவ்-ஜேர்சியில் பொலிஸார் படைப்பலத்தைப் பிரயோகிப்பது தொடர்பான வழிகாட்டல் கோவைகள் திருத்தப்படுகின்றன. மேரிலாந்திலும் பொலிஸ் துறை சார்ந்த சீர்திருத்தங்களை அறிமுகம் செய்து, பொறுப்புக் கூறுதலுக்கு வழிவகுக்கும் ஏற்பாடுகள் அமுலாகின்றன.
கடந்த ஒன்பதாம் திகதி அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சியின் அங்கத்தவர்கள் பொலிஸ் படையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வரும் நோக்கத்திலான பிரேரணையை முன்மொழிந்துள்ளார்கள். இந்தப் பிரேரணையில், தவறாக நடந்து கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது, Choke-hold இரும்புப் பிடியை முற்றுமுழுதாக தடை செய்வது, இனவாதத்தைக் கையாளுவது போன்ற விடயங்கள் உள்ளடங்கியிருக்கின்றன.
அமெரிக்காவின் பொலிஸ் வரலாற்றை ஆராய்ந்தால், வன்முறையைப் பிரயோகித்து கறுப்பினத்தவர்களைக் கொன்ற வெள்ளைக்கார பொலிஸ் உத்தியோகத்தர்கள் தகுந்த ஆதாரங்கள் இருந்தும் நிரபராதிகளாக விடுதலை செய்யப்பட்ட சந்தர்ப்பங்கள் அனேகம். எனவே, ஆட்சி நிர்வாகக் கட்டமைப்பிற்குள் ஆழமாக கட்டமைக்கப்பட்டுள்ள இனவாதத்தைக் களைய முதற்தடவையாக தேசிய மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதுவொரு சிறந்த மாற்றத்திற்கான ஆரம்பம்.
பிரிட்டனில் நிகழ்ந்தவற்றையும் கூற வேண்டும். கண்ணீர்ப்புகை, ரப்பர் ரவைகள், கலகத்தை அடக்கும் கவசங்கள் போன்ற உற்பத்திகளை அமெரிக்காவிற்கு விற்பனை செய்ய வேண்டாம் கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட உற்பத்திகள் தான் அமெரிக்காவில் பயன்படுத்தப்படுகின்றனவா என்பதை விளக்குமாறு அரசியல்வாதிகளிடம் கேள்வி எழுப்பப்படுகிறது.
பிரிட்டனில் நிகழ்ந்த நிறவெறிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் சிலைகள் தகர்க்கப்பட்டமை முக்கியமானது. கறுப்பினத்தவர்களை அடிமைகளை அழைத்து வந்து வெள்ளைக்காரர்களுக்கு விற்றதாகக் கூறப்படும் வணிகர்களின் சிலைகள் வீழ்த்தப்பட்டன. பிரிஸ்டல் நகரில் எட்வர்ட் கொல்ஸ்ட்டனின் சிலையும் லண்டனில் ரொபர்ட் மில்லிகனின் சிலையும் அப்புறப்படுத்தப்பட்டன. கிளஸ்கோவில் சேர் ரொபர்ட் பீல் என்பவரின் சிலை தகர்க்கப்பட்டது.
சிலை விவகாரத்தைக் கையாள்வதற்காக லண்டன் மேயர் சாதிக் கான் பன்முகத்தன்மை ஆணைக்குழுவை ஸ்தாபித்தார். ஆபிரிக்க கறுப்பினத்தவர்களை அடிமைகளாக அழைத்து வந்த அடிமை வர்த்தகத்துடன் தொடர்புடைய நபர்களில் எவரது சிலையை அகற்ற வேண்டும், எவரது சிலையை வைத்திருக்க வேண்டும் என ஆலோசனை வழங்குமாறு அவர் ஆணைக்குழுவைக் கேட்டுள்ளார்.
அடிமை வணிகத்திற்குத் துணைபோன பிரமுகர்களை சிலை வைத்து கொண்டாடி, பிரிட்டனின் பன்முகத்தன்மையை சிதைக்காமல், இத்தகைய சிலைகள் தகர்க்கப்படும் விதத்தை சிலையாக வடிக்கலாமே என்று கலைஞர் ஒருவர் யோசனை கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பாவின் ஏனைய நாடுகளிலும் நிறவெறிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளதுடன், மக்கள் பல வழிகளிலும் தமது உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
நெதர்லாந்து தலைநகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் 14,000 பேர் வரை கூடியிருந்தார்கள். இத்தாலியின் தலைநகரில் கூடிய மக்கள், அமெரிக்காவில் ஜோர்ஜ் ஃபிளொயிட்டுக்கு நிகழந்த கதி இங்கே வேண்டாம் என கோஷம் எழுப்பினார்கள். அயர்லாந்தில் அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம். போலந்தில் அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் மலர் வளையங்கள் வைக்கப்பட்டன.
ஒவ்வொரு நாடுகளில் நிகழ்ந்தவற்ற ஆர்ப்பாட்டங்களைத் தாண்டியும் நோக்க வேண்டும். உலகின் பல நாடுகளைச் சேர்ந்த கம்பனிகள் தாம் தவறுவிட்டதை உணர்ந்துள்ளன. இனரீதியாக பாரபட்சம் காட்டியமைக்காக மன்னிப்புக் கோரி அறிக்கை விடும் கலாசாரம் எடுபடாது என்பதை உணர்ந்திருக்கின்றன.
கடந்த காலத்தில் தவறுவிட்ட கம்பனியொன்றை எடுத்துக் கொள்வோம். அந்தக் கம்பனியிடம் அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள் என்று நேரடியாகக் கேள்வி கேட்கும் நிலை உருவாகியுள்ளது. நிறவெறியால் பாதிக்கப்பட்டவர்கள் மாத்திரமன்றி, இணையம் என்ற மாபெரும் சாதனம் உருவாக்கித் தந்த சமூக ஊடகங்கள் மூலம் உலகெங்கிலும் உள்ளவர்கள் கேள்வி கேட்கிறார்கள்.
புகழ்பெற்ற ரெட்டிட் (Reddit) இணையத்தளத்தை எடுத்துக் கொள்ளலாம். இதன் ஸ்தாபகத் தலைவர்களுள் ஒருவரான அலெக்ஸிஸ் ஒஹானியன் பதவி விலகி இருக்கிறார். இனத்துவேசம் தலைவிரித்தாடுகையில், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கறுப்பின மகள் கேட்டால், அதற்கு பதில் சொல்ல வேண்டும் என்று கூறி, தமது செயலை நியாயப்படுத்தியிருக்கிறார். தாம் பதவி விலகியதால் ஏற்படும் வெற்றிடத்திற்கு கறுப்பினத்தவரை நியமிக்குமாறும் கோரியிருக்கிறார்.
ஓஹானியனின் நேர்மைக்கு பதில் கிடைத்திருக்கிறது. கடந்த காலத்தில் இனவாதப் போக்குடன் நடந்து கொண்டவையும், வெள்ளையர்களை மாத்திரமே வேலைக்கு அமர்த்தியவையுமான கம்பனிகள் சமூக வலைதளங்களில் கேள்விக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. நிறவெறிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தி அறிக்கை விட்டால், அறிக்கையில் கூறியவாறு நடந்து கொள்வீர்களா என்ற சவால் விடுக்கப்படுகிறது.
அப்பிள், கூகுள் ஆகிய நிறுவனங்கள் மேற்கொண்டுள்ள மாற்றத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். இவை தயாரிக்கும் திறன்பேசிகளில் Smart Voice Assistant என்ற வசதி உண்டு. இந்த வசதியைப் பயன்படுத்தி ஏதேனும் கேள்வி கேட்கலாம். விடை கிடைக்கும். அப்பிள் திறன்பேசியில், காஸாவில் எத்தனை மணி என்று கேட்டால் அதற்கு பதில் கிடைக்காது.
எனினும், இன்று கறுப்பின மக்களின் வாழ்க்கை முக்கியமானதா (Do black lives matter?) என்று கேள்வி கேட்டால் பதில் கிடைக்கிறது. ஒரு நாட்டில் சகலருக்கும் அனுபவிக்கின்ற சுதந்திரங்கள் கறுப்பின மக்களுக்கும் உரித்தானவை. அவர்கள் எதிர்கொண்ட அநீதிகளை அங்கீகரிப்பது, தவறுகளைத் திருத்துவதற்கான வழி என திறன்பேசியில் உள்ள Smart Voice Assistant பதில் அளிக்கிறது.
இன்று கொவிட்-19 தொற்றுநோய் ஏற்படுத்திய அரசியல், சமூக, பொருளாதார, கலாசார மாற்றங்களுக்குள், “எனக்கு மூச்சுவிட முடியவில்லை” என்ற வாசகத்தின் தீவிரத்தை உணரக் கூடியதாக இருக்கிறது. இது கறுப்பின சமூகத்தின் வலியை உலகிற்கு உணர்த்தியதால், Black Lives Matter என்ற போராட்டம் அமெரிக்க மண்ணில் இந்தளவு வீரியம் கொண்டதாக பரிணமித்துள்ளது.
மூச்சு விட முடியாமல் திணறிக் கொண்டு இருப்பவர்கள் கறுப்பினத்தவர்கள் மாத்திரமல்ல. இனம், மதம், குலம், கோத்திரம் என்ற வரிசையில் பல்வகை பேதங்களால் பிளவுபட்ட சமூகத்தில் வலியவர்கள் அடக்கி வைத்திருப்பதால் எளியவர்கள் திணறிக் கொண்டிருப்பதைக் காண்கிறோம்.
இன்று அமெரிக்காவில் விதைக்கப்பட்ட போராட்டத்தின் வீரியம், கடந்த காலங்களைப் போன்று ஆட்சியாளர்களின் அசமந்தப் போக்குகளாலும், பிரித்தாளும் தந்திரத்தாலும், அடக்குமுறைகளாலும் சிதைந்து போவதை அனுமதிக்கக்கூடாது. இந்த வீரியத்தை அடுத்த சமூகத்திற்குள் ஊடுகடத்த வேண்டிய பொறிமுறையொன்று அவசியம்.
இந்தப் பொறிமுறை அடுத்தவர்களின் துன்பத்தை அறியக்கூடிய உணர்வை (Empathy) அடிப்படையாகக் கொண்டிருக்கலாம். இந்த உணர்ச்சி இல்லாதிருப்பதே இன்று உலகை அழிவின் பாதையில் இட்டுச் செல்கின்றது.
இக்கட்டானதொரு சமூக சூழலில் மூச்சு விட முடியாததன் வலியை வெள்ளைக்காரர்கள் உணர்ந்ததால், ஆண்டாண்டு காலமாக பொலிஸ் அடாவடித்தனங்கள் மூலம் கறுப்பின மக்கள் அனுபவித்த துயரங்கள் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன. அவை மாற்றத்தைத் தொடக்கி வைத்துள்ளன.
இதைப் போன்று, ஆதிக்க சக்திகளின் அடக்குமுறையில் அடிப்படை சுதந்திரத்தை இழந்து தவிக்கும் எத்தனையோ மனிதர்கள் உரிமைகளையும் சுதந்திரத்தையும் இழந்து அல்லற்படுகிறார்கள். அவர்களது சுதந்திரம் அடக்கியொடுக்கப்படுகிறது. அடுத்தவனின் துயரம் பேசி, தன் குரலை உலகம் முழுவதிலும் ஒருமித்த குரலாக ஒலிக்கச் செய்ய முனையும் மனிதன், ஜனநாயகத்தின் பெயரால் அடித்துத் துன்புறுத்தப்படுகிறான்.
இந்த மனிதனின் வலியை உலகம் முழுவதும் உணர வேண்டுமானால், Black Lives Matter என்ற போராட்டம் ஒடுக்கப்பட்ட சகலரையும் உள்ளடக்கும் வகையில் சர்வதேச வடிவம் பெற வேண்டும். அதற்கான பொறிமுறையே சமகாலத்தின் சவால்.
சதீஸ் கிருஸ்ணப்பிள்ளை | Sadeesh Krishnapillai