பட மூலம், பேஸ்புக்

ரம்ஸி ராஸீக் கண்டி கட்டுகஸ்தோட்டை பொல்கஸ்தெனியவில் உள்ள அவரது வீட்டில் வைத்து மூன்று அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார். மறுநாள் அவர் கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டவேளை சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையையும் (ICCPR), சைபர் சட்டங்களையும் மீறினார் என சி.ஐ.டியினர் குற்றச்சாட்டுகளை சுமத்தினார்கள். ஒரு மாத காலத்தின் பின்னரும் அவர் தொடர்ந்தும் தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளார்.

பேஸ்புக் பதிவொன்றே அவரது கைதிற்கு காரணமாக அமைந்தது, அந்தப் பதிவு அவரை சுற்றி ஏற்பட்டுள்ள நீதி மற்றும் ஜனநாயகத்தின் வீழ்ச்சியை எதிர்கொள்வதற்காக கொள்கை ரீதியிலான ஜிகாத் குறித்து குறிப்பிட்டிருந்தது. ஜிகாத் என்ற சொல்லிற்குப் போராட்டம் என்பதற்கப்பால் வேறு அர்த்தத்தை யாராவது வழங்காத பட்சத்தில் அந்தப் பதிவு மிகவும் சாதாரணமானது. அவர் போராட்டம் என்ற அர்த்தத்திலேயே அதனைப் பதிவு செய்திருந்தார். எனினும், அந்தப் பதிவின் காரணமாக அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிராக வன்முறைக்கு அழைப்பு விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் ஏப்ரல் மூன்றாம் திகதி முதல் சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவிடாமல் அமைதியாகபோவதாக ஏப்ரல் இரண்டாம் திகதி தெரிவித்திருந்தார்.

ஏப்ரல் 9ஆம் திகதி ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்தவேளை ரம்ஸி இணையம் மூலம் தனக்கு எதிரான அச்சுறுத்தல் குறித்து காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்திருந்தார். ஆனால், அன்றைய தினம் மதியமே அவர் சி.ஐ.டியினரால் கைதுசெய்யப்பட்டார். அவர் விடுதலை செய்யப்படுவார் என குடும்பத்தவர்களுக்கு தெரிவித்து விட்டு சி.ஐ.டியினர் அவரைக் கொழும்புக்கு அழைத்துச் சென்றனர். ஒரு நிமிட தொலைபேசி அழைப்பிற்கு அப்பால் குடும்பத்தினர் அவருடன் தொடர்புகொள்ள முடியவில்லை.

ரம்ஸியின் உடல்நிலை மோசமடைவதை அவதானித்ததும் அவரை சிறைச்சாலை மருத்துவமனையிலோ  அல்லது தேசிய மருத்துவனையிலோ அனுமதிக்குமாறு கொழும்பு நீதவான் உத்தரவிட்டார். ஆனால், அவர் நீர்கொழும்பில் உள்ள ஒரு தனிமைப்படுத்தல் பகுதியாக கருதப்படுகின்ற பல்லென்சேன சிறையில் அடைக்கப்பட்டார்​. 20 இற்கு 40 அடி சிறைக்கூண்டில் மெத்தை கூட இல்லாத நிலையில் 85 பேருடன் அடைக்கப்பட்டார். படுப்பதற்கு கட்டில் இல்லாததும் உரிய கழிவறையில்லாததும் அவருக்கு கடும் நெருக்கடியை உருவாக்கியிருக்கும். அவர் அங்கு 25 நாட்கள் மருந்தோ சிகிச்சைகளோ இல்லாத நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அதன் பின்னர் மே ஆறாம் திகதி அவர்  வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.

அவருக்கு  எதிராக  ஐ.சி.சி.பி.ஆர். பிரகடனத்தின் கீழ் குற்றம்சாட்டுவதில் காவல்துறையினர் மத்தியில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் காரணமாக, மூன்று நீதிமன்ற திகதிகள் வந்த போதிலும் நீதவானால் அவரை பிணையில் விடுதலை செய்ய முடியவில்லை. கடந்த காலங்களில் கொரோனா தொற்று போன்றவற்றினால் தாமதங்கள் ஏற்படாத நிலையிலும் ஐ.சி.சி.பி.ஆர். பிரகடனத்தின் கீழ் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்களை விடுதலை செய்வதற்கு பல மாதங்கள் பிடித்தன. இப்போது ஊரடங்கு உத்தரவின் காரணமாக இந்த தாமதங்கள் மேலும் அதிகரித்தன. அத்தோடு, ஊரடங்கு காரணமாக அவரின் உறவினர்களும் நண்பர்களும் கண்டிக்குச் சென்று அவரின் சார்பாக சட்டத்தரணிகளை ஏற்பாடு செய்வதும் தாமதமாகியது.

ரம்ஸி அவரது பகுதிக்கு அப்பால் அதிகம் அறியப்படாத ஒரு தனிநபர். அவருடைய பாடசாலை நண்பர்கள்,  கடந்த 25 வருடங்களாக அவருடன் பணியாற்றியவர்கள் மற்றும் கண்டியைச் சேர்ந்த சமூகசேவை மனப்பாங்கு கொண்டவர்களுக்கு மாத்திரமே அவரை தெரிந்திருந்தது.

இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தில் அவர்  1998இல் மும்மொழி ஆளுமையுடன்  மொழிபெயர்ப்பில் டிப்ளோமா சான்றிதழ் பெற்றதுடன், 2000ஆம் ஆண்டு விவசாய திணைக்களத்தில் மும்மொழி முதலாம் தர மொழிபெயர்ப்பாளராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைகழகங்களில் பட்டப்பின் படிப்பைத் தொடர்ந்தார். பின்னர் நீதியமைச்சின் அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்யப்பட்டார்.

73 வயதான அவரது தாயார் லத்தீவா ராஜிக் ஒரு  ஓய்வுபெற்ற ஆசிரியை. நீண்டகாலம் பாடசாலை கல்விப்பணியில் ஈடுபட்ட பின்னர் ஓய்வுபெற்றவர். அவரது நான்கு பிள்ளைகளில் ரம்ஸி மூத்தவர். தனது மகனின் கைது 73 வயதில் அவருக்கு ஏற்படுத்தியிருக்கக் கூடிய மன அழுத்தத்திற்கு மத்தியிலும் அவருக்கு என்ன நடந்தது என்பதையும் கரிசனைகளையும் கோபமின்றி வெளியிட்டார்.

ரம்ஸியின் தந்தை காலமாகிவிட்டார். அவர் ஸ்டார் ராசிக் என அழைக்கப்பட்ட ஒரு பத்திரிகையாளர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கும் லேக்ஹவுஸ் குழுமத்திற்கும் சுயாதீன செய்தியாளராக பணியாற்றிய அவர் சமூகப்பணிகளிலும் ஈடுபட்டவர்.

ரம்ஸியின் மனைவி ஷர்மிளா கண்டியில் ஆரம்பப் பாடசாலை ஆசிரியையாக பணியாற்றுகிறார். கணவர் நீண்டகாலமாக அருகில் இல்லாததை, மிகவும் அச்சுறுத்தலான நீதிமன்ற நடவடிக்கைகள், அவரது உடல்நலம் குறித்த கவலையுடன் இருக்கிறார். தங்கள் தந்தை சிறைவைக்கப்பட்டிருப்பதால் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கும் பாடசாலைகளுக்குச் செல்லும் இரண்டு பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ளவேண்டிய நிலையில் அவர் காணப்படுகிறார்.

சிறுவயது முதல் ரம்ஸி காலில் ஏற்பட்ட வாதம் மற்றும் அல்சர் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர். அதன் பின்னர் குணப்படுத்த முடியாத அல்சரினால் பாதிக்கப்பட்டார். கடந்த 35 வருடகாலமாக அவர் மருந்து பயன்படுத்தி வருகிறார். இது அவரது சிறுநீரகம், இருதயம், ஈரல் ஆகியவற்றை பாதித்துள்ளது. பொலிஸார் அவரைக் கைதுசெய்த வேளை அவர் அல்ட்ரா சவுண்ட் மருத்துவ பரிசோதனைக்கு தன்னை உட்படுத்தவிருந்தார். வாதம் தொடர்பான மருத்துவரும் மருத்துவ பேராசரியருமான ஒருவர் ஏப்ரலில் அவருக்கு இதற்கான ஆலோசனையை வழங்கியிருந்தார்.

மோசமான உடல்நிலையினாலும் உறங்க முடியாததன் காரணமாகவும், நடமாடுவதில் அவருக்கு உள்ள பிரச்சினைகளாலும் ரம்ஸி பிராந்திய பத்திரிகைளுக்கு எழுதுவதிலும் சமூக ஊடங்களில் எழுதுவதிலும் ஈடுபடத்தொடங்கினார். அவரது பேஸ்புக்கை ஆராய்ந்த சுயாதீன எழுத்தாளர்கள் அவர் ஜனநாயகத்தினது வீழ்ச்சி குறித்து சுட்டிக்காட்டியுள்ளதையும் நீதிக்காக குரல்கொடுத்துள்ளதையும் கண்டுபிடித்துள்ளனர். முஸ்லிம்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வெறுப்புணர்வுப் பேச்சுகள், முஸ்லிம் சமூகத்தினர் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் குறித்தும் அவர் கவனம் செலுத்தியுள்ளார். அவரது பதிவுகள் எந்தவித வெறுப்பையும் உருவாக்கும் நோக்கமற்றவை. மாறாக அவர் அனைவருக்கும் சமவாய்ப்பு, ஐக்கியம், நீதி மற்றும் அனைத்து சமூகத்தைச் சேர்ந்த நண்பர்களுடனும் இணைந்து செயற்படுதல் போன்றவற்றை முன்னிறுத்தியுள்ளார்.

அவர் பல சமூக அமைப்புகளில் தன்னை ஈடுபடுத்தியுள்ளார். “இளம் நண்பர்கள்” போன்ற மத சார்பற்ற அமைப்புகள். இது கண்டியின் முதியவர்கள், இளைஞர்கள் குழுவினால் உருவாக்கப்பட்ட அமைப்பு. 2018 மார்ச் மாதம் கண்டியில் காடையர்களின் வன்முறை மூண்ட பின்னர், இந்த அமைப்பே முதலில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டது.

அவர் வசித்த பகுதியில் அவரது உறவினர் ஒருவருக்கு சொந்தமான கட்டடமொன்று உட்பட பலவீடுகளும் வர்த்தக நிலையங்களும் எரிக்கப்பட்டன, சூறையாடப்பட்டன. முறைப்பாடுகள் செய்யப்பட்டு, குற்றவாளிகளின் பெயர்கள் வெளியிடப்பட்டு, ஆதாரங்கள் சேகரிக்கப்பட்ட போதிலும் இரண்டு வருடங்களின் பின்னரும், ஒருவரை கைதுசெய்து உடனடியாக விடுதலை செய்ததைத் தவிர பொலிஸார் எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

2018 வன்முறையின் பின்னர் அந்தப் பகுதிக்கு சென்றவர்கள், “குருநாகல் வீதியில் என்ன நடந்தது?” என விசாரித்தவேளை ரம்ஸியைக் கேளுங்கள் என்று கூறினார்கள். பேராசிரியர் எச்.எஸ். ஹஸ்புல்லாவும் நானும் பேராதனைக்குச் சென்று அந்தப் பகுதியை சுற்றிபார்வையிட விரும்பியவேளை அவரை தொடர்புகொள்ளுமாறு நாங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டோம்.

அவர் தனது நேரத்தை பொருட்படுத்தாமல், தனது உடல்நலம் குறித்து கவனம் செலுத்தாமல் எங்களை அழைத்துச்சென்றார். பாதிக்கப்பட்டவர்கள் மத்தியிலான உரையாடல்களின் போது அவர் ஒரு கனவான் போல நடந்துகொண்டார். ரம்ஸியுடன் உள்ள நெருக்கம், கெளரவம் காரணமாக அவர்கள்  எங்களை வரவேற்றார்கள். பாதிக்கப்பட்டவர்களுடனான உரையாடல்கள் கூட வெளிப்படையானவையாக சிந்தனைபூர்வமானவையாக, அவர்கள் பெருமளவு சொத்துக்களை இழந்தபோதிலும் பகைமை இல்லாதவையாக இருந்தன.

வெறுப்பு, வன்முறை, அநீதி மற்றும் அதன் பின்னர் வட பகுதி மக்கள் மத்தியில் மூன்று தசாப்தகாலமாக என்ன நடந்தது என்பது குறித்தே பேராசிரியர் ஹஸ்புல்லாவின் பெருமளவு பணிகள் காணப்பட்டன. தென்பகுதியில் என்ன நடக்கவுள்ளது என்பதை அவர் வேறு எவரையும் விட நன்கு அறிந்திருந்தார். பல உரையாடல்களில் அவர் சகிப்புத்தன்மையின் அவசியம், சமூகங்கள் மத்தியில் உறவுகளை வளர்த்துக்கொள்ளவேண்டியதன் அவசியம் குறித்து பேசினார். முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாதமயப்படுத்தப்படல் மற்றும் குறிப்பிட்ட பகுதிக்குள் முடக்கப்படுதலின் ஆபத்து குறித்து அவர்  எச்சரித்தார். இந்த உரையாடல்களில் ரம்ஸி தன்னை ஆர்வத்துடன் ஈடுபடுத்திக்கொண்டார்.

பின்னர் ஐக்கியத்தை ஏற்படுத்தவும், சமூகங்களுக்கு இடையிலான உரையாடல்களை ஊக்குவிக்கவும் பல்லின குழுவொன்று முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு உதவுமாறு ரம்ஸியைக் கேட்டுக்கொண்டவேளை அவர் தனது அசௌகரியத்தையும் பயன்படுத்தாமல் மோட்டார் சைக்கிளில் திகன சென்றார்.

தேசிய அவசரகாலநிலையின் போது பொலிஸார் அங்கவீனரான நிலையில் உள்ள, ஏற்கனவே தனது பேஸ்புக்கில் பதிவுகளை முடக்கிவிட்டுள்ள நபர் குறித்து தமது வளங்களை ஏன் முன்னுரிமைக்கு உட்படுத்தியுள்ளனர் என்பது இன்னமும் விளங்காத விடயமாக உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக செயல் இழக்கும் நிலையில் உள்ள நீதிமன்ற அமைப்பு முறை மீது ஏன் அவர்கள் இன்னமும் வழக்குகளை அதிகரிக்கின்றனர் என்பதும் இன்னமும் புரியாத விடயமாக உள்ளது. நீதிமன்றம் அவருக்கு வழங்குமாறு உத்தரவிட்ட மருத்துவ அங்கவீனர் தேவைகளை ஏன் அதிகாரிகள் பின்பற்ற தவறியுள்ளனர் என்பது இன்னமும் புரியாத விடயமாக காணப்படுகிறது. நோய் தொற்றை குறைப்பதற்காக தீவிர நடவடிக்கை எடுப்பதற்கான ஆணை மக்களுக்கு உள்ள போதிலும்,தொற்று நோய் அதிகமாக உள்ள கைதிகள் மத்தியில் மேலும் சனநெரிசலானதாக ஏன் பொலிஸார் மாற்றுகின்றார்கள் என்பதும் புரியவில்லை.

எனினும், அவருக்கு இடையூறு ஏற்படுத்தி, சுமையை அதிகரித்து அவரை மௌனமாக்குவதுதான் அவர் கைதுசெய்யப்பட்ட நோக்கம் என்றால் அவர்கள் அதில் வெற்றியடைந்துள்ளார்கள். அவர் தற்போது விடுதலை செய்யப்பட்டாலும், அவருக்கு இழைக்கப்பட்ட பாதிப்பும், எங்கள் பொதுவான மனித அடித்தளத்திற்கு இழைக்கப்பட்ட பாதிப்பும் மிகவும் மோசமானதாகயிருக்கும்.

Z.L. முஹமட்

“Ramzy Razeek: An extraordinary struggle for an ordinary life of service upended by an arrest” என்ற தலைப்பில் கிரவுண்விவ்ஸ் தளத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.