பட மூலம், Selvaraja Rajasegar Photo
2020ஆம் ஆண்டு மே தினம் கொவிட்-19 அனர்த்தம் மத்தியில் மௌனமாக நடைபெறுகிறது. வரலாற்று ரீதியாக மே தினம் என்பது 1886ஆம் ஆண்டு தொழிலாளர்களால் எட்டு மணித்தியால வேலை நேரக் கோரிக்கையை முன்வைத்து ஒரு பெரும் போராட்டமாக அமெரிக்காவின் சிக்காகோ நகரத்தில் நடாத்தப்பட்டது. அந்தப் போராட்டம் காவல்துறையின் அடக்குமுறைக்கு உள்ளானது. இதனை நினைவுகூரும் முகமாக உலகெங்கும் இந்நாளில் உழைக்கும் மக்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். வழமையாக பெரும் ஆர்ப்பாட்டமாக அமையும் மே தினம் இந்த வருடம் அமைதியாக நடைமுறைப்படுத்த வேண்டிய தேவையை உலகத்தின் புதிய சூழ்நிலை எடுத்துக்காட்டுகிறது. இருப்பினும், இந்தப் புதிய பொருளாதார சூழலில் கொண்டுவரவேண்டிய மாற்றங்கள் தொடர்பான கருத்தியல் ரீதியான விவாதங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.
இந்த மே தினத்தையொட்டி உழைக்கும் மக்களுடைய வேலை நேரம், அதற்கான கூலி மற்றும் கௌரவம் சம்பந்தமான விடயங்கள் வழமையாக முன்வைக்கப்படும். தற்போதைய நிலை என்னவென்றால் உலகமெங்கும் உழைக்கும் மக்களின் வேலைகளும் வாழ்வாதாரமும் அழிந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு உழைக்கும் மக்கள் முன் தற்போதிருக்கும் பெரும் சவாலுக்கான வரலாற்று ரீதியான காரணம் என்ன? அதை எவ்வாறு எதிர்காலத்தில் கையாளலாம்? மேலும் உலக ரீதியாக உழைக்கும் மக்களுக்கிருக்கும் பிரச்சினைகளை விளங்கிக்கொள்ளும் அதேநேரம் இலங்கையிலிருக்கும் நெருக்கடியின் விசேட தன்மைகள் என்ன? இதைக் கையாளுவதற்கு அரசு, மூலதனம் மற்றும் உழைக்கும் மக்கள் மத்தியிலான ஒரு புதிய சமூக ஒப்பந்தத்தை உருவாக்க முடியுமா?
சமூகநலன் அரசின் தோற்றமும் வீழ்ச்சியும்
தற்போதிருக்கும் மாபெரும் பொருளாதார நெருக்கடி போன்ற ஒன்று 1930ஆம் ஆண்டுகளில் தோன்றியது. அதைக் கையாளும் விதத்தில்தான் அமெரிக்க ஜனாதிபதி ரூசேவேல்டின் (Roosevelt) தலைமையின் கீழ் புதிய திட்டம் ((New Deal) என்ற பெரும் அரச முதலீட்டுக் கொள்கைகள் உருவாக்கப்பட்டன. இதன் பின்னணியில்தான் அமெரிக்காவில் மட்டுமல்லாது மேற்குலகிலும் சமூக நலன் அரசு (Social Welfare State) தோன்றியது. அதன் அடிப்படையில்தான் கல்வி, சுகாதாரம், வீடு வசதி மற்றும் உணவுப் பாதுகாப்பு போன்ற விடயங்கள் மக்களுக்கு உறுதிப்படுத்தப்படும் ஒரு நிலை ஏற்பட்டிருந்தது.
அவ்வாறு பொருளாதாரத்திலும் அரசியலிலும் கொண்டுவந்த மாற்றங்கள் அரசுக்கும் மூலதனத்திற்கும் உழைக்கும் மக்களுக்கும் இடையேயான உறவுகளை மாற்றியமைத்தது. அதுதான் சமூக ஒப்பந்தமாக (Social Contract) அமைந்தது. இவ்வாறான சமூக ஒப்பந்தம் காலனித்துவத்திலிருந்து சுதந்திரம் பெற்ற இலங்கை போன்ற நாடுகளிலும் அபிவிருத்திக்கான ஒரு நிச்சயத்தை உருவாக்கும் என்று கருதப்பட்டு இயங்கி வந்தது.
ஆனால், 1970ஆம் ஆண்டுகளில் முதலாளித்துவத்திற்கு வந்த நீண்டகால வீழ்ச்சி, குறிப்பாக மூலதனம் இலாபம் திரட்டமுடியாத நிலைமையில் அந்த சமூக ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது. 1970ஆம் ஆண்டுகளுக்குப் பின்பு அதிக இலாபத்தை திரட்டுவதற்காக சமூகநலன் திட்டங்கள் தூக்கியெறியப்பட்டு உழைக்கும் மக்களை சுரண்டி சமூகத்தில் பெரும் ஏற்றத்தாழ்வுகள் உருவாக்கப்பட்டது.
இலங்கையின் சமகால பொருளாதாரக் கட்டமைப்பு
இலங்கையிலும் 1970ஆம் ஆண்டுகளுக்கு பின்பு திறந்த பொருளாதாரக் கொள்கைகளுடன் சமூகநலன் திட்டங்கள் படிப்படியாக நீக்கப்பட்டன அல்லது பலவீனமாக்கப்பட்டன. ஜூலை, 1980ஆம் ஆண்டு நடைபெற்ற பொது வேலைநிறுத்தப் போராட்டம் மீது ஜனாதிபதி ஜெயவர்த்தன தனது அடக்குமுறையை கட்டவிழ்த்தார். இதன் பிரதிபலனாக உழைக்கும் மக்களின் குரலாக இருந்த தொழிற்சங்கங்கள் நீண்டகாலத்திற்கு மீள முடியாதவாறு பலவீனமாக்கப்பட்டன. இன்று கூட தொழிற்சங்கங்கள் நலிவுற்ற நிலைமையில்தான் இருக்கின்றன.
உழைக்கும் மக்களை பெரியளவில் சுரண்டும் அதிகாரத்தைப் பெற்ற மூலதனம், அரசின் உதவியுடன் சுதந்திர வர்த்தக வலையங்களை உருவாக்கி ஏற்றுமதியை அதிகரிக்கும் கொள்ளைகளுக்குதான் முக்கியத்துவம் கொடுத்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேயிலைத் தோட்டங்களைச் சுரண்டும் அதேநேரம், மக்களை மத்திய கிழக்கு நாடுகளில் வேலைசெய்ய வைத்து அந்நிய செலாவணியைப் பெறுவது மற்றும் தொழிலாளர்களுக்கு முறைசார்பற்ற வேலைகளை உருவாக்கும் சுற்றுலாத்துறையை முன்னெடுத்துச் செல்வதற்கான கொள்கைகள்தான் முதன்மைப்படுத்தப்பட்டன.
ஒரு சில மாதங்களுக்கு முன்பு கூட இலங்கையின் பொருளாதாரத்தை ஏற்றுமதி அபிவிருத்தி கொள்கையின் அடிப்படையில்தான் இலங்கை அரசும் சர்வதேச அமைப்புகளும் முன்வைத்தன. அதாவது, குறைந்த கூலிக்கு உற்பத்தியைச் செய்து உலக சந்தையில் இருக்கும் கேள்விக்கான ஏற்றுமதிதான் முன்மாதிரியாக அமைந்தது.
இந்த ஏற்றுமதி அபிவிருத்தி கொள்கைகளின் பின்னணி என்னவெனில் 1990ஆம் ஆண்டுகளில் உலக பொருளாதாரத்தின் வளர்ச்சியிலும் பார்க்க உலக வர்த்தகத்தின் வளர்ச்சி மூன்று மடங்காக அமைந்திருந்தது. உதாரணமாக உலக பொருளாதார வளர்ச்சி 3% இருந்த சமயத்தில் உலக வர்த்தகத்தின் வளர்ச்சி 9% இருந்தது. இதனால் தான் 1990ஆம் ஆண்டுகள் உச்சக்கட்ட உலகமயமாக்கல் (hyper globalization) என்று கூறப்பட்டது. ஆனால், உலக வர்த்தகத்தின் வளர்ச்சி 2000ஆம் ஆண்டுகளில் படிப்படியாக குறைவடைந்து வந்து 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியுடன் உலக வர்த்தகத்தின் வளர்ச்சி உலக பொருளாதார வளர்ச்சியை விட குறைந்தது.
அண்மைக்காலத்தில் சர்வதேச நாணய நிதியத்தால் உலகப்பொருளாதார கண்ணோட்டம் (World Economic Outlook) எனும் அறிக்கையின் முதல்பாகம் சித்திரை மாதம் வெளியிடப்பட்டு மிகுதி இந்த மாதம் வரவுள்ளது. அதன்படி 2020ஆம் ஆண்டில் உலக மொத்த உற்பத்தி (GDP) 3% அமையுமென்றும் உலக வர்த்தக வளர்ச்சி 11% அமையுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, உலகப் பொருளாதாரம் 3% சுருங்கப்போகிறது, உலக வர்த்தகம் அதன் 3 அல்லது 4 மடங்கால் சுருங்கப்போகிறது. இதன் சாராம்சம் என்னவென்றால், இலங்கையினுடைய ஏற்றுமதி அபிவிருத்தி கொள்கைகள் இவ்வாறான பொருளாதாரச்சூழலில் சாத்தியப்படாது.
இலங்கை பொருளாதாரக் கட்டமைப்பை மாற்றியமைத்தல்
இவ்வாறான ஒரு நெருக்கடி மத்தியில் இலங்கையின் பொருளாதாரத்தில் ஒரு ஸ்திரத்தைக் கொண்டு வருவதற்கும் மக்களுடைய பொருளாதார வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கும் ஒரு புதிய சமூக ஒப்பந்தம் தேவைப்படுகிறது. எதிர்காலத்தில் உற்பத்தி செய்யும் பொருட்கள் இலங்கைக்குள் நுகர்ச்சி செய்யப்படக்கூடிய பொருட்களாக இருக்கவேண்டும். மேலும், அதற்கான கேள்வியை உருவாக்கும் விதத்தில் உழைக்கும் மக்களுடைய வருமானங்களும் வாழ்வாதாரங்களும் அதிகரிக்கப்பட வேண்டியது அவசியம்.
இலங்கை பொருளாதாரத்தின் விசேட தன்மை என்னவென்றால் 10% ஊழியர்கள் தான் தொழிற்சங்க உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அதாவது, இலங்கையில் உழைக்கும் மக்கள் என்று கூறும் பொழுது விவசாயிகள், கடற்றொழிலாளர்கள் மேலும் பல முறைசார்பற்ற கூலி வேலை செய்பவர்கள் தான் பெரும்பங்கினர். தற்போதிருக்கும் நெருக்கடியில் கூட நாளாந்த கூலிவேலை செய்பவர்கள்தான் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள்.
ஆகவே, இலங்கையினுடைய பொருளாதாரக் கட்டமைப்பை இவ்வாறான பிரச்சினைகள் மத்தியில் மாற்றியமைத்தல் எனும் போது நகர்ப்புறங்களில் உள்ள தொழிலாளர்கள், பெருந்தோட்டத் தொழிலாளர்கள், கிராமப்புறங்களில் வாழ்வாதாரத்தை முன்கொண்டு போகமுடியாத நிலையில் வாழும் மக்கள் மற்றும் நாளாந்த கூலி வேலைகளில் ஈடுபடுவோர் ஆகிய அனைத்து தரப்பினரையும் உள்வாங்கிய பொருளாதாரக் கொள்கை மாற்றம் தேவைப்படுகிறது. அடுத்து இவ்வாறான மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்யும் சமூகநலன் திட்டங்களையும் அரசு உருவாக்க வேண்டும். இதில் பெறுமதியான இலவசக்கல்வி மற்றும் இலவச சுகாதாரத் திட்டங்களுக்கான முதலீடுகள் முக்கியமானவை. உணவுப் பாதுகாப்புக்கான நிவாரணங்கள் மற்றும் சர்வஜன வருமானக் கொடுப்பனவுத் திட்டங்களும் ஆராயப்படவேண்டும்.
சுருக்கமாக கூறுவோமானால், இலங்கையினுடைய பொருளாதாரக் கட்டமைப்பையும் சமூக பொருளாதார உற்பத்தி உறவுகளையும் மாற்றியமைக்கும் ஒரு புதிய சமூக ஒப்பந்தம் அரசுக்கும் மூலதனத்திற்கும் மற்றும் உழைக்கும் மக்களுக்குமிடையே தேவைப்படுகிறது. இவ்வாறான சமூக ஒப்பந்தத்தை நாங்கள் உருவாக்காத சமயத்தில் ஸ்திரமற்ற நிலைமையும், அராஜகமும் ஏன் பாசிச கட்டமைப்புக்கூட உருவாகும் அபாயம் உண்டு.
வரலாற்று ரீதியில் ஒரு முற்போக்கான புதிய சமூக ஒப்பந்தம் என்பது அரசாலோ அதன் நிபுணர்களாலோ அல்லது புத்திஜிவிகளாலோ உருவாக்கப்படுவதில்லை. இவ்வாறான சமூக ஒப்பந்தம் என்பது மக்களுடைய அழுத்தங்கள் மற்றும் போராட்டங்களுக்கூடாகத்தான் உருவாக்கப்படும். அதை முன்கொண்டு போவது மக்கள் அமைப்புகளான தொழிற்சங்கங்கள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் தான். இந்த மே தினத்துடன் ஒரு புதிய சமூக ஒப்பந்தத்திற்கான கருத்தியல் ரீதியிலான விவாதங்களை தொடங்கிவைப்பது அவசியமாகும்.
கலாநிதி அகிலன் கதிர்காமர்
சிரேஷ்ட விரிவுரையாளர்,
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்