பட மூலம், Quartz India
இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான முஸ்லிம்களுக்குப் புதைப்பதற்கான உரிமை வழங்கப்பட வேண்டுமா இல்லையா என்ற விவாதத்தை மிகவும் கனத்த இதயத்தோடு கேட்டுக் கொண்டும், அவதானித்துக் கொண்டும் இருக்கின்றோம். மரணித்தவரது குடும்பத்தினரின் விருப்பம் கருத்தில் கொள்ளப்படாமல் அரசாங்கம் நியாயமற்ற முறையில் அவசரமாக செயற்பட்டு கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி மரணித்த இரண்டு முஸ்லிம்களது உடல்களையும் எரித்ததாகவும், இறுக்கமான நிபந்தனைகளுடன் புதைப்பதனை அனுமதிக்கும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டுதல்களை ஏன் பின்பற்ற முடியாமல் போனது என்பதற்கு எந்தவொரு விளக்கமோ வழங்கப்படவும் இல்லை என முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் நம்புகின்றனர்.
அரசாங்கத்தில் உள்ள சில தனிநபர்கள், ஊடகம், மற்றும் முஸ்லிம் சமூகத்தைச் சேராதோர், முஸ்லிம்கள் பொதுமக்களது அக்கறையைக் கவனத்தில் கொள்ளாமல் தமது ‘மார்க்கம்’ என்பதாகவும், தமது மார்க்க நம்பிக்கையின் அடிப்படையில் தாம் பாதிப்புக்குள்ளாக்கப்படுபவர்கள் எனக் காட்டி தமக்கு ‘விசேட கவனிப்பு’ வேண்டும் எனக் ‘கோரிக்கை’ விடுவதாகவும் விவாதித்தனர். இன்னும் சிலர் குறிப்பாக சமூக வலைத்தளங்கள் உட்பட பொதுவாகவே முஸ்லிம் எதிர்ப்பு உணர்வுகளை வெளிப்படுத்தியது மட்டுமன்றி அதனைத் தூண்டியும் விட்டனர்.
இந்த விவாதத்தில் கவனத்தில் கொள்ளப்படாதவொரு கண்ணோட்டத்தினை சுட்டிக் காட்ட நாம் இதனை எழுதுகிறோம். காருண்யத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு அணுகுமுறை, நாம் அனைவரும் இலங்கையின் பிரஜைகள் என்று எம்மை ஒன்றுபடுத்தும் ஒரு அணுகுமுறை, அத்துடன் மரணித்தவர்களதும், அவர்களது குடும்பத்தினரையும் மையமாகக் கொண்ட ஒரு அணுகுமுறையைப் பின்பற்றும் படி நாம் வேண்டுகிறோம்.
மரணித்தவருக்காக துக்கம் அனுஷ்டிப்பதற்கும், இறுதிச் சடங்கிற்குமான உரிமை எந்தவொரு சமயத்தைச் சேர்ந்தவர்களுக்கும் முக்கியமானதாகும். நாம் ஒவ்வொருவரும் பின்பற்றும் சடங்குகள் சம்பிரதாயமானவையாகவோ, அவ்வாறின்றியோ, சமயத்தில் சொல்லப்பட்டதாகவோ, அவ்வாறின்றியோ இருந்தாலும் அவை அனைத்துமே நாம் நேசித்த இறந்தவருக்கு அமைதியையும், கண்ணியத்தையும் உறுதிப்படுத்த வேண்டும் என்ற ஆழமான விருப்பினைக் கொண்டவை. சடங்குகள் என்பவை நாம் எவ்வாறு துக்கம் அனுஷ்டிக்கிறோம் என்பதுடன் நமது நேசத்துக்குரியவர்கள் இவ்வுலகை விட்டும் பிரிந்து செல்கையில் அரத்தமுள்ள வகையில் அவர்களை எவ்வாறு கௌரவிக்கிறோம் என்பதனையும் உள்ளடக்கியது.
உலகமெங்கும், தமது நேசத்துக்குரியவர்களின் மரணத்தறுவாயிலாவது அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பினை, நெருங்கி நின்று சடங்குகளைச் செய்து தமது பொறுப்பினை நிறைவேற்றும் வாய்ப்பினை, பழக்கப்பட்டதும், பெறுமானமுடையதுமான வகையில் துக்கம் அனுஷ்டிக்கும் வாய்ப்பினை மக்கள் இழந்து கொண்டு வருகிறார்கள். உலகெங்குமுள்ள நாடுகள் இதன் முக்கியத்துவத்தினை உணர்ந்து அங்கீகரித்து கொவிட-19 தொற்றுக்காலத்தில் கண்ணியமான, அர்த்தமுள்ள வகையில் இறுதிச் சடங்கினைச் செய்வதற்கு தம்மால் இயலுமானதைச் செய்து வருகின்றன. இவ்வுணர்வுகளுக்கு இலங்கையும் விதிவிலக்கல்ல. இலங்கையிலுள்ள முஸ்லிம்களும் விதிவிலக்கல்ல.
முஸ்லிம்கள் இலங்கையினது சமத்துவமான பிரஜைகள். இச்சமத்துவமானது எமது வாழ்வின் அனைத்து விடயங்களிலும் பிரதிபலித்தல் வேண்டும். இச்சமத்துவத்தினை உறுதிப்படுத்தும் பொறுப்பு அரசுக்கு மட்டுமன்றி எமது முஸ்லிம் சமூகங்களுக்கும் உண்டு.
தனது பிரஜைகளின் கருத்துக்களையும், நம்பிக்கைகளையும் கருத்தில் எடுப்பதற்கும், மரியாதை கொடுப்பதற்கும், இன்றைய பின்னணியில் மரியாதையான, இனவெறுப்பற்ற, பாரபட்சமற்ற நடாத்துகைக்கான உதாரணமாக நடக்கவும், அத்துடன் பழிசாட்டும் வகையிலான அல்லது மறைமுகமான தீய எண்ணமுடைய மொழியாடல்களைப் பிரயோகிக்காதும் இருக்க வேண்டிய பொறுப்பு அரசுக்குண்டு. நிர்ணயிக்கப்பட்ட தரத்தோடு, பொருத்தமான முறையில் இறுதிச் சடங்கைச் செய்து, பாதுகாப்பாக புதைக்கக்கூடிய தெரிவுடன் புதைப்பதற்கான இடங்களை ஒதுக்குவதற்கு அரசு தேவையான மனித வளங்களைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். எவ்வாறாயினும், பொதுசனத்துக்கு ஆபத்தான விடயங்கள் மற்றும் சுகாதார முறைமையில் உண்டாகக் கூடிய பெரும் அழுத்தம் புதைப்பதற்கான சாத்தியத்தை இல்லாமலாக்குதல் போன்று புதைப்பது சாத்தியமற்றது என்பதற்கான ஏனைய நியாயமான காரணங்கள் இருப்பின் அவை மிகத் தெளிவாக வெளிப்படையான, காருண்யமான முறையில் முஸ்லிம் சமூகத்திற்கு அறிவிக்கப்படுதல் வேண்டும்.
அரசாங்கமும், ஊடகமும் தனிமைப்படுத்தப்பட்ட, நோய்த் தொற்றுக்குள்ளான, மரணித்த நபர்களதும், அவர்களது அன்புக்குரியவர்களதும் அந்தரங்கத்தினைப் பேணுவதனை உறுதிப்படுத்த வேண்டும். கொவிட்-19 தொடர்பான இறுக்கமான நடைமுறைகள் மரணித்த மனிதர்களுக்கான அதி கண்ணியத்துடனும், மரியாதையுடனும் அமுலாக்கப்பட முடியும். அது கண்ணியத்துக்கான தனிப்பட்ட மற்றும் கூட்டு உரிமையாகும்.
காருண்யத்தினை அனைத்து நடைமுறைகளினதும் மையமாக வைத்தலானது எமது குடும்பங்கள், எமது சமூகங்கள் என்பதாக அல்லாமல் எமது நாடாக ஒன்றாக இந்த நெருக்கடிக்காக துக்கித்து, சுகப்பட்டு வருவதற்கு இடமளிக்கும். இது நோய்த் தொற்றைப் பரப்புதல் தொடர்பாகவிருக்கும் களங்கத்தினையும் களைய உதவும். அத்துடன் மருத்துவ பராமரிப்பில் கூடுதலான நம்பிக்கையை விதைக்கும் என்பதுடன், தாமும், தமது அன்புக்குரியவர்களும் சமமாக இலங்கை அரசால் நடாத்தப்படுவார்கள் என்ற நம்பிக்கையானது சிறுபான்மை சமூகங்களுக்கு தமது அச்சத்தையும், பதற்றத்தையும் தணிக்க உதவும்.
இடம்பெற்ற எரியூட்டலானது அவர்களது பிழையல்ல, அதனால் அவர்கள் முஸ்லிமல்லாமல் போய்விட மாட்டார்கள் என மீள உறுதிப்படுத்தி மரணித்தவரது குடும்பத்தினரது ரணங்களைக் குறைப்பது முஸ்லிம் சமூகத்தின் அங்கத்தவர்களாக எமது பொறுப்பாகும். அதுமட்டுமல்லாமல் சட்டத்திற்குக் கட்டுப்படுதல், பொதுசன அக்கறைக்கான முக்கியத்துவம் என்பதுவும் எமது நம்பிக்கையின் பகுதி என்ற அடிப்படையில் அவை தொடர்பான கதையாடலில் ஈடுபடுவதும் எமது பொறுப்பாகும். இது முஸ்லிம்கள் அச்சப்பட்டு அல்லது பழிக்குப் பயந்து நோய்க்கு சிகிச்சை எடுக்காமலிருக்கத் தேவையில்லை என்பதனை உறுதிப்படுத்த உதவும்.
இஸ்லாம், அனைத்து காலத்துக்கும், அனைத்து சூழ்நிலைகளுக்குமானது என்பதனை நாம் நன்கு அறிவோம். அது சமாதானத்தினதும், சம்மதத்தினதும், விஞ்ஞானம் உட்பட அறிவியல் சார்ந்ததுமாகும். மரணச் சடங்கில் புதைப்பது முஸ்லிம்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். எவ்வாறெனினும், வேறு ஏதும் மாற்று முறைகள் இல்லாதவிடத்து மரணச் சடங்கில் இந்த மனித வரலாற்றின் முக்கிய காலகட்டம் மாற்றத்தை ஏற்படுத்துமாயின் அது எந்தவிதத்திலும் ஒரு முஸ்லிம் என்ற தரத்தைத் தாழ்த்திவிடாது என முஸ்லிம்களாக நாம் உறுதியாக நம்பிக்கை வைக்கிறோம்.
தனியாகவும், கூட்டாகவும் இலங்கைப் பிரஜைகள் இந்நெருக்கடி காலத்தை எதிர்கொள்ளுவதையிட்டு நாம் பெருமைப்படுகிறோம். கொவிட்-19 தொற்றுக்குள்ளான நபர்களைப் பராமரிப்பவர்களும், சிகிச்சையளிப்பவர்களும் ஆபத்தை எதிர்கொண்டு எடுத்து வருகின்ற முயற்சிகளுக்கு நாம் பெரும் கௌரவமளிக்கிறோம். அத்தியாவசியமான தகவல்கள் மற்றும் சேவைகள் பற்றிய கவனம் தொழிநுட்ப வசதிகள் அற்றவர்களில் செலுத்தப்பட வேண்டும் என்பதுடன் வயதானவர்கள், தினசரி வருமானம் ஈட்டுபவர்கள், நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மற்றும் விசேட தேவையுடையவர்களின் வீடுகளுக்குப் பொருட்களைக் கொண்டு சென்று வழங்கவும், மேலதிகமான ஆதரவினை வழங்கவும் வேண்டுமென நாம் கேட்டுக் கொள்கிறோம்.
எமது இனம், சமய நம்பிக்கை, வருமான மட்டம், மொழி, அல்லது பிரதேசம் எதுவாக இருப்பினும் அத்தனையையும் தாண்டி, எமது வாழ்க்கையும், விதியும் உள்ளார்ந்து ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டுள்ளது என்பதனை இந்தக் கொள்ளைநோய் எமக்குக் கற்றுத் தந்துள்ளது. மேலும், ஒரு நபருடைய ஆரோக்கியமும், பாதுகாப்பும் எம்மைச் சூழவுள்ள ஒவ்வொருவரது ஆரோக்கியத்திலும், பாதுகாப்பிலும் தங்கியுள்ளது என்பதனையும் காட்டித் தந்துள்ளது. இந்தக் கொள்ளைநோய்த் தொற்றை நாம் தனித்து போராட முடியாது. இதில் நாம் அனைவருமே ஒன்றாக உள்ளோம்.
விழிப்புணர்வை ஏற்படுத்தல் முதல் நோய் வராமல் தடுத்தல், சுகாதாரப் பராமரிப்பு முதல் மரணித்தவருக்கான பராமரிப்பு ஆகிய கொவிட்-19 தொடர்பான கதையாடல்கள் மனிதாபிமானம், நம்பிக்கை, மற்றும் கருணையின் அடிப்படையில் இருத்தல் வேண்டும் என வேண்டுகிறோம்.
கொவிட்-19இனை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளில் காருண்யத்தை விதையுங்கள். நாம் அனைவரும் ஒன்றாக முன்னோக்கிச் செல்வதற்கான ஒரேவழி அதுவே!
ஏர்மிஸா டீகல், ஹிஷாமா ஹாமின், ஹஸனாஹ் சேகு இஸ்ஸடீன், மர்யம் அஸ்வர், சுமையா பல்லக், நாடியா இஸ்மாயில், ஸஹ்ரா ரிஸ்வான், ஸப்ரா ஸாஹிட்
11.04.2020 அன்று கிரவுண்ட்விவ்ஸ் தளத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.