பட மூலம், The Atlantic, (பிரேசிலின் சாவோ பாலோவில் உள்ள மயானமொன்றில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்த ஒருவரின் உடல் அடக்கம் செய்யப்படும் காட்சி).

மனித குலத்தின் பொது எதிரி. அதற்கொரு சிறப்பு உண்டு. இன பேதம் பார்ப்பதில்லை. நீ எந்த மதம் என்று கேட்பதில்லை. வெள்ளையனா, கறுப்பனா என்று அவதானிப்பதும் கிடையாது. காற்று வழியே மூக்கின் வழி சென்று சகலரையும் தொற்றும். கொன்றும் விடும்.

கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர். இதனைப் பூண்டோடு அழிக்கும் ஆற்றல் இன்று வரை மனிதனுக்குக் கிடையாது. அச்சப்படுகிறான். அதன் அடிப்படையில் அரசியல் செய்கிறான். இதற்குக் காரணம் நீ தான் என்ற குற்றச்சாட்டு முதல் அரசியல்.

உன்னால் தான் வந்தது என்று குற்றஞ்சாட்ட சீனா என்றொரு நாடு தேவைப்பட்டது. உன்னால் தான் பரவியது என்று விரல் நீட்ட ஏதோவொரு இனம் அல்லது மதம் தேவைப்பட்டது. எனது மண்ணிற்குள் நீதான் கிருமியைக் கொண்டு வந்தாய் என்று சாட, குடியேற்றவாசிகள் அவசியப்பட்டார்கள்.

இதன் ஆதாரம் இனவாதம் என்று பொதுவாகக் கூறலாம். இனவாதம் கண்களை மறைப்பதால் அரசுகள் குருட்டுத் தனமாக செயற்படுகின்றன. சமூகங்கள் வழிதவறிச் செல்கின்றன. நோயின் இயல்புகளை அறிந்து, அதன் வியாபகத்தைக் கட்டுப்படுத்தி, பின்விளைவுகள் உணர்ந்து, மீண்டெழ வழிவகுக்கும் பொறிமுறைகள் சீர்கெடுகின்றன.

இதற்கு எத்தனையோ நாடுகளை உதாரணமாகக் காட்டலாம். அமெரிக்காவும், பிரிட்டனும் சிறந்த உதாரணங்கள்.

அமெரிக்காவில் மரணங்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கிறது. நோயைக் கட்டுப்படுத்த சிறப்பான பொறிமுறைகள் இல்லாமல் அச்சம் மேலோங்கி நிற்கிறது. அந்த அச்சம், காழ்ப்புணர்ச்சியாக சிறுபான்மை மக்கள் மீது படிகிறது.

கடந்தகால புள்ளிவிபரங்களைப் பார்த்தால், அமெரிக்காவில் கொவிட்-19 தொற்றிய கறுப்பின-அமெரிக்கர்களின் எண்ணிக்கை அதிகம். அவர்கள் மத்தியிலான மரணவீதமும் அதிகரித்துள்ளது.

கொவிட்-19 தொற்றி பலியானவர்கள் பற்றிய புள்ளிவிபரங்களை அஸோசியேற்றட் பிரஸ் நிறுவனம் ஆராய்ந்தது. மரணித்தவர்களின் மொத்தத் தொகையில் 42 சதவீதமானவர்கள் கறுப்பின-அமெரிக்கர்கள் என்பது தெரியவந்தது. குறித்த மாநிலங்களின் ஒட்டுமொத்த சனத்தொகையை ஆராய்ந்தால், கறுப்பின-அமெரிக்கர்களின் எண்ணிக்கை 20 சதவீதத்தைத் தாண்டவில்லை என்பது கசப்பான உண்மையாகும்..

கறுப்பின-அமெரிக்கர்கள் கூடுதலாக மரணிப்பது ஏனென்ற கேள்வி முக்கியமானது. இதனை விஞ்ஞானபூர்வமாக ஆராய்ந்தால், கூடுதலான மரணங்களைத் தடுக்கலாம். சில மாநிலங்களில், இறந்தவர்கள் எந்தெந்த இனங்களைச் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் புள்ளிவிபரங்களைத் தொகுக்கத் தொடங்கியுள்ளன.

இறந்தவர்களில் எத்தனை பேர் வெள்ளையர்கள், எத்தனை பேர் கறுப்பர்கள், எத்தனை பேர் ஆசிய நாட்டவர்கள் என்பதன் அடிப்படையில் தகவல்களைத் தொகுப்பதில் சிக்கல் இருக்கிறது. இது கேள்விகளுக்கு வித்திடும். அமெரிக்காவில் இனத்துவ அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றனவா? ஏற்றத்தாழ்வுகள் இருக்குமாயின் அதற்கான காரணங்கள் என்ன? ஏனைய இனத்தவர்களை விடவும் கறுப்பினத்தவர்களுக்கு கூடுதலான தொற்று ஏற்படுவது ஏன்? என்ற கேள்விகளுக்கு பதில் சொல்வது அமெரிக்க சமூகத்தில் நிலவும் இனவாதத்தைத் தோலுரித்துக் காட்டிவிடும். அமெரிக்காவின் பொது மனசாட்சியை உலுக்கி விடவும் கூடும்.

இதெல்லாம் தேவையா? இதனால் தான் அமெரிக்கர்கள் தமக்குப் பழக்கமான முறையைக் கையாள்கிறார்கள். அது வேறொன்றும் அல்ல. எல்லாவற்றுக்கும் காரணம் கறுப்பர்கள்தானென குற்றஞ்சாட்டி விடுவது.

கறுப்பர்களுக்கு வேறு நோய்கள் அதிகம். அதனால் தான், அவர்கள் கொவிட்-19 ஆட்கொல்லி நோயால் கூடுதலாக மரணிக்கிறார்கள் என்ற தர்க்கம் அமெரிக்க அரசியல்வாதிகளின் தாரக மந்திரமாக இருக்கிறது.

கறுப்பர்களுக்கு நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்றவை உள்ளன. அவர்கள் அதீத உடன்பருமன் கொண்டவர்களாக காணப்படுகின்றனர். முதலில் உடற்பருமனுக்கு சிகிச்சை அளிக்க வேண்டுமென செனட் சபை அங்கத்தவர் ஒருவர் கூறுகிறார்.

இந்த நோய்கள் கறுப்பினத்தவர்களுக்கு ஏன் அதிகம் என்பதற்கு அவரால் விடையளிக்க முடியாது. இந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு சில உணவகங்களில் சத்துள்ள உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதில்லை. சுகாதார நிலையங்களுக்குச் சென்றால் பாரபட்சம் காட்டப்படுகிறது. காப்பீட்டு வசதிகளை வழங்குவதில் தயக்கம்.

இத்தகைய ஏற்றத்தாழ்வுகளும், குறைபாடுகளும் இருந்தால், கறுப்பர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்று எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? இது அமெரிக்க சமூகத்தில் ஆழ வேரூன்றிய பாகுபாடுகள் காரணமாக கறுப்பின-அமெரிக்கர்களுக்கு ஏற்பட்ட அநீதியென்றால், அது கறுப்பர்களின் தவறா?

இனவாதத்தின் இன்னொரு பக்கமும் உண்டு. அது கறுப்பினத்தவர்கள் பொறுப்பற்றவர்கள் என்ற வாதம். கொவிட்-19 ஆட்கொல்லி பற்றி கறுப்பினத்தவர்கள் அக்கறை காட்டவில்லை. அதன் விளைவுகளை அறிந்திருக்கவும் இல்லையென மேலாதிக்க சிந்தனையுள்ள தீவிர வலதுசாரிகள் குற்றஞ்சாட்டினார்கள்.

ஆனால், வெள்ளையர்களை விடவும் கறுப்பின-அமெரிக்கர்கள் கூடுதலாக நோய் பற்றி அறிந்து வைத்திருந்தார்கள் என்பது ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

இன்னொரு மேலாதிக்க சிந்தனை பற்றியும் பேச வேண்டும். இது பொதுவாக ஏற்றத்தாழ்வுகள் நிலவும் சகல சமூகங்களுக்கும் பொதுவானது.

ஒரு தனிமனிதர் சமூக இடைவெளி பேணத் தவறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரது தோல் கறுப்பாக இருக்குமாயின், இவன் கறுப்பினத்தவன் என்பதால் தவறு செய்கிறான் என்று சமூகம் குற்றஞ்சாட்டும். அதுவே, தோல் சிவப்பாக இருப்பவன் செய்தால், வெள்ளையன் தவறிழைக்கிறான் என்று கூறுவதில்லை. தவறு செய்தவர் தனிமனிதாக அடையாளப்படுத்தப்படுவார்.

இது மாதிரி இன்று அமெரிக்காவில் இனரீதியிலான ஏற்றத்தாழ்வுகள் இருந்தால், இதற்குக் காரணம் கறுப்பினத்தவர்கள் அல்ல. காரணம், இனவாதமே ஆகும்.

இதனை கொவிட்-19 மரணங்களுடன் பொருத்திப் பார்த்தால், கூடுதலாக கறுப்பினத்தவர்கள் நோய்த் தொற்றுக்கு உள்ளானால், கூடுதலாக மரணித்தால், அதற்குக் காரணம், அமெரிக்காவில் ஆழ வேரூன்றிய இனவாதமே அன்றி கறுப்பர்கள் அல்லர்.

அடுத்து பிரிட்டனின் பிரச்சினைக்கு வருவோம். பிரிட்டனில் கறுப்பினத்தவர்கள் (Blacks), ஆசிய நாட்டவர்கள் (Asians) மற்றும் ஏனைய சிறுபான்மை இனக்குழுமங்களை (Minorities) ஆகியோரை ஒன்றாக சேர்த்து, பாமி (Bame) என்றழைப்பார்கள். இந்நாட்டின் சனத்தொகையில் 14 சதவீதமானவர்கள் பாமி பிரிவைச் சேர்ந்தவர்கள்.

பிரிட்டனில் கொவிட்-19 தொற்றி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டன. அதி தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட இரண்டாயிரம் நோயாளிகளில், சுமார் 35 சதவீதமானவர்கள் பாமி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது.

பிரிட்டனிலும் இனத்துவ அடிப்படையில் தொற்றுக்கள் மற்றும் மரணங்கள் பற்றிய புள்ளிவிபரங்கள் திரட்டப்படவில்லை. இருந்தபோதிலும், கொவிட்-19 தொற்றி முதலில் மரணத்தைத் தழுவிய 12 மருத்துவர்கள் பாமி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது முக்கியமான விடயம்.

பிரிட்டனின் சுகாதார சேவையில் வேற்று நாட்டவர்கள் கூடுதலாக வேலை செய்கிறார்கள். கொவிட்-19 இறந்தவர்களின் எண்ணிக்கையில் 68 சதவீதமானவர்கள் பாமி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதை கார்டியன் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

இங்கு 12 மருத்துவர்கள் கொவிட்-19 ஆல் இறந்ததை எழுமாற்றான விடயமாகக் கருத முடியாதென பிரிட்டிஷ் மருத்துவ சங்கத்தின் தலைவர் கூறியிருக்கிறார். இந்த மரணங்கள் பற்றி விசாரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் பிரிட்டன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

பொதுவாக அமெரிக்காவின் வெள்ளையர்கள் கறுப்பினத்தவர்கள் பற்றி என்ன நினைக்கிறார்களோ, அதே மாதிரிதான் பிரிட்டனில் வாழும் ஆங்கிலேயர்கள் ஏனைய சிறுபான்மை பற்றி சிந்திக்கிறார்கள்.

இந்த சிறுபான்மை மக்கள் மத்தியில் மாரடைப்பு முதலான நோய்கள் அதிகம். இவர்கள் மிகவும் ஒடுங்கிய வீடுகளில் நெருக்கமாக வாழ்கிறார்கள், ஒரு வீட்டில் பல சந்ததிகளைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இவர்கள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடாக இருப்பதால் கொவிட்-19 ஆட்கொல்லி நோய் கூடுதலாக தொற்றுகிறது என்பது மற்றொரு குற்றச்சாட்டு.

தமக்குப் பாகுபாடு இழைக்கப்படுவதால் சிறுபான்மை மக்கள் பல வசதிகளையும் இழந்திருக்கிறார்கள் என்பதை ஆங்கிலேயர்கள் ஏற்றுக் கொள்வது கிடையாது.

மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என்ற விடயத்தையே எடுத்துக் கொள்வோம். கொவிட்-19 நோயாளிகளை நேரடியாக கையாள்வதில் பாமி சமூக வைத்தியர்கள் அதிக அக்கறை காட்டியதை ஊடகங்கள் சுட்டிக்காட்டின. ஆனால், தமக்கு போதிய பாதுகாப்பைத் தரக்கூடிய கவச அங்கிகள் கிடையாதென முறையிடுவதில் அவர்களுக்கு இருந்த தயக்கத்தை ஊடகங்கள் அறிவிப்பதில்லை. சுகாதார சேவைகள் அடங்கலாக நிர்வாக கட்டமைப்பில் நீறுபூத்த நெருப்பாக மறைந்திருக்கும் இனவாதம்.

இந்த இனவாதமும், பாரபட்சமும் சமூக, அரசியல், வரலாற்று பின்புலங்களை அடிப்படையாகக் கொண்டு நிகழ்கின்றன. அரசியல் தலைவர்கள் கொவிட்-19 நெருக்கடியை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, இனரீதியான பாரபட்சங்களை மீளவும் நிலைநிறுத்துகிறார்கள். அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். மக்களைக் கட்டுப்படுத்துவற்கான கொள்கைகள் என்ற பெயரில், ஓரங்கட்டப்பட்ட குழுக்களை இலக்கு வைக்கிறார்கள். இவற்றைத் தவிர்க்கும் ஏற்பாடுகள் அவசியம்.

இன்று கொவிட்-19 ஆட்கொல்லியைக் கட்டுப்படுத்தி, அதன் விளைவுகளில் இருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டிய கட்டத்தில் நிற்கிறோம். இந்த முயற்சியில் கண்ணுக்கு புலப்படாத பாரபட்சங்களும், வெளிப்படையான இனவாதமும் நுழைந்து விட இடமளிக்கக் கூடாது.

காப்பாற்றப்பட வேண்டியவர்களுக்கு இனம், மதம், மொழி உள்ளிட்ட அடையாளங்கள் இருக்கின்றன. அந்த அடையாளங்களைத் தெரிந்து கொண்டு அரசுகள் காரியங்களை நிறைவேற்றும் பட்சத்தில், தற்போதைய நெருக்கடியான தருணத்தில் சகலரும் உதவி பெறுவதை உறுதி செய்யக்கூடியதாக இருக்கும்.

சதீஷ் கிருஷ்ணபிள்ளை