சொந்தக்

காணி வேண்டும் வீடு வேண்டும்

தாளமிட்டுப் பாடு

சம

நீதி வேண்டும் உரிமை வேண்டும்

அணி திரண்டு கூடு                                                           (சொந்தக்)

 

ஓடும்

எலிக்குக் கூட வளைகள் உண்டு

நரிக்குக் கூட புதர்கள் உண்டு

நாங்கள் மட்டும் நாதியற்றுத் திரிவதோ?

நாணலைப் போல் தலை குணிந்து மடிவதோ?        (சொந்தக்)

 

செத்தால்

புதைக்கக் கூட இடமும் இல்லை

பூக்கள் வளர்க்க நிலமும் இல்லை

ஏதுமற்றக் கூலிகளாய் அழுவதோ?

எங்கள் வாழ்வும் மண்ணாகிப் போவதோ?                (சொந்தக்)

 

காலைச்

சூரியன் போல் எழுந்து நிற்போம்

மலைகள் அதிர உரத்துச் சொல்வோம்

காணி வீடு உரிமை எமக்குத்தானே வேண்டும்

களிப்புடன் நாமும் வாழ வேண்டும்                            (சொந்தக்)

 

சிவ. இராஜேந்திரன்