பட மூலம், Selvaraja Rajasegar
பல வருடங்களாக இலங்கையில் சுதந்திர ஊடக இயக்கம் மற்றும் சுதந்திரமாக கருத்துகளை வெளிப்படுத்துபவர்கள் ஜனவரி மாதத்தை “கறுப்பு ஜனவரி” என்று பெயரிட்டுள்ளனர். ஜனவரி மாதத்தில் பல்வேறு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை, துன்புறுத்தல்கள் மட்டுமன்றி ஊடக நிறுவனங்களுக்கு தாக்குதல்கள் நடாத்தப்பட்டமை அதிக அளவில் இடம்பெற்றதாலேயே கறுப்பு ஜனவரி என்று குறிப்பிடுகிறார்கள்.
ஜனவரி 24ஆம் திகதி அத்தகையதொரு கறுப்பு நாளாகும். திருகோணமலையை வதிவிடமாக கொண்ட தமிழ் ஊடகவியலாளராகிய சுப்ரமணியம் சுகிர்தராஜன் 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதியன்று சுட்டுக் கொல்லப்பட்டார். கொழும்பை வதிவிடமாக கொண்ட சிங்கள கேலிச்சித்திர (கார்டூன்) கலைஞரும் ஊடகவியலாளருமான பிரகீத் எக்னலிகொட 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி காணாமலாக்கப்பட்டார்.
நினைவிலிருந்து மங்கிவிடும் பத்திரிகையாளரின் கொலை: சுப்ரமணியம் சுகிர்தராஜன்
SSR என்று அழைக்கப்படும் பிரபலமான ஊடகவியலாளரான சுகிர்தராஜன் தமிழ் மொழி தினசரி சுடர் ஒளி பத்திரிகையின் பகுதி நேர மாகாண மட்டத்திலான பத்திரகையாளராக பணிபுரிந்தார். இவர் இரண்டு குழந்தைகளின் தந்தையாவார். SSR இன் நண்பரும் ஊடகவியலாளருமான ஒருவர் SSR சுட்டுக் கொலை செய்யப்பட்ட இடத்திற்கு என்னை அழைத்துச்சென்றார். அது கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திலிருந்து 100 மீற்றர் தொலைவிலும், ஆளுநர் வீட்டிலிருந்து 200 மீற்றர் தொலைவிலும் இருந்தது. கடந்த சில தினங்களாக தான் பாதுகாப்பற்ற தன்மையை உணர்வதாகவும், அதனால்தான் தனக்கு பாதுகாப்பான வீடொன்றை தேடிக்கொண்டிருப்பதாகவும் ஒரு ஊடகவியலாளரான என்னுடைய நண்பர் ஒருவர் கூறினார். உண்மையில் வீடொன்று கிடைக்கப்பெற்றபோதிலும் அங்கு செல்வதற்கு முன்பே சுகிர்தராஜன் கொலை செய்யப்பட்டுவிட்டார். நான் பேசிய அனைவரும் தெரிவித்தது யாதெனில் அவரது படுகொலைக்கு முக்கிய காரணம் “திருக்கோணமலை 5 வழக்கு” எனப்படும் பிரசித்தமான 2006ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி திருக்கோணமலை கடற்கரையில் கொலை செய்யப்பட்ட 5 இளைஞர்களின் புகைப்படத்தை எடுத்ததாலாகும். எனக்குத் தெரிந்த SSR இன் இன்னுமொரு நண்பர், ஜனவரி மாதம் 2ஆம் திகதி அதிகாலை SSR தமக்கு சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ள திருக்கோணமலை கடற்கரையில் கொலை செய்யப்பட்ட 5 இளைஞர்களின் புகைப்படங்களை எடுக்க விரும்புவதாகக் கூறியுள்ளார்.
எனக்குத் தெரிந்த அந்த நண்பர் SSR ஐ புகைப்பட கருவியுடன் வைத்தியசாலையில் கொண்டுசேர்த்துள்ளார். அவரைப் பொறுத்தவரையில் இராணுவம் எவரையும் குறிப்பாக, குடும்ப அங்கத்தவர்களை கூட சவக்கிடங்கிற்கு சென்று சடலங்களை பார்ப்பதற்கு அனுமதி வழங்கவில்லை. ஆனால், SSR பிடிவாதமாக சென்று படம் பிடித்துள்ளார். அவர் எடுத்த புகைப்படங்கள் 2006ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் திகதி சுடர் ஒளி பத்திரிகையில் வெளியாகியுள்ளது. இளைஞர்கள் சுட்டுக்கொலை செய்யப்படாத வகையில் வெளியாகியிருந்த புகைப்படங்களை கேள்விக்குட்படுத்தும் வண்ணம் அவர்களின் உடலில் துப்பாக்கி சூட்டு அடையாளங்கள் காணப்படும் புகைப்படங்களை SSR எடுத்திருந்தார். இதன் மூலம் இளைஞர்கள் சுட்டு கொலை செய்யப்படவில்லை என்ற கருத்தை மறுத்தனர். எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு குறிப்பிட்டுள்ளதன் படி, அவர் கொலை செய்யப்படுவதற்கு முதல் நாள் திருகோணமலை பிராந்தியத்தின் ஈ.பி.டி.பி. உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களின் துன்புறுத்தல்கள், சித்திரவதைகள் நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கையிட்டுள்ளார்.
திருகோணமலையை வதிவிடமாக கொண்ட SSR இன் ஊடகவியலாளர் நண்பர் ஒருவர் தனக்கும் SSRக்கும் இடையிலான தொடர்பு பற்றியும் அவர் கொலை செய்யப்பட்டதற்கு பின்னர் உள்ள சூழ்நிலை பற்றியும் என்னுடன் பேசினார். SSR அவர்களின் கொலை சம்பவம் தெரிந்த உடனேயே தன்னிச்சையாக அவர் கொலை செய்யப்பட்ட இடத்திற்குச் சென்றதாகக் கூறினார். ஆனாலும், பின்னர் அவரின் உடலைப் பார்க்கவோ, இறுதி சடங்கில் கலந்துக்கொள்வதற்கோ, வைத்தியசாலைக்குச் செல்வதற்கோ தமக்குப் பயமாக இருந்ததாகக் கூறினார். இரண்டு நாட்களுக்குப் பிறகு “எதிரிகளை அழிக்கும் படை” என்ற குழுவிடமிருந்து தனக்கும் ஒரு கடிதம் வந்ததாகக் கூறினார். அந்தக் கடிதத்தில் வன்னி புலிப் பயங்கரவாதிகளுக்காக தான் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது என்றும், அவ்வாறான 3 நபர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும், அதில் ஒரு நபராகிய சுகிர்தராஜனுக்கான தீர்ப்பை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டு, அடுத்து தனக்கும் இதே தீர்ப்பு வழங்கப்படும் என்றும், அதற்கான நாட்களை கணித்துக்கொண்டிருப்பதாகவும் அக்கடிதத்தில் அச்சுறுத்தப்பட்டிருந்தது என்று கூறினார்.
ஊடகவியலாளர் காணாமல் ஆக்கப்படுதல்: பிரகீத் எக்னலிகொட
SSR போன்றே பிரகீத் எக்னலிகொடவும் தனது கார்ட்டூன் சித்திரங்கள் மற்றும் கடிதங்கள் மூலமும் பல்வேறு விவகாரங்கள் மற்றும் வெளிப்படுத்தல்களை செய்தமைக்காக அதனோடு தொடர்புடைய நபர்களின் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்ட நபராவார். எக்னலிகொட இரு மகன்களின் தந்தையாவார். குற்றவியல் விசாரணை திணைக்களம் ஊடாக நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளுக்கு அமைய எக்னலிகொட கொழும்பு மாவட்ட ராஜகிரிய பிரதேசத்தில் வைத்து இராணுவ புலனாய்வு பிரிவால் கடத்தப்பட்டு கிரிதல புலனாய்வு பிரிவுக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அவர் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பம் தொடர்பாக எழுதிய புத்தகம் தொடர்பாகவே அவரிடம் விசாரணை நடாத்தப்பட்டது. குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் ஊடாக நடாத்தப்பட்ட விசாரணை அறிக்கைகளுக்கமைய, கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் எந்தவொரு குறிப்புக்களையும், பதிவுகளையும் மேற்கொள்ளாமல் பிரகீத் எக்னலிகொடவை 25ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி மாலை வரை அக்கரைப்பற்று பிரதேசத்தில் இருந்து கிரிதல வரை கொண்டுசென்றிருக்கிறார்கள்.
சட்டமா அதிபர் திணைக்களத்திற்காக இந்த வழக்கைத் தாக்கல் செய்த குற்றவியல் விசாரணை திணைக்களம் மற்றும் அரச சட்டத்தரணிகளால் மீண்டும் மீண்டும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது யாதெனில், இராணுவம் தவறான தகவல்களை வழங்குவதாகவும், சாட்சிகள் இருப்பதை மறுதலிப்பதாகவும், சாட்சி வழங்குவதை காலம் கடத்துவதாகவும், விசாரணை நடவடிக்கைகள் அனைத்தும் நீதித் துறையை தவறாக வழிநடத்துகிறது என்பதாகும். விசாரணை நடவடிக்கைகளுக்கு இராணுவம் குறைந்தபட்ச ஒத்துழைப்பை வழங்குவதோடு தடைகளை ஏற்படுத்துவது மற்றும் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். 2010.01.25 அன்று எக்னலிகொடவை கிரிதல இராணுவ முகாமில் தான் கண்டார் என சாட்சியமளித்த நபர் பின்னர் கிரிதல இராணுவ முகாமிலிருந்து தனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படுத்துவதற்கு சதித் திட்டம் தீட்டப்படுவதாக பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துக்கு நீதிகோரி போராடிவரும் அவரின் மனைவி திருமதி. எக்னலிகொடவுக்கு எதிராக சுவரொட்டி மற்றும் துண்டுப்பிரசுரம் ஆகியன பிரசித்தமான இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலைசெய்யப்பட்ட அதிகாரிகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது, அந்தப் பெண் நீதிமன்றத்தின் மேல் முழு நம்பிக்கை வைத்து தனியாக நீதிமன்றத்திற்கு 100 தடவைக்கு அதிகமாகவும் சென்றுள்ளார். எக்னலிகொட காணாமலாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு ஆதரவாக இருப்பவர்கள் மூலமாகவும் அந்தப் பெண்ணுக்கு எதிர்ப்புகள் ஏற்பட்டபோது அது தொடர்பாக அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இதில் ஒரு முறைப்பாடு பொதுபலசேனா அமைப்பின் தலைவர் கலபொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரானதாகும்.
கருத்துச் சுதந்திரம்
நான் உணர்ந்த விதத்தில் இலங்கையில் தற்போதைய காலகட்டத்தில் இடம்பெறுவனவற்றைக் குறிப்பிடாமல் இந்த கட்டுரை முழுமை அடையாது போய்விடும். நான் 2017ஆம் ஆண்டு கேள்வி எழுப்பிய சில சம்பவங்களை இதன் ஊடாக குறிப்பிடுவதற்கு முயல்கின்றேன். கொழும்பில் மற்றும் அதனை அண்மித்த சிறைச்சாலைகளில் நடாத்தப்பட்ட கூட்டுப் படுகொலைகளுக்கு எதிராக செயற்படுத்தி வந்த அமைப்பைச் சேர்ந்த ஒருவரின் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்டமை, இனம்தெரியாத நபர்களினால் மனித உரிமைகள் தொடர்பான சட்டத்தரணி ஒருவருக்கு தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தமை மற்றும் சிறுபான்மையினரின் மதங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற இன்னல்களுக்கு எதிராக செயற்பட்டு வந்த சடத்தரணி ஒருவரை நீதித்துறை அமைச்சர் மிரட்டல் விடுதல், பல மாதங்களாக தொழிற்சங்க வேலை நிறுத்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தொழிற்சங்கத் தலைவரை ஒருவரைக் கடத்திசென்றமை, முன்பு நடந்த யுத்தத்தினால் வட மாகாணம் அழிவுக்கு உட்படுத்தபடுத்தப்பட்டமை, போராட்டத்தில் ஈடுபட்டு வந்த காணாமல் ஆக்கப்பட்டவரின் மனைவியொருவருக்கு அழுத்தங்கள் பிரயோகித்தமை, யுத்தத்தின் காரணமாக இறந்தவர்களின் நினைவேந்தல் செய்வதை நிறுத்துதல் மற்றும் ஏற்பாட்டாளர்களை தொந்தரவுக்கு உள்ளாக்குதல் மற்றும் விசாரணைக்கு உட்படுத்தல் மற்றும் அரச நிறுவனமொன்றை புகைப்படம் எடுத்தமை தொடர்பாக இளைஞர்களை அழைத்து விசாரணை செய்து மிரட்டியமை, ஊடக வியலாளர்களை விசாரணைகளுக்காக அழைத்தல் மற்றும் காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பாகவும் இராணுவமயமாக்கல் தொடர்பாகவும் எழுதுவதை தடுத்துநிறுத்த முற்பட்டமை போன்ற பல சம்பவங்கள் உள்ளன. தன்னிச்சையாக இணையதளங்களை முடக்கி வைத்தல் இவ்வாறான பல விடயங்களை என்னால் பட்டியலிட முடியும். எந்த ஒரு ஊடகவியலாளரும் 2017ஆம் ஆண்டு கொலைசெய்யவோ, காணாமலாக்கப்படவோ இல்லாவிட்டாலும் தெளிவாகவே அந்த வருடமும் கருத்துச் சுதந்திரத்திற்கு தடைகளை ஏற்படுத்திய வருடமாகவே அமைந்தது.
எக்னலிகொட சுகர்தராஜன் மற்றும் ஏனைய பாதிக்கப்பட்டவர்களின் நீதிக்கான எதிர்பார்ப்புகள்
திருமதி எக்னலிகொட அம்மையாரின் தைரியமான, உறுதியான போராட்டம், குறிப்பிடத்தக்க தேசிய மற்றும் சர்வதேசத்தின் கவனம், குற்ற விசாரணை திணைக்களத்தின் விசாரணைகள் காரணமாக 2016-2017ஆம் ஆண்டுகளில் எக்னலிகொட காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பலவிதமான தகவல்களை வெளிப்படுத்தக்கூடியதாக இருந்தது. ஆனாலும் இராணுவத்தினரின் குறைந்த பட்ச ஒத்துழைப்பு மற்றும் பொதுவெளியில் சந்தேக நபர்கள் சிறைவைக்கப்பட்டமை தொடர்பாக ஜனாதிபதி கேள்விக்கு உட்படுத்தியமையை அடுத்து பிரதான சந்தேக நபர்களை பிணை வழங்கி விடுவித்தல் போன்ற காரணங்களை அடிப்படையாக கொண்டு வழக்கின் நகர்வு படிப்படியாக பின்னடைவுக்கு கொண்டுசெல்லப்பட்டது. எக்னலிகொடவின் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, பிரகீத் காணாமலாக்கப்படுவதற்கு 4 வருடங்களுக்கு முன் சுகிர்தராஜன் கொலைசெய்யப்பட்ட சம்பவத்திற்கு கிடைத்த தேசிய மற்றும் சர்வதேச கவனம் குறைவாகவே இருந்தது. அது தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை நடவடிக்கைகள் முன்னேற்றம் அடையவில்லை. அது தொடர்பாக எந்த ஒரு நபரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படவில்லை என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடிய விடயமல்ல.
சுகர்தராஜன் கொலை செய்யப்பட்டு 14 வருடங்கள் கடந்து போயுள்ளன. எக்னலிகொட கானாமலாக்கப்பட்டு 10 வருடங்கள் கடந்துள்ளன. சுகர்தராஜன் மற்றும் எக்னலிகொட போன்றவர்களுக்கு இழைக்கப்பட்ட துன்புறுத்தல் மற்றும் அநீதிகளுக்கு பொறுப்பு கூறுவதாக உறுதியளித்த நல்லாட்சி அரசாங்கம் 5 வருடங்கள் கழிந்து ஆட்சியில் இருந்தும் இறங்கியுள்ளது. ஆனாலும், அவர்கள் இருவருக்கும் போலவே, கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரத்தை மீறியதற்காக கறுப்பு ஜனவரியில் இரையாக்கப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதாலோ அல்லது குற்றத்தை ஒப்புக்கொள்வதன் மூலமோ உண்மை மற்றும் நீதியை ஏற்படுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஒரு தொலைதூர கனவாகவே இருக்கிறது
ருக்கி பெர்ணான்டோ
ஆசிரியர் குறிப்பு: மனித உரிமை செயற்பாட்டாளரான ருக்கி பெர்ணான்டோ எழுதி 2018 ஜனவரி 24ஆம் திகதி கிரவுண்விவ்ஸ் தளத்தில் Ekneligoda, Sugirtharajan and 24th January என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம். கட்டுரையின் ஒரு சில பகுதிகள் காலத்திற்கேற்ப அப்டேட் செய்யப்பட்டுள்ளதென்பதை குறிப்பிட விரும்புகிறோம்.