“பிரகீத் காணாமலாக்கப்பட்ட சம்பவத்தை காணாமல்போக விடாமல் பார்த்துக்கொள்வதுதான் எனது ஒரே இலக்கு. அவரை நான் உயிர் வாழ வைத்துக்கொண்டிருக்கிறேன். நான் அனுபவிக்கும் இன்ப துன்பங்களை அவருடன் பகிர்ந்துகொள்வேன்.” தன்னுடைய கணவருக்கு என்ன நேர்ந்தது என்பதை தெரிந்துகொள்ள 10 வருடங்களாகப் போராடிவரும் சந்தியா எக்னலிகொட இவ்வாறு கூறுகிறார்.
2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி வீட்டிலிருந்து வெளியில் சென்ற ஊடகவியலாளரும் கார்டூனிஸ்டுமான பிரகீத் எக்னலிகொட வீடுதிரும்பவில்லை. அன்றிலிருந்து தனது கணவருக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்ள பொலிஸ் நிலையம், இராணுவ தலைமையகம், ஜனாதிபதி செயலகம், நீதிமன்றம், மதத் தலங்கள், சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள் என படியேறியும் நீதி கிடைக்கவில்லை. தான் இன்னும் எவ்வளவு தூரம் போகவேண்டியிருக்கும் என்பதை அறியாதபோதிலும் என்றாவது ஒருநாள் நீதியை அடைந்தே தீருவேன் என்று சந்தியா கூறுகிறார். மாற்றத்துக்கு சந்தியா வழங்கிய நேர்க்காணல் கீழே இணைக்கப்பட்டுள்ளது. அதன் தமிழ் மொழிபெயர்ப்பும் தரப்பட்டுள்ளது.
கணவரைத் தேடும் எனது போராட்டப் பயணத்தை ஓர் இலக்குடனேயே ஆரம்பித்தேன். நீதியை அடைய எனக்கு எவ்வளவு தூரம், எவ்வளவு காலம் எடுக்கும் என்று தெரியாது. என்றாவது ஒரு நாள் அந்த நீதியை அடையும் வரை பிரகீத் காணாமலாக்கப்பட்ட விடயத்தை காணாமல்போக விடாமல் பார்த்துக்கொள்வதுதான் எனது ஒரே இலக்கு. பிரகீத் எங்கோ ஓரிடத்தில் உயிரோடு இருக்கிறார் என்று நான் அன்றும் கூறினேன். இன்றும் அந்த நம்பிக்கையுடன்தான் இருக்கிறேன். அவரை நான் உயிர்வாழ வைத்துக்கொண்டிருக்கிறேன். நான் அனுபவிக்கும் இன்ப துன்பங்களை அவருடன் நான் பகிர்ந்துகொள்வேன். இந்த நோக்கத்துடன் ஆரம்பித்த எனது போராட்டம் 10 வருடத்தை தொட்டுவிட்டது.
இந்தப் பயணப் போராட்டத்தில் நீதிமன்றிடம் இருந்து நான் எதைப் பெற்றுக்கொண்டேன்? நான் இன்றும் நீதிமன்றிடமிருந்து நீதியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பாதிக்கப்பட்ட மனிதர். இன்னும் நீதிமன்றிடமிருந்து நீதியை என்னால் பெற்றுக்கொள்ள முடியாது போயுள்ளது. கடந்த 5 வருடங்களுள் நீதிமன்றின் மூலம் நீதி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. பிரகீத்துக்கு என்ன நடந்தது என்று எம்மால் தெரிந்துகொள்ள முடிந்தது. இருந்தாலும், நீதிமன்றின் முன்னால் தீர்வுகாணப்படாமல் பத்தாவது வருடத்தில் கால்பதிக்க வேண்டியுள்ளது.
அதுமட்டுமல்லாமல், பிரகீத் வழக்குடன் தொடர்புடைய சாட்சிகள் அச்சுறுத்தப்படும், சாட்சியங்கள் அழிக்கப்படும் சூழ்நிலையில்தான் நாளை நீதியை நோக்கிய எனது போராட்டத்தை நடாத்தவேண்டியிருக்கிறது. இன்னும் எவ்வளவு காலம், இன்னும் எவ்வளவு தூரம் போகவேண்டியிருக்கும் என்று எனக்குத் தெரியாது. ஆனாலும், நான் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். எவ்வளவு காலம் கடந்தாலும் எப்படியாவது நீதியை அடைந்தே தீருவேன்.
கார்டூன்கள் வரைவதற்காக பிரகீத் எக்னலிகொட பயன்படுத்திய பொருட்களும், நீரிழிவு நோய்க்காக அவர் எடுத்துக்கொண்ட மருந்தும்.