பட மூலம், news.yahoo
எந்தவொரு தலைசிறந்த மதத்திற்கும் இல்லமொன்று இருக்கக்கூடிய தேசம் இந்தியா என்பார் அன்னி பெசன்ட் அம்மையார்.
அரசியல் யாப்பின் மூலம் மதச்சார்பின்மையை வரித்துக் கொண்ட தேசம். அதன் பன்முகத்தன்மையை அன்னி பெசன்ட் அம்மையார் அளவிற்கு எவரும் சிறப்பாக விபரிக்க முடியாதெனலாம். இந்த மதச்சார்பின்மை கோட்பாடு பற்றி கடந்த வாரம் பெரும் வாதப் பிரதிவாதங்கள். இதற்குக் காரணம், சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டமூலம்.
இம்மாதம் நான்காம் திகதி லோக் சபாவில் 311 இற்கு 80 என்ற வாக்கு வித்தியாசத்தில் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. கடந்த புதன்கிழமை ராஜ்ய சபாவில் 125 இற்கு 99 என்ற வாக்கு வித்தியாசத்தில் சட்டமூலத்திற்கு அங்கீகாரம் கிடைத்தது. குடியுரிமைத் திருத்தச் சட்டமூலம் வரலாற்றுச் சிறப்பு மிக்கதென பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்துள்ளது. இதன் மூலம் இலட்சக்கணக்கான அகதிகள் விடுதலை பெறுவார்கள் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
எனினும், இந்தச் சட்டமூலத்திற்கு எதிராக இந்தியாவின் வடகிழக்குப் பிராந்தியத்தில் ஆர்ப்பாட்டங்கள் தலைதூக்கியுள்ளன. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப் போவதாக காங்கிரஸ் கட்சி சூளுரைத்துள்ளது.
இந்தியாவிலுள்ள சட்டதிட்டங்களின் பிரகாரம், உரியதொரு பயண ஆவணமின்றி நாட்டுக்குள் பிரவேசித்து, அனுமதிக்கப்பட்ட கால எல்லையைத் தாண்டி தங்கியிருக்கும் எவரும் இந்திய குடிமகனாக மாற முடியாது. அத்தகைய ஒருவர் சிறை வைக்கப்படுவார் அல்லது நாடு கடத்தப்படுவார். இந்த ஏற்பாட்டைத் திருத்தும் வகையில், குடியுரிமைத் திருத்தச் சட்டமூலத்தை நரேந்திர மோதியின் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது.
இதன் பிரகாரம், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து உரிய ஆவணம் எதுவும் இன்றி இந்தியாவிற்குத் திரும்பியவர்கள் குடியுரிமை பெறும் வாய்ப்புக் கிடைக்கிறது. இதில் முக்கியமான விடயம் யாதெனில், இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள், பார்ஸிகள், கிறிஸ்தவர்கள் ஆகியோர் மாத்திரமே குடியுரிமை பெறலாம். முஸ்லிம்களுக்கு வாய்ப்புக் கிடையாது.
2015ஆம் ஆண்டுக்கு முன்னதாக இந்தியா திரும்பியவர்கள் குடியுரிமை பெற முடியும். இந்தச் சட்டமூலம், குடியுரிமை பெறுவதற்கான விதிமுறைகள் சிலவற்றையும் தளர்த்துகிறது.
முன்னர், இந்தியாவில் குறைந்தபட்சம் 11 வருடங்களாவது தங்கியிருந்த குடியேற்றவாசிகளுக்கு மாத்திரம் இயல்பாக குடியுரிமை வழங்கும் ஏற்பாடுகள் இருந்தன. இது கடந்த 14 வருடங்களில் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் இந்தியாவில் தங்கியிருந்த எவருக்கும் குடியுரிமை வழங்கக்கூடிய திருத்தங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்தச் சட்டமூலத்தை ஆட்சேபிக்கும் எதிர்க்கட்சிகள், இது முஸ்லிம்களை ஓரங்கட்டுகிறது என்ற வாதத்தை முன்வைக்கின்றன. இந்தியா என்பது மதச்சார்பின்மை தேசமாக இருக்கும் பட்சத்தில், முஸ்லிம்களை ஒதுக்குவது ஏனென காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்புகிறது. இந்தக் கேள்விக்கு பீ.ஜே.பி. தலைமையிலான அரசாங்கம் வழங்கும் பதில் இலகுவானதாக இருக்கிறது.
இன்று உலகம் முழுவதிலும் நிறைய முஸ்லிம் நாடுகள் இருக்கின்றன. பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் முஸ்லிம்களே அடக்குமுறையை எதிர்கொண்டாலும் கூட, அவர்கள் ஏனைய முஸ்லிம் நாடொன்றில் புகலிடம் கோரலாம் என்கிறார் அமித் ஷா. இந்த மூன்று நாடுகளும் இஸ்லாமிய குடியரசுகளாக இருக்கின்றன. இங்கு வாழும் மற்ற மதத்தவர்கள் அடக்குமுறைகளுக்கு உள்ளாகும் பட்சத்தில், அவர்களுக்கென்று நாடொன்று இருக்க வேண்டாமா என்பது அமித் ஷாவின் வாதம்.
இந்தியாவின் வட கிழக்குப் பிராந்தியத்தைச் சேர்ந்தோர் குடியுரிமைத் திருத்தச் சட்டமூலத்தை ஆட்சேபிப்பதற்கு காரணம் உண்டு. இங்கு வாழும் அகதிகளுக்கு குடியுரிமை கிடைக்கும் பட்சத்தில், இங்குள்ள ஏனைய சமூகத்தவர்கள் சலுகைகளை இழக்கக்கூடும் என பிரதேசவாசிகள் அஞ்சுவது பிரதான காரணம். குறிப்பாக, அசாம், திரிபுரா, மணிப்பூர், நாகலாந்து, மேகாலயா, அருணாச்சல் பிரதேஷ் போன்ற மாநிலங்களில் பழங்குடி மக்களும், விவசாயிகளும் செறிந்து வாழ்கிறார்கள்.
பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து தமது மண்ணிற்கு வந்த சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் குடியுரிமை பெறும் பட்சத்தில், தமது கலாசார அடையாளம் சிதைந்து விடுமென மக்கள் கருதுகிறார்கள். அதுபோன்றே, தத்தமது தேர்தல் தொகுதிகளில் இனப்பரம்பல் சிதைந்து, எதிர்காலத்தில் அரசியல் பிரதிநிதித்துவத்தை இழக்க நேரிடும் என்ற கரிசனையும் இவர்களுக்கு இருக்கிறது. இந்தக் கரிசனைக்கு பதில் அளிக்கும் வகையில், அசாம், மேகாலயா, மிஸோரம், திரிபுரா போன்ற மாநிலங்களில் பழங்குடிகள் வாழும் பிரதேசங்களுக்கு சில விதிவிலக்குகள் உள்ளதாக நரேந்திர மோதியின் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தவிர, திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக இந்தியப் பிரஜையொருவர் எத்தகைய பாதிப்பிற்கும் உள்ளாக இடமளிக்கப் போவதில்லையென பிரதமர் வலியுறுத்திக் கூறியிருக்கிறார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டமூலம் என்பது தனியொரு விஷயம் அல்ல. அதனுடன் இந்தியப் பிரஜைகளின் தேசியப் பதிவேடு என்பதையும் இணைத்துப் பார்க்க வேண்டும். கடந்த தசாப்தங்களில் பெருமளவு சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் இந்தியாவிற்குள் பிரவேசித்ததாக பீ.ஜே.பி. தலைமையிலான அரசாங்கம் குறிப்பிடுகிறது. இத்தகைய குடியேற்றவாசிகளை அடையாளம் காண்பதற்காக தேசிய பதிவேடு பயன்படுத்தப்படும்.
அசாம் மாநிலத்தில் வாழும் மூன்று கோடிக்கு மேலான மக்களில் 19 இலட்சம் பேர் தேசிய பிரஜைகள் பதிவேட்டில் தமது பெயர் இடம்பெறக்கூடிய வாய்ப்பை இழந்துள்ளனர். இதற்குக் காரணம், உரிய ஆவணங்கள் இல்லாதிருப்பதுதான்.
இவர்களில் பலர் முஸ்லிம்கள். இவர்கள் தமது சொந்த நாட்டுக்குள் குடியுரிமை இல்லாதவர்களாக மாறும் துர்ப்பாக்கியத்தை எதிர்கொள்கிறார்கள். இது எந்தளவுக்கு ஆரோக்கியமானது என்பது கேள்விக் குறியே.
மியன்மாரில் இருந்து இந்தியாவை அடைந்து அரசியல் தஞ்சம் கோரும் ரோஹிங்கியா முஸ்லிம்களாக இருக்கட்டும், இலங்கையில் இருந்து அகதிகளாகச் சென்ற தமிழர்களாக இருக்கட்டும், இவர்கள் சகலருமே மனிதர்கள் தான். இனம், மதம் என்பதன் அடிப்படையில் ஒருவரை ஓரங்கட்டி, இன்னொருவருக்கு மாத்திரம் குடியுரிமை வழங்குவது தான் பீ.ஜே.பி. தலைமையிலான அரசாங்கத்தின் நோக்கம் என்றால், அது எந்தளவு நியாயமானது என்ற கேள்வி எழுகிறது.
இன்று குடியுரிமைத் திருத்தச் சட்டமூலத்தை மையப்படுத்தி பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அயல்நாடுகளில் ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகி, இந்திய மண்ணில் கால்பதித்த மனிதர் ஒருவர், இந்தியராக குடியுரிமை பெற வேண்டுமா அல்லது சட்டவிரோத குடியேற்றவாசி என நிர்ணயிக்கப்பட வேண்டுமா என்பதை அவரது மதத்தின் அடிப்படையில் தீர்மானிக்க வழிவகுக்கும் சட்டம் என்ற விமர்சனம் முக்கியமானது.
பிரிட்டனின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த இந்திய தேசம், இந்தியா பாகிஸ்தான் என்ற இரு டொமினியன் குடியரசுகளாக பிரிக்கப்பட்டதை அடுத்து, இந்தியா என்பது மதச்சார்பின்மை ஜனநாயகம் என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. பாகிஸ்தான் என்பது இந்திய துணைக் கண்டத்தில் வாழும் முஸ்லிம்களின் தாயகம் என்று வரையறை செய்து கொள்ளப்பட்டது.
இந்தியா இந்துக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டதாக இருந்தபோதிலும், அந்தத் தேசம் மதத்தின் பெயரால் வரையறை செய்யப்படவில்லை. மாறாக, சகல மதங்களைப் பின்பற்றுவோரும் சமாதானமாக, ஒற்றுமையாக வாழக்கூடிய தேசமாகக் கருதப்பட்டது. இதுவே உலகின் மாபெரும் ஜனநாயக தேசம் என்ற ரீதியில் இந்தியாவின் பலம்.
அன்று இந்தியாவை இந்துக்களின் நாடாகவும், பாகிஸ்தானை முஸ்லிம் தேசமாகவும் மாற்றி பிரித்தாளும் சூழ்ச்சி செய்வது பிரிட்டன் காலனித்துவ ஆட்சியாளர்களின் நோக்கமாக இருந்தது. இந்தியாவின் விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களும், இந்தியாவைக் கட்டமைத்த சிற்பிகளும் சூழ்ச்சியைத் தோற்கடித்து, இந்தியாவை பன்முகத்தன்மை நிறைந்த வலுவான ஜனநாயக தேசமாகக் கட்டியெழுப்பினார்கள்.
இன்று பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான ஆட்சியாளர்கள், இந்தியாவிற்கு இந்து அடையாளமொன்றைப் பெற்றுத் தரும் முனைப்பில் ஈடுபட்டு வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இது சுதந்திரப் போராட்ட வீரர் மகாத்மா காந்தியும், இந்தியாவின முதலாவது பிரதம மந்திரி ஜவஹர்லால் நேருவும், அரசியல் யாப்பை வரைந்த டாக்டர் அம்பேத்காரும் கனவு கண்ட இந்தியா அல்ல.
சதீஷ் கிருஷ்ணபிள்ளை