பட மூலம், Tamil Guardian

ஆசிரியர் குறிப்பு: முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் கோவில் வளாகத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்பாக சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்களின் ஒன்றியம் வௌியிட்டுள்ள அறிக்கை.

###

01 அக்டோபர் 2019

கடந்த வாரத்திலே முல்லைத்தீவில் உள்ள‌ நீராவியடியிலே இடம்பெற்ற சம்பவத்தினை சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்களின் ஒன்றியம் கவலை தரும் ஒரு விடயமாக நோக்குகிறது. ஈஸ்டர் தாக்குதல்களினை அடுத்து இலங்கையில் சமயங்களுக்கு இடையிலான உறவுகள் மேலும் பலவீனமடைந்திருக்கின்றன. இந்தச் சூழமைவிலே, நீராவியடியிலே இடம்பெற்ற சம்பவம் சமயங்கள் மற்றும் இனங்களுக்கு இடையிலான சகவாழ்வு மேலும் சீர்குலைந்து போகும் நிலையினைத் தோற்றுவிக்கக் கூடும். இந்தத் தீவிலே வாழும் சமூகங்களுக்கு இடையிலே ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்கக் கூடிய உரையாடல்களை முன்னெடுப்பதன் மூலம் எதிர்காலத்திலே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதனைத் தடுக்கும் கடமை எம் அனைவருக்கும் உரியது.

கடந்த செப்டெம்பர் மாதம் 23 ஆம் திகதி பொது பல சேனாவினைச் சேர்ந்த சங்கைக்குரிய ஞானசார தேரர் உள்ளடங்கலான பௌத்த பிக்குகளின் தலைமையிலான ஒரு குழுவினர் குருகந்த ரஜமஹா விகாரையின் விகாராதிபதி காலஞ்சென்ற சங்கைக்குரிய கொலம்ப மேதலங்கார தேரரின் பூதவுடலினை நீராவியடியில் உள்ள ஓர் இடத்திலே நீதிமன்ற உத்தரவு ஒன்றினை மீறும் வகையிலே தகனம் செய்தனர். தகனக் கிரியைகள் மேற்கொள்ளப்பட்ட‌ இடத்தினை உள்ளூரில் இருக்கும் இந்துக்கள் நீராவியடிப் பிள்ளையார் கோயிலுக்குரிய நிலமாகவே கருதுகின்றனர். இந்துக்களின் வணக்கத்தலங்களின் உள்ளே வைத்து, இறந்தவர்களின் உடல்களைத் தகனம் செய்வதனை பெரும்பாலான இந்துக்கள் புனிதமற்ற ஒரு செயலாகவே கருதுகிறார்கள். அதனால்  சங்கைக்குரிய கொலம்ப மேதலங்கார தேரரின் பூதவுடலினை ஆலயத்துக்குச் சொந்தமானதாகத் தாம் கருதும் இடத்திலே தகனம் செய்ய மேற்கொள்ளப்பட்டு வந்த முயற்சிகளை அவர்கள் எதிர்த்தனர். அத்துடன் பூதவுடலினை சர்ச்சைக்குரிய இடத்துக்கு வெளியே, நீதிமன்றத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட மற்றொரு இடத்திலே தகனம் செய்வதற்கு உத்தரவு பிறப்பிக்கும் ஒரு நீதிமன்றக் கட்டளையினையும் அவர்கள் பெற்றிருந்தனர். இந்த நீதிமன்றக் கட்டளையினை மீறிச் செயற்பட்டவர்களுக்கு எதிராகப் பொலிஸார் எந்த நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை. அத்துடன் நீதிமன்றக் கட்டளை அமுல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியவர்களை நோக்கிக் கட்டளையினை மீறியவர்கள் மேற்கொண்ட தாக்குதல்களையும் பொலிஸார் தடுத்து நிறுத்தவில்லை.

போரின் முடிவின் பின்னர் நீராவியடிப் பிள்ளையார் கோயிலுக்குச் சொந்தமான நிலப்பரப்பிலே தற்போது அமைந்திருக்கும் குருகந்த ரஜமஹா விகாரை அமைக்கப்பட்டதனை உள்ளூரினைச் சேர்ந்த‌ இந்து சமயத்தினர் எதிர்த்த போது, அந்த இடத்திலே 2000 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பௌத்த தாதுகோபம் அமைந்திருந்ததாகக் காரணம் காட்டி புதிய விகாரையின் நிருமாணத்தினை இலங்கையின் தொல்பொருள் திணைக்களம் நியாயப்படுத்தியது.[i] ஆனால் சர்ச்சைக்குரிய நிலம் இருக்கின்ற கரைதுரைப்பற்றுப் பிரதேச சபை, நீராவியடிப் பிள்ளையார் கோயில் அமைந்துள்ள நிலத்திலே எந்த பௌத்த விகாரையும் இருந்திருக்கவில்லை எனவும், அந்தப் பிரதேசத்திலே பௌத்தர்கள் எவரும் வாழ்ந்திருக்கவில்லை எனவும் தெரிவித்தது.[ii] இனத்துவ, சமய அடிப்படையில் போட்டி மிக்க வகையில் இந்த நிலப்பரப்பு உரிமை கோரப்படும் சூழலிலே இந்தப் பிரச்சினைக்கான தீர்வு கவனமான முறையிலும், சிநேகபூர்வமான முறையிலும், பொருத்தமானதும், உண்மைத்தன்மை மிக்கதுமான ஆதாரங்களின் அடிப்படையில் தீர்க்கப்படல் வேண்டும். மேலும் இந்தப் பிரச்சினைக்கான தீர்வுகள் நிலப்பரப்புத் தொடர்பாக சமூகங்களை வெளியொதுக்கும் வகையில் முன்வைக்கப்படும் உரித்துக் கோரிக்கைகளை நியாயப்படுத்தும் வகையிலும், சம்பந்தப்பட்ட சமூகங்கள் ஒன்றில் இருந்து இன்னொன்று துருவப்பட்டுப் போகும் வகையிலும் வரலாற்றினைப் பயன்படுத்தாத ஒரு முறையிலே முன்னெடுக்கப்படல் வேண்டும்.

மேலாதிக்க சிந்தனையினைக் கொண்டுள்ள அரசியல்வாதிகளினதும், மதவாத மனநிலையினைக் கொண்டிருக்கும் சில பௌத்த பிக்குகளினதும் நிகழ்ச்சிநிரல்களுக்குச் சாதகமான முறையிலே இந்தத் தீவினது, குறிப்பாகத் தீவின் வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்தியங்களினது, வரலாற்றினை அரசியல் மயமாக்கும் செயற்பாடுகளிலே நாட்டின் தொல்பொருள் திணைக்களம் கடந்த சில தசாப்தங்களாகச் செயற்பட்டு வருகின்றது என்பதனை சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்களின் ஒன்றியம் பதிவு செய்ய விரும்புகிறது. சிறுபான்மையினர் அதிக அளவிலே வாழும் பகுதிகளிலே தற்காலத்தில் இருக்கும் இன மற்றும் சமய யதார்த்தங்களையும், உண்மைகளையும் புறக்கணிக்கும் வகையிலும், அந்தப் பகுதிகளிலே கால ஓட்டத்தின் போது ஏற்பட்ட அரசியல் மற்றும் கலாசார ரீதியிலான மாற்றங்களையும் கருத்தில் எடுக்காத‌ வகையிலும் இந்த அரச திணைக்களம் கூடுதலாகச் செயற்பட்டிருக்கின்றது.

2000 வருடங்களுக்கு மேற்பட்டுச் செல்லும் இந்தத் தீவின் வரலாறானது பலதரப்பட்ட அரசியல் தொடர்புகளையும் விசுவாசங்களையும் பேணிய‌, பல்வேறு பிராந்திய உறைவிடங்களைக் கொண்டிருந்த‌ வேறுபட்ட சமூகங்களின் தொடர்ச்சியான இட‌ அசைவுகளினைத் தாங்கியது என்பதனை சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்களின் ஒன்றியம் மீள்வலியுறுத்த விரும்புகிறது. வரலாற்றாசிரியர்களினாலே எடுத்துக் கூறப்படுவது போன்று, எங்களுடைய வரலாறுகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்தனவாகவும், கலந்தனவாகவும் அமைகின்றன. நவீன அரசியல் முயற்சிகளுக்காக இந்த செழிப்பான‌ வரலாற்றினை விளங்கப்படுத்துகையிலே, நாம் ஒரு சமூகத்தினை மற்றொரு சமூகத்துக்கு எதிராக முன்னிறுத்துவதும், கலாசாரங்கள் ஒன்றின் மீது மற்றொன்று மேற்பொருந்திச் செல்லும் நிலைமைகளையும், இனங்கள் ஒன்றில் மற்றொன்று பின்னிச் செல்லும் நிலைமைகளையும், சமயங்களுக்கு இடையிலான பிணைச்சல்களையும் புறந்தள்ளிவிட்டு வித்தியாசங்களுக்கும், பிரிப்புக்களுக்கும் முன்னுரிமை வழங்குவது மிகவும் அழிவுகரமான நிலைமைகளுக்கே எம்மை இட்டுச் செல்லும்.

சமய, இனத்துவ மற்றும் மொழிவாரியிலான பன்மைத்துவங்களுக்கும், கலாசாரங்களினதும், சமூகங்களினதும் சகவாழ்வுக்கும் அச்சுறுத்தலினை ஏற்படுத்தும் அரசினது செயற்பாடுகள் தொடர்பில் நாம் எமது கடுமையான எதிர்ப்பினை வெளியிடும் அதேவேளை, எமது எதிர்காலச் செயற்பாடுகள் இந்தத் தீவும், அதனது வெவ்வேறு பிராந்தியங்களும் வரலாற்று ரீதியாகப் பல்வேறு கலாசாரங்களினதும், மொழிகளினதும், மத நம்பிக்கைகளினதும் உறைவிடங்களாக அமைந்திருக்கின்றன என்ற நிதர்சனத்தினை ஏற்றுக்கொள்ளும் வகையிலே அமைவதனை நாம் உறுதி செய்வோம். எமது சமூக மற்றும் அரசியல் ரீதியிலான முன்னெடுப்புகளிலே சகவாழ்வுக்கு ஒரு மையமான இடத்தினை வழங்குவோம் எனவும் நாம் உறுதி பூணுவோம். சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்களின் ஒன்றியமானது, ஒன்றில் ஒன்று கலந்திருக்கும், பல்வகைமை மிக்க‌ எமது கடந்த காலங்களின் பலத்தினை அடையாளம் கண்டு ஏற்றுக்கொள்ளுவதுடன், இனத்துவ மற்றும் சமய ரீதியிலான முரண்பாடுகளை உரையாடல்களின் மூலம் தீர்வு காணும் முயற்சிகளுக்கும், எமது பன்மைத் தன்மையான வரலாற்றினை மீள உரிமை கோருவதற்கான முயற்சிகளுக்கும் அழைப்புவிடுக்கின்றது.

சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்களின் ஒன்றியம்

யாழ்ப்பாணம்

[i] (a) http://island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=199343

(b) https://www.tamilguardian.com/content/large-buddha-statue-built-mullaitivu-hindu-temple-site-despite-local- opposition

[ii] https://www.tamilnet.com/art.html?catid=79&artid=39465