படங்கள், Ian Treherne

திருகோணமலை கடற்கரையில் 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02ஆம் திகதி இடம்பெற்ற ஐந்து மாணவர்களின் படுகொலைகள் “திருகோணமலை ஐவர் சம்பவம்” (Trinco 5) என அழைக்கப்படுகின்றது. இலங்கையில் தண்டனைக்கு அச்சமின்றி குற்றச்செயல்களை நிகழ்த்தும் போக்கினை எடுத்துக் காட்டும் ஒரு குறியீட்டுச் சம்பவமாக அது இருந்து வருகின்றது. கொலை செய்யப்பட்ட மாணவர்களில் ஒருவரின் தந்தையான டாக்டர் மனோகரனின் துணிச்சல் காரணமாக இந்தச் சம்பவம் பிரபல்யமடைந்தது. இந்தக் கொலையில் பாதுகாப்புப் படையினர் சம்பந்தப்பட்டிருந்தார்கள் என்ற விடயத்தை டாக்டர் மனோகரன் அறிந்திருந்ததுடன், இது தொடர்பாக தொடக்கத்தில் நடத்தப்பட்ட ஒரு விசாரணையில் அவர் சாட்சியமளித்திருந்தார். திருகோணமலை ஐவருக்கு நீதியைக் கோரும் முயற்சியில் உள்ளூர் செயற்பாட்டாளர்களுடன், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் இணைந்திருந்தன. இந்தச் சம்பவம் பரவலான விதத்தில் கவனத்தை ஈர்த்திருந்ததுடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவினால் 2007ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிலும் உள்ளடக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது: “இந்தக் குற்றச் செயலை நிகழ்த்துவதில் சீருடை அணிந்த ஆளணியினர் சம்பந்தப்பட்டிருந்தார்கள் என்பதனை அனுமானிப்பதற்கு வலுவான ஆதாரங்கள் இருந்து வருகின்றன.” எவ்வாறிருப்பினும், இது தொடர்பான வினைத்திறன் மிக்க புலன் விசாரணைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பாக வினைத்திறன் மிக்க விதத்தில் புலன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென 2007ஆம் ஆண்டின் ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைகளை முன்வைத்திருந்தது. மேலும், இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவும் இது தொடர்பாக மீண்டும் மீண்டும் பரிந்துரைகளை முன்வைத்திருந்தது. இவற்றுக்கு மத்தியிலும் கூட, இந்த விசாரணைகள் மந்த கதியிலேயே இடம்பெற்று வந்துள்ளன. இந்த வழக்கு திருகோணமலை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆமை வேகத்தில் இடம்பெற்றுவந்த நிலையில், சந்தேக நபர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்து, பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார்கள்.  அதன் பின்னர் போதியளவில் சாட்சியங்கள் இல்லாத காரணத்தினால் இது  தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டிருந்த விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த சந்தேக நபர்கள் ‘விடுவிக்கப்பட்டதாக’ ஜூலை 03ஆம் திகதி அறிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட குடும்பங்களைப் பொறுத்தவரையில் இந்தத் தீர்ப்பு இலங்கையின் குற்றவியல் நீதித்துறை தொடர்பான தமது நம்பிக்கையை தகர்த்தெறிந்த ஒரு குண்டுத் தாக்குதலாக இருந்து வந்தது.

உண்மையைக் கண்டறிந்து கொள்வதற்கான உரிமையை சம்பந்தப்பட்டவர்களுக்கு மறுத்திருக்கும் திருகோணமலை ஐவர் போன்ற வழக்குகள், குற்றச் செயல்கள் தொடர்பாக இலங்கையின் பாதுகாப்புப் படையினரை குற்றவாளிகளாக்கும் விடயத்தில் இலங்கையின் நீதித்துறை தோல்வி கண்டிருப்பதனை எடுத்துக் காட்டுகின்றன. டாக்டர் மனோகரன் தனிப்பட்ட துயரத்துக்கு மத்தியிலும் கூட, நீண்டகாலமாக முன்னெடுத்து வந்த ஒரு பிரச்சாரத்தின் ஊடாக இது தொடர்பான நிவாரணங்களைக் கோரியிருந்தார். 2007ஆம் ஆண்டின் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு வீடியோ மூலம் சாட்சியமளிக்கும் நடைமுறையை இடைநிறுத்தியது. அத்துடன், அந்த ஆணைக்குழு அதன் அறிக்கையையும் வெளியிடத் தவறியிருந்தது. அச்சந்தர்ப்பத்தில், டாக்டர் மனோகரன் இது தொடர்பாக நீதியைப் பெற்றுக்கொள்வதற்கென சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களிடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்திருந்தார். ஜெனீவாவில் இடம்பெற்ற மனித உரிமைகள் நிகழ்வொன்றின் போது, அதற்கு வெளியில் இடம்பெற்ற ஓர் உரையாடலில் அவர் இது குறித்துப் பேசியதுடன், திருகோணமலையில் மிகவும் கொடூரமான விதத்தில் கொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களுக்கும் நேர்ந்த கதி குறித்த உண்மையை இலங்கை அரசாங்கம் கூற வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருந்தார். அரசாங்கம் இது தொடர்பாக கால அவகாசத்தை கோரியிருந்தது. பின்னர் 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற இலங்கை தொடர்பான உலகலாவிய பருவகால மீளாய்வின் போது டாக்டர் மனோகரன் இலங்கை அரசாங்கத்திடம் மேலும் ஒரு வேண்டுகோளை முன்வைத்திருந்தார். அத்துடன், கொலை செய்யப்பட்ட ரவிகர் மற்றும் அவருடைய நான்கு நண்பர்கள் ஆகியோர் தொடர்பான வழக்கு விசாரணைகளைத் துவக்கி வைப்பதற்குத் தேவையான முதற்தோற்ற சாட்சியங்கள் இருந்து வருகின்றனவா என்பதனை நிர்ணயித்துக் கொள்வதற்கென அந்த விடயம் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்தது. இது தொடர்பான மேலும் விசாரணைகளை நடத்துமாறு சட்டமா அதிபர் பொலிஸ் மாஅதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார். மீண்டும் ஒரு முறை இலங்கை அரசாங்கம் இது தொடர்பாக மேலும் கால அவகாசத்தை கேட்டிருந்தது. இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அதன் அறிக்கையில் திருகோணமலை ஐவர் படுகொலை சம்பவத்தை குறிப்பிட்டிருந்ததுடன், இது தொடர்பாக மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு, கொலைக் குற்றவாளிகள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட வேண்டுமென வலுவாக பரிந்துரை செய்திருந்தது. இப்பொழுது 13 வருடங்கள் கழிந்திருப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு பதிலளிப்பதற்கு அரசாங்கம் என்ன செய்திருக்கின்றது?

திருகோணமலை ஐவர் சம்பவம் பொறுப்புக்கூறும் விடயம் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தினால் செய்யக் கூடிய காரியங்களை எடுத்துக் காட்டும் ஒரு அமிலப் பரிசோதனையாக இருந்து வருகின்றது. கொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களும் அவர்கள் தமிழ் இளைஞர்களாக இருந்து வந்தார்கள் என்பதைத் தவிர, வேறு எந்தவொரு காரணமும் இல்லாத நிலையில் – மிக அருகில் வைத்து சுடப்பட்டிருந்தார்கள். சிங்கள மற்றும் முஸ்லிம் நண்பர்களைக் கொண்டிருக்கும் டாக்டர் மனோகரன் இந்தச் சம்பவத்தை அரசியல்மயமாக்குவதற்கென எடுக்கப்பட்ட முயற்சிகளை எதிர்த்தார் – வெறுமனே அவருக்கு பதில்கள் மட்டுமே தேவையாக இருந்தது. அதேபோன்று எம் அனைவருக்கும் இது தொடர்பான பதில்கள் தேவைப்படுகின்றன.

மிகச் சமீபத்தில் இது தொடர்பாக ஏற்பட்டிருக்கும் மாற்றம், மீண்டும் ஒரு முறை இது குறித்துக் குரல் எழுப்புவதற்கும், திருகோணமலை ஐவர் சம்பவம் குறித்த உண்மையைக் கண்டறிந்து கொள்வதற்கான தனது முயற்சிகளுக்கு இலங்கை வாழ் பொது மக்களின் ஆதரவைக் கோருவதற்கும் அவரை நிர்ப்பந்தித்துள்ளது. குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதனையடுத்து, அவருடன் பேசக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் பின்வரும் விடயங்களையே எங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினார்:

என்னுடைய பெயர் டாக்டர் கைலாசபிள்ளை மனோகரன்.

என்னுடைய அன்பு மகன் ரஜீகர் 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02 ஆம் திகதி இலங்கைப் படையினரால் கொலை செய்யப்பட்டார். அந்தப் பயங்கரம் நிகழ்ந்த அந்த நாள் தொடக்கம், அங்கு என்ன நடந்தது என்பது குறித்த உண்மையை கண்டறிய வேண்டும் என்பதற்காக நான் இடையறாது ஒரு முயற்சியை முன்னெடுத்து வந்துள்ளேன்.

எனது மகன் ரஜீகர் என்னுடன் தொடர்பு கொண்ட கடைசித் தருணம் அவர் எனக்கு அனுப்பிய ஒரு மொபைல் தொலைபேசி செய்தியாகும். அதில் வெறுமனே ‘DAD’ எனக் கூறப்பட்டிருந்து. அந்தச் செய்தி 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02ஆம் திகதி எனக்குக் கிடைத்தது. என்னுடைய மகன் ஒரு நல்ல பையனாக இருந்து வந்ததுடன், பரீட்சைகள் முடிவடைந்த மகிழ்ச்சியை திருகோணமலை கடற்கரையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து அவன் கொண்டாடிக் கொண்டிருந்தான். அன்றைய தினம் கடற்கரையில் ஒரு குண்டு வெடித்த சப்தம் எனக்குக் கேட்டது, எனது ஏனைய மூன்று மகன்களும் வீடு திரும்பினார்கள். ஆனால், ரஜிகர் வீடு திரும்பவில்லை. இந்தக் குண்டு வெடிப்பு நிகழ்ந்த ஒரு சில நிமிடங்களில் எனக்கு மகனிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது: Daddy படையினர் என்னை சுற்றி வளைத்துள்ளார்கள்” என அவர் கூறினார். பாதுகாப்பு படையினரையே அவர் குறிப்பிட்டிருந்தார். என்னுடைய மகன் கூறியது அவ்வளவுதான். அதன் பின்னர் ஒரு மௌனம் நிலவியது. அவர் எனக்கு அனுப்பிய கடைசி முடிவுறாத செய்தி அது தான்.

உடனடியாக நான் அந்த இடத்திற்குச் சென்ற போதிலும், அங்கிருந்த கடற்படை சிப்பாய்கள் என்னைத் தடுத்து நிறுத்தினார்கள். நான் உள்ளே செல்வதற்கு அவர்கள் எனக்கு இடமளிக்கவில்லை. “எங்களுக்கு உதவுகள்! எங்களுக்கு உதவுங்கள்!” என்ற அழு குரல்கள் எனக்குக் கேட்டன. ஆனால், என்னுடைய மகன் அமர்ந்திருந்த காந்தி சிலைக்கு அருகில் விளக்குகள் வேண்டுமென்றே அணைக்கப்பட்டிருந்த காரணத்தினால் அங்குள்ள நிலைமையை என்னால் தெளிவாகப் பார்க்க  முடியாதிருந்தது. அதனையடுத்து துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதுடன், சிலைக்கு அருகில் இருந்த விளக்குகள் அனைத்தும் அணைந்தன.

கடற்படையினருக்கு சிகிச்சை அளித்திருந்த ஒரு மருத்துவராக இருந்து வந்த காரணத்தினால் ஆஸ்பத்திரி சவச்சாலைக்குள் பிரவேசிக்க் கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அங்கு எடுத்துச் செல்லப்பட்ட சடலங்களில் ஒன்று எனது மகனுடைய சடலமாக இருந்து வந்ததா என்பதனை நான் தெரிந்துகொள்ள விரும்பினேன். நான் உள்ளே பிரவேசித்த பொழுது, முதலில் பார்த்த சடலம் எனது அன்பு மகன் ரஜிகரின் சடலமாக இருந்தது. அவனுடைய உடலில் ஐந்து துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்தன. அங்கிருந்த ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் ‘எனது மகன் ஒரு தமிழ் புலி’ என்று குறிப்பிட்டு, ஒரு பத்திரத்தில் கையெழுத்திடுமாறு என்னிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு நான் உடன்பட்டால் உடனடியாக சடலத்தை பெற்றுத்தர முடியும் என்றும் அவர் கூறினார். நான் அதற்கு மறுப்புத் தெரிவித்தேன். என்னுடைய மகன் ஒரு நல்ல மாணவன். ஒரு மேசைப் பந்து விளையாட்டு வீரன். அவன் சதுரங்க ஆட்டத்தில் கெட்டிக்காரனாக இருந்து வந்ததுடன், சதுரங்க ஆட்ட பயிற்றுவிப்பாளனாகவும் இருந்து வந்தான்.

ஒரு கிரனைட் தாக்குதலில் எனது மகன் கொல்லப்பட்டதாக அரசாங்கம் கூறியது. ஆனால், சவச்சாலையில் நான் பார்த்த மூன்று சடலங்களின் தலையில் காயங்கள் இருந்ததுடன், தலையின் பின்பக்கத்தில் அவர்கள் சுடப்பட்டிருந்தார்கள். என்னிடம் புகைப்படங்கள் இருப்பதுடன், மருத்துவரின் அறிக்கை அதனை உறுதிப்படுத்துகின்றது. அச்சடலங்களில் உட்பிரவேசத் துவாரம் சிறியதாக இருந்து வந்ததுடன், வெளிச்சென்ற துவாரம் பெரியதாக இருந்தது. இது அந்தப் பையன்கள் மீது மிக அருகிலிருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது என்பதனைக் காட்டுகின்றது. தமக்கென ஓர் எதிர்காலத்தைக் கொண்டிருந்த ஐந்து இளைஞர்கள் இவ்விதம்  கொல்லப்பட்டிருந்தார்கள். அன்றைய தினம் மாலை நேரம் நான் ஒரு முடிவுக்கு வந்தேன். இது தொடர்பான உண்மையைக் கூற வைப்பதற்கு அதிகாரிகளுக்கு சவால் விடுக்க வேண்டுமென நான் முடிவு செய்தேன். சம்பவ இடத்திற்கு அருகில் இலங்கை விசேட அதிரடிப்படை வீரர்கள் நிற்பதனை நான் பார்த்ததுடன், அவர்கள் தொடர்பாக புலன் விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டேன்.

இது தொடர்பாக குரலெழுப்பத் தொடங்கியதிலிருந்து எனக்கு மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வந்தன. என்னுடைய ஏனைய மகன்மார்களும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டார்கள். சடலங்களின் புகைப்படங்களை எடுப்பதற்காக என்னுடன் சவச்சாலைக்கு வந்த ஊடகவியலாளர் திரு. சுகிர்தராஜன் ஒரு சில வாரங்களின் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த மாணவர்கள் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டிருந்தார்களென இராணுவம் கூறியிருந்த விடயத்தை அவருடைய புகைப்படங்கள் பொய்யாக்கின. ரஜிகரின் கொலைச் சம்பவத்தைக் கண்டித்திருந்த புத்தபிக்கு ஒருவரும் கொல்லப்பட்டார். நானும், எனது குடும்பத்தினரும் இலங்கையில் தொடர்ந்து வசித்து வருவது மிகவும் ஆபத்தானதாக இருந்து வந்தது. கனத்த இதயங்களுடன் 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாங்கள் இலங்கையிலிருந்து வெளியேறினோம். எமது நண்பர்களையும், மருத்துவத் தொழிலையும், சொத்துக்களையும் இழந்தோம்.  ஆனால், எமது மிகப் பெரிய இழப்பு ரஜிகரனின் இழப்பாகும்.

ஒரு தந்தை என்ற முறையில் இது தொடர்பான உண்மையைத் தேடிக் கண்டுபிடிப்பது எனது கடமையாகும். “Trinco 5 Case” என பரவலாக அறியப்பட்டிருக்கும் இந்தச் சம்பவம் தொடர்பாக புலன் விசாரணைகளை நடத்துவதற்கென முன்னைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவினால் நியமனம் செய்யப்பட்டிருந்த ஒரு விசாரணைக்குழுவிடம் நான் வீடியோ ஊடாக சாட்சியமளித்திருந்தேன். ஆனால், அது போன்ற முயற்சிகளினால் எத்தகைய பயன்களும் கிடைக்கவில்லை. இந்தக் கொலையில் பாதுகாப்புப் படையினரின் வகிபங்கினை ஏற்றுக்கொள்ளும் விடயத்தில் அரசாங்கம் ஓர் அரசியல் விருப்பினைக் கொண்டிருக்கவில்லை. எனவே, இந்த நிலையை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க முடியாத கட்டத்தில், ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் உண்மைக்கான எனது தேடலை எடுத்துச் செல்ல வேண்டுமென முடிவு செய்தேன். இது தொடர்பாக உண்மையைக் கூறுமாறு இலங்கையை வலியுறுத்த வேண்டுமென ஐ.நா. உறுப்பு நாடுகளிடம் கேட்டுக் கொண்டேன். இலங்கை தொடர்பாக 2015ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் புலன் விசாரணை அறிக்கையில் திருகோணமலை ஐவர் சம்பவம் உள்ளடக்கப்பட்டிருந்தது. அதாவது – தண்டனைக்கு அச்சமின்றி குற்றம் புரியும் நிலையை எடுத்துக் காட்டும் ஒரு குறியீட்டுச் சம்பவமாக அல்லது சாதாரண மொழியில் கூறுவதாக இருந்தால் ஒரு குற்றச் செயலை மூடிமறைப்பதனை எடுத்துக் காட்டிய ஒரு குறியீட்டுச் சம்பவமாக – அது உள்ளடக்கப்பட்டிருந்தது.

13 வருடங்கள் கடந்த நிலையிலும் இந்த வழக்கு இன்னமும் ஸ்தம்பித நிலையில் இருந்து வந்தது. திருகோணமலை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் சுருக்க முறையற்ற விசாரணை வழக்காக அது எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. இந்த ஆண்டு ஜூலை மாதம் 03ஆம் திகதி வழங்கப்பட்ட தீர்ப்பின் பிரகாரம் இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டிருந்த 13 விசேட அதிரடிப்படை வீரர்கள் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வினைத்திறன் மிக்க விதத்தில் விசாரணை நடத்தும் விடயத்தில் அரசாங்கம் எவ்வாறு தோல்வியடைய முடியும்? இது மிகவும் பாரதூரமான ஒரு கொலைச் சம்பவமாகும். சவச்சாலையிலிருந்து மருத்துவர் வழங்கிய அறிக்கை உடல்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்த விடயத்தை ஏற்றுக்கொள்கின்றது. எம்மைப் போன்ற குடும்பங்களுக்கு பதில்களை வழங்க முடியாதிருந்தால், இலங்கையின் குற்றவியல் நீதித்துறை குறித்து நான் எத்தகைய நம்பிக்கையையும் வைக்க முடியாது.

ரஜிகர் கொல்லப்படுவதற்கு முன்னர் தனக்கு உதவி வேண்டுமென என்னிடம் அழுகுரல் எழுப்பியிருந்தான்…. இது தொடர்பாக நீதி வழங்கப்படும் பொழுது – எனது மகனுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான உண்மையை இறுதியில் இலங்கை கூறும் பொழுது – உதவிக்கான ரஜிகரின் கோரிக்கை இறுதியில் செவிமடுக்கப்பட்டுள்ளது என்பதனை எம்மால் கூற முடியும்.

திருகோணமலை ஐவர் வழக்கு பொருத்தமான விதத்தில் விசாரணை செய்யப்படுவதனையும், இந்தக் கொலையை நிகழ்த்திய குற்றவாளிகள் இது தொடர்பாக பொறுப்புக்கூற வைக்கப்படுவதனையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமென இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுப்பதற்கு தயவு செய்து என்னுடன் இணைந்து கொள்ளுங்கள்.


குறிப்பு: யோலண்டா பொஸ்டெர் (Yolanda Foster) சுயாதீனமான ஒரு ஆராய்ச்சியாளர் ஆவார். அவர் முன்னர் சர்வதேச மன்னிப்புச் சபையில் பணி புரிந்ததுடன், 2009 – 2017 காலப் பிரிவில் நியூயோர்க்கிலும், ஜெனீவாவிலும் ஐ.நா. அமைப்புக்களிடம் சாட்சியமளிப்பதற்கென டாக்டர் மனோகரனுடன் சென்றிருந்தார்.


Justice Denied for Trinco 5 என்ற தலைப்பில் யோலன்டா பொஸ்டெர் எழுதி கிரவுண்விவ்ஸ் தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.