படம் | JDSrilanka

இலங்கை அரசின் அடாவடித்தனத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக வலுவானதொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்ற நிலையில் – அந்த சூடு இன்னும் தணியாத ஒரு நிலையில் – புலம்பெயர்ந்து இயங்கிவரும் 16 தமிழர் அமைப்புக்களை இலங்கை அரசு தடைசெய்துள்ளது.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடைசெய்யப்பட்ட 16 புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்கள் என 424 பேரின் பெயர் விவரங்கள் அடங்கிய வரத்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அவர்களின் தொலைபேசி இலக்கங்கள், புலம்பெயர் முகவரி, இலங்கை முகவரி, கடவுச்சீட்டு இலக்கம், பிறந்த திகதி என அனைத்தையும் அதில் வெளியிட்டுள்ளனர்.

ஏன் இலங்கை அரசு இவ்வாறு திமிர்தனமாக செயற்படுகிறது என அனைவர் மனதிலும் எழலாம்.

புலிக்கதை

புலி விளம்பரத்தை வைத்துக்கொண்டு தேர்தல்களில் வெற்றிபெற்று வருக்கின்ற மஹிந்த அரசு, அண்மைய காலங்களாக மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்து வருகிறது. கடந்த வாரம் மேல் மற்றும் தென் மாகாண தேர்தல் முடிவுகள் இதனை வெளிச்சம் போட்டுக்காட்டின. இதை அரசும் எதிர்பார்த்ததுதான். இந்த நிலை நீடித்தால் எதிர்காலம் என்னவாகும்? ஜனாதிபதித் தேர்தல்? ஆகவேதான் இந்தப் புதிய புலிக் கதை.

கடந்த மாதம் பெரும் இராணுவ சுற்றிவளைப்புக்குப் பின்னர் அப்பாவி தாயான பாலேந்திரன் ஜெயக்குமாரி மற்றும் அவரது 13 வயது மகள் விபூஷிகா கைதுசெய்யப்பட்டதோடு புலி திரும்பவும் வந்திருச்சாம் என்ற செய்தியை உலகரியச் செய்து இரட்டை இலாபத்தை மஹிந்த அரசு அடைய முற்பட்டது. ஒன்று, “வடக்கில் தீவிரவாதம் மீண்டும் தலைதூக்கியிருக்கிற நிலையில் அங்கிருந்து இராணுவத்தை அகற்றமுடியாது. அவ்வளவு சீக்கிரத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது, தீவிரவாதச் செயற்பாடுகள் இருக்கும்போது” என சர்வதேசத்திடம் தெரிவித்து இன்னும் அவகாசம் கேட்டு கெஞ்சியது. ஆனால், அது சரிப்படவில்லை.

ஆனால், மஹிந்த அரசின் மற்றைய விளைச்சல் நல்ல இலாபத்தை தந்துள்ளது என்றுதான் கூறவேண்டும். புலியை மறந்திருந்த மக்கள் இதன் மூலம் ஊசியேற்றப்பட்டுள்ளனர். புலிகள் மீண்டும் ஒன்றிணைந்து நாட்டுக்கு எதிராக சதிசெய்கின்றனர் என சிங்கள பத்திரிகைகள் மற்றும் அரச இலத்திரனியல் ஊடகங்கள் நன்றாகவே பரப்புரை செய்தன, செய்துவருகின்றன.

இதன் தொடர்ச்சிதான் தற்போது புலிகள் அமைப்பின் புதிய தலைவர் கோபி குறித்து தகவல் தருவோருக்கு பத்து இலட்சம் பணம் பரிசாக தரப்படும் என என்ற தகவல் அறிவிப்பும்.

கூட்டமைப்பின் சிறகை வெட்ட முயற்சி

தமிழ் தேசியக் கூட்டமைப்பு புலம்பெயர் மக்களின் நிதிமூலத்தைக் கொண்டு இயங்கிவருகின்றமை எல்லோராலும் அறிந்த விடயம். வடக்கு கிழக்கை மட்டும் மையமாகக் கொண்டு செயற்பட்டு வரும் கூட்டமைப்புக்கு பெரிதாக நிதிமூலங்கள் இலங்கையினுள் கிடைப்பதாக இல்லை. ஆகவே, புலம்பெயர்ந்து செயற்பட்டுவரும் அமைப்புக்கள் மூலமே நிதிவளத்தைப் பெற்றுக்கொண்டு தேர்தல்கள் உட்பட அபிவிருத்தி வேலைகளை கூட்டமைப்பு செய்துவருகின்றது.

“தமிழ் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச தளங்களில் செயற்பட இணைப்புப் பாலமாக புலம்பெயர் அமைப்புக்கள் காணப்படுகின்றன. இலங்கையில் நிதி மூலங்கள் இல்லாத ஒரு நிலையில் புலம்பெயர் அமைப்புக்களே கூட்டமைப்புக்கு நிதியுதவி அளிக்கின்றன. இனிமேல் வடக்கு கிழக்கில் தேர்தல் நடத்தப்பட்டால் புலம்பெயர்ந்த மக்கள் மற்றும் அமைப்புக்களால் நிதி வழங்கப்படுவதை கேள்விக்குறியாக்கவே இந்தத் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது” என பிரித்தானிய தமிழர் பேரவையைச் சேர்ந்த ராஜ்குமார் பிபிசிக்குத் தெரிவித்திருக்கிறார்.

ஆகவே, மஹிந்த அரசின் நோக்கம் இதிலிருந்து தெரிகிறது.

அத்தோடு, புலம்பெயர் மக்களின் உதவியுடன் வடக்கை அபிவிருத்தி செய்வோம் என அறிவித்திருக்கும் வடக்கு மாகாண சபைக்கும் இந்தத் தடை மூலம் பலத்த அடி விழுந்துள்ளது. புலம்பெயர் அமைப்புக்களின் உதவியுடன் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு (அரசின் உதவியின்றி) உதவிகள் செய்யப்படுகின்றன. பயங்கரவாத தடைச்சட்டம் எந்நேரமும் தம் மீது பாயலாம் என்ற அச்சத்தில் இனிமேல் அவற்றை பொறுப்பேற்று நடைமுறைப்படுத்த யாரும் முனவரமாட்டார்கள்.

எதிர்காலத்தில் அரசியல் செயற்பாடுகள் குறித்து தெளிவுபடுத்த புலம்பெயர்ந்த மக்களை சந்திக்க கூட்டமைப்பினர் சிந்திக்க வேண்டியுள்ளது.

எல்.எல்.ஆர்.சி. பரிந்துரை குப்பையில்

ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக மூன்று தடவைகள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாகிவிட்டது. மூன்று தடவையும் கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறே வலியுறுத்தப்பட்டது.

ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் ‘புலம்பெயர்ந்தவர்கள்’ என்ற தலைப்பில் நல்லிணக்க முயற்சிகளில் அவர்களையும் எவ்வாறு இணைத்துக்கொள்வது என்பது பற்றி இரண்டு பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கீழ் ஒரு பரிந்துரையைக் காணலாம்.

9.260. இந்த விரோதப் போக்கு கொண்ட புலம்பெயர்ந்தவர்கள்நல்லிணக்கம் நோக்கிய இலங்கையின் உண்மையான முயற்சிகளை அநேகம் பாழ்படுத்தலாம் என ஆணைக்குழுவிற்கு தெளிவாகின்றது. ஆதலால், அரசு சம்பந்தப்பட்ட அக்கறை கொண்ட செயற்பாட்டாளர்களுடன், விசேடமாக சிவில் சமூகங்களுடன் இணைந்து நாடு கடந்து வாழும் சமூகத்தின் பயன்களைப் பெற்றுக்கொள்வதற்கு ஒரு விரிவான அணுகுமுறையை உருவாக்குதல் வேண்டுமென ஆணைக்குழு உணர்கின்றது.

சர்வதேசம் நடைமுறைப்படுத்தக்கோரி வலியுறுத்தும் பரிந்துரைகளை மஹிந்த அரசு கீழே போட்டு மிதித்துள்ளது.

ஆகவே, இலங்கை அரசு ஜ.நா. தலையீட்டுடன் சர்வதேசம் சொல்லும் எவற்றையும் கவனத்தில்கொள்ள மாட்டோம் என்ற திமிருடன் செயற்பட்டு வருவதை காணக்கூடியதாக இருக்கிறது.

நுழையாதே…

தடைசெய்யப்பட்டுள்ள அமைப்புக்களுடன் ஏதோவொரு வகையில் புலம்பெயர் மக்கள் சம்பந்தப்பட்டே இருக்கின்றனர் என்பதை மஹிந்த அரசு அறிந்தே வைத்துள்ளது. ஆகவே, அவர்களது செயற்பாடுகளையும் முடக்குவதே இலங்கை அரசின் நோக்கமாக உள்ளது.

தங்களது உறவினர்களை சந்திக்க தாய் நாடு திரும்ப இனி புலம்பெயர்ந்தோர் யோசிக்க வேண்டியிருக்கிறது. அண்மையில் நாடுதிரும்பி தனது தாயின் உடல் புதைக்கப்பட்டுள்ள இடத்தை பார்க்கச் சென்றுகொண்டிருந்த கவிஞர் ஜெயபாலன் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டிருந்தார். பிரபலமான அவருக்கே இந்த கதி என்றால் சாமாண்யர்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.

இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரை கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்த விசாரணையை இலங்கையினுள் மேற்கொள்ள அரசு அனுமதி அளிக்காத ஒரு நிலையில், வெளியில் இருந்தே விசாரணை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஆணையாளருக்கு ஏற்பட்டுள்ளது. ஆகவே, வெளியிலிருந்து மேற்கொள்ளப்படவிருக்கும் விசாரணைக்கு புலம்பெயர்ந்த அமைப்பினர், மக்கள் பங்களிக்கவேண்டிய கடமையில் காணப்படுகின்றனர்.

தற்போது இலங்கை அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள தடையால் இந்த விசாரணை நடவடிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என மஹிந்த அரசு எண்ணலாம்.

ஆகவே, மஹிந்த அரசின் அத்தனை செயற்பாடுகளும் நல்லிணக்கத்துக்கு ஆப்பு வைக்கவே செய்கின்றன. தமிழர்கள் நிம்மதியாக வாழ – மஹிந்த அரசின் கொட்டத்தை அடக்க சர்வதேசம் எத்தனை தீர்மானம்தான் நிறைவேற்றப்போகிறது என்று பார்ப்போம்?

விஜி