பட மூலம், Colombo Telegraph 

“தவறான விதத்தில் பிடிக்கும் பொழுது ஒரு புல்லின் இதழ் எவ்வாறு ஒருவரின் கையில் வெட்டுக்காயத்தை ஏற்படுத்துகின்றதோ, அதே விதத்தில் துறவிகள் தமது துறவு நிலையை தவறான விதத்தில் முன்னெடுக்கும் பொழுது அது ஒருவரை நரகத்திற்கு இழுத்துச் செல்கின்றது.”

தம்மபதம் – நிராய வக்க

2014 அளுத்கம கலவரத்திற்கு சற்று முன்னர் வன்மத்தையும், வன்முறையையும் தூண்டும் புத்த துறவியான கலகொட அத்தே ஞானசார தேரர் ‘அப சரணய்’ என்ற சொற்பிரயோகத்தைப் புதிதாகப் பயன்படுத்தினார். அது புத்த மதத்தின் போதனைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட விதத்தில், அப்பட்டமான வெறுப்பை தூண்டும் ஒரு போர்க் குரலாக ஒலித்தது.

இப்பொழுது அதி சங்கைக்குரிய அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் ‘அப சரணய்’ என்ற அந்த எண்ணக்கருவை அதன் தர்க்கரீதியான முடிவுக்கு இட்டுச் செல்லும் விதத்தில் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நிகழ்த்திய பிரசங்கமொன்றின் போது, முஸ்லிம்களுக்குச் சொந்தமான வியாபார நிலையங்களை பகிஷ்கரிக்க வேண்டுமென அவர் மக்களிடம் கேட்டுக் கொண்டதுடன், மாத்தளையில் தொழில் புரியும் வைத்தியர் ஒருவர் ஆயிரக்கணக்கான சிங்கள பௌத்த குழந்தைகளை நிர்மூலமாக்கி வருகின்றார் என்ற ஒரு போலியான செய்தியையும் பரப்பியிருந்தார். மேலும், நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்று குறிப்பிட்டிருக்கும் அவர், தான் தேசத் துரோகிகள் எனக் கருதும் இலங்கை முஸ்லிம்களை கல்லடித்துக் கொல்வதனையும் மறைமுகமாக ஆதரித்துப் பேசியுள்ளார்.

அத்தகைய விதத்தில் கடும் வன்மத்தைத் தூண்டும் ஒரு உரையை நிகழ்த்தி விட்டு, மதத் தலைவர் ஒருவர் தப்பித்துக் கொள்ளக்கூடிய வேறு இடங்கள் உலகில் இருக்குமாயின், அவை சமயத் தலைவர்களின் ஆட்சி இடம்பெற்று வரும் சவூதி அரேபியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளாக மட்டுமே இருந்து வருகின்றன. நாகரீகமடைந்த எந்தவொரு நாட்டிலும் இந்த வகையான கூற்றுக்கள் நாலாபக்கங்களிருந்தும் மிகக் கடுமையான கண்டனங்களை எதிர்கொண்டிருக்க முடியும். அத்தகைய கருத்துக்களை முன்வைத்திருக்கும் நபர் ஆகக் குறைந்தது பொது மக்களின் கடும் நிந்தனையை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கும். இலங்கையில் மங்கள சமரவீரவை தவிர, எந்தவொரு அரசியல்வாதியும் இந்த உரையைக் கண்டிக்கும் விதத்தில் வாயைக் கூட திறந்திருக்கவில்லை. இந்த மௌனம், பல இலட்சக்கணக்கான சொற்களிலும் பார்க்க வலிமையானதாக இருந்து வருவதுடன், அது வன்முறை மற்றும் சகிப்புத் தன்மையற்ற தீவிரவாதம் என்பவற்றின் அனைத்து வடிவங்களுக்குமான எண்ணற்ற கதவுகளை திறந்து விடுகின்றது.

ஒரு சில மாதங்களுக்கு முன்னர் இதே மகாநாயக்க தேரரின் இரண்டாம் நிலை தேரர் ஒருவர், ஒரு ஹிட்லரைப் போலவாவது செயற்பட்டு நாட்டைக் கட்டியெழுப்ப முன்வர வேண்டுமென கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்தக் கருத்துக்களை ஒன்றாக எடுத்து நோக்கும் பொழுது, இலங்கையில் புத்த மதத்தைப் பீடித்திருக்கும் ஓர் இனம் புரியாத வியாதியை அது பிரதிபலித்துக் காட்டுவதனை அவதானிக்க முடிகிறது. இலங்கையின் சமூக வாழ்க்கையில் புத்த பிக்குகள் வகித்து வரும் முதன்மையான வகிபங்கின் பின்புலத்தில், இந்த வியாதி நாட்டின் அரசியலிலும், பரந்த சமூகத்திலும் மிகப் பாரதூரமான பின்விளைவுகளை எடுத்து வர முடியும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. புத்த பெருமானின் போதனைகள், மத குருமார் மற்றும் சாதாரண பிரஜைகள் ஆகியோரைக் கொண்ட தீவிரவாதிகளின் குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டு, உருக்குலைக்கப்பட்டிருப்பதுடன், அந்தக் குழுவினர் சகிப்புத்தன்மையற்ற நிலை மற்றும் வன்முறை என்பவற்றை ஒரு புண்ணிய காரியமாக நியாயப்படுத்தி வருகின்றனர். இவ்விதம் அவர்கள் இலங்கையில் தன்னிச்சையான விதத்தில் தமது கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இடமளிக்கப்பட்டால், எமது நாடு வெகு விரைவில் காவி – ஸலாபிசவாதத்தின் கடும் பிடிக்குள் சிக்குண்டு, மூச்சுத் திணற முடியும். இதோ, இப்பொழுது அதற்கு எதிராக நாங்கள் எல்லோரும் குரல் எழுப்ப வேண்டிய தருணம் வந்துள்ளது.

திசரணி குணசேகர

The Malaise Affecting Buddhism என்ற தலைப்பில் கிரவுண்விவ்ஸில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்