பட மூலம், Selvaraja Rajasegar
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்திற்கான போராட்டத்தில் அடுத்தக் கட்ட நடவடிக்கையில் தெளிவின்மையே தென்படுகின்றது. கூட்டு ஒப்பந்தம் தொழிலாளர்களுக்கு சாதகமாக அமையும் என்பதற்கான எந்தவிதமான சமிக்ஞையும் தெரியவில்லை.
இந்நிலையில், பொது அமைப்புக்களின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றபோது பொதுபோராட்ட நிகழ்வை பொங்கல் முடிந்து நடத்துவோம் என முடிவெடுக்கப்பட்டது.
பொங்கல் என்பது அமைதியான கொண்டாட்டத்துக்குரிய நாளாகும். அது போராட்டத்துக்குரிய காலமல்ல என்பது பொதுவான சிந்தனை. அவ்வாறான சிந்தனையை பொங்கலையே கொச்சைப்படுத்தும் சிந்தனையின் வெளிப்பாடு என்றே கருதவேண்டியுள்ளது.
பொங்கலைப் போராட்டமாக்க முடியுமா? உழைப்பின் மக்கள் மண்ணோடு நடாத்திய போராட்டத்தில் வியர்வைக்கு கிடைத்த வெற்றிக்கொண்டாட்டமே பொங்கல் எனலாம். இயற்கையோடும் உழைப்பு சக்தியின் எதிராளிகளோடும் தரகர்களோடும் தொடர்போராட்டம் நடத்தவேண்டிய நிலைக்கு உழைப்பின் சமூகம் தள்ளப்பட்டுள்ளது. அந்தப் போராட்டத்தில் அடைந்த வெற்றியை இயற்கையோடும் சுற்றம் சூழத்தோடும் மகிழ்வோடு நடத்தும் வெற்றிக் கொண்டாட்டம் பொங்கலாகும்.
இலங்கையில் தொழிலாள வர்க்கத்தில் போராட்ட வரலாறு இரத்தத்தால் இரத்தத்தாலே எழுதப்பட்டது. அதன் முதல் அத்தியாயம் பெருந்தோட்டத்தின் மையத்திலிருந்து தொழிலாளரின் இரத்தத்திலிருந்து எழுதப்படுகின்றது என்பது வரலாற்றுப் பதிவு.
நாடு சுதந்திரமடையா பிரித்தானிய வெள்ளையரின் ஆட்சிக் காலத்தில் 1940ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி புதுவருடம் புதுவருடமாக மகிழ்ச்சியோடு ஆரம்பிக்க மத்திய மாகாணத்தின் கண்டிக்கு அண்மையில் உள்ள ஹேவாஹெட்ட பகுதியில் முல்லோயா தோட்ட மக்களுக்கோ சம்பள உயர்வுக்கான போராட்ட நாளாக உதயமாகிறது.
தேயிலைத் தொழிலாளர்கள் சம்பள அதிகரிப்பாக 16 சதத்தையும், மேலும் 6 கோரிக்கைகளையும் முன்வைத்து போராட்டம் நடத்துகின்றனர். போராட்டத்தை அடக்கி ஒடுக்குவதில் தீவிரமாக செயல்பட்ட தோட்ட நிர்வாகம் தனது முயற்சியில் தோல்வி காணுகிறது, இறுதியில் பேச்சு வார்த்தைக்கு இணங்குகிறது. ஏற்பட்ட இணக்கப்பாட்டைத் தொடர்ந்து தொழிலாளர்கள் ஜனவரி 15ஆம் திகதி வேலைக்குத் திரும்புகின்றனர்.
அதே ஜனவரி 15ஆம் திகதி தோட்ட நிர்வாகத்தின் அனுமதியோடு அங்குறாங்கெத்தை பொலிஸார் ஆயுதங்களுடன் மக்கள் குடியிருப்பான லயன்களுக்குச் சென்று கண்ணில் தென்பட்ட தொழிலாளர்களை தாக்கி துன்புறுத்துகின்றனர்.
தேயிலைத் தொழிற்சாலையில் வேலைசெய்துகொண்டிருந்த கோவிந்தன் என்ற இளைஞன் இதனைக் கண்டதோடு தாங்கிக்கொள்ள முடியாது தேயிலைத் தொழிற்சாலையில் கொழுந்துகளைச் சேகரிக்கும் தடியோடு மக்கள் குடியிருப்பு நோக்கி ஓடி வருகிறார்.
இதனைக் கண்ட சுரவீர என்று பொலிஸ் உத்தியோகத்தர் பொலிஸ் வாகனத்தில் இருந்தவாறே நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கோவிந்தனுடைய உயிர் அவ்விடத்திலேயே பிரிகின்றது. சிந்திய இரத்தமோ உயிர்ப்பு பெற்று சக்தியாக எழுச்சிபெறுகின்றது.
கோவிந்தனின் இறுதிச் சடங்கும் நல்லடக்கமும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், இடதுசாரித் தலைவர்கள் பங்கேற்போடு போராட்டத்திற்கான திடசங்கற்பத்தோடும் அடக்கம் செய்யப்படுகிறது. உடலை அடக்கம் செய்தார்களே தவிர அப்போராட்டத்தை அடக்கம் செய்யவில்லை.
தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டுக்கான நீதி விசாரணை கோரி சமசமாஜக் கட்சியினர் தொடர் போராட்டம் நடத்துகின்றனர். அன்றைய உள்ளூராட்சி அமைச்சர் டி.பி. ஜயதிலக்க அதற்கான ஒரு விசாரணைக் குழுவை அமைப்பதோடு, விசாரணை முடியும் வரை முல்லோயா துப்பாக்கி சூடு சம்பந்தமான வழக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறும் அதற்கு பொலிஸ் மா அதிபர் ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொண்டாலும் அதற்குப் பொலிஸ் மா அதிபர் உடன்படவில்லை.
அன்று பொலிஸ் மா அதிபராக விளங்கிய வெள்ளைக்காரரான பேன்ஸ், அமைச்சரின் வேண்டுகோள் அரசின் உத்தியோகபூர்வமான வேண்டுகோளாகவோ கவர்னரின் உத்தரவாகவோ அமையவில்லை என்பதைக் காரணம் காட்டியே உள்நாட்டு அமைச்சரின் வேண்டுகோளை நிராகரித்திருந்தார்.
இதனால், வெள்ளைக்கார பொலிஸ் மா அதிபர் பதவி விலகவேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு கொழும்பு காலிமுகத்திடலில் பாரிய ஆர்ப்பாட்டக் கூட்டமும் நடத்தப்பட்டது. இக்கூட்டத்திற்கு மஹிந்த ராஜபக்ஷவின் தந்தை டி.எம். ராஜபக்ஷவும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்தோடு, துப்பாக்கிச் சூட்டுப் பிரச்சினை நின்றுவிடவில்லை. பொலிஸ் மா அதிபரின் செயல்பாட்டை அன்றைய ஆளுனரும் அங்கீகரித்ததால் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அன்றை அமைச்சரவை 1940.04.27ஆம் திகதி இராஜினாமா கடிதங்களைக் கொடுத்து பதவி விலகியமை அரசியலிலும் பெரும் பாதிப்பை உருவாக்கியது.
கோவிந்தனின் மரணத்திற்குப் பின்னர் ஊவா பிரதேசமெங்கும் போராட்டம் வெடிக்கத் தொடங்கி பல மாதங்களாகத் நீடித்தது. அவ்வருடம் சமசமாஜக் கட்சியினரால் பதுளையில் நடாத்தப்பட்ட மேதின நிகழ்வு பெரும் எழுச்சி மிக்கதாகவும் தொழிலாளர் வர்க்கத்தின் சக்தியை ஆட்சியாளர்களுக்கு உணர்த்தக்கூடியதாகவும் இருந்தது.
அதுமட்டுமல்ல கோவிந்தனின் மரணத்தைத் தொடர்ந்து உயிர்த்த போராட்டம் காரணமாக இலங்கை தேசிய இளைஞர் பேரவையின் சுதந்திரத்திற்கான போராட்டமானது வெள்ளையரின் ஆட்சியை முற்றாக எதிர்த்து முழுமையான சுதந்திரத்திற்கான போராட்டமாக வடிவம் பெற்றது என்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.
எனவே, 1940ஆம் ஜனவரி 15ஆம் திகதி அநியாயமாக கொலையுண்ட தொழிலாளர் தோழர் கோவிந்தனின் இரத்தம் முழு நாட்டின் அரசியலையும் உலுக்கியதை இன்றைய தைப்பொங்கல் தினமான 15ஆம் திகதி நினைவுகூர்ந்தால் மாத்திரமே சம்பள உயர்வுக்காக தொடரும் போராட்டம் வீச்சோடு நடைபெறும், சவால்களைச் சந்திக்க சக்திபெற்ற ஒன்றாக அமையும்.
கோவிந்தனின் கொலை நிகழ்வை எந்தவொரு தொழிற்சங்கமும் நினைவுகூறுவதில்லை. காரணம், போட்டி அரசியலுக்கு மத்தியில் – காட்டிக் கொடுப்புகளுக்கு மத்தியில் – பேரினவாதிகளினதும் முதலாளித்துவவாதிகளினதும் அவர்களின் கைக்கூலிகளான பெருந்தோட்ட கம்பனிகளினதும் கூலியாளாக இன்றைய தொழிற்சங்கங்கள் மாறியுள்ளன. அதுமட்டுமல்ல இவர்கள் அடக்குமுறையாளர்களின் மறுவடிவமாகவும் செயற்படுகின்றனர் எனலாம்.
மலையத் தொழிலாளர்களின் உரிமைக்காகவும் மொழி மற்றும் நிலவுரிமைக்காகவும் 1977ஆம் ஆண்டு டெவன் தோட்டத்தில் கொல்லப்பட்ட சிவன் வரை 28க்கு அதிகமானோர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டினால் மரணமடைந்துள்ளனர். இவர்களுக்கென நினைவுத்தூபி எழுப்பவோ நினைவுக்கூட்டங்கள் நடத்தவோ எவரும் முன்வருவதில்லை. இவ்வாறு செய்தால் பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள், தேசத்துரோகிகள் எனப் பெயர்க் குறிப்பிடப்படுவோம் என்ற பயமும் ஒரு காரணமாகும்.
தமிழர்கள் அடிப்படை உரிமைகள் தொடர்பாக பேசுவதை இனவாதிகள் தண்டனைக்குரிய குற்றமாகவே மிக நீண்டகாலமாக கருதுகின்றனர். அவர்களின் சிந்தனைக்கு அடிப்பணிந்து நடப்பதையே பொதுவாக தமிழ் அரசியல்வாதிகளும் மலையக அரசியல் தலைமைகளாக தம்மைக் கருதுபவர்களும் நினைக்கின்றனர். இம்மனநிலையிலிருந்து விடுபடுவதே முதல் விடுதலை.
தொழிலாளர்கள் என்று பயத்திலிருந்து விடுபடுகின்றனரோ அன்றே விடுதலைக்கான ஒளி தெரியும். இன்றைய தைப்பொங்கல் தினத்தன்று தொழிலாளர் வர்க்கத்தின் ஒளியாக முல்லோயா கோவிந்தனை நினைவுகூருவோம், தியாக சுடர் ஏற்றுவோம். நமது சம்பளத்திற்கான போராட்டம் மட்டுமல்ல வாழ்வுரிமைக்கான, அரசியல் கெளரவத்துக்கான போராட்டப் பாதை எம் கண்முன்னே தெரியும்.
பூமிக்கான பொங்கல் என்பது தொழிலாளர் வர்க்கத்தின் இரத்தம், வியர்வையாய் நிலத்தில் விழுந்து செழிப்பு என்னும் நீரோடையாகி வாழ்வை வளமாக்கியதை நினைந்து எடுக்கின்ற விழா என்பதிலே மகிழ்ந்து உழைக்கும் மக்களோடு ஒன்றான சக்தியாய் எழுச்சியோடு போராட்ட மக்களாய் நின்றிட பொங்கலோ பொங்கல் என்போம்.
அருட்தந்தை மா. சத்திவேல்