பட மூலம், Selvaraja Rajasegar
மிக் விவகாரம் குறித்து முதலில் எனக்கு 2007லேயே தெரியவந்தது. நான் குடும்பத்தவர்களுடன் கனடாவில் வசித்து வந்தேன். தந்தை என்னை தொலைபேசியில் அழைத்து அது பற்றி தெரிவித்தார். சண்டே லீடர், கோட்டபாய ராஜபக்ஷவின் இரகசிய இராணுவ ஒப்பந்தம் குறித்து செய்தி வெளியிட்டுள்ளது எனத் தெரிவித்தார். மிக் விவகாரத்திற்கும் தனக்கும் எந்தவிதத் தொடர்புமில்லை என கோட்டபாய ராஜபக்ஷ தொலைக்காட்சி பேட்டியொன்றில் தெரிவிப்பதை சற்று முன்னதாக தந்தை தொலைக்காட்சியொன்றில் பார்த்திருந்தார். தந்தை கேள்விப்பத்திர நடைமுறைகள், அரசாங்கங்களிற்கு இடையிலான ஓப்பந்தங்கள், கடன்கள் தொடர்பான ஆவணங்கள் உட்பட பல விடயங்கள் குறித்து தெரிவித்தார். 16 வயது அப்பாவி யுவதியான எனக்கு அவற்றை விளங்கிக்கொள்வது கடினமாகயிருந்தது, நான் எங்கள் உரையாடலை தந்தை மகள் உரையாடல் அளவிற்கு மாற்ற முயன்று தோற்றேன். அவரது சிந்தனை ஒரே விடயத்திலேயேயிருந்தது. அவர் தான் எழுதவுள்ள அடுத்த கட்டுரை குறித்தே பேசினார்.
சில நாட்களிற்கு பின்னர் 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நான் வழமை போன்று சண்டே லீடர் இணையத்தளத்திற்குச் சென்றேன். அதில் “மிக் விவகாரம் பாதுகாப்பு அமைச்சின் மீது அவசர அவசரமாக தறையிறங்கியுள்ளது” என்ற தந்தையின் ஆசிரிய தலையங்கத்தை நான் பார்த்தேன். கோட்டபாய ராஜபக்ஷ தனக்கு தொடர்பில்லை என தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்துள்ளார் என சண்டே லீடர் செய்தி வெளியிட்டிருந்தது. மிக் விவகாரத்தை திட்டமிட்டு முன்னெடுத்தவர் அவரது உறவினரான உதயங்க வீரதுங்க என்றும் ராஜபக்ஷ, உதயங்க, விமானப்படை தளபதி மற்றும் இந்த விவகாரத்தில் தொடர்புபட்டுள்ள உக்ரேனின் சூத்திரதாரி ஆகியோர் மத்தியில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னரே இந்த மிக் கொள்வனவு ஆரம்பமானது எனவும் தந்தை தனது கட்டுரையில் தெரிவித்திருந்தார்.
ராஜபக்ஷவுடனான இந்தச் சந்திப்பு பெப்ரவரி 6ஆம் திகதி இடம்பெற்றது என சண்டேலீடர் தெரிவித்திருந்தது. இதற்கு மறுநாள் விமானப்படைக்கு திடீர் என மிக் விமானம் மீது ஆசைவந்தது எனவும், மிக் விமானக் கொள்வனவு குறித்து இலங்கை விமானப்படையின் தளபதி உக்ரைன் விமானப்படையின் தளபதிக்குக் கடிதமொன்றை எழுதினார் எனவும் சண்டே லீடர் குறிப்பிட்டிருந்தது. விமானப்படை தளபதி எயார் சீவ் மார்சல் டொனால்ட் பெரேரா உக்ரைனின் விமானப்படைத் தளபதி டிமித்திரி பெரெகுடொவ் என்பவரிற்கு 2006 பெப்ரவரி ஏழாம் திகதி எழுதிய கடிதத்தை நானே பார்த்திருக்கிறேன். அந்தக் கடிதம் உத்தியோகபூர்வ கடிதத் தலைப்பில் கூட எழுதப்படவில்லை. சிறுவர்களிற்கு பாலர் பாடசாலை ஆசிரியர்கள் எழுதும் எழுத்துக்கள் போல அவை காணப்பட்டன. அது சிறுபிள்ளைத்தனமான ஏமாற்றுவேலை.
பாதுகாப்புச் செயலாளரின் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் விமானப்படைத் தளபதியிடம் அவரது தலைமை அதிகாரியின் உறவினரால் திணிக்கப்பட்ட யோசனையை நடைமுறைப்படுத்தும் நோக்கத்தை கொண்டதே அந்தக் கடிதம். இதன் மூலம் இந்தக் கொள்வனவு நடைமுறைகளின் கீழ் இடம்பெறுவதாகக் காண்பிக்க முடியும்.
எனக்குத் தெரிந்தவரை, இரண்டு வாரங்களிற்கு முன்னர் பாதுகாப்பு செயலாளரிற்கு எழுதிய கடிதத்தில் மிக் விமானங்களிற்கு அப்பால் இலங்கை விமானப்படைக்கு என ஆராயப்படவேண்டிய பல்வேறு தெரிவுகள் உள்ளன என டொனால்ட் பெரேரா குறிப்பிட்ட பின்னர் தீடீர் என மிக் விமானக் கொள்வனவில் ஈடுபட ஏன் தீர்மானித்தார் என எவரும் கேட்கவில்லை. எனது தந்தையின் செய்திகள் மிக் விமானக் கொள்வனவு சட்டரீதியாக இடம்பெறவில்லை என்பதை காண்பிக்கும் பல ஆதாரங்களை முன்வைத்திருந்தன. விமானக் கொள்வனவிற்காக பயன்படுத்தப்படும் பல ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகள் மீறப்பட்டதையும், ஆதாயம் பெறுவதற்காக இரகசிய நிறுவனமொன்று உருவாக்கப்பட்டதையும், இந்த விடயத்தில் உதயங்க வீரதுங்கவிற்கு உள்ள தொடர்புகளையும் எனது தந்தை அம்பலப்படுத்தினார்.
அதன் பின்னர் ஒக்டோபர் 17 2007 இல் கோட்டபாய ராஜபக்ஷவிற்கு அவதூறு ஏற்படுத்தியதற்காக எனது தந்தைக்கு எதிராக மானநஸ்ட வழக்கு தாக்கல் செய்யப்படும் என கோட்டபாய ராஜபக்ஷவின் சட்டத்தரணியொருவர் அச்சுறுத்தும் கடிதமொன்றை எழுதினார். சண்டேலீடரின் மிகவும் புத்திசாலித்தனமான ஆசிரியர் வைத்துள்ள பொறிக்குள் தான் அகப்படுறேன் என்பதை கோட்டபாய ராஜபக்ஷ ஒருபோதும் எண்ணியிருக்க மாட்டார் என நான் கருதுகின்றேன். கோட்டபாய ராஜபக்ஷவின் அந்தக் கடிதத்தில் எனது தந்தையின் துணிச்சலான செய்திவெளியிடுதல் காரணமாக பாதுகாப்பு செயலாளரின் பணிக்கு கடும் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இது கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனது தந்தை எவ்வித தயக்கமும் இன்றி உடனடியாக பதிலளித்தார். கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது உண்மையென்றால் தேசிய பாதுகாப்பின் நலனை கருத்தில் கொண்டு ராஜபக்ஷ உடனடியாக தனது பதவியை இராஜினாமா செய்யவேண்டும் என எனது தந்தை தெரிவித்தார். தனக்கு எதிராக மானநஸ்ட வழக்கு தொடுக்கப்பட்டால் தான் பதிலுக்கு அவ்வாறான வழக்கை தாக்கல் செய்யவேண்டி நேரிடும் என எச்சரித்திருந்த தந்தை நான் எப்போதும் இந்த நாட்டிலேயே வாழ்ந்து அதன் உயர்விற்காக உழைத்திருக்கிறேன். அதேவேளை கோட்டபாய ராஜபக்ஷ தனது சுயவிருப்பத்தின்பேரில் இலங்கையிலிருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறி அந்த நாட்டிற்கு விசுவாசமாக அந்த நாட்டின் பிரஜையானவர் என சுட்டிக்காட்டவேண்டியிருக்கும் என எச்சரித்திருந்தார்.
தனது தொழில் வாழ்க்கை, காலம் முழுவதும் எனது தந்தை வழக்கு தொடுப்பதில் மிகத்திறமை வாய்ந்தவராகவும், வார்த்தை போரில் திறமைசாலியாகவும் காணப்பட்டார். எனினும், விரைவில் அவர் அதிகளவு தீயநோக்கம் கொண்ட யுத்தமொன்றை எதிர்கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். எனது தந்தை ராஜபக்ஷவின் கடிதத்திற்கு சீற்றத்துடன் பதிலளித்த சில வாரங்களின் பின்னர் 2007 நவம்பர் 21ஆம் திகதி கறுப்பு உடையணிந்த விசேட படைப்பிரிவினர் சண்டே லீடர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர், தாக்குதலிற்கு பயன்படுத்தப்படும் துப்பாக்கிகளை காண்பித்து அலுவலகத்தின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தவர்களை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர், அதன் பின்னர் அச்சுப்பகுதிக்கு தீயிட்டனர். இந்த பரிதாபகரமான கோழைத்தனமான நடவடிக்கைக்காக காவல்துறையினர் எவரையும் கைதுசெய்யவில்லை, விசாரணை செய்யவில்லை, நீதியின் முன்நிறுத்தவில்லை என்பது எவருக்கும் ஆச்சரியமளிக்காத விடயம்.
இதற்கு மூன்று மாதத்தின் பின்னர் எனது தந்தை எதிர்பார்த்து காத்திருந்த யுத்தம் ஆரம்பமானது. 2008 பெப்ரவரி 22ஆம் திகதி கோட்டபாய ராஜபக்ஷ எனது தந்தைக்கும் சண்டே லீடரிற்கும் எதிராக மானநஸ்ட வழக்கை தாக்கல் செய்தார். ராஜபக்ஷவிற்கு எதிராக எனது தந்தை முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தீயநோக்கம் கொண்டவை, பொய்யானவை. அவரின் நற்பெயரிற்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தை கொண்டவை என அவர் குறிப்பிட்டிருந்தார். அவ்வேளை நான் எனது குடும்பத்தவர்களுடன் நுகேகொடையில் உள்ள கந்தேவட்ட டெரசில் வசித்துவந்தேன். தனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்ட செய்தியை அறிந்தவுடன் எப்படி தந்தையால் சிரித்தபடி நடமாட முடிகின்றது என்பது குறித்து நான் ஆச்சரியமடைந்தேன்.
நான் அவரிடமிருந்து பதிலை பெறும் நோக்கத்தை விட ஆச்சரியத்துடனேயே அவரைப் பார்த்தேன், அவர் தனது முக்கியமான தொலைபேசி உரையாடல்களை முடிந்தவுடன் என்னைப் பார்த்து சிரிப்பார். எங்கள் மத்தியிலான அந்த உரையாடல்களின் நினைவுகளின் மேல் ஒரு தசாப்தகால துயரம் தோய்ந்துள்ளது. ஆனால், அதனையே நான் நினைவில் வைத்திருக்கின்றேன்.
யாராவது உனக்கு எதிராக மானநஸ்ட வழக்கை தாக்கல் செய்திருந்தால் அவர்கள் ஒரு நிலைப்பாட்டை எடுக்கவேண்டும். குறுக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என தெரிவித்த தந்தை வழமையான நீதிமன்ற வழக்குகளின் போது வழக்கு தொடர்பாக மாத்திரம் கேள்வி எழுப்பலாம் என தெரிவித்திருந்தார்.
அவதூறு வழக்கு என்பது வித்தியாசமானது, உங்கள் குணநலனிற்காக யாராவது அவதூறு வழக்கை தொடர்ந்தால் சத்தியப்பிரமாணத்தின் கீழ் அவர்களின் வாழ்க்கை குறித்து நீங்கள் எந்த கேள்வியையும் கேட்கலாம் எனத் தந்தை தெரிவித்தார். அவர் தனது கௌரவம் அவ்வளவு பெறுமதியானது, நான் ஒரு மில்லியனிற்கு மேல் பாதிப்பை ஏற்படுத்திவிட்டேன் என அவர் தெரிவித்தால், நாங்கள் எழுதியது உண்மையானது, சரியானது, பொதுமக்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்டது என என் தரப்பில் தெரிவிக்க முடியும். இதுவே சரியானது, இது வேடிக்கையானதும் கூட எனவும் தந்தை தெரிவித்தார். பத்திரிகைத்துறையில் எனது தந்தையின் சிறப்பு காரணமாக இவ்வாறான தருணங்கள் தவிர ஏனைய தருணங்களில் அடிப்படையில் ஒரு சட்டத்தரணி என்பதும் சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர் என்பதும் மறந்துபோகும்.
சண்டே லீடரின் ஒரு சொற்றொடரை பயன்படுத்துவது என்றால் – மிகச்சுருக்கமாக சொன்னால், ராஜபக்ஷவின் கௌரவம் பத்து ரூபாயக்கு கூட பெறுமதியானதில்லை என்பதை நீதிமன்றத்திற்கு நிரூபிக்கும் தந்திரோபாயத்தை பின்பற்றப்போவதாக எனது தந்தை தெரிவித்தார். பாதுகாப்புச் செயலாளரிடம் மறைந்திருக்கும் ஒவ்வொரு இரகசியத்தையும் அம்பலப்படுத்துவதன் மூலம் நான் இதனை செய்வேன் என அவர் குறிப்பிட்டார். நீதிமன்றத்தில் தனிப்பட்ட ரீதியில் கேள்வி எழுப்புவதன் மூலம் இதனை செய்வேன் என அவர் தெரிவித்தார். நீதிமன்ற வழக்கினை பத்திரிகையில் வெளியிடுவதன் மூலம் கோட்டபாய ராஜபக்ஷ யார் என்பதை நாட்டிற்கு காண்பிப்பதற்கும் அவர் திட்டமிட்டிருந்தார். எனக்கு இதனை தெரிவித்த பின்னர் அவர் எனக்கு வாழ்க்கை குறித்த முக்கிய அறிவுரையொன்றை வழங்கினார், எவர் மீதும் அவதூறு வழக்கினை தொடுக்கவேண்டாம் என்பதே அந்த அறிவுரை.
அவரது பத்திரிகை தொடர்ச்சியாக ஊழல் மோசடிகளை அடுத்த சில மாத்திற்கு அம்பலப்படுத்தி அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்ததால் தந்தையின் உற்சாகம் தொடர்ந்தது. வீட்டிலிருந்து அவசரமாக உள்ளே வரும்போதும் வெளியில் செல்லும்போதும் அவர்கள் தப்பியோடும் நிலையை ஏற்படுத்தியுள்ளோம் என தந்தை தெரிவிப்பார்.
சக ஊடகவியலாளரான கீத் நொயர் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னர் மே 2008 இன் பிற்பகுதியில் எனது தந்தையின் மனோநிலை மாறத்தொடங்கியது. கீத் நொயர் பாதுகாப்பு அமைச்சினை கடுமையாக விமர்சித்து வந்தார். இதில் வழமைக்கு மாறான விடயமொன்றுள்ளது. சண்டேலீடர் அச்சுப்பகுதி தீக்கிரையாக்கப்பட்டவேளை கவலையடைந்ததை விட அதிகமாக தந்தை கவலையடைந்தவராக காணப்பட்டார், அவரது சிரிப்பும் நம்பிக்கையும் காணாமல்போயிருந்தன. அதற்கு பிந்திய நாட்களில் நாட்டை விட்டு தப்பிச்செல்லுமாறு அவர் தொலைபேசியில் மெல்லிய தொனியில் பேசுவதை நான் செவிமடுத்திருக்கிறேன்.
மகிந்தவின் ராஜபக்ஷவுடனான தந்தையின் உறவு குறித்து நான் அறிந்தது என்னவென்றால், (அவர் அது குறித்து தனக்கு மிகவும் நெருக்கமானவர்களை தவிர வேறு எவரிடமும் பேசியதில்லை) கீத்நொயர் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னர் மஹிந்த ராஜபக்ஷவுடனான தந்தையின் உறவு முன்னரை விட நெருக்கமாகியது. ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும்போதும் அவரைச் சந்திக்கும்போது தந்தை மிகவும் முன்ஜாக்கிரதையாக காணப்பட்டார். தங்கள் சந்திப்புகளை புலனாய்வுப் பிரிவினரின் பார்வையிலிருந்து தவிர்ப்பதற்காகவே ஜனாதிபதியும் எனது தந்தையும் அவ்வாறு நடந்துகொண்டார்கள் என நான் கருதுகின்றேன். இருவரும் என்ன பேசினார்கள் என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், மஹிந்த ராஜபக்ஷ பாதுகாப்பற்றவராக உணர்கின்றார், எங்களது நீண்டகால நட்பின் மூலம் ஆறுதலடைகின்றார் என தந்தை தெரிவித்தார்.
டிசம்பர் 2008 இல் மாவட்ட நீதிமன்றமொன்று கோட்டபாய ராஜபக்ஷ குறித்து எனது தந்தை எழுதுவதற்கு தடைவிதித்ததைத் தொடர்ந்து என்னவேண்டுமென்றாலும் நடக்கும் என்ற மனோநிலைக்கு தந்தை தள்ளப்பட்டார். நாங்கள் கதிரையில் அமர்ந்து திரைப்படம் பார்க்கும்போது கோட்டபாய ராஜபக்ஷவை கேள்வி கேட்பது குறித்து நீங்கள் இன்னமும் ஆர்வத்துடன் இருக்கின்றீர்களா என நான் தந்தையிடம் கேட்பேன். அதற்கு அவர் உரிய பதிலை வழங்கமாட்டார். ஆனால், அவர்கள் தன்னை அவ்வளவு தூரம் செல்வதற்கு அனுமதிக்கமாட்டார்கள் என தான் கருதுவதாக தந்தை என்னிடம் தெரிவித்தார். நான் அவரிடம் என்ன சொல்கிறீர்கள் எனக் கேட்டவேளை அவர் என்னை கட்டியணைத்து முத்தமிட்டபடி தனக்கு ஏதாவது நடந்தால் அடுத்து என்ன செய்யவேண்டும் என்ற விபரங்கள் அடங்கிய கடிதமும் சிறிதளவு பணமும் எனது ஆடையொன்றிற்குள் உள்ளதாக தெரிவித்தார்.
என்னால் சுவாசிக்க முடியவில்லை, அவர் கூறிய விடயங்களால் ஏற்பட்ட அச்சம் காரணமாகவா அல்லது அவர் என்னை இறுக்கியணைத்ததன் காரணமாகவா என்னால் அந்தத் தருணத்தில் சுவாசிக்க முடியாத நிலையேற்பட்டது என்பது எனக்கு நினைவில்லை. தந்தையின் அருகிலிருக்கும்போது அச்சப்படுவதோ பயப்படுவதோ கடினம். எல்லா இடங்களிலும் நிறைந்திருப்பவர் போலவும், மரணமற்றவர் போலவும் அவர் காணப்படுவார். அனைத்து அரசியல் கட்சிகளினது அரசியல்வாதிகளும் தந்தை எல்லா இடத்திலும் இருக்கிறார், அவரிற்கு அனைத்தும் தெரிந்திருக்கின்றது என நகைச்சுவையாக தெரிவிப்பதுண்டு. தந்தை ஒரு குண்டுதுளைக்காத அங்கி அவரை எவராலும் தடுத்து நிறுத்தமுடியாது என அவரது நண்பர்களும் சகாக்களும் தெரிவிப்பார்கள். ஆனால், 2009 ஜனவரி 8ஆம் திகதி காலை தந்தை தான் நினைத்தது சரி என்பதை நிருபித்தார், நாங்கள் நினைத்தது தவறானது. அவர் அதிகாலைக்கு சற்று முன்னதாக கண்விழித்தார்.
காலை வேளைகளில் எனது தந்தை ஒரு கையால் தயாராகிக்கொண்டு மறுகையால் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருப்பார். தொலைபேசிகளை நிறுத்திவிட்டு உடற்பயிற்சியில் ஈடுபட்ட பின்னர் குளிக்கச்செல்வார். தான் முப்பது தடவை உடற்பயிற்சியில் ஈடுபடும்போது தனது தொலைபேசியை ஸ்பீக்கரில் விட்டுவிட்டு உடற்பயிற்சியில் ஈடுபடலாம் என்பதை அவர் உணரவில்லை. அவரது உடற்பயிற்சிகள் புஸ் அப்புகளிற்கு பதில் வயிற்று தசையை அசைக்கும் முயற்சியாகவே எனக்கு தோன்றியது.
தந்தை ஆடையணிந்து தயாரானவுடன் நாங்கள் கீழ்மாடியில் உள்ள காலை உணவருந்தும் மேசையில் அமர்ந்து உணவுண்போம், அவர் வேகமாக உணவுண்ட பின்னர் எனது நெற்றியில் முத்தமிட்டபடி வழமையான ஏனைய நாட்களை போல காரில் பயணமானார். நேரம் 8.15.
நான் எங்கள் வீட்டின் வாகனச்சாரதியிடம் சிறிது பணத்தை கொடுத்து திண்பன்டம் வாங்கி வருமாறு கேட்டேன். அவர் எனது தந்தையை அழைத்து தனது கையடக்கத் தொலைபேசியை காரில் விட்டுவிட்டதாக தனது சார்பில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார். நான் அதனை செய்தேன், தந்தையை டயஸின் கோபத்திலிருந்து காப்பாற்றினேன். இதற்கு சில மணிநேரத்தின் பின்னர் நான் எங்கள் வீட்டில் பணிபுரியும் மனிகாவிடம் டயஸ் காலை உணவுடன் வந்துவிட்டாரா என கேட்டேன், அவர் எனது கேள்வியையும் என்னை நேராக பார்ப்பதையும் தவிர்த்தார். நான் ஆச்சரியமடைந்தாலும் பதற்றமடையாமல் டயஸை தொலைபேசியில் அழைத்து அவர் எங்கிருக்கின்றார் என கேட்டேன், அதற்கு அவர் மருத்துவமனையில் எனத் தெரிவித்தார்.
எனது இதயம் வேகமாக அடிக்கத்தொடங்கியது, எனது குருதி உறையத் தொடங்கியது, மனிகா தொலைக்காட்சியை போட்டார், செய்தி வாசிப்பவர் ஒருவர் எனது தந்தை தாக்கப்பட்டார் என்றோ அல்லது சுடப்பட்டார் என்றோ தெரிவித்தார், எனக்கு எதுவும் நினைவில் இல்லை. நான் எல்லாவற்றையும் தொகுத்து பார்த்தேன். டயஸ் மருத்துவமனையில் இருப்பதாக தெரிவித்தது, இருகிய முகத்துடன் காணப்படும் மனிகா, செய்தி வாசிப்பவர் ஒருவர் புகைப்படத்துடன் எனது தந்தை குறித்து தெரிவிப்பது, நான் உடனடியாக மேல்மாடிக்கு சென்று தந்தையின் தொலைபேசியை எடுத்து குடும்பத்தவர்களை அழைக்க தொடங்கினேன். எனது அத்தை அது பிழையான தகவலாகயிருக்கலாம் எனத் தெரிவித்தார், நான் மெல்பேர்னில் எனது சகோதரர்களுடன் வசித்து வந்த அம்மாவை அழைத்து ஏதோ நடந்துவிட்டது, உடனடியாக கொழும்பு திரும்பவேண்டும் எனத் தெரிவித்தேன்.
நான் எனது தந்தையின் அறையில் காத்திருந்தேன், அவர் தாக்கப்பட்டுள்ளார், நான் எனது உடையை மாற்றிவிட்டு தொலைக்காட்சியின் முன்னாள் சென்று ஊடகங்கள் மீதான வன்முறையை கண்டிக்க வேண்டும் என விரும்பினேன். எனது தந்தையும் அதனையே விரும்பினார், இரண்டு நாட்களிற்கு முன்னர் சிரச தொலைக்காட்சிக்குள் கறுப்பு உடையணிந்த விசேட படைப்பிரிவினர் உள்ளே நுழைந்து தாக்குதலை மேற்கொண்டவேளை தந்தையும் அவ்வாறே செய்தார்.
ஆனால், எனது தந்தை வரவில்லை, எனது உறவினரான ரைசா கண்ணில் நீருடன் வந்து எனது தந்தையின் அறையில் அமர்ந்தவேளையே எனது மனம் யதார்த்த்தை ஏற்றுக்கொள்ள முயன்றது. ஆனால், அது முற்றாக தோல்வியடைந்தது. நான் ரைசாவுடன் தந்தையில் அறையை பூட்டிவிட்டு அதுக்குள்ளேயிருந்தேன். கண்ணீர் வடிந்த முகங்களுடன் பெருமளவானவர்கள் எனக்கு ஆறுதல் தெரிவித்தனர் என்பதைத் தவிர ஜனவரி 8ஆம் திகதி குறித்து வேறு எந்த ஞாபகமும் இல்லை. எனது வாழ்க்கையின் அடுத்த பல வருடங்கள் வெறுமை, துயரம், ஆறுதலற்ற நிலை ஆகியவை நிரம்பியனவாக காணப்பட்டன. நான் மெல்பேர்னிற்குச் சென்று எனது தாய் மற்றும் சகோதரர்களுடன் இணைந்துகொண்டேன்.
ஆனால், நான் இலக்கற்றவளாக காணப்பட்டேன், தனிமையில் சிக்கினேன். இளம் பருவ பெண்ணின் வாழ்க்கையில் வெற்றிடம் ஏற்படும், அதனை தந்தையின் அன்பு பாசத்தினாலேயே நிரப்பமுடியும். நான் அந்த தசாப்தத்தின் பெரும் பகுதியை தந்தையுடன் பேசுவதற்கும் அவரது தழுவலை உணர்வதற்கும் மீண்டும் வாய்ப்பு கிடைக்காது என்ற எண்ணத்துடனேயே கழித்தேன்.
தந்தையின் சாகசங்களை அவருக்கு அருகிலிருந்து வாழ்ந்து உணர்ந்த பின்னர் திடீர் என அவரில்லாமல் வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். அவருடைய பகுதியிலிருந்து தொலைவில் மெல்பேர்னில் வாழவேண்டியநிலை ஏற்பட்டது. நான் அவருடைய பாராம்பரியம், அவருடைய இலட்சியம் ஆகியவற்றிலிருந்து அனாதையாக்கப்பட்டதாக உணர்ந்தேன். இதற்கு எட்டு வருடங்களின் பின்னர் 2016 டிசம்பரில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்த நிசாந்த சில்வா மற்றும் சிசிர திசேர ஆகியோரை சந்தித்தவேளை எனது தந்தையின் படுகொலை குறித்த உண்மைகளை மூடிமறைப்பதற்கு தீயசக்திகள் எவ்வளவு தூரம் முயன்றன என்பதை நான் அறிந்தேன். இந்த அதிகாரிகளின் அர்ப்பணிப்பும் உறுதியும் எனக்கு முன்னோக்கி செல்வதற்கான உத்வேகத்தையும் பல வருடங்களின் பின்னர் எனது தந்தைக்கான நீதியை தேடுவதற்கான துணிச்சலையும் அளித்தன. 2009 ஜனவரிக்கு பின்னர் முதல் தடவையாக தங்கள் உயிர்களை பணயம் வைக்க துணிந்தவர்களால் நான் உத்வேகம் பெற்றேன். அவர்கள் பக்கத்தில் நிற்கும் வேளை நான் எனக்கான இடமொன்றை கண்டுபிடித்ததாக உணர்ந்தேன்.
தனது இறுதி மூச்சுவரை எனது தந்தை பத்திரிகையாளராக வாழ்ந்தார். அவரது இறுதி பேனா பதிவுகள் மரணத்திற்கு முன்னர் இடம்பெற்றன என சிஐடியினர் தெரிவிக்கின்றனர். மரணத்திற்கு சற்று முன்னர் அவர் மீது தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் எனக் கருதும் இரு நபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்களின் இலக்கத்தகடுகளை அவர் தனது குறிப்புத்தகத்தில் எழுதினார் என சிஐடியினர் தெரிவிக்கின்றனர்.
ஜனவரி 2009 நடுப்பகுதியில் அந்த குறிப்பேடு முற்றாக காணாமல்போயுள்ளது. எனது தந்தையின் மரணம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவந்த பிரதி பொலிஸ்மா அதிபர் பிரசன்ன நாணயக்காரவை சண்டே லீடரின் பத்திரிகையாளர் நிர்மலா கன்னங்கரா சந்தித்தார். சம்பவம் இடத்தில் தான் தனது கண்ணால் பார்த்த அந்த குறிப்பேடு குறித்து அவர் பிரதிபொலிஸ்மா அதிபரிடம் கேள்வி எழுப்பினார். எனினும் அந்த பொலிஸ் அதிகாரி பத்திரிகையாளர் தெரிவிப்பது தவறு, அவ்வாறான குறிப்புப்புத்தகம் எதுவும் காணப்படவில்லை எனத் தெரிவித்தார்.
மவுன்ட்லவேனியா நீதவான் முன்னிலையில் சாட்சியமளித்த இரு பொலிஸார் உட்பட பலர் ஆதாரங்கள் மத்தியிலிருந்த குறிப்பேட்டை நாணயக்காரவே திருடினார் எனத் தெரிவித்துள்ளனர். அவரே அனைத்து ஆதாரங்களையும் முற்றாக அழிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். சிஐடியினர் நாணயக்காரவை கைதுசெய்தனர். ஆனால், அவர் தனக்கான உத்தரவை வழங்கியது யார் என்பது குறித்து இறுதிவரை மௌனத்தை கடைப்பிடித்தார்.
அதேவேளை 2009 ஜனவரி மாதத்தில் களுபோவில மருத்துவமனையில் எனது தந்தையை பிரதேபரிசோதனைக்கு உட்படுத்திய அதன் சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் சுனில் கே குமார எனது தந்தை துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டார் எனத் தெரிவிக்கும் பொய்யான அறிக்கையை தயாரித்துக்கொண்டிருந்தார். எந்தத் துப்பாக்கி ரவைகளோ, அவை உள்ளே சென்று வெளியேறியதற்கான காயங்களோ, எச்சங்களோ அல்லது குற்றம் இடம்பெற்ற பகுதியில் வேறு ஆதாரங்களோ காணப்படாத போதிலும் அந்த சிறந்த மருத்துவர் அந்த முடிவிற்கு வந்தார். இந்த மருத்துவ அறிக்கை கட்டுக்கதை என நிருபிப்பதற்காக சிஐடியினர் எனது தந்தையின் உடலை தோண்டியெடுத்தனர், மூன்று மருத்துவ நிபுணர்கள் புதிய பிரதேச பரிசோதனையை மேற்கொண்டனர். துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டமைக்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை, கூரான ஆயுதங்களே பயன்படுத்தப்பட்டன என அவர்கள் ஒருமித்த முடிவிற்கு வந்தனர்.
பல வருட தடயவியல் அனுபவத்தை கொண்ட வைத்தியர் சுனில்குமார ஏன் தனது முடிவுகளில் தவறினார் என்பது எங்களுக்குத் தெரியாது. எனினும், சிஐடியினரின் விசாரணையில், கைதுசெய்யப்பட்ட வைத்தியர் பிரதிபொலிஸ்மா அதிபர் நாணயக்காரவின் உறவினர் என்பதும், போலியான மருத்துவ அறிக்கை தயாரிக்கப்பட்ட வேளை அவர்கள் இருவரும் தொடர்பிலிருந்தனர் என்பதும் தெரியவந்துள்ளது.
இக்காலப்பகுதியிலேயே எப்போதும் கடுகடுப்பாக காணப்படுகின்ற புனிதமானவரான கோட்டபாய ராஜபக்ஷ சிரித்துக்கொண்டே பிபிசிக்கு பேட்டியொன்றை அளித்தார் – எனது தந்தையின் மரணம் காரணமாக அவர் மகிழ்ச்சியாக உள்ளமை தெளிவாகத் தெரிந்தது. லசந்த விக்கிரமதுங்க யார் என அவர் மிகமோசமான விதத்தில் கேள்வி எழுப்பினார். இது மற்றொரு கொலை என தனது கேள்விக்கு தானே பதிலளித்தார். எனது தந்தை பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டமை குறித்து விசாரணை செய்வது போன்று நாடகமாடிய காவல்துறைக்கு பொறுப்பான அமைச்சின் நிரந்தர செயலாளரான அவர், இது குறித்து எனக்கு கவலையில்லை என தெரிவித்தார்.
இலங்கையிலிருந்து புறப்பட்டு சில மாதங்களின் பின்னர் நான் எங்கள் வாகனச்சாரதி டயசுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டேன். அவர் எனது தந்தையைக் கொலை செய்தது யார் என கேட்டார், நான் எனது தந்தை எதிர்வுகூறியதை அடிப்படையாக வைத்தும் பிபிசி பேட்டியை அடிப்படையாக வைத்தும் இது கோட்டபாய ராஜபக்ஷவின் வேலை எனத் தெரிவித்தேன். டயஸ் தனது கவலைகளை மறப்பதற்காக கோட்டபாய ராஜபக்ஷவே இதனைச் செய்தார் என பகிரங்கமாக தெரிவித்திருக்கின்றார். அதன் பின்னர் அவரை கடத்திய இனந்தெரியாத நபர்கள் அவரை மறைவிடமொன்றிற்கு கொண்டுசென்ற அவர்கள் மீண்டும் கோட்டபாய ராஜபக்ஷவிற்கு தொடர்புள்ளது என பேசினால் கொலை செய்யப்படுவார் என எச்சரித்துள்ளனர். பயந்துபோன டயஸ் கொழும்பிற்கு தப்பியோடியுள்ளார். 2016 ஆண்டிலேயே அவரைக் கடத்தியவர்களை அடையாளம் காண்பதற்கு சிஐடியினர் உதவினார்கள். அவரை கடத்தியவர் புலனாய்வு பிரிவைச் சேர்ந்த சிரேஸ்ட அதிகாரி உடலகம என்பது தெரியவந்தது. பாதுகாப்பு அமைச்சில் ராஜபக்ஷவின் தேசிய புலனாய்விற்கு பொறுப்பதிகாரியாக பணியாற்றியவர் உடலகம. அடையாள அணிவகுப்பின் போது டயஸ் அவரை அடையாளம் காட்டினார். டயஸ் அதன் பின்னர் இன்றுவரை தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்துவருகின்றார், அரசாங்கத்திடமிருந்து அவருக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.
2009 டிசம்பரில் சிஐடியினர் எனது தந்தையின் மரணம் குறித்த விசாரணையை முதல்முதலாக பொறுப்பேற்றனர். அவர்களிற்கு நீண்ட நாள் பிடிக்கவில்லை. ஒரு மாதத்திற்குள் முக்கிய விடயமொன்றை கண்டுபிடித்தனர். எனது தந்தையை கொலை செய்தவர்கள் பயன்படுத்திய கையடக்க தொலைபேசியை கண்டுபிடித்தனர். பின்னர் அந்த கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்வதற்கான அடையாள அட்டைகளை நுவரெலியாவைச் சேர்ந்த இயந்திரம் திருத்தும் ஏழை தொழிலாளி பிச்சை ஜேசுதாசனுடன் தொடர்புபடுத்தினர். அவரை விசாரணை செய்தவேளை தனது அடையாள அட்டை ஆறுமாதங்களிற்கு முன்னர் கனகெதர பியவன்ச என்ற இராணுவ புலனாய்வு உத்தியோகத்தர் திருடியதை ஒப்புக்கொண்டார். 2010 ஜனவரி 18ஆம் திகதி காலை இந்த விசாரணைகள் இடம்பெற்றன.
இதன் பின்னர் சிஐடியினரின் விசாரணைகளிற்கு பாதிப்பு ஏற்பட்டது, விசாரணை கோப்புகளை அவர்கள் அன்றே இறுதியாக பார்த்தனர், அந்த கோப்புகள் அவர்களிடமிருந்து மர்மான முறையில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டன. எவருக்கும் இதற்கான காரணம் தெரியாது.
இதேவேளை 2010 ஜனவரி 18ஆம் திகதி கோட்டபாய ராஜபக்ஷ தாய்லாந்தில் பணிபுரிந்து வந்த இராணு அதிகாரி ஒருவரை நாட்டிற்கு மீள அழைத்ததுடன் மேஜர் பிரபாத் புலத்வட்டேயை அவரின் இடத்திற்கு அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளார் என சிரச செய்தி வெளியிட்டது. திரிபோலி எனப்படும் இராணுவ புலனாய்வுப் பிரிவின் கட்டளை அதிகாரியே பிரபாத் புலத்வட்டே. எனது தந்தையின் மரணத்திற்கு காரணமானவர்களின் கையடக்க தொலைபேசிகளுடன் தொடர்புபட்ட கனகெதர பியவன்ச இந்த அணியிலேயே பணியாற்றினார். ஏதோ காரணத்திற்காக பாதுகாப்பு செயலாளர் இந்த மேஜர் தர அதிகாரியை வெளிநாட்டிற்கு அனுப்புவது குறித்து அவசரத்தை வெளிப்படுத்தினார். ஜனாதிபதித் தேர்தல் இன்னமும் ஒரு வார காலத்தில் இடம்பெறவிருந்த நிலையில் அதற்கான விதிமுறைகளை மீற கோட்டபாய ராஜபக்ஷ இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
ஏனைய மூடிமறைக்கும் நடவடிக்கைகள் ஒரு இராணுவத்தின் துல்லியத்தன்மையுடன் இடம்பெற்றன. 2010 ஜனவரியில் ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த பின்னர் ஜேசுதாசனும், பியவன்சவும் கைதுசெய்யப்பட்டனர். அப்பாவி ஜேசுதாசன் மர்மமான முறையில் உயிரிழந்தார். பியவன்ச நன்கு கவனிக்கப்பட்டார். தடுப்பு காவலில் உள்ளவேளை இராணுவ அதிகாரிகளிற்கு சம்பளம் வழங்க முடியாது. ஆனால், பியவன்சவிற்கு தடுப்பிலிருந்தவேளை ஊதியம் பெற்ற முதல் படைவீரர் என்ற வரலாற்றை ஏற்படுத்தினார். மேலும் அவரிற்கு பதவி உயர்வும், இராணுவத்திடமிருந்து ஒரு மில்லியன் கடனும் கிடைத்தது. அவர் தடுப்பில் சிறையிலிருந்த வேளையே இவை அனைத்தும் கிடைத்தன. பெருமைக்குரியது என அழைக்கப்பட்ட இராணுவம் நிர்வாக தவறினை இழைத்தது.
ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர் சரத்பொன்சேகாவே எனது தந்தையின் மரணத்திற்கு காரணம் என அரசாங்கம் பிரச்சாரமொன்றை முன்னெடுத்தது. அப்படியிருந்தாலும் -விசாரணைகளை மூடிமறைப்பதற்கு மிகப்பெருமளவு முயற்சிகளை மேற்கொண்டு முன்னாள் இராணுவத் தளபதி விடயத்தில் கருணையுடன் நடந்துகொண்ட ராஜபக்ஷ அரசாங்கம் அதன் பின்னர் பலவீனமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து நீதிமன்றத்தின் மூலம் அவரை சிறைக்குள் தள்ளியது.
2016 டிசம்பரில் நான் விசாரணையாளர்களை சந்திப்பதற்கு முன்னரே அவர்கள் இந்த உண்மைகளை கண்டுபிடித்துவிட்டனர் என்பதே துயரம் நிறைந்த உண்மையாகும். மேஜர் புலத்வட்டேயின் திரிபோலி பிளாட்டுன் எனது தந்தையின் கொலையுடன் மாத்திரமல்லாமல் பத்திரிகையாளர் கீத் நொயர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் கையும் களவுமாக பிடிபட்டபோதிலும், அவர்கள் இதுவரை கைதுசெய்யப்படாத நிலையில் உள்ளனர். அவர்கள் தங்களிற்கான இரகசிய நிதிஒதுக்கீடுகள், ஆயுதங்கள், வெள்ளை வான்கள், மோட்டர் சைக்கிள்கள், எவருக்கும் பொறுப்புக்கூறவேண்டிய தேவையின்மை போன்றவற்றுடன் சுதந்திரமாக நடமாடுகின்றனர். பத்திரிகையாளர்களைக் கடத்தியது, சித்திரவதை செய்தது கொலை செய்தது தொடர்பில் 20ற்கும் மேற்பட்ட இராணுவ புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். எனினும், இந்தக் கொலைகார கும்பலை ஒரு தசாப்தகாலமாக பாதுகாத்து வரும் தண்டனையிலிருந்து விலக்களித்தல் என்ற திரையை அகற்றுவதற்கு அரசாங்கமோ இராணுவமோ எந்த நடவடிக்கைகையையும் எடுக்கவில்லை.
இராணுவ புலனாய்வுப் பிரிவினர் சிஐடியினரையும் அவர்களிற்கு உதவுபவர்களையும் தொடர்ச்சியாக கண்காணித்து வருவதுடன் அச்சமூட்டும் தந்திரோபாயங்கள் மூலம் அவர்களை அடிபணிய வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவரும் அதேவேளை படைக்கட்டமைப்புகள் தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி சிஐடியினரிடமிருந்து ஆதாரங்களை மறைக்கின்றனர். கடந்த இரண்டு வருடங்களில் சிஐடியினர் உண்மைக்கு அருகில் நெருங்கிச்சென்ற அதேவேளை அதிகார வர்க்க தடைகளையும் முட்டுக்கட்டைகளையும் சந்தித்துள்ளனர். சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகளிற்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்துவதிலும், தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் சாட்சிகளை விட சந்தேகநபர்களிற்கு அதிக வசதிகளை வழங்குவதிலும் ஒரே மாதிரியான விதத்தில் நடந்துகொள்கின்றனர். தங்கள் உயிரை பணயம்வைத்த சிஐடியின் சாட்சிகள் தங்கள் வேலையை இழப்பதுடன் வீதிக்கும் தள்ளப்படுகின்றனர். அரசியல்வாதிகள் சிஐடியினரை கட்டுப்படுத்துகின்றனர் என மக்கள் தெரிவிப்பது வழமை. நான் தற்போது இதற்கு எதிர்மாறானதையே பார்த்திருக்கின்றேன். சிஐடியினர் துணிச்சலுடன் முன்னோக்கி சென்றுள்ளனர், அனைத்து கட்சிகளினதும் அரசியல்வாதிகளின் சீற்றத்தை எதிர்கொண்டுள்ளனர், அவர்கள் தேசப்பற்றுக்கும் தங்கள் தொழில்வாழ்க்கை முடிவிற்கு வருவதற்குமான சிறிய இடைவெளியில் பணிபுரிகின்றனர்.
“அதுவாகவேயிருக்கட்டும்” என எனது தந்தை தெரிவிப்பார், இந்த கரும் இருட்டிற்கு மத்தியில் தென்பட்ட சிறிய வெளிச்சம் என்னவென்றால் மிக் விவகாரத்தை மூடிமறைப்பதற்காக கொலைசெய்யலாம் என்ற உண்மை வெளிப்பட்டுள்ளமையே ஆகும். எவ்சிஐடியின் விசாரணைகள் எனது தந்தை இந்த விவகாரம் குறித்து வெளிப்படுத்திய ஒவ்வொரு சொல்லும் உண்மை என்பதை புலப்படுத்தியுள்ளது. அது மேலும் விரிவடைந்துள்ளது. உக்ரைன் அரசாங்கம் எவ்சிஐடியிடம் தங்களிற்கும் இதற்கும் தொடர்பில்லை எனத் தெரிவித்துள்ளது. 57 மில்லியன் டொலர்கள் களவாடப்பட்டு வரிகள் விதிக்கப்படாத நாடுகளில் உள்ள போலி நிறுவனங்கள் மூலம் இவை வழங்கப்பட்டுள்ளதை எவ்சிஐடியின் விசாரணைகள் வெளிப்படுத்தியுள்ளன. இன்டர்போல் உதயங்க வீரதுங்கவை தேடிவருகின்றது.
அரசியல்வாதிகள் எனது தந்தையின் கொலை குறித்த விசாரணைகளை முடக்குவதற்கு முயன்றுவருகின்ற போதிலும் கனடாவில் நான் இருந்தவேளை தந்தை என்னுடன் தொலைபேசியில் தெரிவித்த விடயங்கள் உண்மையானவை, அவர் அதனையே கண்டுபிடித்திருந்தார் என்பதை எவ்சிஐடி விசாரணைகள் நிரூபித்துள்ளன. அவர் அந்தத் தொலைபேசி உரையாடலில் தெரிவித்த பேட்டியை நான் தேடிகண்டுபிடித்தேன், பின்ங் கலர் சேர்ட்டும் டையும் அணிந்த கோட்டபாய ராஜபக்ஷ 2007 ஆகஸ்ட் 19ஆம் திகதி இரவு 9.30 மணிக்கு தெரன தொலைக்காட்சியின் 360டிகிரி நிகழ்ச்சியில் பேட்டி கண்ட டில்கா சமன்மல்லியிடம் தெரிவித்துள்ளார்.
எனது சிங்கள அறிவு மிகவும் மோசமானது. இதன் காரணமாக அதனை மொழிபெயர்ப்பதற்கு யாருடைய உதவியாவது அவசியம்.
30 நிமிடங்கள், மிக்கொள்வனவு எவ்வளவு ஒழுங்கான முறையில் இடம்பெற்றது எனவும், மூன்றாம் தரப்பொன்று அதில் தொடர்புபட்டிருக்கவில்லை எனவும், அதற்கும் தனக்கும் தொடர்பில்லை எனவும், மோசடிகள் இடம்பெற்றதாக வெளியான கட்டுரைகள் படையினரின் மனோநிலையை சீர்குலைப்பதற்காக விடுதலைப் புலி ஆதரவாளர்களால் எழுதப்பட்டவை எனவும் பிரசங்கம் செய்த பின்னர் கோட்டபாய ராஜபக்ஷ ஊடக சுதந்திரம் பற்றி பேசுகின்றார். அவர்கள் எனது படத்தை போட்டு ஆபாசமாக எழுதுகின்றனர் என அவர் குறிப்பிடுகின்றார். அதனை செய்துவிட்டு அவர்களால் தப்பமுடியுமென்றால் இந்த நாட்டில் அதிகளவு ஊடக சுதந்திரம் இருப்பதாகத்தானே அர்த்தம் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.
இவ்வாறான விடயங்களை எழுதிய பின்னர் அவர்கள் சிறந்த கார்களில் வீதிகளில் செல்லலாம், அவர்களிற்கு எதுவுமே நடக்காது எனவும் கோட்டபாய ராஜபக்ஷ தம்பட்டமடிக்கின்றார். தனது கையை அசைத்து வெட்கம் கெட்ட விதத்தில் வாகனச்சாரதியொருவர் வாகனத்தை செலுத்துவது போன்று சைகைசெய்கின்றார். எனது தந்தை பத்து வருடத்திற்கு முன்னர் இதனை கேள்விக்கு உட்படுத்தினார். மிக் விவகாரம் குறித்து கோட்டபாய ராஜபக்ஷ தெரிவிப்பதை விட இந்த தம்பட்டம் அடித்தல் உண்மையில்லை என தந்தை தெரிவித்தார். முன்னாள் பாதுகாப்புச் செயலார் கோட்டபாய ராஜபக்ஷ நான் கரிசனை கொண்டுள்ள அளவிற்கு இது குறித்து கரிசனை கொண்டிருக்கவில்லை என்பது எனக்கு தெரியும்.
“What They Did To My Father And Why They Did It” என்ற தலைப்பில் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்