பட மூலம், The National

தொடர்ச்சியாக இரு தருணங்களில் வெளியிட்ட தீர்ப்புகளின் மூலம்  நாட்டின் உச்சநீதிமன்றம், அரசமைப்பும் ஜனநாயகமுமே முதன்மையானவை என்ற வலுவான செய்தியை தங்களுக்கு இடையில் மோதலில் ஈடுபட்டிருந்த அரசியல் தலைவர்களுக்கு தெரிவித்துள்ளது.

ஆபத்திற்குள்ளாகியுள்ள ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான இலங்கை மக்களின் போராட்டத்தின் போது நீதித்துறை சிறந்த முறையில் மத்தியஸ்தம் செய்யும் என்ற நம்பிக்கையையும் நீதிபதிகள் ஏற்படுத்தியுள்ளனர்.

தனது நடவடிக்கைகள் கருத்துக்கள் மூலம் முழு நாட்டிற்கும் சுமையாக மாறிப்போயுள்ளதாக மீண்டும் மீண்டும் தன்னை நிரூபித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் குறுகிய அரசியல் நிகழ்ச்சிநிரலை ஏற்க முடியாது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் முன்னிலையிலும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னிலையிலும் தீர்ப்பிற்காக வந்த விடயம் மிகவும் இலகுவானது: ஜனாதிபதியும் ஏனைய அரசியல் தலைவர்களும் 19ஆவது திருத்தத்தினை மதித்து செயற்படவேண்டுமா அல்லது இலங்கை நாடாளுமன்றத்தினால் ஏப்ரல் 2015 இல் 18ஆவது திருத்தம் நீக்கப்பட்டுள்ள போதிலும் அது இன்னமும் நடைமுறையில் உள்ளது என்ற காரணத்தை முன்வைத்து செயற்படவேண்டுமா?​ அரசமைப்பு நெருக்கடியில் சிக்கியிருந்த தரப்பினர்களின் சட்டத்தரணிகள் நீதிபதிகள் முன்னிலையில் முன்வைத்த வாதங்கள் அடிப்படையானவை. ஆனால், அவை முக்கியத்துவம் வாய்ந்தவை.

இலங்கையின் ஜனநாயகத்தை விரும்பும் மக்களுக்கு சீற்றத்தை ஏற்படுத்திய விடயங்கள் குறித்தும்: ஒக்டோபர் 26ஆம் திகதி சிறிசேனவின் கருத்துக்கள் செயற்பாடுகள் அதன் பின்னர் இலங்கையின் அரசமைப்பு மோசமாக மீறப்பட்டமை குறித்தும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்கால தடையும், உச்சநீதிமன்றத்தின் இரு தீர்ப்புகளும் எந்தவித ஐயப்பாடுகளையும் (சந்தேகங்களையும்) கொண்டிருக்கவில்லை.

இலங்கையின் ஜனநாயகம் கடந்த ஏழு வாரங்களாக சந்தித்த பின்னடைவுகளுக்கு மத்தியில் இடம்பெற்ற வரவேற்கக் கூடிய விடயம் என்னவென்றால்  இலங்கையின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கக் கூடிய நம்பகத்தன்மை மிகுந்த பாதுகாவலனாக  ஸ்திரமான நீதித்துறை உருவானமையேயாகும்.

இது 19ஆவது திருத்தத்தினால் சாத்தியமான மிக முக்கியமான விடயம்.

ஜனாதிபதி அதிகாரத்தை கைப்பற்றும் ஆசைகொண்டவர்களுடன் இணைந்து அரசமைப்பை கிழித்தெறிந்து நாடாளுமன்றத்தை தனது காலடியில் விழுத்துவதற்கான பைத்தியக்காரத்தனமான முயற்சியில் ஈடுபட்டவேளை இது இடம்பெற்றது. நீதித்துறையும் தங்களிடம் சிக்கிக்கொள்ளும் என அவர்கள் கருதியிருக்கலாம். எனினும், கடந்த வியாழன், வெள்ளிக்கிழமைகளில் உச்சநீதிமன்றம் இலங்கையின் முழு வரலாற்றிலும் முக்கியத்துவம் வாய்ந்த இரு தீர்ப்புகளை வழங்கியது. சட்டத்துறை மாணவர்கள் வழமையாகக் குறிப்பிடுவது போன்று இவை வெறுமனே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகள் மாத்திரமல்ல. மாறாக இவை எதிர்காலத்தை தீர்மானிக்கும் இரு தீர்ப்புகளாகும்.

ஞாயிற்றுக்கிழமை முதல் இலங்கை அரசியல் ஜனநாயகத்தை பலப்படுத்துவர் குறித்த நம்பிக்கைளுடன் புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளது.

அரசியல் சாகச முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் இருளில் இருந்து தங்கள் உரிமைகள் சுதந்திரங்கள் மீது மேற்கொள்ளும் தாக்குதல்களில் இருந்து தங்களைப் பாதுகாப்பதற்கு நீதித்துறை உள்ளது என்ற நம்பிக்கையுடன் இலங்கை மக்கள் வெள்ளிக்கிழமைகளில் பதற்றப்படாமலிருக்கலாம்.

பலவீனமான வெற்றிகள்

தற்போதைய சூழமைவு மற்றும் பலவீனமான நிலையில் விழிப்புணர்வு மிக்க பிரஜைகள் ஜனநாயகத்திற்கான தங்கள் பாதுகாப்பினை உடனடியாக கைவிடமுடியாது. ஜனநாயக வெற்றிகள் பலவீனமானவையாக காணப்படுவதற்கு இரண்டு ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட காரணங்கள் உள்ளன.

முதலில் தற்போது பின்வாங்கச் செய்யப்பட்டுள்ள அதிகாரத்தைப் பறிக்க நினைப்பவர்களின் கூட்டணி அடுத்த வருடம் தேர்தல் மூலம் தனது திட்டத்தை மீள முன்னெடுக்கும். இரண்டாவது, அரசாங்கத்தை அமைக்கவுள்ள ஐக்கிய தேசிய கட்சி தனது சமூக பொருளாதார கொள்கைகளில் மாற்றங்களை மேற்கொள்ளாவிட்டால் ஜனநாயக தொடர்ச்சியை உறுதிசெய்யக்கூடிய சக்தியாக காணப்படாது.

நாடாளுமன்ற ஜனநாயகத்தை அல்லது அரசியல் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு வலுவான பொருளாதார ஜனநாயக, மறுபகிர்வு நீதி அவசியம். அவை இல்லாவிட்டால் அவற்றைப் பாதுகாக்க முடியாது. ஐக்கிய தேசிய கட்சி இந்த விடயத்தில் பலவீனமானதாகக் காணப்படுகின்றது.

ஐக்கிய தேசிய கட்சி இதனை உறுதிசெய்யாத பட்சத்தில் மக்கள் ராஜபக்‌ஷ குடும்பத்தின் வலதுசாரி இன அடிப்படையிலான மக்கள் கவர்ச்சி கொள்கைகளுக்கு மயங்கமாட்டார்கள்  எனத் தெரிவிப்பதற்கான உத்தரவாதம் எதுவுமில்லை.

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொள்ளும்போது மக்களை பணத்தை குறைந்தளவு செலவு செய்யுமாறு கேட்டுக்கொள்வதை தவிர ஐக்கிய தேசிய கட்சிக்கு வேறு வழியில்லை. வீழ்ச்சியடைந்துகொண்டிருக்கின்ற பொருளாதாரம் ஆளும் கட்சிக்கு தேர்தல் தோல்விக்கான சூழலையே ஏற்படுத்தும். இதன் காரணமாக 2019 இலங்கையின் ஜனநாயக எழுச்சிக்கான முக்கியமான ஆண்டாக காணப்படும்.

இந்த நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில் மக்கள் இயக்கங்கள் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான உறுதிப்பாட்டை இரட்டிப்பாக்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள், அரசியல் கட்சிகள், சிவில் சமூக குழுக்கள் மற்றும் தார்மீக சமூகம் ஆகியன ஜனநாயக விழிப்புணர்வு மற்றும் செயற்பாடுகளை இரட்டிப்பாக்கவேண்டும்.

மீள் எழுச்சி

சிறிசேனவின் பைத்தியக்காரத்தனத்திற்கு எதிராக கடந்த ஏழு வாரங்களாக காணப்பட்ட செயற்பாடுகள் காரணமாக இலங்கையின் தற்கால ஜனநாயக மீள் எழுச்சியில் பல சாதகமான விடயங்கள் உருவாகியுள்ளதைக் காணமுடிந்துள்ளது.

இதில் முதலாவது, சிறிசேனவின் துணிச்சலான ஜனநாயக விரோத செயற்பாடுகளை தீவிரமான அரசியல் கலந்துகொள்ளல்கள், நகைச்சுவைகள், அரசியலில் தீவிர ஈடுபாடு மற்றும் சக பிரஜைகளுடனான கடும் வாக்குவாதங்களின் போது சிறிசேனவின் நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்தமையாகும்.

இதேபோன்று அரசமைப்பு ஆட்சி, ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக உறுதிபூண்ட மக்கள் தாங்களாகவே முன்வந்து அணிதிரண்டனர். 2015இல் நல்லாட்சிக்காக வாக்களித்த ஆயிரக்கணக்கான இளைஞர்களே சிறிசேனவின் நடவடிக்கை காரணமாக கடும் சீற்றமடைந்தனர். மேலும், சமூகத்தின் அனைத்து வர்க்கத்தைச் சேர்ந்த மக்கள் மத்தியிலும் அரசியல் மீள் விழிப்புணர்வு ஏற்பட்டது. வழமையாக தாங்கள் புறக்கணிக்கும், அலட்சியம் செய்யும் அரசியல் கருத்துக்கள் குறித்து இவர்கள் தீவிரமாக ஆராயத் தொடங்கினார்கள்.

அரசியல் நகைச்சுவை, அதனை உருவாக்குதல், இரசித்தல், பகிர்ந்துகொள்ளுதல் என்பன மக்களின் வலிமை வாய்ந்த ஆயுதமாக பரிணமித்த தருணம் இது. அரசியல் மனச்சாட்சி, கல்வி, அரசியல் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான செயற்பாடுகள் ஆகியவற்றில் குடியரசுவாத எழுச்சியும் காணப்பட்டது.

கடந்த ஏழு வாரங்களில் மேலும் விஸ்தரிக்கப்பட்ட அரசியல் வெளியை தொடர்ந்தும் அமைதி வழியிலான அரசியல் எதிர்ப்பின் மூலம் பாதுகாப்பது எங்கள் முன்னால் உள்ள பாரிய பணியாகும். இதற்காக பொதுமக்களின் அரசியல் செயற்பாடுகளை சுயேட்சையான அரசியல் முன்னணியாகத் தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். இது எந்தவித தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல் அல்லது அரசியல் கட்சியுடன் தொடர்புபட்டதாக இருக்கக்கூடாது.

உண்மையில் தற்போதைய நெருக்கடியில் அரசமைப்புக்கு மாத்திரமே தற்போது தீர்வு கிடைத்துள்ளது. இந்த நெருக்கடியில் அரசியல் மோதலும் உயர் குழாம் மத்தியிலான போட்டிகளும் இன்னமும் முடிவிற்கு வரவில்லை.

இதேவேளை அரசமைப்பு – அரசியல் நெருக்கடிக்கு நீதிமன்றத்தின் தலையீடு மூலம் தீர்வு கிடைத்துள்ளமை இலங்கையில் ஜனநாயகத்தின் புதிய மீள் எழுச்சியின் யுகத்தை ஆரம்பித்துவைத்துள்ளது.

இந்த ஜனநாயக எழுச்சி யுகம் எவ்வளவு காலம் நீடிக்கும்?

இலங்கையின் அரசியல் வர்க்கத்தின் ஆழமாக பிளவுபட்டுள்ள மோதலில் ஈடுபட்டுள்ள தரப்புகள் தங்கள் மத்தியில் இன்னமும் தீர்க்கப்படாமலிருக்கும் மோதலை எவ்வாறு கையாள்வார்கள் அல்லது தீவிரப்படுத்துவார்கள் என்பதே இலங்கை ஜனநாயகத்தின் தவிர்க்க முடியாத தன்மையை மீண்டும் உறுதிப்படுத்துவதில் அவசியமானதாக காணப்படும்.

இதேவேளை, உயர்குழாத்தினர் மத்தியிலான மோதல் மீண்டும் பகிரங்கமாக வெடிப்பதற்கான வாய்ப்புகளே அதிகமாகத் தென்படுகின்றன. ராஜபக்‌ஷ முகாமிற்கும் ஜனாதிபதி சிறிசேனவிற்கும் இடையிலான பழைய விரோதம் புதுப்பிக்கப்படும் வினோதமும் இடம்பெறலாம். தனது தற்போதைய நிலைக்கு சிறிசேனவே காரணம் என மஹிந்த ராஜபக்‌ஷ கருதலாம். இரண்டு தடவை அவர் தன்னை தோற்கடித்துவிட்டார் என அவர் நினைக்கலாம். இவ்வாறான மோசமான அரசியல் பின்னடைவிலிருந்து மீண்டுவந்து மஹிந்த ராஜபக்‌ஷவினால் அமைதியாகயிருக்க முடியுமா?

ஜனநாயகத்திலிருந்து பின்வாங்கும் புதிய நடவடிக்கைகள் காரணமாக புதிய ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமொன்று உருவாகலாம். இதில் உடனடியாக இடம்பெறக்கூடியது ஐக்கிய தேசிய கட்சி தனது ஊழல்களை மறைப்பதற்கான பழைய நடவடிக்கைகளில் மீண்டும் ஈடுபடுவது, மஹிந்த ராஜபக்‌ஷ தரப்புடன் இரகசிய உடன்படிக்கைகளை ஏற்படுத்துவது, அரசமைப்பு சீர்த்திருத்தங்கள் குறித்து மக்களை குறிப்பாக சிறுபான்மையினத்தவர்களை ஏமாற்றுவது ஆகியனவாகும்.

பிரஜைகள் ஜனநாயகம் குறித்த விழிப்புணர்வுடன் இருப்பது எதிர்வரும் காலப்பகுதிக்கு மிகவும் அவசியம்.

Judiciary’s Message: Constitution and Democracy First” என்ற தலைப்பில் பேராசிரியர் ஜயதேவ உயங்கொட எழுதி Groundviews தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்


அரசியலமைப்பு சதி குறித்து கட்டுரைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்.