படம் | jdslanka

ஆர்ப்பாட்டம் எங்கு நிகழ்ந்தாலும் அந்த இடத்தில் அவளின் குரல் கேட்டுக்கொண்டேயிருக்கும்.

“எங்கட அண்ணைய எங்க வச்சு வேல வாங்கிறீங்கள்?  எனக்கு சாப்பாடும் வேணாம் ஒண்டும் வேணாம், எங்கட அண்ணைய விடுங்கோ, என்ன சுட்டாலும் பரவாயில்லை. நான் தனிய இருந்து என்ன செய்யப்போறன். ஆருக்குத் தெரியும் இண்டைக்கு இரவே எனக்கு வெடி வைக்கலாம். அதுக்குள்ள அம்மாவ (நவநீதம் பிள்ளையை) பார்க்கோணும்” என்பதுதான் அன்றைய தினம் அவளின் அழுகுரலாக இருந்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை யாழ். பொது நூலகத்திற்கு வருகை தந்திருந்தவேளை அந்த சிறுமியின் அழுகுரல் அது.

தனது சகோதரனை எப்படியாவது மீட்டுவிடவேண்டும் என்பதை அவளின் கதறல் பார்ப்பவர்களை உருக்குழைய வைத்துவிடும். “எங்களுக்கு நீதி வேணும். நாங்கள் ஒண்டுமில்லாதவர்கள். எங்கட அண்ணை புலியில்லை. அவனை விட்டுடுங்கோ. நான் அவனை பாக்கோனும். ஐயோ எங்களுக்கு உதவுறதுக்கு யார் இருக்கினம். நாங்கள் அநாதைகள். நாங்கள் எங்கட அண்ணையை பாக்கோனும்” அந்த பிஞ்சின் ஒவ்வொரு வார்த்தையும் மனதில் ஆணி அடித்தது போல இன்று வரை மனதில் பதிந்து கிடந்து உறுத்திக் கொண்டிருக்கின்றன.

காதில் அவளின் கதறல் இன்றும் கேட்டுக்கொண்டிருக்க, அவள் தீர்க்க தரிசனமாய் அன்று சொன்ன வார்த்தைக்கு இசைவாக இன்று அந்த கொடுஞ்செயல் நிகழ்ந்தேறியிருக்கின்றது. “எங்களையும் எண்டைக்கோ உவங்கள் கடத்திக்கொண்டு போவாங்கள். எங்களுக்கும் உந்த நிலமை தான் நடக்கப்போகுது.” சிறுமியின் ஆரூடம் கடந்த 13ஆம் திகதி இரவே நடந்தேறியிருக்கிறது.

விபூஷிகா என்ற அந்தச் சிறுமி தனது தமையன் மீது எவ்வளவு தூரம் பாசம் வைத்திருக்கின்றாள் என்பதை உறவுகளை மீட்கும் ஆர்பாட்டங்களின்போது காணமுடியும். ஆர்பாட்டக்காரர்களில் இவள் மட்டும் தனியாக பளிச்சென்று தென்படுவாள். சனவெளியில் தனக்கு ஏற்பட்ட வலியையும் வேதனையையும் சொல்லி அழும் அந்த பிஞ்சு எப்படியாவது தன்னுடைய தமையனை பார்க்கவேண்டும் என்ற அங்களாய்ப்பில் தவிப்பாள். அவளுக்கு மறைத்து பேச தெரியாது. வாயில் வரும் அத்தனை வார்த்தைகளும் “என்ர அண்ணையை என்னிட்ட குடுத்திடுங்கோ. எனக்கு என்ர அண்ணை வேணும். நான் அவனை பார்க்கோனும்” என்ற அவளின் ஏக்கத்தை தீர்த்துவைக்க சாதாரண ஒருவனால் முடியாது.

அன்று ஞான சம்பந்தர் தந்தையை காணவில்லை என்று ஆற்றங்கரையினில் நின்று அழ, இடப வாகனத்தின் மீது ஏறிய உமையும் சிவனும் குழந்தைக்கு பால்கொடுத்து அழுகையை நிறுத்தினர். குழந்தையும் ஞானம் பெற்று மூன்று வயதிலேயே சிவனையும் உமையையும் உருவகப்படுத்தி பாடியது. குழந்தையின் ஞானம் பெருகியது என்று சைவ சமயம் சொல்கின்றது. ஆனால், இறைவா கொடுமையிலும் கொடுமை, எங்கள் அண்ணாவை என்னிடம் தாங்கோ என்று அழுகுரல் எழுப்பிய அந்த பிஞ்சின் குரல்வளையை நசுக்கவா கடத்திச் சென்றனர்.

கடவுளிடம் எத்தனை தடவை பிராத்தனை செய்திருப்பாள் தன் தமையனுக்காக. இன்று அந்த பிஞ்சின் விடுதலைக்காக பிரார்த்திப்பது யாரோ?

இலங்கை தேசத்தில் மட்டும்தான் காணாமல்போனவர்களை மீட்டுத் தாருங்கள் என்று மண்றாடினால் மண்றாடியவரை மீட்டுதாருங்கள் என்று கோரும் நிலைமை காணப்படுகிறது. இவ்வாறான பல சந்தர்ப்பங்களில் தனது அரக்கத்தனத்தை நிரூபித்துக் காட்டிக்கொண்டிருக்கின்றது அரசு.

அண்ணா வருவான், அவனை பாக்கோனும், அவனோட விளையாடோனும் என்று காத்திருந்த அந்த சிறுமியையும் தாயையும் அண்ணணிடம் கொண்டு சேர்த்தார்களா அல்லது அண்ணா இனி வரமாட்டான், எதற்கு வீணான அழுகைகள் பேசாமல் வீட்டுக்குள் சத்தம் போடாமல் இருக்க வேண்டும் என்ற தகவல்களை கொடுக்க கொண்டு சென்றனரா? இல்லை அதுக்கும் மேலாக காணமல்போனவர்கள் பற்றி இனிமேலாவது யாரோனும் ஆர்ப்பாட்டத்தில் கோசம் எழுப்பினால் அவர்களுக்கும் இதுதான் கதி என்பதை காட்டத்தான் இந்த கடத்தலா? என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

அதுவரைக்கும் கடத்தப்பட்ட பத்தோடு பதினோராவது ஆளாக சிறுமி விபூஷிகாவையும் அவளது தாயாரையும் சேர்த்து விடுதலை செய்யுமாறு உறவுகள் கதறி அழுவார்கள்.

ஐயோ… இவர்களுக்காக போராட யாருமே இல்லையே!

புவன்