எமது நாடு சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ள இதே சந்தர்ப்பத்தில்தான் நாம் ஐக்கிய நாடுகளால் பிரகடனப்படுத்தப்பட்ட மனித உரிமைகள் தினத்தை 70ஆவது தடவையாக அனுஷ்டிக்கிறோம். ஆனால், நாம் இன்றும் ஆண்களுக்கு சமமானவர்களாகக் கருதப்படுவதில்லை. இலங்கை சனத்தொகையில் 50 வீதத்திற்கும் மேல் பெண்கள் இருந்தாலும் ஆளுவதற்கான அதிகாரத்தை வழங்காமல் உரிமைகள் மறுக்கப்பட்ட ஒரு வர்க்கமாக நாங்கள் இருக்கிறோம். இந்த நிலைமை மாறுவதற்கு சமூக ரீதியான பார்வையில் மாற்றம் நிகழவேண்டும். மாற்றம் நிகழ்வதால் தனக்கு என்ன நன்மை ஏற்படப்போகிறது என்பது குறித்து சிந்தித்தல் வேண்டும். இந்த அறியாமைதான் மாற்றமொன்றில் ஈடுபடத் தடையாக இருக்கின்றது என்கிறார் மனித உரிமைகள் செயற்பாட்டாளரான ஆரண்யா ராஜசிங்கம்.
இன்று சர்வதேச மனித உரிமைகள் தினமாகும்.
1948ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் திகதி 58 நாடுகள் மனித உரிமைகள் பிரகடனத்துக்கு அங்கீகாரம் வழங்கி இன்றோடு 70 வருடங்கள் பூர்த்தியாகின்றன. ஆனால் இன்றும் சமத்துவமில்லாமல், சுதந்திரமில்லாமல், உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் மக்கள் வாழ்ந்துவருகிறார்கள்.
இலங்கையைப் பொறுத்தவரையில் மனித உரிமைகள் என்றாலே அது சிறுபான்மையினருக்குச் சொந்தமானது என்றுதான் ஒரு சிலர் கருதுகிறார்கள் என்கிறார் ஆரண்யா ராஜசிங்கம். சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் அவருடான நேர்க்காணலை நாம் கீழே தந்திருக்கிறோம்.