படம் | BBC
இலங்கையில் இறுதி யுத்த காலப்பகுதியில் வைத்தியசாலைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் காயமடைந்த சிவிலியன்கள் தொடர்பில் பொய்யான தகவலை வழங்குமாறு விடுதலைப் புலிகள் இயக்கம் வற்புறுத்தவில்லை என யுத்த காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடமையாற்றிய வைத்தியர் வரதராஜா கூறுகிறார்.
பொலிஸாரின் தடுப்பில் இருந்தபோது அரசின் அச்சுறுத்தல் காரணமாகவே, புலிகள் தங்களை வற்புறுத்தினர் என கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் மாநாட்டின்போது தெரிவிக்க நேர்ந்தது என அவர் மேலும் கூறுகிறார்.
ஜெனீவாவிலிருந்து பிபிசி சிங்களச் சேவைக்கு வழங்கிய செவ்வியின்போதே மேற்கண்டவாறு வரதராஜா தெரிவித்துள்ளார்.
“நான் நான்காவது மாடியில் இருந்தபோது, பொய் சொன்னதாக சொல்லாவிட்டால் மூன்று அல்லது நான்கு வருடங்கள் உங்களை வைத்துக்கொள்வோம் என அரசு வற்புறுத்தியது” என வைத்தியர் கூறுகிறார்.
ஜெனீவாவில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஏற்பாடு செய்திருந்த கூட்டமொன்றில் தான் முகம்கொடுத்த அனுபவத்தை தெரிவித்த பின்னரே பிபிசி சிங்கள சேவைக்கு வைத்தியர் அது பற்றி கூற ஆரம்பித்தார்.
பொலிஸால் தங்கைக்கு அழைப்பு
இருப்பினும், சகோதர வைத்தியர்கள் மற்றும் குடும்பத்தவர்களின் பாதுகாப்பு கருதி நேர்காணலொன்றில் கலந்துகொள்வதை அவர் நிராரித்தார்.
மீண்டும் ஒருமுறை புலனாய்வுப் பொலிஸாரை வந்து சந்திக்குமாறு தெரிவித்து கடிதமொன்று வீட்டுக்கு வந்திருப்பதாகத் தெரிவிக்கும் அவர், தன்னால் வரமுடியாவிட்டால் தங்கையையாவது பொலிஸுக்கு வருமாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்.
யுத்த இறுதிக் காலப்பகுதி வரை யுத்தம் இடம்பெற்ற வலயத்துள் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கிவந்த வைத்தியர் சிலருள் வரதராஜாவும் ஒருவர். அந்த காலப்பகுதியில் இவர் உட்பட மேலும் 5 வைத்தியர்கள் பிபிசி மற்றும் ஏனைய ஊடகங்களுக்கு யுத்தத்தின் கோரம் குறித்து தொடர்ந்து தகவல்களை வழங்கிவந்தனர்.
யுத்தத்தின் பின்னர் கைதுசெய்யப்பட்ட இவர்கள் சில மாதங்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். 2009 ஜூலை 08ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த இவர்கள், விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் காரணமாகவே யுத்தம் தொடர்பாக பொய்கூற நேர்ந்தது என அவ்வேளை தெரிவித்திருந்தனர்.
அதன் பின்னர் கடமையாற்ற அவர்களுக்கு அனுமதி கிடைத்தது.
யுத்த காலப்பகுதியில் தான் பொய் கூறவில்லை எனத் தெரிவிக்கும் வைத்தியர், தான் தெரிவித்தவை உண்மை என்பதை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்றன உறுதிப்படுத்தியுள்ளன எனவும் அவர் கூறுகிறார்.
மருந்து இல்லை
“ஒரு நாளைக்கு நூற்றுக்கு மேற்பட்ட காயமடைந்தோர் வருவார்கள். விடுதலைப் புலிகளும் இந்த எண்ணிக்கையை அதிகரித்துக் கூறுமாறு சொல்லவில்லை. நாங்களும் கூட்டிச் சொல்லவில்லை” என அவர் கூறுகிறார்.
“80,000 பேருக்கு ஏற்ற வகையிலேயே மருந்து மற்றும் உணவு தரப்பட்டது. மயக்கமடையச் செய்யும் மருந்து, இரத்தம் தரவேயில்லை. அதனால், படுகாயமடைந்தவர்கள் மருந்து இன்றி, சிகிச்சை இன்றி இறந்தனர்”
தான் சேவை செய்த பல தற்காலிக வைத்தியசாலைகள் மீது ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டன எனத் தெரிவிக்கும் வைத்தியர் வரதராஜா, யுத்தத்தின் இறுதி மூன்று மாத காலப்பகுதியில் மட்டும் படுகாயமடைந்த 9000 பேர் செஞ்சிலுவைச் சங்கத்தினால் முள்ளிவாய்க்கால் மற்றும் புதுமாத்தளன் பகுதிகளில் இருந்து திருகோணமலை மற்றும் வவுனியா பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என மேலும் கூறுகிறார்.
மூன்று இலட்சம் மக்கள் யுத்த வலயத்தில் சிக்குண்டிருக்க, அங்கு 80,000 மக்கள் தொகையினரே இருக்கின்றனர் என அரசு தெரிவித்ததை வைத்தியர் நினைவுபடுத்துகிறார்.
“80,000 பேருக்கு ஏற்ற வகையிலேயே மருந்து மற்றும் உணவு தரப்பட்டது. மயக்கமடையச் செய்யும் மருந்து, இரத்தம் தரவேயில்லை. அதனால், படுகாயமடைந்தவர்கள் மருந்து இன்றி, சிகிச்சை இன்றி இறந்தனர்” என வைத்தியர் வரதராஜா கூறுகிறார்.
இருப்பினும், யுத்த காலப்பகுதியில் வைத்தியர்களினால் வெளியிடப்பட்ட கருத்து உண்மைக்குப் புறம்பானது என இலங்கை அரசு தொடர்ந்து கூறிவருகிறது.
நன்றி | பிபிசி சிங்களச் சேவை