பட மூலம், Middle East Monitor

எண்ணெய் விலை வீழ்ச்சியும் பொருளாதார பின்னடைவும்  

எண்ணெய் வளங்களின் உற்பத்தியைக் கொண்டு பொருளாதாரத்தில் துரித வளர்ச்சி கண்டுவரும் வளைகுடா நாடுகள், தற்போது நிலவிவரும் உலக எண்ணெய் விலையின் வீழ்ச்சியினால் பல்வேறு பொருளாதார பின்னடைவுகளையும் மற்றும் அரசியல் நெருக்கடிகளையும் எதிர்நோக்கிவருகின்றனர். இதன் காரணமாக இந்நாடுகளின் எதிர்கால பொருளாதார ஸ்திரத்தன்மை பற்றிய பல கேள்விகள் பல்வேறு கோணங்களில் எழுப்பப்பட்டுள்ளன.

பல தசாப்தங்களாக பல்வேறு துறைகளில் துரித முன்னேற்றம் கண்டு பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தி வரும் இந்நாடுகள், தற்போது நிலவிவரும் ஸ்திரமற்ற தன்மையை சீர்செய்வதற்காக பொருளாதார கொள்கைகளை சீர்திருத்தங்களின் அவசியத்தையும் மற்றும் அதற்கான ஆலோசனைகளையும் முன்னுரிமை படுத்தியுள்ளனர். முக்கியமாக, சர்வதேச பொருளாதார செயற்பாட்டிற்கு வளைகுடா நாடுகள் ஒரு பிரதான பூகோள மையமாக இருப்பதன் காரணமாகவும் மற்றும் நிலவும் பின்னடைவுகளை சீர்செய்யும் நோக்கத்துடன் அபிவிருத்தி அடைந்த நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்கள் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். அதன் அடிப்படியில், உலக வங்கி (World Bank), சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund) மற்றும் உலக பொருளாதார நிபுணர்கள் ஆகியோரின் ஆலோசனைக்கு அமைவாக, பொருளாதார கொள்கைகளில் சீர்த்திருத்தங்களைக் கொண்டுவருவதுடன் மட்டுமல்லாமல், எதிர்கால பொருளாதார பின்னடைவுகளைத் தடுக்கும் நவீன யுக்திகளை இனங்கண்டு அவற்றை அமுல்படுத்துவதற்கான வழிமுறைகளையும் வலுப்படுத்தி வருகின்றனர். அந்த வரிசையில், முதற்கட்ட நடவடிக்கையாக வரி முறையை முதல் முறையாக ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் சவூதி அரேபியா ஆகிய இரண்டு நாடுகளும் பெறுமதி சேர் வரியை (Value Added Tax) இவ்வருட தொடக்கத்தில் அறிமுகப்படுத்தியது ஒரு திருப்புமுனையாகும்.

வரி அறிமுகமும் பொருளாதார பல்வகைப்படுத்தலும்

பெறுமதி சேர் வரியின் அறிமுகமானது, வளைகுடா நாடுகளில் தற்காலிக வதிவிட விசாவில் பணிபுரியும் புலப்பெயர் தொழிலாளர் வர்க்கத்தினருக்கு பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, கட்டுமான துறை தொழிலாளர்களுக்கும் மற்றும் ஆகக்குறைந்த திறமைசாலிகள் வகுப்பில் பணியாற்றும் தொழிலாளர்களின் வருமானத்தில் அது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால், அவர்கள் தங்கள் விசனங்களைப் பதிவுசெய்துள்ளனர். ஒரு பக்கம் இது தொழிலாளர்களிடையே எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், மறுபக்கம் இவ் வரி அறிமுகமானது அரசாங்கத்துக்கு வருமானத்தை ஈட்டித்தந்துள்ளது. உதாரணமாக,  ஐக்கிய அரபு இராச்சியத்தின் 2018 மத்திய வங்கியின் அரை ஆண்டு அறிக்கையின் படி,  வரி அமுலாக்கத்தினால் கிடைக்கப்பெற்ற வருமானத்தால் அவர்களது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (Gross Domestic Product) இலாப விகிதம் உயர்வடைந்துள்ளது என அவ்வறிக்கை உறுதிப்படுத்துகின்றது. எனவே, இந்த நாடுகள் தங்கள் பொருளாதார செயற்பாட்டை பன்முகப்படுத்தும் நோக்கில் எதிர்காலத்தில் புதிய வரி முறைகளை அறிமுகப்படுவார்கள் என்பதில் எவ்வித ஐயமில்லை. இதேநேரம், வரி திருப்பியளிப்பு (Tax Return) நடைமுறையை அமுல்படுத்துவதற்கும் இந்நாடுகள் தீர்மானித்துள்ளன. சுற்றுலா விசாவில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் கொள்வனவு செய்யும் பொருள்களுக்கு வரி திருப்பியளிப்பு (Tax Return) தீர்மானித்துள்ள அரசாங்கமானது, வெறுமனே சுற்றுலா பயணிகளை மட்டுமன்றி, முதலாளி வர்க்கத்தினரையும் மற்றும் முதலீட்டாளர்கள் தங்களது வணிக செயற்பாடுகளை இலகு முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கும் சட்ட சீர்திருத்தங்களை அறிவித்துள்ளனர். இவ்முயற்சியானது, குறிப்பாக எண்ணெய் வள பொருளாதாரத்தை சாராது, சர்வதேச சந்தையில் நிலவும் எண்ணெய் வள சாரா கைத்தொழில் துறைகளைக் கொண்டு பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு முன்னெடுப்பாக இது கருதப்படுகின்றது.

அண்மையில் ஐக்கிய அரபு இராச்சியத்திக்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் தொழில் கிடைக்கும் பட்சத்தில் நாட்டைவிட்டு வெளியேறாமல் வதிவிட விசா பெற்றுக்கொள்வது தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள திடீர் மாற்றங்கள் தொழில் வர்க்கத்தினரிடேயே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனைத்தவிர , ஒவ்வொரு தொழிலார்களுக்கு கட்டாயமாக செலுத்த வேண்டிய வங்கி உத்தரவாத கட்டணத்தை நீக்கியதும், புதிய மருத்துவ காப்பீடுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது மற்றும் சுதந்திர வலயங்களில் இயங்கும் வர்த்தக நிறுவனங்களுக்கு அமைச்சரவை ஆணையம் ஊடாக அவ் நிறுவனங்களை சுதந்திர வலயமில்லாத இடங்களில் வணிக செயல்பாடுகளை முன்னெடுக்க அனுமதி வழங்கியது போன்ற விடயங்கள் தொழில் வழங்குநரையும் மற்றும் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் கொண்டு வரப்பட்ட ஒரு ஆக்கபூர்வமான நகர்வாகும்.

தொழில்  தேசியமயமாக்கல் 

வளைகுடா நாடுகளிலிலுள்ள பிரஜைகளுக்கு நிலவுகின்ற வேலையில்லா பிரச்சினையும் மற்றும் புலப்பெயர் தொழிலாளர்களின் அதிகரிப்பு காரணமாக சனத்தொகை புள்ளிவிபரத்தில் காணப்படும் மாற்றங்களும் தற்போது நிலவும் பொருளாதார பின்னடைவுக்கு காரணிகளாக விளங்குகின்றது. இக்காரணத்தினால், அந்நாடுகள் தொழில் தேசியமயமாக்கல் (Work Nationalization) என்ற தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் தனது நாட்டு பிரஜைகளுக்கு, குறிப்பாக அவர்களுடைய தொழில்வர்க்கத்தினரை அரசாங்க மற்றும் தனியார் துறைகளில் உள்வாங்கி தொழில் சந்தர்ப்பங்களை வழங்கி வருவதுடன், புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதைக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. தொழில் தேசியமயமாக்கல் தேசிய நிகழ்ச்சியானது ஒவ்வொரு வளைகுடா நாடுகளுக்கும் ஒத்த தன்மையைக் கொண்டு காணப்படுகின்றது. அதேவேளை, எதிர்காலத்தில் தொழில் சந்தையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள துறைகளில் ஈடுபடுவதற்கான ஆளுமை மற்றும் திறன்களை மேம்படுத்துவதைக்கான தளங்களை ஏற்படுத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் அவ் தொழில் தேசியமயமாக்கல் நிகழ்ச்சிகள் பின்வருமாறு விபரிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியம் (Emiratization), சவூதி அரேபியா (Saudization), ஓமான் (Omanization), குவைத் (Kuwaitization), பஹ்ரைன் (Bahrainization) மற்றும் கட்டார் (Qatarisation) போன்றவையாகும்.

ஐக்கிய அரபு இராச்சியத்தைப் பொறுத்தவரையில், அந்நாட்டு தொழில் அமைச்சு (Ministry of Human Resource and Emiratization : மனிதவள மற்றும் தொழில்  தேசியமயமாக்கல் அமைச்சு) 2020ஆம் ஆண்டுக்கு முன்பதாக கிட்டத்தட்ட 50 விகிதமான அந்நாட்டு தொழில்வர்க்கத்தினரை தனியார் மற்றும் அரசாங்க துறைகளில் ஈடுபடுத்துவதை பிரகடனப்படுத்தியுள்ளது. அண்மையில் வெளியிட்ட செய்தி அறிக்கையின்படி , இவ்வருட (2018) இறுதிக்குள் கிட்டத்தட்ட 15,000 பேருக்கு தொழில்வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பதாக அரசாங்கம் உத்தரவாதம் அளித்துள்ளது. இச்செயற்பாடானது, தற்போது நிலவும் தொழில் சந்தையில் தமது பிரஜைகளை ஒருங்கிணைப்பதன் மூலம் எதிர்கால பொருளாதார பின்னடைவுகளுக்கு தீர்வு காணக்கூடிய ஒரு மாற்றுவழியாக அரசாங்கம் இதனைக் கருதுகின்றது. இதைத்தொடர்ந்து, செயற்கை நுண்ணறிவு, விண்வெளி பொறியியல், தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு விடயங்களில் தங்கள் பிரஜைகளை சிறப்புத்தேர்ச்சி பெறுவதை ஊக்குவிக்கின்றது. துரதிஷ்டவசமாக, புலம்பெயர் தொழிலாளர்களில் நிபுணத்துவம் பெற்றவர்கள் குறிப்பாக வங்கி, முகாமைத்துவம், சுகாதாரம், காப்புறுதி, சுற்றுலா போன்ற துறைகளில் தொழில்புரிபவர்கள் மீது இத்தொழில் தேசியமயமாக்கல் நிகழ்ச்சி அவர்களுடைய தொழில் உத்தரவாதத்தில் ஒரு தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடும் என நம்பப்படுகின்றது. இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக, சவூதி அரேபியாவில் சில்லரை மற்றும் மொத்த வியாபாரத்தில் பணிபுரியும் கிட்டத்தட்ட ஒரு மில்லியன்  புலம்பெயர் தொழிலாளர்கள் இதனால் பாதிப்படைந்துள்ளனர். அதேபோல், குவைத் நாட்டில் ஆசிரியர் துறைக்கு புலம்பெயர் தொழிலாளர்களுக்கான விசா ஒதுக்கீடை இடைநிறுத்தியுள்ளனர். இவ்வாறு பல உதாரணங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

இருந்தபோதிலும், இவ்வாறான சவால்களுக்கு மத்தியிலும் இந்நாடுகளால் பொருளாதாரத்தை பன்முகப்படுத்தும் நோக்கில் எதிர்காலத்தில் முன்மொழியப்பட்டுள்ள பாரிய அளவிலான திட்டங்களுக்கு புலம்பெயர் தொழிலாளர்களின் பங்களிப்பு அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தகவல் தொழிலநுட்பம், சுற்றுலா, காப்புறுதி, மருத்துவம், கட்டுமான மற்றும் உட்கட்டமைப்பு போன்ற துறைகளுக்கு  திறன்வாய்ந்த புலம்பெயர் தொழிலாளர்களை உள்வாங்குவதற்கான தேவைப்பாடு அதிகமாகவே காணப்படுகின்றது.  இதன் அடிப்படியில், வளைகுடா நாடுகள் மற்றும் தொழிலாளர்களை வழங்கும் நாடுகளுக்கிடையில் இருதரப்பு மற்றும் பலதரப்பு புரிந்துணர்வு சந்திப்புக்கள் சர்வதேச மட்டங்களில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களின் எதிர்காலம்  

ஒரு மில்லியனுக்கு அதிகமான இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் வளைகுடா நாடுகளில் மட்டும் பணிபுரிந்து வருகின்றனர் குறிப்பிடத்தக்கது. அவர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் சவூதி அரேபியாவிலும் அதனைத்தொடர்ந்து ஐக்கிய அரபு இராச்சியத்தில் வீட்டுப்பணியாளர்களாக மற்றும் கட்டுமான துறைகளை சார்ந்து பணிபுரிகின்றனர். அவர்களில் கணிசமான எண்ணிக்கையினர் அதி திறமை மற்றும் திறமை சார்ந்த துறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஐக்கிய அரபு இராச்சியத்தைப் பொறுத்தமட்டில்  கிட்டத்தட்ட 250,000 அதிகமான இலங்கையர் பல்வேறு துறைகளில் பணிபுரிகின்றனர். அண்மைக்காலமாக,  இலங்கையிலிருந்து கத்தார் நாட்டிற்கு கட்டுமான பணிக்காக அதிக எண்ணிக்கையில் ஆண் தொழிலார்கள் செல்வதை அவதானிக்கூடியதாக உள்ளது. 2022ஆம் ஆண்டு கத்தார் நாட்டில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிக்காக நடைபெற்றுவருகின்ற கட்டுமான பணிகளே இதற்குப் பிரதான காரணமாகும்.

இலங்கை நாட்டில் தொடரும் பொருளாதார மற்றும் அரசியல் பின்னடைவுகள் போன்ற காரணிகளால் தொடர்ந்தும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களைத் தேடிச் செல்லும் தொழில்வர்க்கத்தினர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. பொருளாதார பகுப்பாய்வு அறிக்கைகளுக்கு அமைவாக, 2022ஆம் ஆண்டு இலங்கையில் வேலையற்றோரின் எண்ணிக்கை 4.6% உயர்வடையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில், இத்தொகை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது என எச்சரித்துள்ளனர். இலங்கையைப் பொருத்தமட்டில், வெளிநாட்டு வேலைவாய்ப்பைத் தீர்மானிக்கும் அதிகமான இளைஞர்கள், உயர்தர கல்வியை முடித்தவுடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களால் விளம்பரப்படுத்தும் கட்டுமானம், ஹோட்டல், உல்லாசத்துறை மற்றும் போக்குவரத்து போன்ற துறைகளில் தங்கள் ஆளுமைகளை வளர்த்துக்கொண்டு நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர். இதற்குப் பிரதான காரணமாக, இலங்கை அரசாங்கத்தினால் நடாத்தப்படும் தொழிற்பயிற்சி பாடத்திட்டங்கள் அனைத்தும் இரண்டாம் மற்றும் மூன்றாம் கைத்தொழில் துறைகளைச் சார்ந்து காணப்படுவதுடன், உலகச்சந்தையில் தற்போது நிலவும் நவீன தொழில் துறைகளை பூர்த்திசெய்யும் புதிய பாடநெறிகளை அறிமுகப்படுத்துவதற்கான வளப்பற்றாக்குறையுமாகும். அத்தோடு, அரசியல் விருப்பின்மையும் இதற்குப் பிரதான காரணமாகும். இருந்தபோதிலும், இலங்கை அரசாங்கமானது தொழில்வழங்கும் நாடுகளுடன் செய்துகொள்ளும் ஒப்பந்தத்தின் அடிப்படையில், அந்நாடுகளின் அணுசரணையுடன் தொழில்வர்க்கத்தினரின் ஆற்றலையும் திறமைகளும் சிறிய அளவில் அபிவிருத்தி செய்வதில் முனைகின்றனர். இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக, சர்வதேச தொழில் ஸ்தாபனம் (International Labour Organization- ILO) இலங்கை காரியாலயம், இலங்கை தொழிற்பயிற்சி திணைக்களம் மற்றும்  ஐக்கிய அரபு இராச்சியத்தின் தொழிற்பயிற்சி திணைக்களத்துடன் இணைந்து அமுல்படுத்தும் திட்டமானது நவீன முறைகளைக் கொண்ட கட்டுமான பயிற்சி முறையை உள்ளடக்கியுள்ளது. துரதிஷ்டவசமாக, தொடர்ந்தும் தென் கொரிய நாட்டிற்கு உற்பத்தி, சேவை மற்றும் கட்டுமானத் துறைகளிலிலும், மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவுக்கு வீட்டுப் பணித் துறைகளுக்குத் தேவையான ஆளணிகளை மட்டுமே சார்ந்திருப்பதினால் நவீன தொழில்நுட்பம் சார்ந்த தொழில் துறைகளுக்குப் போதிய திறன் வாய்ந்த ஆளணி இல்லாத காரணத்தினால், இலங்கையின் பொருளாதார பல்முகப்படுத்தலுக்கு இது பெரும் சவாலாகத் திகழ்கின்றது.

உலகசந்தையில் பங்குபற்றும் இலங்கை தொழிலாளர்களின் அந்நிய செலாவணியில் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் இலங்கை அரசாங்கமானது, நான்காம் கைத்தொழில் புரட்சியில் நிலவும் தொழில்நுட்பம் தொடர்புடைய தொழில் துறைகளில் தனது தொழிலாளர் வர்க்கத்தினை எவ்வாறு தயார்படுத்தப்போகின்றனர் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. ஏனேனில், தொழில் சந்தையில் நிலவிவரும் எதிர்கால தொழில்களுக்கான தேவை செயற்கை நுண்ணறிவு கொண்டே இயக்கப்படும் காரணத்தினால் ஆளணி தேவைப்பாட்டுக்கு மாற்றாக இயந்திர மனிதனைக் கொண்டே சில தொழில் துறைகள் இயங்குகின்றன. இதைத்தவிர, தகவல் தொழிநுட்ப திறமை வாய்ந்த தொழில் வர்க்கத்தினருக்கு தேவை அதிகமாக காணப்படும் காரணங்கள் உலகச்சந்தையில் நிலவுகின்ற தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் எவ்வாறான திட்டங்களை முன்வைத்துள்ளது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக காணப்படுகின்றது.

இத்தகைய சவால்களை முறியடிக்கும் திட்டங்களை இலங்கை அரசாங்கம் கொண்டுவர தவறும் பட்சத்தில், அந்நிய செலாவணியை மட்டுமன்றி, உலகச்சந்தையில் இலங்கை தொழில்வர்க்கத்தினர் அதிக வருவாயை ஈட்டக்கூடிய தொழில் வாயுப்புக்களை இழக்க கூடிய அபாயத்தை எதிர்நோக்கலாம். ஆகவே, தற்போது வளைகுடா நாடுகளில் காணப்படும் பொருளாதார மாற்றங்கள், குறிப்பாக நவீன தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு, இலகுபடுத்தப்பட்டுள்ள விசா நடைமுறைகள், தொழிற்சந்தையில் நிலவும் மட்டுப்படுத்தப்பட்ட ஆளணி சார்ந்த துறைகள், தொழில் தேசியமயமாக்கல் போன்ற விடயங்களை உள்வாங்கி இலங்கை அரசாங்கம் தனது கொள்கைகளில் மாற்றங்களைக் கொண்டுவரும் சந்தர்ப்பத்தில் மட்டுமே, எதிர்வரும் இளைய தொழில்வர்க்கத்தை உலக சந்தையில் காணப்படும் தொழில் துறைகளில் ஒருங்கிணைப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் கிட்டும் என்பது திண்ணம்.

பி. சொலமன்ரைன் 

பயிற்சி மற்றும் அபிவிருத்திக்கான மத்திய கிழக்கு நிலையம்- துபாய்