பட மூலம், Selvaraja Rajasegar

முதலாளித்துவ சமூகம் மண்ணை மண்ணோடு ஒட்டிய தொழிலை அதன் உற்பத்திகளை மட்டுமல்ல உற்பத்தியின் மக்களையும் நிகழ்கால, எதிர்கால பணத்தின் பெறுமதியிலேயே மதிப்பீடு செய்து திட்டமிடுகிறது. இலாபம் மட்டுமே இவர்களின் இலக்கு. உரிமைகளை விட சலுகைகளையும் இதே நோக்கிலேயே பார்க்கும்.

மக்களோடு தொடர்புடைய வாழ்வு, வாழ்வு நலன் கலை, கலாச்சாரம், பண்பாடு என்பவற்றையெல்லாம் தமது நோக்கத்திற்காக அழிக்கவும் புதுப்பிக்கவும் அதற்கேற்ப புதிய வாழ்வுமுறை கலாச்சாரத்தை அறிமுகப்படுத்துவதற்காக மக்களின் மூளை சலவை செய்யவும் தயங்கமாட்டார்கள்.

இலங்கையின் ஆட்சியாளர்களும், அரசும் ஜனநாயக சோஷலிச மக்கள் ஆட்சி என்றெல்லாம் யாப்பை அலங்கரித்தாலும் கொள்கை செயற்பாடு நடைமுறை அனைத்தும் முதலாளித்துவத்தை அடிப்டையாகக் கொண்டே திட்டமிடுவதை நாமறிவோம்.

இந்த அடிப்படை செயற்றிட்டத்துடன்தான் 1974இல் காணி உச்சவரம்பு சட்டம் கொண்டு வரப்பட்டு தனியார்  பெருந்தோட்டங்கள் அரசுடமையாக்கப்பட்டன. இலாப நட்ட கணக்கின் அடிப்படையில் இப்பெருந்தோட்டங்கள் மீண்டும் 1992ஆம் ஆண்டு 22 தனியார் கம்பனிகளிடம் கையளிக்கப்பட்டன.

இவ்வாறு மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை, அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் பொறுப்பில் இருந்த 402 பெருந்தோட்டங்களும், 2,36,240 ஹெக்டயார் காணிகளும், 13,491 தோட்ட உத்தியோகத்தர்களும், 2,62,698 தொழிலாளர்களையும், 22 தனியார் கம்பனிகளிடம் கையளிக்கப்பட்டு அவை பொறுப்பேற்றன.

அரசு மக்களின் பொது நலன் தொழில், தொழில் பாதுகாப்பு, மருத்துவம், குடிநீர், பாதையமைப்பு, பொது வசதிகள் என்பவற்றை எல்லாம் கம்பனிகளிடம் கையளித்து மக்களிடமிருந்து விலகிக் கொண்டது. கம்பனிகள் தமது வருமானத்தில் இருந்தே மக்களின் பொது நலன்களை செய்வதாக பொறுப்பேற்றன. அரசு பெருந்தோட்ட மக்களின் உழைப்பினின்று கிடைக்கப் பெறும் அந்நிய செலவாணியை தமதாக்கியது.

கம்பனிகளும், தொழிற்சங்கங்களும் மலையக பெருந்தோட்ட மக்களை தம்முடைய ஏகபோக சொத்தாக்கி அடிமையாக்கியதோடு தொழிலாளர்களை உழைக்கும் இயந்திரங்களாக்கி பண பெறுமதியிலேயே கணிப்பிட்டு தொழிலாளர்களையும் அவர்கள் குடும்ப உறுப்பினர்களையும் ஒடுக்கினர்.

ஆட்சியாளர்கள் குறுகிய அரசியல் நோக்கோடு மலையகத்தவர்களை ஆசிரிய தொழிலுக்கு மட்டும் உள்வாங்கி மக்களையும் தொழிலையும், பிரதேச அபிவிருத்தியையும், கைவிட்டு சமூக அரசியல் பொருளாதார ரீதியில் மலையக மக்கள் கைவிடப்பட்டவர்களாயினர். சுதந்திரத்துக்கு முன்னர் இருந்த இதே நிலைமையை தொடர​ந்து தக்கவைப்பதில் ஆட்சியாளர்கள் கட்சி வேறுபாடின்றி ஒன்றித்து செயலாற்றினர்.

1948ஆம் ஆண்டு பிரஜா உரிமை சட்டம், வாக்குரிமை சட்டம் கொண்டு வரப்பட்டு அந்நியர்கள் ஆக்கப்பட்ட அதேவேளை 1987ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய அரசியல் யாப்பின் 13ஆம் திருத்தத்தில் உருவாக்கப்பட்ட மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி எல்லைக்குள் பெருந்தோட்டங்கள், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்விட அபிவிருத்தி, அடிப்படை தேவைகளின் நிறைவேற்றம் உள்ளடக்கப்படவில்லை. தனித்த ஒரு தீவின் மக்களாகவே இலங்கை எனும் தீவிற்குள் இன்னுமொரு தீவின் மக்களாகவே கணிக்கப்பட்டனர். ஆனால், அவர்களின் வாக்குகளைப் பெற்றவர்கள் அரசியல் கதிரைகளை அலங்கரித்து சுகபோகங்களை அனுபவித்தனர்.

இதனால், பிரதேச சபைக்கும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் ஒதுக்கப்படும் எந்த பணமும் அபிவிருத்தியும் பெருந்தோட்டப் பகுதிகளை சென்றடையவில்லை. ஒரு தடவை மஹிந்த ஆட்சி காலத்தில் கண்டி உடபலாத்த பிரதேச சபைக்கு சுயாதீன குழுவாக போட்டியிட்ட தமிழ் தலைமைத்துவ குழுவிடம் பிரதேச சபை அதிகாரம் சென்றபோது அவர்கள் தோட்டப்புற தமிழர் பிரதேசத்தில் பாதையமைக்க பிரதேச சபையின் பணத்தினை பாவித்தார்கள் எனும் குற்றச்சாட்டின் அடிப்படையில் பிரதேச சபையின் அதிகாரம் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டது (கடந்த 2018.09.19ம் திகதி இச்சட்டம் புதுப்பிக்கப்பட்டாலும் அதன் அரசியல் நோக்கத்தை இன்னுமொரு கட்டுரையில் பார்க்கலாம்).

பொருளாதார அபிவிருத்தி, பொருளாதார வளர்ச்சி, நிலையான வாழ்வு, பாதுகாப்பு, மண்ணோடு ஒட்டிய எதிர்கால நம்பிக்கை என்பவற்றை மலையக மற்றும் பெருந்தோட்ட மக்கள் அனுபவிக்கவோ தன்னிறைவு அடையவோ கூடாது என்பதிலேயே அரச பயங்கரவாதம் முனைப்பாக செயற்பட்டு வருகின்றது.

அரசாங்கத்தின் இனவாத செயற்பாட்டுக் கொள்கையை நன்று உணர்ந்துக் கொண்ட கம்பனிகள் பெருந்தோட்டங்கள் அரச நிர்வாகத்தின் கீழ் இருந்தபோது கிடைத்த சலுகைகள் தொடர்ந்து கிடைக்குமென கூறிய போதும் அவற்றையெல்லாம் இல்லாமலாக்கி இலாபத்தை மட்டும் திரட்டுவதற்கு எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன. குடியிருப்பு திருத்தம், புதிய குடியிருப்பு அமைத்தல், சுற்றுப்புற சூழல் சுத்தமாக்கல், நீர் குழாய் திருத்தம், குடிநீர் பெற்றுக் கொடுத்தல் என்பவற்றை மட்டுமல்ல, குழந்தைகளுக்கு போசாக்கு மா வழங்கல், கர்ப்பிணி தாய்மார்களுக்கு இலகு தொழில் வழங்கல், தோட்டப்புற வைத்தியசாலைகளை பாராமரித்தல் என்பவற்றையெல்லாம் மெல்ல மெல்ல தவிர்த்துக் கொண்டனர்.

மேலும், கம்பனிகள் பெருந்தோட்டங்களை பொறுப்பேற்ற 1992 – 2005 இடைப்பட்ட காலத்தில் தொழிலாளர்களை 35 வீதத்தால் குறைத்தனர். புதிய தொழிலாளர்களை சேர்த்துக் கொள்வதில் இருந்து பின்வாங்கினர். திருமணம் முடித்து கணவனோடு சேர்ந்த வாழ வந்த பெண்களையும் தொழிலில் சேர்த்துக் கொள்ள மறுத்தனர். இவையெல்லாம் தொழில் மீதான வெறுப்பையும், எதிர்கால நம்பிக்கையையும் இழக்கச் செய்தன. இன்று பெருந்தோட்டத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 1,40,000 என தமிழ் முற்போக்கு முன்னனியில் அங்கம் வகிக்கும் தலைவர் ஒருவர் குறிப்பிடுகின்றார். அவ்வாறெனில் 1,22,698 பேர் தொழிலை விட்டு வெளியேறியுள்ளனர். இது திட்டமிட்ட செயலெனவே கொள்ளல் வேண்டும்.

வருமானம் மற்றும் சம்பளம்

தற்போது நடைமுறையிலுள்ள கூட்டு ஒப்பந்தத்தின்படி 2001இல் ஒரு தொழிலாளிக்கு நாள் ஒன்றுக்கான அடிப்படை சம்பளம் ரூ. 121 ஆகும். அது 2009இல் ரூ. 130 ஆக மட்டுமே அதிகரிக்கப்பட்டது. 8 வருடங்களுக்கு அதிகரித்த சம்பளம் ரூ 9.00 எனின் வருடத்திற்கு அதிகரித்த தொகை ரூ. 1.10 சதம் மட்டுமே.

மேலும், 2001க்கும் – 2018ற்கும் இடைப்பட்ட 18 வருட காலப்பகுதியில் அதிகரிக்கப்பட்ட அடிப்படை சம்பளம் ரூ. 399 மட்டுமே. இதனை வருடத்திற்கு ரூ. 25 அதிகரிப்பு தொகையாகவே கொள்ளல் வேண்டும். (தற்போதைய அடிப்படை சம்பளம் ரூ. 500) 2016ல் ரூ.450 இருந்த அடிப்படை சம்பளம் ஒன்றரை வருட நீண்ட போராட்டத்திற்கு பின்னர் பாண் ஒன்றின் விலை ரூ 60 ஆக இருந்த போது அதிகரித்த ரூ. 50 ஆகும். எனவே, பெருந்தோட்டத் தொழிலாளருக்கான சம்பளம் வாழ்வதற்காக அல்ல வறுமைக்குள் தள்ளுவதற்காகவே எனத் தெரிகிறது.

ஆனால், தோட்ட அதிகாரிகளுக்கு சலுகைகள், கொடுப்பனவுகள் மற்றும் மாவட்ட பணிமனைகள், கொழும்பு பணிமனைகள் ஆகியவற்றுக்கான செலவீனங்கள் ரூ. 100 மில்லியனை விட அதிகம் என கூறப்படுகின்றது. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை வசதிகள், தேவைகள் கவனிக்கப்படாத நிலையிலும் இம்மக்களோடு எந்த வகையிலும் தொடர்புபடாத கிரிக்கெட் விளையாட்டுக்காகவும் அதன் அபிவிருத்திக்காகவும் வருடாந்தம் ரூ 25 – 30 மில்லியன் ஒதுக்கப்படுவதை நியாயப் படுத்த முடியாது.

தற்போதைய டொலரின் விலையேற்றம் அதனால் ஏற்பட்ட பொருட்கள் போக்குவரத்துக்கான அதிகரித்த செலவீனம் என்பவற்றுக்கு மலையக பெருந்தோட்ட மக்களும் முகம் கொடுக்கும் நிலையில் தற்போது 46 வீதமாக காணப்படும் வறுமை நிலை இன்னும் அதிகரிக்கலாம். இவ்வறுமை நிலை அவர்கள் வாழ்வில் பல்வேறு விதமான தாக்கத்தை உண்டு பண்ணுவதோடு புலம் பெயர்விற்கும் வழி வகுக்கலாம்.

1992ஆம் ஆண்டு கம்பனிகளுக்கு பெருந்தோட்டங்கள் கையளிக்கப்பட்டு 5 வருட பரீட்சார்த்த காலத்தைத் தொடர்ந்து 50 வருட குத்தகைக்குக் காணிகள் கையளிக்கப் பட்டுள்ளன. தற்போது நடைமுறையிலுள்ள நிர்வாக முறைமை 2047ஆம் ஆண்டு வரை தொடரப்போகிறது.

இந்நிலையில், வறுமைக்குள் தள்ளப்படும் பெருந்தோட்ட மக்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ள சுயமாக வெளியேறுவதும், கூட்டு வாழ்வு முறை சிதைவதும் தவிர்க்க முடியாதது. இதனையே இன்றைய முதலாளித்துவ ஆட்சியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். தமக்கேற்ற வகையில் நிலத்தை கையாளுவதற்கு இது துணையாக அமையும்.

இது தடுக்கப்பட வேண்டுமெனில், தற்போதைய கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து தொழிற்சங்கங்கள் வெளியேற வேண்டும். அதற்கான அழுத்தங்களை சமூக அமைப்புக்கள் கொடுத்தபோதும் முதலாளித்துவ தொழிற்சங்கங்கள் அதிலிருந்து வெளியேறுவதற்கு ஆயத்தமில்லை.

ஒப்பந்த காலத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் தொழிற்சங்கங்களின் போராட்டங்கள் என்பனவெல்லாம் தொழிலாளர்களை ஏமாற்றுவதற்கே என்பது கடந்த கால அனுபவம். அத்தகைய நாடகங்களே தற்போதும் நடைபெறுகிறது. செப்டெம்பர் 5ஆம் திகதி மஹிந்த ஆதரவு அணியினர் கொழும்பில் நடாத்திய வெற்று போராட்டத்தைப் போன்று அமைச்சர் திகாம்பரம் தலைமையிலான தொழிற்சங்கம் செப்டெம்பர் 23ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம் நடாத்தினர். அரசாங்கத்தையும் ஒரு தரப்பாக கைச்சாத்திடுமாறு அமைச்சரவை கூட்டத்தின் போது அழுத்தம் கொடுக்காது, வெளியில் வந்து மக்களை திரட்டி படம் காட்டுகின்றனர்.

முதலாளித்துவ அரசும் அவர்களின் கூட்டாளிகளான பெருந்தோட்ட கம்பனிகளும், அவர்களுக்கு துணை போகும் பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களும் மலையக மற்றும் பெருந்தோட்ட மக்களைப் பாதுகாக்கப் போவதில்லை. தொழில் மற்றும் அரசியல் உரிமைகளோடு வாழ்வதற்கு வழி ஏற்படுத்தப் போவதுமில்லை. வறுமையில் வாழவிட்டு எதிர்கால நம்பிக்கை இழக்கச்செய்வதே இன அழிப்பின் இன்னுமொரு முகமே. இதுவே தற்போது வடக்கிலும் அரங்கேற்றப்படுகிறது.

பெருந்தோட்டத் துறையின் 1,40,000 தொழிலாளர்களில் 50,000 பேர் எந்தவொரு தொழிற்சங்கத்திலும் அங்கம் வகிப்பதில்லை எனக் கூறப்படுகின்றது. 2016ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது தங்களுக்கு நியாயமான சம்பளம் கிடைக்கவில்லையென பல தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களிலிருந்து விலகுவதாக பகிரங்கமாகவே அறிவித்தனர். இதற்கு யார் காரணம்? தொழிற்சங்கங்களின் முதலாளித்துவ முகத்தை அறிந்துக் கொண்டவர்கள் அதனின்று தூரமாகின்றனர்.

இந்நிலையில் வறுமையில் வாடும் மலையக பெருந்தோட்ட மக்கள் அன்றாடப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து போராட்டத்தையே வாழ்வாக்கிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களால் அரசியலைப் பற்றி நினைக்க முடியாது. அரசியல் அபிலாசைகள்,தேசிய இனம், தேசியம் எனும் சிந்தனைகளையெல்லாம் தூரமாக்கியே பார்ப்பர். இதுவே முதலாளித்துவவாதிகளினதும், இனவாதிகளினதும் தேவை. இதற்கு துணை நின்று அரசியல் வழிகாட்டிகளாக உள்ளோர் தமது சுக போகத்தை அனுபவிக்கின்ற போது ஒட்டு மொத்த தமிழர்களும் ஒரே விதமான இன அழிவிற்கே முகம் கொடுப்பர்.

அருட்தந்தை மா. சத்திவேல்

 


தொடர்புபட்ட கட்டுரைகள்: “மலையக மக்களை அரசியலிலிருந்தும் அவர்களது பூமியிலிருந்தும் பிடுங்கியெறிய பாரிய திட்டம்”, “சிலுவை சுமக்கும் மலையகம்