படம் | sulekha
இறுதி யுத்த காலப்பகுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்த தனது மகனை தேடி, நடைபெறும் அனைத்து ஆர்ப்பாட்டங்களிலும் கலந்துகொண்டு போராடி வந்த தாய் மற்றும் அவரது மகள் கடந்த வியாழக்கிழமை 13ஆம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்தனர். காணாமல்போனோரின் உறவினர்கள் வீதியில் இறங்க போராடுவதை தடுத்து நிறுத்துவதற்காகவே அரசு ஒரு நாடகத்தை அரங்கேற்றி தாயையும் மகளையும் கைதுசெய்திருந்தது. இவர்களை மட்டும் அடக்கி ஒடுக்கினால் போதாது, இவர்களுக்காக நடத்தப்படும் போராட்டங்களை தலைமையேற்று நடத்துபவர்கள், ஏற்பாடுசெய்பவர்கள், காணாமல்போனோர் தொடர்பான தகவல்களை சர்வதேசத்தின் முன் கொண்டுவருபவர்களை அல்லவா முடக்கவேண்டும் என்ற அசுரத்தனமான நோக்குடன் தற்போது மனித உரிமை செயற்பாட்டாளர்களை பலியெடுக்க அரச இயந்திரம் முடிவு செய்துள்ளது.
அதன் முதற்கட்டமாக பிரபல மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இனங்களிடையே முரண்பாடுகளை ஏற்படுத்த முயற்சித்தனர் என்றும் – பிரிவினைவாதத்தை தூண்டினர் என்றும் – அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி தருமபுரம் பகுதியில் பலவந்தமாக கடத்தல் பாணியில் கைதுசெய்யப்பட்ட தாய் ஜெயக்குமாரி மற்றும் அவரது மகள் வசிக்கும் வீட்டுப் பகுதியில் சம்பவ தினத்தன்று ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக மக்களிடம் கேட்டறிந்துகொண்டிருந்த போதே மனித உரிமை செயற்பாட்டாளர்களான ருக்கி பெர்னாண்டோ மற்றும் அக்கிராயன் அமைதிபுரம் தேவாலய பங்குத்தந்தை பிரவீன் ஆகியோர் நேற்று இரவு கிளிநொச்சி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு 10.05 மணி அளவில் ருக்கி பெர்னாண்டோவின் 0773874xxx என்ற கையடக்க தொலைப்பேசி இலக்கத்தின் ஊடாக அவரது நண்பர்களுக்கும், மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் குறுந்தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. அதில், தானும் அருட்தந்தை பிரவீனும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறோம் என அறியத்தந்துள்ளார். மேலும், தனது நண்பரொருவருக்கு அனுப்பிய குறுந்தகவலில், தானும் அருட்தந்தையும் தனித்தனியே விசாரிக்கப்பட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.
கைதுச் சம்பவம் இடம்பெற்றதன் பின்னர் வவுனியாவைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு கைது குறித்து கேட்டுள்ளார். அப்படி எவரும் கைதுசெய்யப்படவில்லை என்றும் – எவரும் இங்கு தடுத்துவைக்கப்படவில்லை என்றும் – பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பொலிஸால் வேறொரு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத குற்றத்தடுப்பு புலனாய்வுத் துறையினரின் விசேட பிரிவினரால் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் – கிளிநொச்சியில் வேறொரு பகுதியில் அவ்விருவரையும் தடுத்துவைத்திருக்கலாம் என்றும் – தெரிவிக்கப்பட்டது.
வவுனியாவைச் சேர்ந்த இன்னுமொரு சட்டத்தரணி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தை தொடர்புகொண்டு விவரம் அறிந்துள்ளார். அதன்போது, ருக்கி பெர்னாண்டோ மற்றும் அருட்தந்தை பிரவீன் ஆகியோர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் வைத்து பயங்கரவாத குற்றத்தடுப்பு புலனாய்வுத் துறையைச் சேர்ந்த 15 பேரால் விசாணைக்கு உட்படுத்தப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் பயங்கரவாத குற்றத்தடுப்பு புலனாய்வுத் துறையினரின் தடுப்பில் உள்ளனர் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாவது சட்டத்தரணிக்கு அளிக்கப்பட்ட பதிலுக்கும், இரண்டாவது சட்டத்தரணிக்கு அளிக்கப்பட்ட பதிலுக்கும் இடையே முரண்பாடு நிலவுகிறது.
அத்தோடு, மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இருவரும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவும் உறுதிப்படுத்தியுள்ளது.
பிரபல மனித உரிமைகள் செயற்பாட்டாளரான ருக்கி பெர்னாண்டோ மனித உரிமைகள் ஆவண மையத்தின் (INFORM | Human Rights Documentation Centre based in Colombo) நிறுவனத்தில் மனித உரிமைகள் தொடர்பான ஆலோசகராக கடமையாற்றி வருகிறார். அருட்தந்தை பிரவீன் யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டு இயங்கும் அமைதிக்கும் நல்லிணக்கத்திற்குமான அமைப்பின் பணிப்பாளராக (Centre for Peace and Reconciliation) இருந்து வருகிறார்.
மனித உரிமைகள் மீறல் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக காரசாரமாக விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. தாங்கள் மனித உரிமையின் காவலன். நாட்டுக்கு வந்து பாருங்கள், எங்கள் மனித உரிமைகள் நிலையினை என தெரிவிக்கும் அரசு, களையெடுப்பில் ஈடுபட்டு வருகிறது.