​படம் | omiusajpic

போராளிகளினதும், இறந்தவர்களினதும், ஆன்மா சாந்தியடைவதற்காக அஞ்சலிகளும் நினைவு நிகழ்வுகளும் நடத்தப்பட வேண்டியது அவசியம். ஆயினும், இந்தச் செயற்பாட்டினால் இராணுவத்தினர் மூலம் தீங்கு ஏற்படுமோ என அச்சமாக இருக்கிறது.

இவ்வாறு கடந்த வருடம் இறுதிப் போரில் தனது மூன்று பிள்ளைகளை இழந்த தாயாரொருவர் பி.பி.சிக்குத் தெரிவித்திருந்தார். இந்த வருடமாவது இழந்த தனது மூன்று பிள்ளைகளுக்கும் எதுவித இடையூறுமின்றி சுதந்திரமாக, அச்சமின்றி அவர்களது ஆன்மா சாந்தியடைய அஞ்சலி செலுத்தவேண்டும் என்ற எண்ணத்துடன் அந்தத் தாய் இருப்பார். இன்னும் எத்தனை உறவுகள் இந்தத் தாயைப் போன்றதொரு எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருப்பார்கள்?

போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்வதற்கு இலங்கை அரசு அனுமதிக்கவேண்டும் என ஜக்கிய நாடுகளுக்கான மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

போர் நிறைவடைந்து இன்னும் இரு மாதங்களில் ஜந்து வருடங்கள் பூர்த்தியாகப்போகின்றன. ஒவ்வொரு வருடமும், இந்த வருடமாவது சுதந்திரமாக எமது உறவுகளை நினைவுகூறவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் அனைத்தையும் இழந்து வாழும் மக்கள் எண்ணிக்கொண்டிருக்கின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த இன்னும் இருவருடங்கள், மூன்று வருடங்கள் கால அவகாசம் தாருங்கள் என பிச்சையெடுக்கும் குறையாக சர்வதேச நாடுகளிடம் இலங்கை அரசு மன்றாடுகிறது.

அண்மையில், பணம் செலுத்தப்பட்டு எதிர்வரும் ஜெனீவா மாநாட்டை சமாளிக்கவென ‘இலங்கையின் நல்லிணக்கமும் மீள்கட்டுமானமும்’ என்ற தலைப்பில் ஆவணப்படமொன்றை இலங்கை அரசு உருவாக்கியுள்ளது. அந்த ஆவணப்படத்தில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த இன்னும் ஒரு வருடம் தேவைப்படுவதாக தெரிவித்திருக்கிறார்.

ஒரு வருடமல்ல அல்ல, இன்னும் எத்தனை வருடங்கள் அவகாசம் வழங்கினாலும் இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக எந்தவொரு முயற்சியிலும் இலங்கை அரசு ஈடுபடாது என்பது நிதர்சனமாகும். நாட்டின் எதிர்காலத்தை கருதாமல் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு கட்சியினரும் தமிழருக்கு எதிரான தீவிரவாத கருத்தை வேரூன்றச் செய்கின்றனர். அதில் மஹிந்த ராஜபக்‌ஷ தேர்ந்தவர். இந்தவொரு நிலையில், நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசு முயலுமானால் அது தமிழர்களுக்கு சாதகமான விடயமொன்றாகவே அமையும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு நன்கு தெரியும். கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தக்கோரும் எதிர்க்கட்சியினரும் நாளை ஆட்சிபீடம் ஏறினால் இதே கதிதான்.

கடந்த நான்கு வருடங்களாக உறவினர்களால் போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்வதற்கு இலங்கை அரசு அனுமதிக்கவில்லை. வடக்கு, கிழக்கில் பிரதான பாதைகள், குறுக்குப் பாதைகள், ஆலயங்கள், பாடசாலைகள், பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்கள் மற்றும் சந்திகள் என அனைத்து பகுதிகளிலும் இராணுவம், பொலிஸார் ரோந்து கடமையில் ஈடுபட்டதோடு, புலனாய்வுப் பிரிவினரும் அவர்களது கடமையை அட்டகாசமாக நிறைவேற்றியிருந்தனர்.

பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களுக்கே இந்த கதி என்றால்…

எரிபொருள் விலையை குறைக்குமாறு கோரி சிலாபத்தைச் சேர்ந்த மீனவர்களால் 2012ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸாரின் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்ட வர்ணகுலசூரிய அன்டனி பெர்ணான்டோ (வயது-36) மற்றும் கொல்லப்பட்ட ஏனைய சகோதர தொழிலாளர்களை நினைவுகூர்ந்து அமைதியான முறையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று கடந்த சனிக்கிழமை 15ஆம் திகதி சிலாபம் நகரில் இடம்பெற்றது. மீனவர் சங்கங்கள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தனர். அமைதியான முறையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பொலிஸ் அடையாள அட்டைகளுடன் சிவிலுடையில் காடையர்கள் நுழைந்தமையால் குழப்பநிலை ஏற்பட்டது.

கடந்த ஆண்டு (2013) கொல்லப்பட்ட மீனவரை நினைவுகூர்ந்து நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டத்தை நீதிமன்ற உத்தரவுக்கமைய பொலிஸார் தடுத்திருந்தனர். அதேபோன்றதொரு உத்தரவை பெற்றுக்கொள்ள இம்முறையும் பொலிஸார் நீதிமன்றத்தை நாடியும் பலன் கிடைக்கவில்லை.

மக்களுக்குள்ள அமைதியான முறையில் எதிர்ப்புத் தெரிவிக்கும் உரிமை, உயிரிழந்தவர்களை நினைவுகூரும் உரிமையை நீதிமன்றத்தை நாடியோ அல்லது வன்முறையை பயன்படுத்தியோ தடுத்துவரும் மஹிந்த அரசு மீண்டும் ஒருமுறை அதை சிலாபத்தில் (தெற்கில்) நிரூபித்துள்ளது. பொலிஸ் அடையாள அட்டைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்திருந்த காடையர்களுக்கும் சீருடை பொலிஸாருக்கும் இடையே இருக்கின்ற தொடர்பு மீண்டும் ஒருமுறை புகைப்பட, வீடியோ ரீதியாக பதிவாகியுள்ளது.

அமைதியாக நடந்துகொண்டிருந்த ஆர்ப்பாட்டத்தை குழப்புவதற்காக கூரிய கம்பிகளுடன் சிவில் உடையில் பொலிஸார் அங்கு நடமாடிக்கொண்டிருந்தனர். நன்கு திட்டமிட்டு பொலிஸார் என அடையாளம் காணமுடியாதவாறு மக்களோடு மக்களாக ஐக்கியமாக முயன்றும் ஆர்ப்பாட்டக்காரர்களால் அவர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதன்போது ஒருவருடைய பணப்பை மீட்கப்பட்டதுடன், அதில் அவருடைய பொலிஸ் அடையாள அட்டையை காணக்கூடியதாக இருந்தது. அவரிடம் கூரிய கம்பியொன்றும் இருந்தது.

அவ்வாறு அடையாளம் காணப்பட்ட பொலிஸாரை கைதுசெய்யும்படி அங்கு வந்திருந்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு தெரிவித்தபோதும் அவர் வேறு விடயங்களை கூறி அதை திசைதிருப்பினார். பின்னர் சிவிலுடையில் இருந்த பொலிஸ் காடையர்களை கைதுசெய்யாது எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் தப்பிக்கச் செய்தனர்.

கடமை தவறாத பாதுகாப்புப் படையினர்

உரிமைகளைப் வென்றெடுப்பதற்காக போராடும் பல்கலைக்கழக மாணவர்கள், அமைப்பினர், தொழிற்சங்கங்கள் பெரும்பாலும் எதிர்ப்பினை வெளிக்காட்ட தேர்வுசெய்யும் இடங்களாக கோட்டை ரயில் நிலையம், லிப்டன் சுற்றுவட்டம் போன்றன காணப்படுகின்றன. இந்தப் பகுதியிலும் ஒரு ஓரமாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தங்களது எதிர்ப்பை காட்டிவிட்டு அமைதியாக அவர்கள் கலைந்து செல்கின்றனர். இவ்வாறு அமைதியாக எதிர்ப்பைக் காட்டுபவர்களையும் பொலிஸார் விடுவதில்லை. தங்களை புலனாய்வுப் பிரிவினர் பின்தொடர்ந்து வருகின்றனர் என அனைத்து பல்கலைக்கழக ஒன்றியத் தலைவர் சஞ்சீவ பண்டார தொடர்ந்து கூறிவருகின்றார்.

2012ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி அனைத்து பல்கலைக்கழக ஒன்றியத்தைச் சேர்ந்த ஜானக மற்றும் சிசித ஆகிய இரு மாணவர்கள் கம்பஹா பகுதியில் வைத்து விபத்தில் கொல்லப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்து நன்கு திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுள்ளது என்றும் – இவர்களது மரணம் தொடர்பில் சந்தேகம் உள்ளது என்றும் – சஞ்சீவ பண்டார தெரிவித்திருந்தார். சந்தேகத்துக்கான காரணங்களையும் தெரிவித்திருந்தார். அவர்கள் உயிரிழந்து இரண்டு வருடங்களாகப் போகின்ற நிலையில் இதுவரை எதுவித விசாரணைகளும் அரசால் மேற்கொள்ளப்படவில்லை.

ஆனால், கௌதம் புத்தரின் (அல்லாத) கொள்கைகளை முற்றுமுழுதாக இலங்கையில் நடைமுறைப்படுத்த புறப்பட்டிருக்கும் அரசின் ஊட்டச்சத்துக்களான பொதுபலசேனா, ராவண பலகாய, சிஹல ராவய போன்ற பௌத்த அடிப்படைவாத, பேரினவாத அமைப்புகள் அதியுயர் பாதுகாப்பு வலயங்களிலேயே ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்கின்றனர்.

இவர்கள், இராஜதந்திர கட்டடமான பங்களாதேஷ் தூதரகம் மீது தாக்குதல் நடத்தி சேதமாக்கலாம், பிரதமர் அலுவலக வாசல் கதவை உடைக்கலாம், தூதுவர் மனுவை பெற்றுக்கொள்ள வராததால் இந்திய தூதரக கதவில் அதை ஒட்டலாம், பலவந்தமாக அமைச்சக கட்டடங்களுக்குள் நுழையலாம், பொலிஸாரை தூஷிக்கலாம், பொலிஸாரைத் தாக்கலாம். எவ்வளவுதான் செய்தாலும் பொலிஸார் பார்த்துக்கொண்டுதான் இருப்பார்கள்.

ஆனால், இந்த நடைமுறையை ஏன் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்படும் மக்கள் போராட்டங்களில் அமுல்படுத்துவதில்லை. அதாவது, உரிமைகளுக்காகப் போராடும் சாமான்யர்களுக்கு மட்டும் உரித்தான சட்டங்களை கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற திமிர் பாதுகாப்புப் படையினரிடம் காணப்படுகிறது.

இந்த நிலையில், வடக்கில் போரால் உயிரிழந்தவர்களை நினைவுகூர்வதற்கு எவ்வாறு இலங்கை அரசு அனுமதிக்கும்.

வட மாகாண சபை என்ன செய்யப்போகிறது?

“மாவீரர்கள் உட்பட யுத்தத்தில் இறந்தவர்களை நினைவுகூர வேண்டியது முக்கியம். அதனை எவரும் தடுக்க முடியாது. யுத்தத்தில் இறந்த அனைவரையும் நினைவுகூருகின்ற நினைவு மண்டபம் ஒன்றை அமைத்து இறந்தவர்களை மக்கள் சரியான முறையில் நினைவு கூர்வதற்கான நடவடிக்கை மாகாண சபையின் மூலம் எடுக்கப்பட முடியும்” என கடந்த வருடம் பி.பி.சிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்திருந்தார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர், போரால் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக முள்ளிவாய்க்காலில் நினைவுச்சின்னமொன்றை அமைக்கவேண்டும் என வட மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கும் அரசிடமிருந்து ‘அப்படி செய்யமுடியாது’ என உடனடி பதில் கிடைத்தது.

வாக்குறுதிகளை வழங்கி வட மாகாண சபையில் ஆட்சிபீடமேறியிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பூர்வாங்க நடவடிக்கையில் ஈடுபட்டாலும், 5 வருட போர் நிறைவுக்கு இன்னும் இரு மாதங்கள் உள்ள நிலையில் இந்த வருடமாவது உயிர்நீத்த தங்களது உறவினர்களை நினைவுகூர்வதற்கு எதிர்பார்த்திருக்கும் மக்களுக்காக என்ன செய்யப்போகிறது?

படங்கள்: Vikalpa, Meepura

விஜி