எனக்கு ஐந்து பிள்ளைகள். நான்கு பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும். கடைசிப் பிள்ளை வயிற்றில் இருக்கும்போதுதான் கணவர் என்னை விட்டுப் பிரிந்தார். கடைசிப் பிள்ளைக்கு இப்போது 6 வயதாகிவிட்டது.

ஒரு நாளைக்கு ஒரு தடவைத்தான் பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுக்க முடிகிறது. கூலி வேலைக்குப் போய் கொண்டுவரும் பணத்தைக் கொண்டுதான் சமைத்து இரவுச் சாப்பாடு கொடுக்கிறேன். வெயிலோ, மழையோ வேலை செய்தே ஆகவேண்டும். இல்லையென்றால் பிள்ளைகள் பட்டினியோடுதான் இருப்பார்கள்.

4 பிள்ளைகள் பாடசாலைக்குப் போகிறார்கள். ஒரு நாளைக்கு உழைக்கும் ரூபா 500, 600 கொண்டு என்ன செய்வது? வயதான பெற்றோரும் என்னோடுதான் இருக்கிறார்கள்.

5 பிள்ளைகளுக்கும் ரூபா 15,000 செலுத்துமாறு காதி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அவர் 7,000 – 10,000 தருகிறார். அதற்கு மேல் தருவதில்லை. அதுவும் தொடர்ந்து தருவதில்லை. சுகமில்லை என்று தரவும் மாட்டார். ஒன்றரை வருடங்களுக்கான பணம் தரவேண்டும்.

ரூபா 15,000 விட குறைவாகத் தருவதால் பதினைந்தாயிரத்தைப் பெற்றுத்தாருங்கள் என்று நீதிமன்றில் கூறினேன். அதற்கு, 10,000 ரூபா கொடுக்கிறார்தானே, அவரை இன்னும் கூடுதலாகக் கொடுக்குமாறு கூறமுடியாது என்று காதி நீதிபதி கூறுகிறார். இந்தப் பத்தாயிரத்தை வைத்துக்கொண்டு 5 பிள்ளைகளை எப்படி வளர்த்தெடுப்பது?

வழக்குக்காக நான் யாழ்ப்பாணம் போகவேண்டியிருக்கிறது. கணவர் இருக்கும் இடத்தில்தான் வழக்கு விசாரணை நடக்கவேண்டுமாம். நான் பிள்ளைகளையும் விட்டுவிட்டு இரண்டாயிரம் ரூபா செலவழித்துக் கொண்டு யாழ்ப்பாணம் போய்க்கொண்டிருக்கிறேன். எனது கடைசி மகனுக்கு டிக்கெட் எடுக்கமாட்டார்கள் என்பதால் அவனைத்தான் துணைக்கு அழைத்துக் கொண்டு போவேன். அங்கு போனால் அவர் பணம் தருவதில்லை. பணத்தை செலவழித்துக் கொண்டு வீட்டுக்கு வெறும் கையோடு வந்துகொண்டிருக்கிறேன்.

ஒவ்வொரு மாதமும் யாழ்ப்பாணம் போய் வருவதனால் வாழ்க்கையே வெறுத்துப் போயிருக்கிறது.

வழக்கை இங்கு மாற்றிக் கொடுத்தால் மிகப்பெரும் உதவியாக இருக்கும்.

முஸ்லிம் தனியாள் சட்டத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பாக ‘மாற்றம்’ ஏற்கனவே ஐந்து நேர்க்காணல்களை வெளியிட்டிருந்த நிலையில் இன்று ஆறாவது நேர்க்காணலை வெளியிடுகிறது.


ஆசிரியர் குறிப்பு: தொடர்புபட்ட கட்டுரை, “நீதியைத் தேடும் பெண்கள்” நேர்க்காணல்கள் 12345