படம் | Selvaraja Rajasegar Photo
23 வயதில் திருமணம் முடித்தேன். எனக்கு இப்போது பாடசாலை செல்லும் 3 பிள்ளைகள் இருக்கிறார்கள்.
எனது கணவர் என்மீது சந்தேகம் கொண்டு தினமும் என்னைத் துன்புறுத்துவார், கையில் கிடைப்பதைக் கொண்டு அடிப்பார். பிறகு ஒருநாள், இனிமேல் பிரச்சினை எதுவும் செய்யமாட்டேன், வீட்டை தனது தங்கைக்கு வழங்குமாறு கூறினார். இவரின் பேச்சைக் கேட்டு, என்னை நன்றாகப் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கையில் எனது பெயரில் இருந்த வீட்டை அவரது தங்கைக்குக் கொடுத்தேன்.
அதன் பிறகும் அவரின் வன்முறை ஓயவில்லை. ஒரு வார்த்தை (விவாகரத்து) சொல்லிட்டன், இரண்டு வார்த்தை சொல்லிட்டன்” என்று கூறி வீட்டை விட்டு விரட்டினார்.
காதி நீதிமன்றில் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். 4ஆம் மாதம் இருந்த வழக்கை 7 மாதத்துக்கு நீதிபதி ஒத்திவைத்திருந்த போதிலும் அதன் முன்னரே வழக்கு நடந்து முடிந்திருந்தது. எனது கணவர் நீதிபதிக்கு பணம் கொடுத்து வழக்கை ஒத்திவைத்த காலத்திற்கு முன்னரே விசாரித்து விவாகரத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார். விவாகரத்து வழங்கப்பட்டு 2 மாதத்திற்குப் பின்னர்தான் எனக்குத் தெரியும். இத்தா கூட நான் இருக்கவில்லை. நஷ்டஈடாகக் கொடுக்கப்பட்ட பணத்தையும் எனது அப்பா எடுத்துக்கொண்டார், எனக்கு ஒரு சதம் கூட தரவில்லை. அதைக் கேட்டு வீட்டுக்குப் போனால் அடிக்கவருகிறார்கள்.
அவர் இப்போது வேறொரு திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்துவருகிறார். ஆனால், நானும் எனது பிள்ளைகளும் கண்ணீரோடு வீடு கூட இல்லாமல் வாடகை வீட்டில்தான் வாழ்ந்து வருகிறோம். யாருடைய உதவியும் எனக்கு இல்லை. நான் படும் கஷ்டம் அல்லாஹ்வுக்குத்தான் தெரியும்.
என்னால் தொழில் எதுவும் செய்ய முடியாது. தலையிலும் முதுகிலும் தொடர்ந்து அவர் அடித்ததால் வெயிலில் கூட நடக்கமுடியாத நிலையில் இருக்கிறேன்.
மிகுந்த போராட்டத்தின் பிறகு, மாதத்துக்கு 10,500 ரூபா கொடுக்கிறார். நான்கு பேருக்கு இது போதுமா? அதுவும் சரியாக கொடுபடுவதில்லை. ஒருமாதம் கொடுத்தால் இரண்டு மாதங்களுக்குக் கிடைக்காது.
இது தொடர்பாக காதி நீதிபதியைக் சந்தித்துப் பேசினேன். மாதமொன்றுக்கு ரூபா 3,000 வீட்டு வாடகை செலுத்துவதால் அவர் வழங்கும் நஷ்டஈட்டுத் தொகை போதாது என்று கூறினேன். அதற்கு அவர், “அவனால் அவ்வளவுதான் கட்ட முடியும். நீ சொல்ற மாதிரி கட்ட முடியாது” என்று கூறினார்.
பிள்ளைகளை படிக்கவைப்பதா? சாப்பிடுவதா? வாடகை செலுத்துவதா? என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறேன். நான் படும் வேதனைப் போன்று வேறு எந்தப் பெண்ணும் அனுபவிக்கக்கூடாது.
முஸ்லிம் தனியாள் சட்டத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பாக ‘மாற்றம்’ தளத்தின் ஊடாக ஏற்கனவே இரண்டு நேர்க்காணல்கள் வெளியிடப்பட்டிருந்த நிலையில் இன்று மூன்றாவது நேர்க்காணல் வெளியாகிறது.
ஆசிரியர் குறிப்பு: தொடர்புபட்ட கட்டுரை, “நீதியைத் தேடும் பெண்கள்” நேர்க்காணல்கள் 1, 2