படம் | Selvaraja Rajasegar photo
ரொம்ப கஷ்டத்துக்கு மத்தியில் நகையெல்லாம் விற்றுத்தான் கணவரை வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்தேன். வெளிநாடு சென்றவர் அவரது குடும்பத்தாரது பேச்சைக் கேட்டுக்கொண்டு ஒரு சில காலம் மட்டுமே எனக்கு பணம் அனுப்பிக் கொண்டிருந்தார். இலங்கைக்கு வந்தவர் வீட்டுக்கு வரவேயில்லை. எந்தவித உதவியும் செய்யவில்லை. வேறு கல்யாணம் ஒன்றை செய்திருக்கிறார்.
இதுதொடர்பாக காதி நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தேன். கூலி வேலையை விட்டு விட்டு தொடர்ந்து நீதிமன்றுக்கு வந்த வண்ணம் இருந்தேன். ஆனால், எனக்கு நியாயமான தீர்வு எதுவும் வழங்கப்படவில்லை. அதனால், அந்தப் பக்கம் போவதில்லை என்று முடிவெடுத்திருந்தேன்.
இருந்தபோதிலும் எனது இரண்டு பிள்ளைகளையும் வளர்த்தெடுப்பதில் அவருக்கும் பங்கிருக்கிறது என்பதால் மீண்டும் நான் காதி நீதிபதியிடம் போய் விசாரித்தேன். அதற்கு அவர், நீண்டகாலமாகிவிட்டதால் பைல்கள் இங்கு இல்லை, கொழும்பில்தான் இருக்கின்றன, அங்கு போய் பாருங்கள், என்றார். ஆண் துணை இல்லாத நான் எப்படி தெரியாத இடத்துக்குப் போவேன். 3 வருடகாலமாக அழைந்துகொண்டிருக்கிறேன். இந்த நிலையில், புதிதாக வழக்கு பதிவுசெய்யுமாறு காதியார் கூறுகிறார்.
வழக்குக்கு வருமாறு கணவருக்கு அறிவிக்கப்படுகின்ற போதிலும் அவர் வருவதே இல்லை. நான் வேலையையும் இழந்து பிள்ளைகளையும் விட்டுவிட்டு இங்கு வந்துபோகிறேன். காலையில் வந்தால் வீடுபோய் சேர இரவு 8 மணியாகும். அதற்கிடையில் பிள்ளைகளுக்கு ஏதாவது நடந்தால் யார் பொறுப்புக் கூறுவது?
நோய்வாய்ப்பட்ட வயதான எனது தாய்தான் என் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வார். ஒருநாள் வேலைக்குப் போகாவிட்டால் பசி, பட்டினிதான். கடையில் கடனுக்குப் பொருள் வாங்குவதும் பிறகு கடன் செலுத்துவதுமாக காலம் போகிறது. இதற்கிடையில் பிள்ளைகளின் படிப்பு செலவு.
பிள்ளைக்கான செலவை அவர் செலுத்தியாக வேண்டும். பிள்ளைகள் மீது எனக்கு எந்தளவுக்கு உரிமை இருக்கிறதோ அதேயளவு அவருக்கும் இருக்கிறது.
இந்த நிலையில், முஸ்லிம் தனியாள் சட்டத்தால் பாதிக்கப்பட்ட பெண்களை ‘மாற்றம்’ நேர்கண்டிருந்தது. ஏற்கனவே முதலாவது நேர்க்காணல் வெளியாகியிருந்த நிலையில் இரண்டாவது நேர்க்காணல், வீடியோ வடிவிலும், எழுத்து வடிவிலும் கீழே இணைக்கப்பட்டிருக்கிறது.
முதலாவது நேர்க்காணல்: முஸ்லிம் தனியாள் சட்டத்திற்குள் நீதியைத் தேடும் பெண்கள் (குரல் 1)