படம் | INDI.CA

புதுவருடத்தில் அரசாங்கம் கவிழும் என்றும் மீண்டும் தான் அதிகாரத்துக்கு வரப்போவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ எதிர்வு கூறியிருக்கிறார். நாட்டின் ஜனாதிபதியாக வருவதற்கு முன்னதாக நீண்டகால அரசியலில் அவருக்குப் பயன்தந்த அதே விடா உறுதியை இப்போதும் அவர் வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார். கட்சித் தலைவர்களினால் கீழ்ப்படுத்திவைக்கப்பட்ட அவர் இறுதியில் மேலோங்கினார். தனது பதவிக் காலம் முடிவடைவதற்கு இருவருடங்கள் முன்னதாக ஜனாதிபதித் தேர்தலை 2015 ஜனவரியில் நடத்திய அவர் எதிர்பாராத விதமாக தோல்வியைத் தழுவினார். ஆனால், அதற்குப் பின்னரும் கூட, விடா உறுதியுடன் போராட்டத்தை நடத்திக் கொண்டு அரசியல் அதிகாரத்தின் மைய அரங்கிற்கு திரும்பி வந்திருக்கிறார். கூட்டு எதிரணியில் உள்ள தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து மக்களில் ஒரு பிரிவினர் மத்தியில் தனக்கு இருக்கின்ற பெரும் ஆதரவை அவர் பல சந்தர்ப்பங்களில் வெளிக்காட்டக் கூடியதாக இருந்திருக்கின்றது. ஆனால், அந்த ஆதரவை உண்மையான அதிகாரமாக மாற்றிக்காட்ட இயலாமல் போயிருக்கிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கூட்டாட்சி அரசியலில் தொடர்ந்து ஈடுபடும் வரை முன்னாள் ஜனாதிபதி தனக்கிருக்கக்கூடிய மக்கள் ஆதரவை அரசியல் அதிகாரமாக மாற்றிக்காட்ட முடியாமல் இந்தப் பிரச்சினைக்குத் தொடர்ந்து முகம்கொடுக்க வேண்டியிருக்கும். ஜனாதிபதியினதும் பிரதமரினதும் தலைமையிலான அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் இருக்கிறது. கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் வரவு – செலவுத் திட்டம் அதன் சகல நிலைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடன் அங்கீகரிக்கப்பட்டதன் மூலம் இதைக் காணக்கூடியதாக இருந்தது. அரசாங்கத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில்தான் அதிகாரம் தங்கியிருக்கிறது. அடுத்த பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னமும் மூன்று வருடங்கள் இருக்கின்றன. அதுவரை அதிகாரத்தில் தொடருவதற்கு தாங்கள் இருவரும் ஒருவருக்கு மற்றவர் ஆதரவாக இருக்கவேண்டிய அவசியத்தைப் புரிந்துகொண்டவர்களாக ஜனாதிபதியும் பிரதமரும் சேர்ந்து செயற்படுவதில் காண்பிக்கக்கூடிய தொடர்ச்சியான விருப்பத்திலேயே அரசாங்கத்தின் உறுதிப்பாடும் பலமும் தங்கியிருக்கின்றன.

சேர்ந்து செயற்படவேண்டிய தேவை பற்றி ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இருக்கின்ற புரிந்துணர்வு அவர்களது கட்சிகளின் மூத்த உறுப்பினர்கள் மத்தியில் இருப்பதாகத் தெரியவில்லை. அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதை விடுத்து தாங்கள் தனியாகவே நாட்டை ஆட்சிசெய்வதற்கே ஐக்கிய தேசியக் கட்சியினதும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் பல உறுப்பினர்கள் விரும்புவது சாத்தியம், தனியாக ஆட்சி செய்தால் கூடுதலான வளங்களைத் தங்களால் கையாளக்கூடியதாக இருக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். கூட்டரசாங்கத்தில் தீர்மானங்களை மேற்கொள்ளும் செயன்முறைகள் தாமதமடைகின்றன என்று கருதுவதும் அவர்கள் தனியாக ஆட்சிசெய்தால் தீர்மானங்களைத் துரிதமாக மேற்கொள்ள முடியுமென்று எண்ணுகிறார்கள். இரு கட்சிகளினதும் உறுப்பினர்கள் ஒருவரைப் பற்றி மற்றவர் அடிக்கடி வெளியிடுகின்ற ஆவேசமான கருத்துக்கள் தனியாக ஆட்சிசெய்வதில் அவர்களுக்கு இருக்கின்ற விருப்பத்தைத் தெளிவாக வெளிக்காட்டி நிற்கிறது. இந்தக் கருத்துக்கள் அரசாங்கம் உறுதிப்பாடற்றதாக இருக்கிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றன. இதிலேயே முன்னாள் ஜனாதிபதி கவனத்தைச் செலுத்துகிறார்.

மூன்று யதார்த்தங்கள்

கூட்டாட்சி அரசியலில் மூன்று யதார்த்தங்கள் இருக்கின்றன. முதலாவது, தீர்மானங்களை எடுக்கும் செயன்முறைகளில் தர்க்கங்கள் ஏற்படும். அதனால், அந்தச் செயன்முறைகள் இயல்பாகவே தாமதமடையும். ஐக்கிய தேசியக் கட்சியும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இருவேறுபட்ட அரசியல் கோட்பாடுகளைக் கொண்டவை. ஒன்று வர்த்தகத் துறையினருக்குக் கூடுதலான அளவுக்கு ஆதரவானது என்பதுடன் சர்வதேசவாத போக்குடையது. மற்றையது வளங்களைப் பகிர்ந்தளித்து மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதில் அக்கறைகொண்டது என்பதுடன் தேசியவாதப் போக்குடையதாகும். வழமையான சூழ்நிலைகளில் ஒன்றுக்கொன்று எதிரானதாக இருக்கக்கூடிய இவ்விரு பண்பு முறைமைகளை ஜனாதிபதியும் பிரதமரும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். இறுதியில் இரு அரசியல் கட்சிகளினதும் அக்கறைகளை கவனத்தில் எடுத்தவையாக தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுவதில் காண்பிக்கப்படுகின்ற நாட்டமே ஜனாதிபதியினதும் பிரதமரினதும் கூட்டை பயனுறுதியுடையதாக வைத்திருக்கிறது. அத்தகைய தீர்மானங்கள் பெருமளவு அரசியல் ஏற்புடைமையைக் கொண்டிருக்க முடியும். அரசியலமைப்புக்கான 19ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் முதலில் முரண்பட்ட நிலைப்பாடுகளின் விளைவாக பதற்றம் நிலவியபோதிலும், இறுதியில் நிலைபேறானதாக அமையக்கூடிய விளைவுகளுடன் அது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஆட்சிமுறை தொடருவதற்கு இடமளிக்கப்பட்டமையும் பிணைமுறி ஊழல் விவகாரத்துக்குப் பிறகு மத்திய வங்கி ஆளுநர் மாற்றம் செய்யப்பட்டமையும் இதற்கான உதாரணங்களாகக் குறிப்பிடலாம்.

இரண்டாவது அம்சம், கூட்டாட்சி அரசியலில் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட அபிவிருத்தி (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் பூர்வாங்கமாக நிராகரிக்கப்பட்ட செயலின் மூலம் இதைக் காணமுடியும். முதலீட்டாளர்கள் பொருளாதாரத் திட்டங்களை ஆரம்பிப்பதை இலகுவாக்குவதே இந்தச் சட்டமூலத்தின் நோக்கமாகும். தற்போது முதலீட்டாளர்கள் தங்களது திட்டங்களைத் தொடங்குவதற்கான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு பல்வேறு அரசாங்க நிறுவனங்களை நாடவேண்டியிருக்கிறது. திட்டம் செயற்படுத்தப்படவிருக்கும் பகுதியில் உள்ள உள்ளூராட்சி சபையிடமிருந்து அங்கீகாரத்தைப் பெறவேண்டியிருக்கலாம். முதலீட்டுச் சபை, மத்திய சுற்றுச் சூழல் அதிகார சபை மற்றும் பல நிறுவனங்களை நாடவேண்டியிருக்கலாம். இந்த அங்கீகாரங்களை எல்லாம் பெற்று முடிப்பதற்கு நீண்டகாலம் எடுக்கும். முதலீட்டாளர்களின் உற்சாகத்தைக் குறைக்கக்கூடிய நடைமுறைகளாக இவை இருக்கும். தாமதங்களை சாத்தியமானளவு குறைப்பதற்கு ஏதுவாக ஒரே இடத்திலேயே அங்கீகாரம் பெறும் செயன்முறைகளை கையாளுவதை நோக்கமாகக் கொண்டதே புதிய சட்டமூலமாகும். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக நாட்டின் பொருளாதார அபிவிருத்தியைத் துரிதப்படுத்துவதே அபிவிருத்தி (விசேட ஏற்பாடுகள்) சட்ட மூலத்தின் நோக்கம் என்று பிரதமர் விக்கிரமசிங்க கூறியிருக்கிறார். ஆனால், ‘சூப்பர் அமைச்சு’ ஒன்றை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை தாங்கள் எதிர்ப்பதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த சூப்பர் அமைச்சு தனியொரு அமைச்சரிடம் அதிகாரங்களைக் குவிப்பதை நோக்கமாகக் கொண்டது என்று அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். பல்வேறு ஒழுங்கமைப்பு நிறுவனங்களை தங்களது நிருவாகத்தின் மூலம் கொண்டிருக்கும் அமைச்சர்களினதும் மாகாண சபைகளினதும் அதிகாரங்களை இந்த புதிய சட்டமூலம் அபகரித்துவிடும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள மாகாண சபைகள் சட்டமூலத்தை நிராகரித்துவிட்டன. ஒரே இடத்திலேயே செயன்முறைகளைக் கையாளும் ஏற்பாடொன்று முக்கியமானதாகும். தொழில் வாய்ப்புக்களையும் செல்வத்தையும் பெருக்குகின்ற முதலீடுகளுக்கு அனுசரணையாக வேறு பல நாடுகள் இத்தகைய ஏற்பாடுகளைக் கொண்டிருக்கின்றன. எனவே, இத்தகைய சூழ்நிலையில் இதுவிடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களும் தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதே முன்னோக்கிய அணுகுமுறையாக இருக்கும்.

போட்டியை ஒத்திவைத்தல்

மூன்றாவது அம்சம், கூட்டாட்சி அரசியலின் பங்காளிகள் தங்களுக்கு இடையிலான போட்டியை ஒத்திவைத்தலாகும். உள்ளூராட்சித் தேர்தல்கள் திரும்பத் திரும்ப ஒத்திவைக்கப்படுவதை இந்தப் பின்புலத்திலேயே நோக்கவேண்டும். இந்தத் தேர்தல்கள் இப்போது சுமார் இருவருடங்களாக ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு பல்வேறு நடைமுறை ரீதியான காரணங்கள் கூறப்பட்டுள்ளன. ஆனால், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போதைய தருணத்தில் தேர்தலுக்குப் போவதை விரும்பாது என்பதே அரசியல் யதார்த்தமாகும். தேர்தலொன்றுக்கு போகும்பட்சத்தில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதன் உறுப்பினர்களில் பலர் பங்கேற்கின்றதும் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்‌ஷ தலைமை கொடுக்கின்றதுமான கூட்டு எதிரணியுடன் மோதவேண்டிருக்கும். தேர்தலுக்குப் போவதில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி காட்டுகின்ற தயக்கம் இந்த நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் உகந்ததாக இருக்கிறது. முன்னைய அரசாங்கத்தினால் பெறப்பட்ட பெருமளவு கடன்கள் காரணமாக பாரதூரமான நெருக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை சீரானதொரு நிலைக்கு கொண்டுவரவேண்டிய பொறுப்பை (அரசாங்கத்தை உண்மையில் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கட்சி என்ற வகையில்) ஐக்கிய தேசியக் கட்சியே சுமக்கிறது. அரசாங்கம் புதிய வருடத்தில் அதன் பொருளாதாரச் செயற்திட்டங்களை வலுப்படுத்த விரும்பும், வாக்காளர்களின் ஆதரவே அரசாங்கம் தொடர்ந்தும் வைத்திருக்க முடியுமா இல்லையா என்பதை தீர்மானிக்கப்போகின்ற முக்கியமான காரணி அதுவேயாகும்.

இத்தகையதொரு பின்புலத்திலே, அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்துவதா இல்லையா என்பதைத் தீர்மானிக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இருக்கும் என்பது சாத்தியமில்லை. புதிய அரசியலமைப்பு ஒன்று தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பில் வெற்றியை சுலபமாகப் பெறமுடியாது என்று தேசிய மொழிகள், சகவாழ்வு அமைச்சர் மனோ கணேசன் எச்சரிக்கை செய்திருக்கிறார். அரசாங்கம் பாதுகாக்கப்பட வேண்டியது முதன்மை முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்று அவர் வலியுறுத்தியிருக்கிறார். சர்வஜன வாக்கெடுப்பொன்றில் நிராகரிக்கப்படாத வகையிலான அரசியலமைப்புத் திருத்தங்களை முன்வைக்கவேண்டிய தேவையை அவர் முன்னிலைப்படுத்தியிருக்கிறார். “தற்போதைக்கு சர்வஜன வாக்கெடுப்பொன்றை தவிர்ப்பதற்கான முயற்சிகளையே நாம் செய்ய வேண்டியிருக்கிறது. சர்வஜன வாக்கெடுப்பொன்றுக்கு நாம் போவதானால் அதில் வெற்றிபெறக் கூடியதாக இருக்கவேண்டும் என்பதே எனது அபிப்பிராயம். அதற்காக, முற்றிலும் புதிய அரசியலமைப்பொன்றுக்கு பதிலாக, மிகவும் முக்கியமான விடங்களில் திருத்தங்களைக் கொண்டுவருவது குறித்த நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது” என்று மனோ கணேசன் கூறியிருக்கிறார். மத்திய அரசாங்கத்துக்கும் பிராந்தியங்களுக்கும் இடையிலான வரவுகள் குறித்து ஆராய்ந்த உபகுழுவினால் முன்வைக்கப்பட்டிருக்கும் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் உட்பட்ட அதிகாரப்பரவலாக்கல் யோசனைகளை தீவிரவாத சக்திகள் கர்ண கடூரமாக எதிர்க்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

சர்வஜன வாக்கெடுப்பொன்றுக்கு நாடாளுமன்றத்தில் கூட்டாட்சிக்கு இருக்கின்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பயன்படுத்தி சாத்தியமானளவுக்கு அரசியலமைப்பு மாற்றச் செயன்முறைகளை முன்னெடுப்பதே 2017இல் பெரும்பாலும் இடம்பெறக்கூடிய நிகழ்வுப்போக்காக இருக்கக்கூடும். கொலம்பியாவில் அரசாங்கத்துக்கும் மார்சியக் கிளர்ச்சிக் குழுவான எவ்.ஏ.ஆர்.சியுக்கும் இடையிலான சமாதான முயற்சிகளை வலுப்படுத்துவதற்கு அங்கு பின்பற்றப்பட்ட வகைமாதிரி இதுவேயாகும். கிளர்ச்சியாளர்களுடன் செய்துகொண்ட சமாதான உடன்படிக்கைக்கு மக்களின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக கடந்த அக்டோபரில் நடத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பில் கொலம்பிய அரசாங்கம் தோல்வியடைந்தது. இத்தோல்வி அந்த அரசாங்கத்துக்கு மாத்திரமல்ல, சமாதான உடன்படிக்கையின் சிற்பிகளுக்கு நோபல் சமாதானப் பரிசை வழங்கிய சர்வதேச சமூகத்துக்கும் அதிர்ச்சியைக் கொடுத்த்து.

ஆனால், டிசம்பரில் அதே சமாதான உடன்படிக்கை நாடாளுமன்றத்தில் ஏகமனதான வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டு இப்போது நடைமுறைக்கு வந்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. உடன்படிக்கைக்கு எதிராகப் பிரசாரம் செய்த அரசியல் குழுக்களில் அக்கறைகளைக் கருத்தில் எடுத்து மூல உடன்படிக்கையின் இரு அம்சங்களில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டன. நிலைமாற்றுக் கால நீதி முறைமை, கிளர்ச்சியாளர்களின் தலைவர்களை அரசியலில் பங்கேற்பதற்கு அனுமதிப்பதற்கான பொறிமுறை ஆகியவை தொடர்பிலேயே அந்த மாற்றங்கள் செய்யப்பட்டன. கொலம்பியாவில் செய்யப்பட்டதைப் போன்று இந்த வகைமாதிரி அணுகுமுறை இலங்கையிலும் கடைப்பிடிக்கப்படுமானால் மாற்றங்கள் எந்தவிதத்திலும் முக்கியத்துவம் குறைந்தவையாகவோ அல்லது பரந்த விளைவுகளைத் தரமுடியாதவையாகவோ இருக்கப்போவதில்லை என்பது நிச்சயமானது. அரசியல், அது கூட்டாட்சி அரசியலோ இல்லையோ எதுவாக இருந்தாலும் சாத்தியமானதைச் சாதிக்கின்ற கலையாகவே (Art of the possible) நிலைமாறாமல் இருக்கிறது.

கலாநிதி ஜெகான் பெரேரா