படம்: Groundviews

போர் முடிவுக்கு வந்தவுடனேயே (2009) போர்க்குற்றம் என்ற சொல் பிரபலம் பெற்றது. நலன்புரி நிலையங்களில் அடைக்கப்பட்ட மக்களும், கொழும்பை மையப்படுத்திய மனித உரிமை போராளிகளும், தமிழக உணர்வாளர்களும், பேச்சாளர்களும் இந்தச் சொல்லை முற்றுமுழுதாக நம்பினார்கள். அதை நோக்கி காய்நகர்த்தினார்கள். இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பிலான ஆதாரங்கள் சனல்4 மற்றும் இதர ஊடகங்களில் அடிக்கடி வெளியாகி, அவர்களின் சொல் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தின. இலங்கையின் கொலைக்களங்கள் வெளியாகிய தருணத்திலும், அதற்கு முன்னரும் இலங்கை குறித்த முக்கிய பேசுபொருளாக போர்க்குற்றம் என்பது அமைந்திருந்தது.

ஆனால், போர் முடிந்து சில மாதங்களிலேயே நடந்த ஜெனீவா கூட்டத்தொடரின் பின் – அதில் ஏற்பட்ட பிசுபிசுப்புக்களின் பின் – ஈழ மக்கள் போர்க்குற்றம் மற்றும் இலங்கையில் கடந்த அரசியல் முன்னெடுப்புக்களில் ஆர்வமற்றுப் போனார்கள். தம்மைச் சுற்றி நடப்பன அனைத்தும் ஏமாற்றுக்கள் என்பதை தெளிவாக உணர்ந்துகொண்டார்கள். தமிழக மாணவர்களின் போராட்டத்தை ஈழத்தில் வாழுகின்ற மக்கள் நம்பிக்கையோடு எதிர்பார்த்தாலும், அந்தப் போராட்டமும் போர்க்குற்றம், போர்க்குற்ற விசாரணை என்பதை நிராகரித்திருந்தது. அதாவது, அமெரிக்கா கொண்டுவரும் போர்க்குற்ற விசாரணை என்பது சிக்கலான, தமிழர்களுக்கு சாதகமற்ற அர்த்தங்களை கொண்டிருக்கிறது என்ற விளக்கத்தின் அடிப்படையில் அந்த நிராகரிப்பை மாணவர்கள் செய்திருந்தார்கள்.

அந்தச் சொல் நிராகரிப்பில் நியாயம் இருப்பதாகவே தெரிகிறது. போர்க்குற்ற விசாரணை நீண்டகால இழுத்தடிப்பை கொண்டது. உடனடியாக இதில் விசாரணை வருமென்றோ, இழப்பை சந்தித்தவர்களுக்கு சரியான நீதி கிடைக்குமென்றோ எதிர்பார்க்க முடியாது. ஜனநாயகம் என்கிற போலிப் பொதியினுள் இருக்கின்ற நீதியும், அதற்கான சட்ட சரத்துக்களும் அதிகாரத்தரப்பினால் அவர்களின் நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளவே உருவாக்கப்பட்டவை. அதில் சரியான நீதியின்படி தீர்ப்புகள் கிடைக்கப்பெறுவதெல்லாம் அதிசயங்களாக நிகழ்பவையே. எழுமாற்றானவை. அநேக தீர்ப்புகள் வெளித்தோற்றத்துக்கும், ஊடகம் காட்டும் பிம்பங்களுக்கும் நடுநிலையாக இருந்தாலும் தண்டிக்கப்பட்டவனின் பக்கமிருந்து பார்த்தால் சட்டத்தில் யானைக் கூட்டமே உட்புகுந்து சூறையாடக்கூடிய ஓட்டையிருப்பதை உணரமுடியும். இதை ஜனநாயகத்தின் ஒரு அம்சம் என்றோ, ஜனநாயகத்தின் வன்முறை என்றோ சொல்லிக் கொள்ளலாம்.

போர்க்குற்றம் என்ற சொல்லின் மீதான விசாரணையிலும் இந்த ஜனநாயக அம்சம் பிரயோகமாகலாம் என்பதை எச்சரித்தே மாணவர்கள் விலகியிருந்தார்கள். போரில் ஈடுபட்ட இருதரப்பையும் விசாரிக்க வேண்டும். புலிகள் தரப்பி்ல் விசாரிக்கக்கூடியளவுக்கோ, தண்டனை பெறக்கூடியளவுக்கோ, சாட்சியமளிக்கக்கூடியளவுக்கோ யாருமில்லை என்ற காரணத்தைக்கூறி போர்க்குற்ற விசாரணையை மேற்கொள்ளும் நாடுகளாலேயே இலங்கையை தப்பிக்கவைக்க முடியும். இலங்கை சர்வதேச அழுத்தங்களுக்கு இசைந்துகொடுக்கும் பட்சத்தில் இந்த விதிவிலக்கு நிகழ போர்க்குற்றம் என்ற சொல்லின் பின்னால் வாய்ப்பிருக்கின்றது.

அதைவிட போர்க்குற்ற விசாரணையே நடத்தினாலும், போரோடு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தண்டனை வழங்குதல் என்பது சாத்தியமற்ற ஒன்று. இறுதிப் போரை முன்னின்று நடத்தியவர் இப்போது இராணுவத்திலிருந்தே ஓய்வளிக்கப்பட்டுவிட்டார். இலங்கை அரசை விசாரணைக்கு கோரினாலும், போரை வழிநடத்தியவருக்கே முழுப்பங்கும் எனச் சொல்லி குற்றத்தை அவர் தலையில் போட்டுவிட்டு தப்பித்துக் கொள்ள முடியும். கட்டளை வழங்கியவர்களைத் தண்டிப்பது இலங்கையை பொறுத்தவரையில் போர்க்குற்ற விதிகளின்படி சிக்கலானது. ஏனெனில், போர் முடிந்த கையோடு குற்றவாளிகள் எதிரெதிர் அணிகளாகிவிட்டார்கள். அவர்களால் விசாரணை நடத்தும் நீதியாளர்களின் முன்னிலையில் ஆளையாள் போட்டுக் கொடுத்து, விசாரணைக்கான கால நீட்டிப்பை ஏற்படுத்த முடியுமே தவிர, சரியான தீர்வுக்கு ஒத்துழைக்க முடியாது. தாமதமாக வழங்கப்படும் தீர்ப்பு அநீதிக்கு சமமானது என்ற சட்டப் பொதுமொழியை இவ்விடத்தில் நினைவிற்கொள்வது பொருத்தம்.

உலகளவில் நடந்த போர்களில் போர்க்குற்றவாளிகளாக அடையாளங்காணப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளும், அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைளும் இந்தச் சொல்லின் பின்னால் இருக்கின்ற பலவீனத்தை உணர்த்தியிருக்கிறது. உதாரணத்துக்கு உகண்டாவில் லட்சக்கணக்கான அப்பாவி மக்களை படுகொலை செய்த இடி அமீன் மீதும் போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட்டது. தண்டனையும் வழங்கப்பட்டது. அதாவது, அவரது சொந்த நாட்டிலிருந்து நாடுகடத்திவிடுவதே போர்க்குற்றவாளி ஒருவருக்கு வழங்கப்படும் உச்சபட்ச தண்டனையாக இருக்கிறது. நாடுகடத்தப்படுபவர் சுவிஸ் வங்கியிலோ, ஏனைய சர்வதேச பண வைப்பு முகாம்களிலோ ஏற்கனவே வைப்பிடப்பட்ட பணத்தில் வாழ்வின் முழு சுகபோகங்களையும் அனுபவித்து, இயற்கையாக மரணமடைவர். காலத்தால் கொஞ்சம் தள்ளிப்போன இடி அமீன், நம் கண்முன்னே நிற்கின்ற எகிப்தின் அதிபர் ஹோஸ்னி முபாரக் போன்றவர்கள் நாடுகடத்தப்பட்ட பின்னரேயே இயற்கையெய்தினர். உலகில் ஓர் உயிரைக் கொன்றவனுக்குத்தான் மரண தண்டனை. லட்சக்கணக்கான மக்களை கொன்றவர்களுக்கெல்லாம் மரண தண்டனை வழங்கப்படும் என்பது வெறும் சட்டக் கனவு மாத்திரமே.

ஆக, இலங்கையில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணை வெறும் வார்த்தையளவில் வீரியமிக்கதாக வர்ணிக்கப்பட்டாலும் அதனுள் ஏதுமில்லை. வெறும் போர்க்குற்றங்களுக்காக மட்டும் நடத்தப்படும் சர்வதேச விசாரணை இங்கு குறிப்பிடப்படும் தீர்ப்பெல்லைகளுக்குள்ளேயே முடங்கிவிடும்.  தமிழர்கள் சர்வதேசத்திடம் எதிர்பார்க்கின்ற சுயநிர்ணய உரிமையையோ, இழப்புகளுக்கான நஷ்ட ஈட்டையோ அது தரப்போவதில்லை. சர்வதேச நலன்களுக்காக, இலங்கையின் ஆட்சியில் இருக்கும் யாரையாவது ஒரு சிலரை சிக்கவைத்து விசாரித்துக் கொள்வார்கள். அதனால், சர்வதேசத்துக்கு மட்டுமே லாபம். இன அழிப்புக்கான விசாணையே, தமிழர்களை முதன்மைப்படுத்தியதாக அமையும். அதில் சர்வதேசம் குறிப்பிடும் அனைத்து வித குற்றச்சாட்டுகளின் குறிச்சொற்களும் அடங்கிவிடும்.

மனிதாபிமானத்துக்கான போர்

உலளவில் பல தேவைகளுக்கான போர்கள் நடந்திருக்கின்றன. நிலத்துக்கான போர், பெற்றோலுக்கான போர், மதத்துக்கான போர், மகா ராணிகளுக்கான போர், பயங்கரவாத ஒழிப்புக்கான போர் என பல கட்டங்களை போர்கள் கடந்திருக்கின்றன. ஆனால், உலகில் முதன் முதலான மனிதாபினமானத்துக்கான போரை நடத்தியது இலங்கை மட்டும்தான். இந்த யுக வரலாற்றின் பெரும் ஆச்சரியமாக இந்தச் சொல் பார்க்கப்படுகிறது. போரிலிருந்து மனிதாபிமானம் காப்பாற்றப்படவேண்டும், போர் மனிதாபிமானத்தை தின்றுவிடும் என்ற கோசங்களை எல்லாம் நிர்வாணப்படுத்தியது இந்த மனிதாபிமானத்துக்கான போர் என்ற சொல்.

மூதூரில் வாடிய சிங்கள விவசாயிகளை புலிகளிடம் இருந்து காப்பாற்றுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட  போருக்கு இவ்வாறானதொரு பெயரை இலங்கை அரசு சூட்டியது. இதுவரை புலிகளுடன் இலங்கை அரசு நடத்திய எந்தப் போருக்கும் இதுபோன்றதொரு ஆச்சரியமிக்க சொல்லை இலங்கைப் படைகள் பயன்படுத்தியதில்லை. சொல்லின் மந்திரத்தன்மைக்கேற்ப புலிகளையும், தமிழர்களின் பெரும்பகுதியினரையும் முற்றாக விழுங்கியது மனிதாபிமானத்துக்கான போர். ஆனால், போர் முடித்துவைக்கப்பட்டதில் ஏற்பட்ட குழறுபடிகள்தான், சொல்லை உருவாக்கியவர்களின் மனிதாபிமானத்தை சர்வதேச அரங்கில் கிழித்துப்போட்டது. உலகையே உலுக்கிய போர்களின் அடையாளங்களை மனிதாபிமானத்துக்காக நடத்திய போரும் விட்டுச் சென்றது. ஆகவே, இதுவும் தமிழர் வரலாற்றில் குறித்து வைக்கக்ககூடிய அச்சந்தரும் சொல் ஆகும்.

ஆயுதங்களை மௌனிக்கிறோம்

எந்த ஆயுத இயங்கங்களும் இவ்வளவு அவதானமாக சொற்களை பயன்படுத்தியதில்லை. பேரழிவு சூழ்ந்து நிற்கையில், உலகம் திரண்டு மண்டியிட்டு சாகும்படி மிரட்டிக் கொண்டிருக்கையில் அர்த்தமிக்க அரசியல் சொற்றொடரை பிரயோகித்து போரை முடிக்கும் எண்ணம் எந்த தனிமனிதனுக்கும், போர் வழி நடத்துனனுக்கும் ஏற்பட்டதில்லை. ஆனால், விடுதலைப் புலிகள் உலகப் போரியல் வரலாற்றில் அதைச் செய்திருக்கிறார்கள். தோல்வியையும், சரணடைதலையும் பச்சையாக ஏற்காத அவர்கள் “ஆயுதங்களை மௌனிக்கிறோம்” என்ற சொல்லை அறிவித்துவிட்டு மாயமாகியிருக்கிறார்கள்.

ஆக, இங்கு ஒரு தொடர்வடிவில் எழுதப்பட்ட சொல் அரசியல் என்கிற புதுவிடயம், காலத் தேவை கருதி விரிவாகவும், சுருக்கமாகவும் எழுதப்பட்டது. இவற்றுக்கு இவை மட்டுமே அரசியல் பெறுமானம் எனவும், இதன் பெறுமதி எப்போதும் ஒரேயளவில் இருக்கும் என்பதையும் இறுதியிட்டு கூறமுடியாது. ஆயுதங்களை ஒதுக்கிவைத்துவிட்டு சொற்போர்களில் சர்வதேச அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் ஜனநாயக காப்பாளர்களின் முன்னால் எந்தச் சொல்லுக்கு எப்போது அரக்கத்தனம் பிறக்கும் என்று குறிப்பிட முடியாது. சில சொற்கள் பலத்தால் பெருகி பன்மடங்காகும். சில சொற்கள் கூனிக் குறுகி நலிந்து காணாமலே போகும். புலிகள் பயன்படுத்திய இறுதிச் சொல்போல.

ஜெரா

Jera