படம் | AP Photo, THE HUFFINGTON POST

செல்வி. ஜெயலலிதாவின் தலைமையிலான அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 131 இடங்களில் வெற்றிபெற்று, தனிப்பெரும்பான்மையில் மீண்டும் தமிழ் நாட்டின் ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது. இதன் மூலமாக ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சர் ஆகியிருக்கிறார். மேலும், இதன் மூலமாக ஆறாவது தடவையாகவும் முதலமைச்சராகியிருக்கும் அரசியல் தலைவர் என்னும் பெருமையையும் அவர் பெற்றிருகின்றார். ஜெயலலிதாவின் வெற்றி ஆச்சரியம் தரும் செய்தியல்ல. அது ஏலவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். தேர்தல் காலத்தில் தொடர்ச்சியாக கருத்துக்கணிப்பு என்னும் பெயரில் வெளிவந்த தகவல்கள் எந்தளவிற்கு அரசியல்தனமானது என்பதும் இந்த வெற்றியின் மூலம் உறுதியாகியிருக்கின்றது. அரசியல் நிகழ்ச்சிநிரல்களை விழுங்கியிருக்கும் தனியார் அமைப்புக்களும் ஊடகங்களும் எந்தளவிற்கு மக்களை ஏமாற்ற முயல்கின்றன என்பதற்கும் இது நல்ல உதாரணம். ஏனெனில், அதிகமான கருத்துக் கணிப்புக்கள் தி.மு.கவிற்கு சாதகமாகவே இருந்தன. ஆனால், அது பொய்யான தகவல்கள் என்பதும் அனைவருக்குமே தெரிந்திருந்தது. உண்மையில் சுயாதீன ஊடகங்கள் என்று சொல்லப்படுபவை கூட ஏதோவொரு அரசியல் நிகழ்சிநிரல்களின் வழியாகத்தான் இயக்கப்படுகின்றன.

சில மாதங்களுக்கு முன்னர் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வு பெருமளவிற்கு முடிந்துவிடலாம் என்றவாறானதொரு நிலைமையே காணப்பட்டது. ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கொன்றில் தண்டனைபெற்ற ஜெயலலிதாவின் வாழ்வு சிறைக்குள்ளேயே முடிந்துவிடுமா என்னும் கேள்வியே அ.தி.முகவினரை கலங்கடித்தது. ஆனாலும், ஜெயலலிதா அதிலிருந்தும் மீண்டு வந்து, மீண்டும் ஆட்சியை பிடித்திருக்கின்றார். அ.தி.முகவினரை பொருத்தவரையில் ஜெயலலிதா என்பவர், எவராலும் தாண்டிச் செல்ல முடியாதவொரு அரசியல் திருவுருவம். அந்த திருவுருவம் இல்லாமல் அ.தி.முகவிற்கு எதிர்காலம் இல்லை. தமிழ் நாட்டின் அரசியலை உற்று நோக்கினால் அங்கு அரசியல் திருவுருவங்களே கட்சிகளை தீர்மானிக்கின்றன. அ.தி.முகவிற்கு ஜெயலலிதா என்றால் தி.மு.கவிற்கு கருணாநிதி. மேற்படி இரண்டு பிரதான கட்சிகளுமே இந்த திருவுருவங்களில்தான் தங்கியிருக்கின்றது. உலகிலேயே சக்கரநாற்காலியில் இருந்துகொண்டு அரசியல் செய்யும் ஒரேயொரு அரசியல் தலைவர் கருணாநிதி ஒருவராகத்தான் இருப்பார். இப்பத்தியாளர் அறிந்தவரை வேறு எவரும் இல்லை. ஒருவேளை கருணாநிதிக்கு சவால் விடும் வகையில் வடக்கு கிழக்கில் இருந்து எவராவது உருவாகலாம். ஏன் இந்த நிலையிலும் தி.மு.விற்கு கருணாநிதி அவசியமாக இருக்கிறார். அதுதான் நான் முன்னர் குறிப்பிட்ட அரசியல் திருவுருவங்களின் தேவைப்பாடு. கருணாநிதி இல்லாவிட்டால் தி.மு.க சிதறிவிடும். அதேபோன்று ஜெயலலிதா இல்லாவிட்டால் அ.தி.மு.க. சிதறிவிடும். இவர்கள் இல்லாத காலத்தில் அல்லது இவர்கள் அரசியலில் ஈடுபடமுடியாத நெருக்கடிகள் தோன்றினால் மட்டுமே, இக்கட்சிகளை ஒரு மூன்றாம் தரப்பு வீழ்த்துவது என்பது சாத்தியமாகும். இந்த இடத்தில் சீமான் பற்றி குறிப்பிட வேண்டும். சீமான் அனைத்து தொகுதிகளிலுமே தோல்வியடைந்திருக்கின்றார். இதன் மூலம் சீமான் முன்னிறுத்திய சுலோகங்களை தமிழ் நாட்டின் மக்கள் நிராகரித்திருக்கின்றனர். இப்படி சிந்திப்பதுதானே ஜனநாயகத்திற்கு சரி!

பொதுவாக தமிழ் நாட்டில் ஏற்படும் அரசியல் நிகழ்வுகளை எங்களுடைய அரசியல் செயற்பாடுகளோடு இணைத்து புரிந்துகொள்ளும் ஒரு போக்கு நீண்டகாலமாக நிலவிவருகிறது. குறிப்பாக ஈழத்தில் தமிழ் தேசியவாத அரசியல் எழுச்சியுற்ற காலத்திலிருந்து இந்தப் போக்கும் தொடர்கிறது. தமிழ் தேசிய அரசியல் பரப்பில், தமிழ் நாடு தொடர்பில் இரண்டு விதமான பார்வைகள் நிலவுகின்றன. ஒன்று, தமிழ் நாட்டின் அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்துவதன் மூலம் புதுடில்லியின் கதவைத் திறக்கலாம். எனவே, எப்போதுமே தமிழ் நாட்டு அரசியல் சக்திகளுடன் நெருக்கமான தொடர்புகளை ஈழத் தமிழ் அரசியல் தரப்பினர் பேணிக்கொள்ள வேண்டும். இரண்டு, தொடர்ந்தும் தமிழ் நாட்டிற்குள், ஈழத் தமிழர்களுக்கான ஆதரவுத் தளத்தை தளம்பாமல் பேணிக் கொள்வதன் ஊடாக கொழும்பின் மீதான இந்திய அழுத்தத்துக்கான வெளியை (Space) பேணிப் பாதுகாப்பது. இப்படியான பார்வை இப்பத்தியாளரிடமும் உண்டு. ஆனால், இப்பார்வை சரியென்று நிரூபிக்கக் கூடியளவிற்கு இதுவரை ‘தமிழ்நாட்டை கையாளல்’ என்பது வெற்றியளிக்கவில்லை. இவ்வாறானதொரு சூழலில்தான் முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான அரசியல் சூழலில் தமிழ் நாடு – ஈழம் – இந்தியா என்றவாறு சிந்திப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றனவா என்பது தொடர்பில் ஒரு உரையால் அவசியப்படுகிறது. அது ஜெயலலிதாவுடன் சாத்தியப்படுமா? சாத்தியப்படுமென்றால் எவ்வாறு? அல்லது பிரதான திருவுருவங்களை தவிர்த்து மூன்றாம் தரப்புக்களுடன் உரையாடுவதுதான் பொருத்தமானதா?

ஜெயலலிதா பெருமளவிற்கு ஈழத்து அரசியல்வாதிகளுடன் தொடர்புகளை பேணாத ஒருவர். ஆனால், அவர் இன்று தலைமை தாங்கும் கட்சிக்கும் விடுதலைப் புலிகளின் எழுச்சிக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு. அன்று மிகவும் நெருக்கடியான காலத்தில் எம்.ஜி.ராமச்சந்திரன் வழங்கிய பணம்தான் பிற்காலத்தில் விடுதலைப் புலிகள் பெருமளவில் ஒரு பேரியக்கமாக எழுச்சியுறுவதற்கு காரணமாகியது. இது தொடர்பான விடயங்களை பாலசிங்கம் மற்றும் அடேல் பாலசிங்கம் ஆகியோர் பதிவு செய்துமிருக்கின்றனர். அந்த வகையில் பார்த்தால் ஒப்பீட்டளவில் கருணாநிதியை விடவும் ஜெயலலிதா ஈழத் தமிழர்களுக்கு நெருக்கமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், ஜெயலலிதா ஈழத் தமிழ்த் தலைவர்களுடன் ஒப்பீட்டடிப்படையில் தொடர்பற்றவராகவே இருக்கின்றார். ஒருவேளை, அவரை கூட்டமைப்பினர் உரிய முறையில் அணுகவில்லையா? சம்பந்தன் தமிழ் நாடு செல்கின்ற வேளையிலும் ஜெயலலிதாவை சந்திப்பதை தவிர்த்தே வந்திருக்கிறார். ஆனால், கருணாநிதி அதிகாரத்தில் இருக்கின்ற போது அவரை சந்திப்பதில் சம்பந்தன் பின்னடித்ததில்லை. இதற்கான காரணம் என்னவென்றும் சம்பந்தனிடம்தான் வினவ வேண்டும்.

நான் மேலே குறிப்பிட்டவாறு ஜெயலலிதா ஒப்பீட்டடிப்படையில் ஈழத்தமிழ் தலைவர்களுடன் தொடர்பற்றவராக இருப்பினும் கூட அண்மைக் காலத்தில் அவர் மேற்கொண்ட ஒரு நடவடிக்கை அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது. ஜெயலலிதா தமிழ் நாடு சட்ட மன்றத்தில் ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் தனிநாடு ஒன்றிற்கான அபிப்பிராய – வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்று 2013இல் ஒரு பிரேரணையை நிறைவேற்றியிருந்தார். நடந்து முடிந்த தேர்தல் பிரச்சாரங்களின் போதும் அதனை மக்கள் மத்தியில் நினைவுபடுத்தினார். அதுதான் தன்னுடைய நிலைப்பாடு என்பதை மீளவும் அழுத்திக் கூறினார். ஜெயலலிதா இந்தப் பிரேரணையை நிறைவேற்றிய வேளையில், தமிழ் நாட்டு மாணவர் அமைப்புக்கள் சிறிலங்கா எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருந்தன. அதனை எதிர்கொள்வதற்கான ஒரு உக்தியாகவே இதனை ஜெயலலிதா மேற்கொண்டார் என்பவர்களும் உண்டு. ஆனால், இப்பத்தியாளர் இதனை ஒரு எதிர் தந்திரேபாயமாகப் (Counter strategy) பார்க்கவில்லை. ஏனெனில், எதிர் தந்திரோபாயங்களை வகுக்கும்போது, அது மீண்டும் திரும்பித்தாக்காத தன்மையைக் கொண்டிருக்க வேண்டுமென்பதிலேயே பொதுவாக தந்திரோபாயவாதிகள் கரிசனை கொண்டிருப்பர். மாணவர்களை எதிர்கொள்ளுவதற்காக ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் தனிநாட்டுக்கான அபிப்பிராய – வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்னும் கடுமையானதொரு நிலைப்பாடு வெறுமனே ஜெயலலிதாவின் மூளையிலிருந்து உதித்த ஒன்றாக இருக்க முடியாது. அது நிச்சயமாக கொள்கைவகுப்பு தரப்பினால் அல்லது ஒரு குழுவினால் புகுத்தப்பட்ட ஒரு விடயமாகவே இருக்க வாய்ப்புண்டு. இதன் மூலம் ஈழ ஆதரவாளர்களை தன்பக்கம் ஜெயலலிதாவால் திருப்ப முடிந்ததென்று வாதிடுவதற்கு இடமிருக்கிறது. ஆனால், அந்த வாதமும் கூட, முன்வைக்கப்பட்ட விடயத்தின் கனதியுடன் ஒப்பிட்டால் வலுவிழந்துவிடுகிறது.

ஜெயலலிதா தனது தீர்மானத்தில் மேற்படி அபிப்பிராய – வாக்கெடுப்பு இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் மத்தியிலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மத்தியிலும் நடத்தப்பட வேண்டுமென்று குறிப்பிட்டதுடன், அது ஜக்கிய நாடுகள் சபையினால் மேற்பார்வை செய்யப்பட வேண்டுமென்றும் தெரிவித்திருந்தார். உண்மையில் இது உலகெங்குமுள்ள ஈழத்தமிழ் தேசியவாதிகளுக்கு உற்சாகமளிக்கும் ஒரு விடயம். அது உற்சாகமளிக்கும் என்பதை நன்கு அறிந்திருந்தும் இது போன்றதொரு விடயம் முன்கொண்டுவரப்பட்டிருக்கிறது என்றால் அதன் அரசியல் உள்ளடக்கத்தை ஆழமாக பரிசீலிக்க வேண்டும். இதன் பின்னாலுள்ள அரசியலை இரண்டு விதமாக நோக்கலாம்: ஒன்று, தமிழ் நாட்டில் எப்போதுமே ஈழத் தமிழரின் அரசியல் விவகாரம் ஒரு விவாதப் பொருளாகவே இருந்து கொண்டிருக்க வேண்டும் என்பது இந்தியாவின் ஒரு தரப்பின் தேவையாக இருக்கிறது. அந்த தரப்பு ஏன் அவ்வாறு கருத வேண்டும் என்பதையும் பார்க்க வேண்டும். அரசியல் ஒழுங்கு (political order) நிலை தொடர்ச்சியாக ஒரே வழியால் நகர்வதில்லை. பூகோள அரசியலில் அவ்வாறான மாற்றங்கள் ஏற்படுகின்ற போது, அதற்கு ஏற்றவாறு இயங்குவதற்கான இடைவெளிகளையும் பலம்பொருந்திய சக்திகள் பேணிப் பாதுகாத்துவரும். ஜெயலலிதாவின் தனிநாட்டுக்கான அபிப்பிராய – வாக்கெடுப்பு தீர்மானமும், அவ்வாறானதொரு பாதுகாப்பு உக்தியின் விளைவாக கொண்டுவரப்பட்டதுதானா? இந்தக் கணிப்பு சரியாக இருக்குமாயின் தனிநாட்டு நிலைப்பாட்டை இலங்கைக்குள் பேசாதுவிட்டாலும் கூட, அது எங்காவது பேசப்பட்டுக் கொண்டேயிருக்க வேண்டுமென்று கருதப்படுகிறா?

யதீந்திரா