படம் | Reuters
 
மாண்டவன் உறக்கம்
கெடுத்த
நீர்குழாய்க் குழியே
கேள்
வாழ்பவர் நிலையிதுவே…
 
சொல் சொல்
இது உங்கள் ஊர்
சவக்காடு என்று
சொல்
இல்லையென்றால் நீயும்
நாளை தோண்டப்படுவாய்
 
சொல் சொல்
கொன்றவன் பயங்கரவாதி என்று
சொல்
இல்லையென்றால்
உனக்கும் நாளை
புனர்வாழ்வு
 
சொல் சொல்
இவையனைத்தும்
தீவிரவாதிகள் என்று
சொல்
இல்லையென்றால்
உனக்காக வெள்ளைவான்
மீண்டும் உலாவரும்
 
பிசாசுகள் மிரட்டின…
பழகிவிட்டது
பயம் போகவில்லை…
 
 எங்கள் பஞ்சாயத்தில்
பண்ணையார் ஒருபோதும்
குற்றம் செய்யமாட்டார்…
 
ஆதாரம் தந்தாலும்
ஆண்டவன் சொன்னாலும்
பண்ணையார் நல்லவர்
நிறையச் சனம் நம்புது
நீங்களும் நம்புங்கோ
 
தன் இனம் ஆனாலும்
நீதிகேட்டால்
தீவிரவாதி ஆவான்
 
எவ்வினம் ஆனாலும்
தோழமை செய்வான்
காட்டிக்கொடுத்தால்
 
தீர்பெழுதும் பொழுது
இடமாற்றல் வரலாம்
நீதிபதிக்கோ
அல்லது
நீதிக்கோ
 
என்ற நீதி
கொண்ட நிலத்தில்
எலும்புகள் வந்தாலென்ன
தாயத்துகள் வந்தாலென்ன
பெண்கள் என்றாலென்ன
குழந்தைகள் என்றாலென்ன
 
“ஐயோ” என்றழுதோம்
உலகம் சொன்னது
உள்நாட்டு பிரச்சனை
என்று
 
புதைகுழு என்பது முன்பக்க செய்தி
எலும்புகள் எம்.பிகளின் அறிக்கை
வரலாற்றில்
பதிந்துவையுங்கள்
தமிழன் இருந்ததன்
அடையாளமாக
 
நீதிமன்றம் இருந்தது
நீதிபதிகள் இருந்தனர்
நீதிவிசாரணைகள் நடந்தன
நீதி – ? ? ?
 
ரிஷி