படம் | வட மாகாண சபையின் Flickr தளம்

இந்தக் கதையை எப்போதோ கேட்ட ஞாபகம். வட – கிழக்கு மாகாண சபை புதியதாக தெரிவுசெய்யப்பட்டு இயங்கி வந்த காலம் அது. அதற்கான சகல உதவிகளையும் செய்துகொடுக்க வேண்டும் என ஜனாதிபதி பிரேமதாஸ மிக ஆர்வத்துடன் இருந்தாராம். வட கிழக்கின் அன்றைய முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தனது உத்தியோகபூர்வ தொடர்பாடல்களில் எங்கோ ‘வடகிழக்கு அரசு’ என்கின்ற பதத்தினை உபயோகித்ததைக் கேள்விப்பட்ட அக்கணம்தான் அவர் கோபம் கொண்டு அதற்கு எதிராகத் திரும்பினாராம். இலங்கை அரசு என்று ஒன்றிருக்க, அதற்குத் தானே தனிப்பெருந்தலைவராகவும் இருக்க, ஒரு மாகாணசபை தன்னை அரசு என்று கூறிக்கொள்வதா? அதற்குப் பிறகு மாகாணசபையின் சகல திட்டங்களையும் பிரேமதாஸ பாழடிக்க ஆரம்பிக்கவேதான் வரதராஜப்பெருமாள் தனிநாடு பிரகடனம் செய்யவேண்டிய தேவை ஏற்பட்டது என்பர். இந்தக் கதை எவ்வளவு தூரம் உண்மையெனத் தெரியாது. ஆனால், இன்று வட மாகாணசபை போகும் போக்கையும் தென்னிலங்கையில் அது குறித்து ஏற்பட்டிருக்கும் பரபரப்பும் இக்கதையை ஞாபகமூட்டுகின்றன.

2014 ஜனவரி மாதம் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் தலைமையில் வட மாகாணசபையானது போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணைகள் நடத்தப்படவேண்டுமென்னும் பிரேரணையை நிறைவேற்றியிருக்கின்றது. இலங்கை அரசுக்கெதிராக, அதன் தனிப்பெருந்தலைவருக்கெதிராகப் பிரேரணைகளை ஒரு மாகாணசபை கொண்டு வரலாமா? இதுதான் தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற இக்கொந்தளிப்பின் காரணமாகும். இதன்மூலம் அச்சபை தான் இலங்கை அரசிலிருந்து வேறாக சுயாதீனமாக இயங்குவதைப் போலல்லவா காட்டிவிட்டது? இச்செய்தி வெளிவந்தவுடனேயே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் பிரதிபா மகாநாம கொதித்தெழுந்திருக்கின்றார். “இது ஒரு கபடத்தனமான அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கேற்பவே கொண்டுவரப்பட்டிருக்கின்றது. இதனால் எமது நாட்டின் பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிக்கப்பட்டிருக்கின்றது… இது 1990இல் வரதராஜப்பெருமாள் தனிநாடு பிரகடனம் செய்ததற்கு ஒப்பாகும்…” எனப் பொரிந்து தள்ளியிருக்கின்றார்.

அரசின் முன்னாள் ஜெனீவாப் பிரதிநிதி தயான் ஜயதிலகவும், அதிகாரப் பரவலாக்கலுக்கு அரசுக்குள் ஆதரவாக இருந்த சக்திகளையும் இந்தத் தீர்மானம் தனிமைப்படுத்திவிட்டதே எனப் புலம்பியிருக்கின்றார். “தமிழ் மக்களுக்குக் கொடுக்கப்படும் எந்தவொரு அதிகாரப்பரவலாக்கலும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளையும் எனக் கருதும் தீவிர நிலைப்பாட்டாளர்களை நிரூபித்து விட்டார்களே…” என்றெல்லாம் அவருடைய கட்டுரை செல்கின்றது. வட மாகாணசபை தனது வரம்பை மீறிவிட்டது என ஐக்கிய தேசியக் கட்சி பொருமியிருக்கின்றது.

இப்பிரேரணையின் தாற்பரியத்தை அறிந்துதான் வட மாகாணசபை இதனை இயற்றியதோ நாமறியோம். மார்ச் மாதம் வரப்போகின்ற ஜெனீவா மாநாடும் அது குறித்து சர்வதேச சமூகம் எடுக்கின்ற முனைப்புகளும் இவ்வாறானதொரு பிரேரணையை நிறைவேற்றி அதற்கான தமிழ் மக்களின் ஆதரவைத் தெரிவிக்கின்ற தேவையை அதற்கு உருவாக்கியிருக்கலாம்.   இலங்கை அரசையே கூண்டிலேற்றும் அளவுக்கு சுயாதீனமாக வட மாகாணசபை செயற்படுமானால் அது தனிநாடு போலேதான் இயங்குகின்றது என்பதுதான் தென்னிலங்கை இதில் வாசித்த ஒரே யொரு செய்தியாகும். தன்னைத்தானே அரசு என்று குறிப்பிடுவதன் தாற்பரியத்தை உணராத வரதராஜப்பொருமாளின் அன்றைய வட – கிழக்கு மாகாணசபையின் நடவடிக்கையுடன் இதனை ஒப்பிடலாம் போலிருக்கின்றது. மாகாணசபைகள் சட்டவாக்க அதிகாரம் கொண்டவை. அவற்றை அரசு என்று குறிப்பிட்டால் அது தவறா என்றுதான் நாம் கேட்போம். அது போலவே, தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் அபிலாஷைகளைத்தானே ஒரு சபை தனது பிரேரணைகளில் பிரதிபலிக்க முடியும் என்போம். ஆனால், சிங்கள மக்கள் அப்படி சிந்திப்பதில்லையே. தமிழ் மக்கள் ஒரு அடையாளத்துக்கேனும் தாம் சுதந்திரமாகவும் ஆளுமையுடனும் செயற்படுவதை விரும்பாத அரசியல் பண்பாடுதான் தென்னிலங்கையுடையது. அதனை ஊக்குவிக்கும் எந்தவிதமான அதிகாரத்தினையும் அவர்கள் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள்.

இத்தகையதொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் என்ன நடக்கக்கூடும்? முன்னரே ஒத்துழைப்புத் தராத அரசு இனி பழிவாங்கும் படலத்தினை ஆரம்பிக்கப் போகின்றது. இதனை முன்கூட்டியே உணர்ந்து அவற்றை எதிர்கொள்ளும் வகையில் வட மாகாணசபையும் தமிழ்த் தலைவர்களும் தமிழ் மக்களும் செயற்படவேண்டிய அவசியம் இன்று எற்பட்டிருக்கின்றது. எமது பொறுமை எல்லை கடந்த நிலையில் போகும் வரை நிலைமை இழுத்தடிக்கப்படப் போகின்றது. அதற்கு வரதராஜப்பெருமாளின் மாகாணசபை செய்ததுபோல அதிரடி நடவடிக்கை எடுத்துவிட்டு கலைக்கப்படும் வரை இருப்பதோ அல்லது எதிர்ப்புத் தெரிவிக்குமுகமாக இராஜினாமா செய்வதோ தீர்வல்ல. நின்று போராடுவதே ஆக்கபூர்வமாக நாம் எடுக்கக்கூடிய வழியாகும். வருகின்ற ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கெதிராக காரசாரமானதும் உறுதியானதுமான பிரேரணை நிறைவேற்றப்பட்டால் நாம் ஓரளவு தப்பித்துக்கொள்ளலாம். மாறாக, திரும்பவும் கற்ற பாடங்கள் ஆணைக்குழுவின் சிபாரிசுகளின் கீழ் விசாரணைகளை செயற்படுத்துவதை வலியுறுத்தி காலக்கெடு விதிக்கும் வகையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டால் இங்கு எமக்குப் பல பிரச்சினைகள் தலையெடுக்க ஆரம்பிக்கும். இந்த இரண்டு விளைவுகளுக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்.

ஒரு அரசை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்துவதென்பது கடினமானதும், நீண்டகாலம் தேவைப்படுவதுமான விடயமாகும். முதலில் ஐ.நா சபையின் அங்கத்துவ நாடுகள் இதற்கு ஒத்துவரவேண்டும். ஒவ்வொரு நாட்டின் அரசுகளும் தனது நாட்டின் சிறுபான்மையினருக்கெதிரான அடக்குமுறையைப் பிரயோகிக்கின்றது என்பதனால் இலங்கைக்கெதிராக அவற்றை நடவடிக்கை எடுக்கவைப்பதற்கு பெரும் பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அவற்றை ஒத்துக்கொள்ள வைத்தாலும்கூட, ஒரு விசாரணைக்கான பொறிமுறைகள் ஸ்தாபிப்பதற்கு பல காலம் விரயமாகும். அடுத்து, ஆயுதப்படைகளின் பிரதம தளபதி என்கின்ற அடிப்படையில் ஜனாதிபதியினை விசாரணையின் முன் கொண்டுவரவேண்டும். சுதந்திரமான தேர்தல்கள் எனக்கருதப்படும் தேர்தல்களில் இறைமை உள்ள மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவரொருவரை விசாரணைக்குக் கொண்டுவருவதில் சட்டப் பிரச்சினைகள் பலவுள்ளன. எனவே, பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும்கூட விடிவு அவ்வளவு சீக்கிரம் வந்துவிடாது.

ஆயினும், இவ்வரசின் மீது அழுத்தம் பிரயோகிக்கவென வேறு யுக்திகளை நாம் உபயோகிக்கலாம். அதிலொன்றுதான் அமெரிக்காவில் 2012ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ‘சேர்கி மக்னிற்ஸ்கியின் சட்டத்தின் ஆட்சியும் பொறுப்புடைமையும்’ சட்டமாகும். இது ஒரு புதுமையான சட்டம். வேறொரு நாட்டில் நிகழும் மனித உரிமைகள் மீறலுக்கும் ஊழலுக்கும் எதிராக ஒரு நாடு தானே நடவடிக்கை எடுக்கலாம் என்பதற்கான சட்டமுன்னுதாரணத்தினை (Legal Precedent) இது முதல் முறையாக ஏற்படுத்தியிருக்கின்றது. ரஷ்யாவில் அரச பிரமுகர்களின் ஊழல் நடவடிக்கைகளை ஆராய்ந்து வெளிக்கொணர்ந்த வழக்கறிஞர் சேர்கி மக்னிற்ஸ்கி. இவர் விசாரணையின்றிக் கைதுசெய்யப்பட்டு ஒரு வருடத்துக்கு மேல் வழக்கொன்றும் தாக்கல் செய்யாத நிலையில் ரஷ்ய சிறையில் அடைக்கப்பட்டு 2009ம் ஆண்டு இறந்தார். தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட கைதிகளின் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் ரஷ்ய அமைப்பானது, இவருடைய இறப்பினை சிறையில் சித்திரவதைக்குள்ளானதன் காரணமாக எற்பட்ட இறப்பாகவும் விபரித்திருந்தது. இதன் விளைவாகவே அமெரிக்க காங்கிரஸ் அவருடைய பெயரிலேயே பொறுப்புடைமைக்கான புதிய சட்டத்தைக் கொண்டு வந்தது. இச்சட்டத்தின்படி, சேர்கி மக்னிற்ஸ்கியின் கைதுக்கும் இறப்புக்கும் காரணமானவர்களினதும், அவரினால் ஊழல்செய்த குற்றவாளிகளென நிரூபிக்கப்பட்டவர்களினதும் பெயர்ப் பட்டியல் அமெரிக்க அரசினால் தயாரிக்கப்பட்டு, அவர்களுக்கான அமெரிக்க விசா ரத்து செய்யப்படவேண்டும் என்றும் அமெரிக்காவிலுள்ள அவர்களுடைய சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படவேண்டும் என்பதும் தீர்க்கப்பட்டது. இச்சட்டத்தின் அடிப்படையாக விபரிக்கப்பட்ட கொள்கைகள் முக்கியமாகும். “நல்லாளுகையும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும் பொருளாதார அபிவிருத்திகளைப் பேணுவதிலும் முக்கிய கருவிகளாக செயற்படுகின்றன. இவை ரஷ்ய சம்மேளன மக்களுக்கு மட்டுமன்றி உலகெங்கும் உள்ள மக்களுக்கு வெளிப்படையான திறந்த சந்தைப் பொறிமுறைகளை ஸ்தாபிப்பதன் மூலம் பயன் தருகின்றது. சர்வதேச மனித உரிமைகள் பட்டயத்திற்கு கைச்சாத்திட்ட நாடு என்கின்ற ரீதியில் ரஷ்ய சம்மேளனமானது அக்கொள்கைகளை மீறும் வகையில் நடந்துள்ளது” என்பதே இச்சட்டத்தின் வாதமாக இருந்தது. அதாவது, ஒரு நாட்டில் நடக்கும் விடயம் ஏனைய நாடுகளையும் பாதிக்கின்றது என்று கூறி இதுகாலவரையும் நிலவி வந்த இறைமைக் கொள்கையின் சவப்பெட்டியில் அடுத்த ஆணியை அறைந்திருக்கின்றது.

நாம் சர்வதேச விசாரணையை முடுக்கிவிடக் கோரும் அதேசமயம், மேற்குலக நாடுகள் சேர்கி மக்னிற்ஸ்கி சட்டத்தினைப் போன்ற பொறிமுறைகளைக் கொண்டுவரும்படி அழுத்தம் கொடுக்கலாம். ராஜபக்‌ஷ சகோதரர்களில் மூவர் அமெரிக்க வதிவிட விசா வைத்திருப்பவர்கள். அரசுடன் தொடர்புகள் வைத்திருக்கும் பலரும், முன்னாள் இந்நாள் இராணுவத் தளபதிகளும் அந்நாடுகளில் பாரிய முதலீடுகளையும் சொத்துக்களையும் வைத்திருக்கின்றனர். நாம் புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் இணைந்து முதலில் இவ்வகையான பொருளாதாரத் தடைகளை கொண்டு வருவதற்கு முயற்சித்தால் என்ன?

அடி என்னடி உலகம், இதில் எத்தனை கலகம்

தினக்குரல் பத்திரிகைக்காக சாந்தி சச்சிதானந்தம் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.