படம் | hollywoodreporter
1993, தென்னாபிரிக்காவில் நிறபேதம் காணப்பட்ட கடந்த காலத்திற்கும், அதன் பின்னரான நிறபேத எதிர்காலத்திற்கும் இடையே, இரண்டு மனிதர்கள் ஒரு படுகொலையைத் திட்டமிட்டனர். புதிய நட்சிவாதியான ஜானுஸ் வாலுஸ் மற்றும் வலதுசாரிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான க்ளிவ் டர்பி – லுவிஸ், நிறபேதத்தை தொடர்ச்சியாக பேணும் நோக்கத்தில் இனவாத சிவில் யுத்தத்தை தூண்டுவதற்குத் தயாராக இருந்தனர். ஜனரஞ்சகமான கறுப்பினத் தலைவரைக் கொலை செய்து, ஏற்கனவே மோதல் ஆரம்பித்திருந்த நகரங்களில் இரத்த ஆறை ஓடச் செய்வது அவர்களுடைய திட்டமாக இருந்தது. அப்போது அதிகப்படியான வெள்ளையர்களைக் கொண்ட அரச இராணுவத்தை வீதிகளில் இறக்கி சட்டத்தையும் சமாதானத்தையும் வெள்ளையர்களையும் பாதுகாப்பதோடு, நிறபேத ஆட்சியந்திரத்தைப் பாதுகாக்க முடியுமென்பதும் அவர்களுடைய நம்பிக்கையாக இருந்தது.
ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸின் அன்றைய தலைமைத்துவத்தில் இரண்டாம் ஜனரஞ்ச நிலையில் இருந்த, கிளர்ச்சிகரமான கறுப்பின இளைஞர்களின் வீரரான, ‘உம் கொஹொன்தொ வே சிஸ்வே’ இயக்கத்தின் முன்னைநாள் தலைவரும் தென்னாபிரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான, என்றோ ஒருநாள் மண்டேலாவின் அரசியல் உரிமையாளர் ஆவாரென நம்பிய கிறிஸ்ஹானியை அவர்கள் இலக்காகத் தெரிவு செய்திருந்தனர். மண்டேலாவை சிறையில் இருந்து விடுவிப்பதற்காக நடைபெற்ற கலந்துரையாடல்களின் போது கிறிஸ்ஹானி முக்கிய பாத்திரத்தை வகித்தார். அதேசமயம், நிறபேதத்தை முடிவுக்கு கொண்டுவந்து ஜனநாயகத் தென்னாபிரிக்காவை உருவாக்குவதற்கான கலந்துரையாடல்களில் கலந்துகொள்வோரில் இவரும் ஒருவராவார்.
திட்டத்தின் முதற் கட்டம் வெற்றியடைந்தது. 1993 ஏப்பிரல் 10ஆம் திகதி காலையில், ஹானி அவரின் வீட்டின் எதிரே வாலுஸ் என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனால், பலத்த அதிர்ச்சிக்குள்ளான குடிமக்கள், சிவில் யுத்தத்தின் விளிம்பிற்கே வந்து விட்டனர். ஆனால், அவர்கள் அன்று அதற்கு பலிக்கடாக்கள் ஆக்கப்படவில்லை. அன்று மாலையில் நெல்சன் மண்டேலா தனது தேச மக்களை விழித்து விசேட உரை நிகழ்த்தினார். “இது எம் எல்லோருக்கும் ஒரு தீர்க்கமான கணப்பொழுது.” என்ன செய்ய வேண்டுமென ஒரு சமிக்ஞையை எதிர்பார்த்திருந்த மக்களை நோக்கி மண்டேலா பின்வருமாறு கூறினார். “யுத்தத்தை ஆராதிக்கும், உதிரம் மீது பேராசை கொண்ட ஒரு சில விஷமிகளின் நடவடிக்கைகள் மூலம் இந்த நாட்டை மற்றுமோர் அங்கோலாவாக மாற்றுவதற்கு நாம் இடமளிக்கக்கூடாது.”
மண்டேலாவின் இவ் வேண்டுகோள் வேலை செய்தது. ஒரு சில வன்முறைகள் ஏற்பட்டாலும் ஹானியைக் கொலைசெய்தோர் எதிர்பார்த்த மாபெரும் அழிவு ஏற்படவில்லை. எனவே, சுதந்திரத்தை நோக்கிப் பயணித்த தென்னாபிரிக்க விடுதலைப் பயணம் காப்பாற்றப்பட்டது.
ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் நீண்ட போராட்டப் பாதையில் அந்நாட்டின் கறுப்பின விடுதலையுடன் கட்சி இணக்கப்பாட்டைக் கண்டிருப்பினும்கூட, அந்தப் பயங்கரமான கணப்பொழுதில் மண்டேலா மக்களுக்கு விடுத்த வேண்டுகோள் வெற்றியளிக்காமல் இருப்பதற்கும் சந்தர்ப்பம் இருந்தது. எனினும், ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் எந்தச் சந்தர்ப்பத்திலும் கறுப்பின தீவிரவாதத்துடன் எதுவித கொடுக்கல் வாங்கல்களையும் வைத்திருக்கவில்லை. அக்கட்சியின் தொலைநோக்கு நடவடிக்கைகள் சகல சந்தர்ப்பங்களிலும் நிபந்தனைகளற்ற, இனவாதத்தைக் கொண்டிருக்கவில்லை. கறுப்பினத்திற்கு எதிரான நிறபேதத்தை ஒரு குற்றச் செயலாக மாத்திரம் அவர்கள் கருதவில்லை. அது மனித இனத்திற்கு எதிரான ஒரு குற்றமாகவே ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் கருதியது. ஆகவே, வெள்ளை இனத்தவரும், வெள்ளையரல்லாத வேறு இனத்தவரும் நிறபேதத்திற்கு எதிரான போராட்டத்தில் செயற்பாட்டு ரீதியிலான பங்களிப்பில் ஊக்குவிக்கப்பட்டனர். இதற்காக அர்ப்பணித்த சிறுபான்மையினரான ஒரு சில வெள்ளையர்கள் உண்மையில் இப்போராட்டத்தின் சகல கட்டங்களிலும் பங்களாளர்களாகச் செயற்பட்டனர். அவர்களும் நிறபேத அரசின் வேட்டைக்கு ஆளாகினர். கைதுசெய்யப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளானார்கள். சில சமயங்களில் தமது உயிரையே அர்ப்பணிக்கவும் நேர்ந்தது. கறுப்பின தென்னாபிரிக்க வீரர்களும், வெள்ளையின ஆண்களும் பெண்களும் வீர மரணமடைந்தனர்.
மண்டேலாவின் ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸின் அரசியல், நிறபேத தென்னாபிரிக்க அரசின் கறுப்பினத்தவருக்கு எதிரான வெள்ளையரின் விஷமத்தனமான அரசியலைப் போலவே. மறுபுறம் ‘வெள்ளையருக்கு எதிரான கறுப்பரின்’ பாதகமான அரசியலுக்கு அடிபணியாமல் செயற்பட்டமை காரணமாகவே தென்னாபிரிக்கா இற்றைக்கு 20 ஆண்டுகளுக்கு முன்னர் வன்முறை என்னும் படுபாதாளத்தில் விழாமல் தப்பியது.
சகோதரத்துவத்தினதும், நல்லிணக்கத்தினதும் பாரிய படிமமான மண்டேலாவுக்கு முன்னர், ரொஷ்பரோஷ் என்ற இளம் மண்டேலா ஒருவர் இருந்தார். அன்று, அகிம்சை அல்லது நடுநிலைமை அவரது தாரக மந்திரமாக இருக்கவில்லை. ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸின் பழைய தலைமைத்துவத்தின் எதிர்ப்பின் மத்தியிலும் கூட அவர் அன்று ஆயுதப் போராட்டத்திற்காகவே செயற்பட்டார் (அன்று அக்கட்சியின் தலைவரான அல்பேர்ட் லுட்டுலிட்டவிற்கு அகிம்சையின் சார்பில், அர்ப்பணிப்பிற்காக 1960 இல் சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது).
அதேசமயம் ‘உம் கொஹொன்தோ வே சிஸ்வே’ இயக்கத்தின் ஆரம்பத் தலைவராக மண்டேலாவே செயற்பட்டார். அல்ஜீரியாவுக்கும், எத்தியோப்பியாவிற்கும் சென்று ஆயுதப் பயிற்சியையும் பெற்றார். ஆனால், அரசியல் செயற்பாட்டில் எதுவித மாற்றமும் இருக்கவில்லை. தென்னாபிரிக்கா அங்கு வாழும் சகல மக்களுக்கும் சமமான உரிமை கொண்டதாக இருக்கவேண்டும் என்று நிறைவாக நம்பினார். மற்றவரை சகிப்புத்தன்மையோடு நோக்க வேண்டும். அதேசமயம் இனம், நிறம், கோத்திரம், மதம் ஆகியவை மூலம் பிரிப்பதை அவர் புறக்கணித்தார். இது அவரதும் ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸினதும் அரசியல் அடிப்படையாகும்.
மண்டேலாவும் ஆபிரிக்கத் தேசிய காங்கிரசஸும் தேசிய விடுதலையை நோக்கிச் சென்ற பயணம், நிறபேதம் என்ற குருட்டுப் பாதையை ஊடறுத்துச் சென்ற ஒரு பயணமாகும். நிறபேதத்தை வெறுத்தொதுக்கும் அதற்கெதிராகப் துணிந்து செயற்படத் தயாரான, எந்தவொரு நபருக்கும் அந்தப் போராட்டத்தில் ஓர் இடம் இருந்தது. ‘உம் கொஹொன்தோ’ வரலாற்றுக் காலப்பகுதியிலேயே நிறபேதத்தை ஒழிப்பதற்காக மண்டேலாவும், ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸும் செய்த அர்ப்பணிப்புக்கள் மிகச் சிறந்த முறையில் பிரதிபலித்தன. வெள்ளை நிறவெறி அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்துதல் அன்றைய சூழ்நிலையில் மரண அச்சுறுத்தலாக இருந்தது. அது மரண தண்டனையை வழங்கக்கூடிய, ‘தேசத் துரோக நடவடிக்கையாகும்.’ மேற்படி அபாய வாய்ப்புக்குரிய நிலைமையை கவனத்தில் கொள்ளும்போது, போராட்டம் மீது முழுமையான பக்தியும், அர்ப்பணிப்பும், நம்பகத் தன்மையும் அவசியமாகிறது. ‘உம் கொஹொன்தோ’ என்பது உண்மையிலேயே பன்மைத்துவ கருத்திட்டமாகும். அது, மண்டேலாவின் எதிர்கால ‘வானவில் தேசத்தின்’ பெருமைக்குரிய முன்னணிப் பயணமாகும். மேற்படி இயக்கத்தை, வெள்ளை இனத்தவரான – கம்யூனிசவாதியான ஜோ ஸ்லோவோ உடன் இணைந்து மண்டேலாவினால் கட்டி எழுப்பப்பட்டது. இவ் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் பலர் கறுப்பு இனத்தவர்கள் அல்லாதவர்களாகவே இருந்தனர். ஃப்ரெட் கார்னேசன் (வெள்ளை இனத்தவரான கம்யூனிஸ்ட்), ஜக் ஹொப்ஷன் (வெள்ளை இன கம்யூனிஸ்ட்), அகமட் கத்ராதா (இந்திய முஸ்லிம்), ஆத்தர் கோல்ட் ரேயிப் (வெள்ளை இன யூதர்), டெனிஷ் கோல்ட் பேர்க் (வெள்ளை இன யூதர்) மற்றும் ரொனல்ட் கஸ்ரில்ஸ் (வெள்ளை இன யூதர்) என்போர் அங்கம் வகித்தனர்.
வெள்ளை நிறவெறிப் பயங்கரவாதத்துடன் வாழும் சாதாரண கறுப்பினத்தவருக்கு, தென்னாபிரிக்க சுதந்திர போராட்டத்தில் தமது வாழ்வையும் சுதந்திரத்தையும் பணயமாக வைத்துச் செயற்படும் வெள்ளை நிறத்தவர்கள் செயற்பட்டமையையும் காணக்கூடியதாக இருந்தது. நிறபேதத்திற்கு எதிரான போராட்டம், வெள்ளையருக்கு எதிரான யுத்தமாக மாறாமல் இருப்பதற்கு இதுவும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.
ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் மண்டேலா, வோல்ட்டர் சிசுலு, கோவான் மபெக்கி போன்ற உயர்மட்டத் தலைவர்கள் சிறைவைக்கப்பட்டமையால், நிறபேதத்திற்கு எதிரான போராட்டத் தலைமைத்துவத்தில் வெற்றிடம் உருவாகியது. தென்னாபிரிக்க கறுப்பின சிரேஷ்ட தலைவரான ஸ்டீ பிகோ என்பவரால் குறுகிய காலத்திற்கு அந்த வெற்றிடம் நிரப்பப்பட்டது.
கறுப்பினத்தவர்கள் தம்மாலேயே தமது விடுதலையை அடைய வேண்டுமென அவர் வாதிட்டார். பிகோ கறுப்பினவாதியாகச் செயற்படவில்லை. வெள்ளை இனவாத தென்னாபிரிக்காவுக்குப் பதிலாக கறுப்புத் தேசியவாத ஆபிரிக்காவை உருவாக்க வேண்டுமென அவர் எண்ணவில்லை. ஆனால், கறுப்பினத்தவரிடம் உள்ள சுயசக்தியைக் கொண்டு அவர்களது சிந்தனையில் ஒரு வலுவை ஏற்படுத்த வேண்டுமென அவர் நம்பினார். ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸின் பன்மைத்துவ அரசியலுக்குப் பதிலாக பிகோவின் கறுப்பின நிகழ்வுண்மை இயக்கம் மாற்றீடாக அமைந்திருந்தால் தென்னாபிரிக்காவின் பயணம் எவ்வாறு இருந்திருக்குமெனச் சிந்தித்துப் பார்க்க முடியாது. ஆனால், இனவாத சிவில் யுத்தம் மீதான கவர்ச்சிக்கு அடிபணியாமல் இருக்க மண்டேலாவின் தென்னாபிரிக்கா வெற்றி கொள்ளும் அளவிற்கு, பிகோவின் கருத்தியல் வெற்றி பெற்றிருக்குமென சிந்திப்பது மிகக் கடினமாகும்.
இனபேத அரசு அனுசரித்த பிரித்தாளும் கொள்கையை அல்லது மற்றவரை சகிக்காத கொடூரமான சிந்தனையை அனுசரித்தல் போன்ற கொள்கைகளைஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் மற்றும் மண்டேலா புறக்கணித்த காரணத்தினால் மற்றுமொரு பயங்கரமான அனர்த்தத்தில் இருந்து தென்னாபிரிக்கா தப்பியது. அதாவது, கோத்திரங்களுக்கிடையிலான யுத்தத்தில் இருந்து தப்பியது. இனபேத ஆட்சி அதன் அபகீர்த்திகரமான முடிவை அண்மித்தபோது ‘சூளு’ கோத்திரத்தின் இன்காத்தா இயக்கம், துர்தம் வெள்ளை இனத்தவர்களின் ஒத்துழைப்புடன் கோத்திரங்களுக்கிடையிலான யுத்தத்தை ஆரம்பிப்பார்கள் என அனேகமானோர்களுக்கு இடையே பாரிய பயம் ஒன்று இருந்தது. ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸின் உயர்மட்டத் தலைவர்கள் ‘க்சோசா’ கோத்திரத்தை சார்ந்தவர்களாக இருப்பினும், தேசிய காங்கிரஸ் அரசியல், கொள்கை ரீதியில் கோத்திர அரசியலை முழுமையாகப் புறக்கணித்தது. மண்டேலாவும் ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸும் கோத்திரவாதத்தைப் பயன்படுத்துவதற்கு அச்சந்தர்ப்பத்தில் சிந்தித்திருந்தால், கறுப்பினத்தவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு சுதந்திர தென்னாபிரிக்கா பிளவுபட்டிருக்கும்.
பயன்படுத்தப்படும் மார்க்கத்தின் இயல்பு நோக்கத்தை தயார் செய்கின்றது என்பது உண்மை. தேசத்தையும், அரசையும் கட்டியெழுப்பும் அடிப்படை நுழைவாயிலாக மண்டேலா மற்றையோரைச் சகித்துக்கொள்ளும், அனைவரையும் உள்ளடக்கிய, இணக்கப்பாட்டுக் கொள்கையை, தென்னாபிரிக்க புதிய அரசின் தேசிய கீதத்தில் மிகச் சிறந்த முறையில் உள்வாங்கினார். ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸின் போராட்டக் கீதங்களுடன் பழைய இன ஒதுக்கல் அரசின் தேசிய கீதத்தின் சில பகுதிகளையும் உள்வாங்கி புதிய தேசிய கீதம் ஐந்து மொழிகளில் பாடப்படுகிறது. அதன் இறுதி பெறுபேறு இனிமையான தோழமைமிக்க கலவையாகும்.
மனிதத் தன்மையை மட்டுப்படுத்துவதை மண்டேலா ஏற்றுக்கொள்ளவில்லை, சிலசமயம், றொபர்ட் முகாபே மேற்கொண்ட மார்க்கத்தைவிட வித்தியாசமான மார்க்கத்தை மண்டேலா மேற்கொண்டார். விடுதலைப் போராட்டத்தின் வீரன் என்ற வகையில் தாம் சாமாண்ய மனிதனுக்கு மேல் உயர இருப்பதாக றொபர்ட் முகாபே நம்பினார். தான் தவறிழைப்பதற்கு எதுவித காரணமுமில்லை என முகாபே கூறினார். தனது அதிகாரத்தை தக்கவைப்பதற்கு கோத்திரவாதம், இனவாதம் ஆகிய இரண்டையும் அவர் பாவித்தார். மண்டேலா அவ்வாறு செய்யவில்லை. நியெற்ஷியன் மாதிரியிலான உன்னத புருஷனாகத் திகழ மண்டேலா மறுத்தார். ஜனநாயக ரீதியாக நாட்டை ஆட்சி செய்து சுயமாகவே அதிகாரத்தை அவர் கைவிட்டுச் சென்றார்.
நாட்டு மக்களிடம் இருந்த உன்னத தன்மையை மண்டேலா மேலோங்கச் செய்தார். கற்பனாவாதத்தின் பொய்மையை அவர் நிரூபித்தார்.
‘கொழும்பு ரெலிகிராப்’ இணையதளத்துக்காக திசரணி குணசேகரவால் The Essential Mandela என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரை தமிழில் இங்கு தரப்பட்டுள்ளது.