படம் | ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் தளம்

புதிய அரசு ஒன்று அமைந்ததும் சர்வதேச நாடுகள் அதற்கு வாழ்த்து தெரிவிப்பது வழமை. ஐக்கிய நாடுகள் சபையும் பாராட்டும் வாழ்த்தும் தெரிவிப்பதுடன் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் போன்றவற்றை ஏற்படுத்த அரசிற்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் கூறியுள்ளது. ஆனால், ஐக்கிய நாடுகள் சபையின் வாழத்துச் செய்தியில் எந்தவொரு இடத்திலும் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் இனப்பிரச்சினைக்கு குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியில் தீர்வு காணப்பட வேண்டும் என்ற அழுத்தங்கள் சொல்லப்படவில்லை.

புதிய அரசா?

புதிய அரசு என்று கூறினாலும் அந்த அரசில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவும் அவரது சகாக்கள் சிலரும் நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். ஆனால், முன்னைய அரசில் அமைச்சுப்பதவிகளை வகித்த பலர் மீண்டும் தேசிய அரசு என்ற போர்வையில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசில் இணைந்துள்ளனர். இனப்பிரச்சினை தீர்வு, போர்க்குற்ற விசாரணை ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்ற மற்றும் இனப்பிரச்சினையே இல்லை என்று கூறுகின்ற பலரும் ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றியடைந்துள்ளனர்.

ஆகவே, இவ்வாறானவர்களை வைத்துக்கொண்டு ரணில் தலைமையிலான புதிய அரசு எவ்வாறு இனப்பிரச்சினைக்குரிய தீர்வை முன்வைக்கப்போகின்றது என்ற கேள்விகள் எழுகின்றன. புதிய அரசுதானே, கொஞ்ச நாளைக்கு பொறுத்திருந்து பார்ப்போம் என்று சிலர் கூறலாம். ஆனால், பிரதான தேசிய பிரச்சினையான இனப்பிரச்சினை தீர்வின் முக்கியத்துவத்தை குறைக்கின்ற அல்லது அதனை அப்படியே கைவிடுகின்ற போக்கைத்தான் ஒவ்வொரு காலகட்டத்திலும் அவதானிக்க முடிந்துள்ளது.

இனப்பிரச்சினையின் முக்கியத்துவம்

இந்த இடத்தில் சர்வதேச நாடுகள் என்று கூறப்படுகின்ற அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அமைப்புகள் எடுத்த எடுப்பில் புதிய அரசை வாழ்த்தி நம்பிக்கையும் வெளியிட்டுள்ளனர். புதிய அரசு ஒன்று அமைந்தால் வாழ்த்துத் தெரிவிப்பது வழமையானதுதான். ஆனால், இலங்கை போன்ற நாடுகளிற்கு வாழ்த்து தெரிவிக்கும்போது உள்ளநாட்டு இனப்பிரச்சினையின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட வேண்டும்.

குறிப்பாக போர்க்குற்ற விசாரணையின் அவசியம் வலியுறுத்தப்படவில்லை. தங்களுடைய அரசியல் பொருளாதார நலன்களுக்கு ஏற்ப வாழ்த்துக்களை வெளியிட்டுள்ளனர். 60 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அரசியல் பிரச்சினை ஒன்றை தீர்ப்பதற்கான பேச்சுக்கள் பல தடவைகள் சர்வதேச நாடுகளில் நோர்வேயின் ஏற்பாட்டுடன் நடைபெற்றமை எல்லோருக்கும் தெரியும். ஏன் 1985ஆம் ஆண்டுகூட பூட்டான் தலைநகர் திம்புவில் பேச்சுக்கள் நடைபெற்றன. யுத்தம் நடைபெற்ற காலத்தில் அதனை நிறுத்த சர்வதேச மட்டத்தில் பல்வேறு முயற்சிகளை இலங்கை அரசு எடுத்திருந்தது.

ரணில் மீண்டும் வருகை

ஆகவே, சர்வதேசமயப்பட்ட ஒரு பிரச்சினையை மீண்டும் உள்நாட்டு பிரச்சினையாக காண்பித்து வெறுமனே ஒரு உள்ளக விசாரணை என்பதன் மூலமாக தமிழர் விவகாரத்தை மூடிமறைக்க சர்வதேச சமூகம் முற்படுகின்றது என்ற முடிவுக்கு வரலாம். வெறுமனே மஹிந்த ராஜபக்‌ஷவும் அவரது குழுக்களும் அவர் சார்ந்த உயர் அதிகாரிகளும் நீக்கம் செய்யப்பட்ட புதிய அரசில் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகிப்பது தமது நோக்கத்தை நிறைவேற்ற இலகுவானது என்ற நிலைப்பாட்டில் சர்வதேச நாடுகள் செயற்படுமானால், அவர்கள் விரும்புகின்ற அமைதியான சூழல் இலங்கையில் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் வெகுதூரம் நோக்கிய சிந்தனையாகவே மாறிவிடும்.

புரிந்துணர்வு உடன்படிக்கை

அத்துடன், போர்க்குற்ற விசாரணை உள்ளக விசாரணையாக மாற்றப்படுமானால் வடக்கு – கிழக்கு மாகாணத்தில் இருந்து இராணுவத்தை அகற்றுகின்ற அல்லது குறைந்தபட்சம் இரணுவ நிர்வாகத்தைக் கூட இல்லாமல் செய்யக் கூடிய சூழல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போகலாம். ஆகவே, புதிய அரசு என்ற போர்வையில் 30 வருடகால யுத்தத்தின் பக்கவிளைவுகளுக்கு மாத்திரம் தீர்வை ஏற்படுத்துகின்ற வேலைத்திட்டங்களை செய்து அபிவிருத்தியில் மாத்திரம் கவனம் செலுத்துங்கள் என்ற அழுத்தங்களை தமிழ்த் தரப்புக்கு சர்வதேச நாடுகள் முன்வைக்கப்போகின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தேசிய அரசு ஒன்றை அமைப்பதற்காக செய்யப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில் போர்க்குற்ற விசாரணை, இனப்பிரச்சினைக்கான தீர்வு என்று எதுவும் கூறப்படவில்லை. ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் செய்துகொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கை அரசை அமைப்பதற்கு மாத்திரமே என்று சர்வதேச நாடுகள் கூறலாம். ஆனால், சர்வதேசம் கூறுகின்ற நல்லாட்சிக்கான அரசை அமைத்தல் என்பதற்கான அந்த உடன்படிக்கையில் 60 ஆண்டுகால தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கான ஒரு வார்த்தைகூட இல்லாமல் இரு பிரதான கட்சிகளும் புரிந்துணர்வு உடன்படிக்கை செய்தமை எந்தளவுக்கு ஏற்புடையது?

கூட்டமைப்பின் 16 ஆசனங்கள்?

பிரச்சினையுடன் சம்மந்தப்பட்ட தரப்புடன் இணக்கத்தை ஏற்படுத்தி புதிய அரசை அமைப்பதற்கான வாய்ப்புகள் இருந்தபோதும் அந்த சந்தர்ப்பம் எதற்காக தவறவிடப்பட்டது? ஐக்கிய தேசிய முன்னணிக்கு 106 ஆசனங்கள் இருந்தபோது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 16 ஆசனங்களைப் பெற்றிருந்து. ஆகவே, இணக்கத்தை ஏற்படுத்தி கூட்டமைப்பின் 16 ஆசனங்களுடன் சேர்த்து 121 ஆசனங்களுடன் ஆட்சியை அமைத்திருக்கலாமே? அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஐக்கிய தேசிய முன்னணி புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை செய்தபோது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முன்வைக்கும் கோரிக்கைகளை உள்வாங்கி அவர்களையும் இணைந்த தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்திருக்கலாமே?

ஏன்? அவ்வாறான பெருந்தன்மையான யோசனை கைவிடப்பட்டது. ரணிலுக்கு பின்னால் நின்று யோசனை கொடுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏன் அதற்கான அழுத்தத்தை கொடுக்க முடியாமல் போனது? ஆக, இனவாதத்திற்கு அஞ்சுகின்ற நிலைதான் இங்கு விஞ்சிக்காணப்படுகின்றன. முன்னர் புலிகளுடன் பேசினால் பிரச்சினை, தற்போது கூட்டமைப்புடன் பேசினால் சிங்கள தேசியத்தின் உரிமைகள் பறிபோய்விடும் என்ற அச்சம். ஆகவே, சிங்களத் தேசியத்தின் அச்சத்துக்கு விடை கொடுக்கின்ற வேலைத்திட்டங்களில் மாத்திரமே சர்வதேச நாடுகள் இயங்கு சக்தியாக உள்ளன என்ற முடிவுக்கு வரலாம்.